சின்ன வயசில் பெரிய மனுஷி
மனித மூளையானது - விசித்திரமானது. ஹார்மோன்களின் கட்டுப்பாட்டில் வளர்ச்சி மாற்றத்தை, பாலுறுப்புகளின் வளர்ச்சி நிலையை மூளை அடக்கியே வைத்திருக்கும். பத்து வயதிற்கு மேல் ஹார்மோன்களின் திருவிளையாடலால் பெண் குழந்தைகள் பருவத்தை எய்துவார்கள். ஆனால் சில பெண் குழந்தைகளுக்கு என்ன காரணம் என்று கண்டறிய முடியாமலே ஹார்மோன்களின் ஆக்கிரமிப்பு அதிகமாகி பத்து வயதிற்குள் பூப்பெய்தி விட நேரிடலாம். பிட்யூட்டரி சுரப்பி கோளாறினாலும், தைராய்டு குறைபாடுகளினாலும்கூட இப்படி நிகழலாம்.
இப்படி மிக இளம் வயதில் பூப்பெய்தி விடுவதற்கு மக்யூன் ஆல்பிரைட் சின்ட்ரோம் என்கின்ற ஒரு வகை பாதிப்புத்தான் காரணம் என்று அண்மைக் கால மருத்துவ அறிவியல் கண்டுபிடித்துள்ளது. இது நோயா? இல்லை முன் கூட்டியே ஹார்மோன்கள் தங்கள் செயல்களை ஆரம்பித்துவிடுவதுதான் காரணமா? என தீவிரமாக மருத்துவ உலகம் ஆராய்ந்து வருகின்றது. மரபணுக்களின் பாதிப்பினால் கூட இப்படி நிகழலாம் என்கின்ற ஒரு கருத்தும் நிலவுகிறது.
சரி... கொஞ்சம் காலம் தள்ளி பெரிய மனுஷியாக ஆக வேண்டியவள் முன்கூட்டியே பருவம் எய்தி விட்டாள்... அவ்வளவுதான் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்தானே, இதற்கு போய் ஏன் அலட்டிக் கொள்ள வேண்டும் என்று சிலர் கேட்கலாம்.
இப்படி இயற்கைக்கு மாறாக மிக இளம் வயதிலேயே வயதுக்கு வரும் பெண்களுக்கு எலும்பில் உள்ள கால்சியத்தில் குறைபாடு ஏற்படலாம். இதனால் இவர்கள் பல இயற்கை உபத்திரவங்களுக்கு உள்ளாக நேரிடும். இத்தகைய பெண்களுக்கு மாதவிடாய் கோளாறு, அதிக ரத்தப்போக்கு, பிரசவ சமயத்தில் குறைபாடுகள், அரிதாக சில பெண்களுக்கு பாலியல் உறவில் கூட சிக்கல்கள் ஏற்படலாம். இவ்வாறு இளம் வயதில் பூப்பெய்துவிடுகிற பெண்கள் ஹார்மோன் மருத்துவர்களின் ஆலோசனைகளை பெற்றுக் கொள்வது நல்லது. சுண்ணாம்பு சத்து நிறைந்த பால், முட்டை, மற்றும் காய்கறிகள், கனிகள், தானியங்கள் போன்ற வற்றை இவர்கள் பருவ வயதில் நிறைய உட்கொள்ள வேண்டும். தாய் மிக இளம் வயதில் பூப்பெய்தி இருந்தால் அவர்கள் தங்கள் பெண் குழந்தைகளுக்கு பருவ வயதிற்கு முன்பாக மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.
No comments:
Post a Comment