Friday, November 12, 2010

எலும்பு தேயுமா..?

எலும்பு தேயுமா..?

Dr. எஸ். ஆறுமுகம் Dr. Interview : Osteoporosis in Women - Food Habits and Nutrition Guide in Tamil
எலும்பு தேய்மானம் எதனால் ஏற்படுகிறது? ஏன் ஆண்களின் எண்ணிக்கையை விட பெண்கள் இந்த பாதிப்பிற்கு ஆளாகிறார்கள்?
பெரும்பாலும் வயதானவர்களுக்குத்தான் எலும்பு தேய்மானம் ஏற்படும். இதனை மருத்துவ மொழியில் நாங்கள் ஆஸ்டியோ பெரோஸிஸ் என்போம். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் நாற்பது, ஐம்பது வயதிற்கு மேல் சிலருக்கு வரும் பாதிப்புதான் இது. ஆண்களைவிட பெண்களுக்குத்தான் எலும்பு தேய்மானம் அதிகமாக வரும். ஏனெனில் எலும்பு தேய்மானம் கால்சியம் சத்து குறைவதினால் ஏற்படும் பாதிப்பாகும். பெண்களுக்கு மாதவிலக்கு சுழற்சி நின்ற பின்னர், உடம்பில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறைந்துவிடுவதால் கால்சியம் பற்றாக்குறை ஏற்பட்டுவிடும். இதனால்தான் பெண்களுக்கு அதிகம் எலும்பு தேய்மானம் வருகிறது. கர்ப்பப்பை எடுத்த பெண்களுக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறைபாடு தோன்றி அந்த பெண்களுக்கும் எலும்பு தேய்மானம் வரலாம்.

எலும்பு தேய்மானம் என்பது தெரிந்தால் அலட்சியப்படுத்தாமல் ஏன் ஆரம்பத்திலேயே மருத்துவம் செய்து கொள்ள வேண்டும் என்கிறீர்கள்?
எலும்பு தேய்மானம் பாதிப்பு உள்ளவர்களுக்கு எளிதில் எலும்பு முறிவு ஏற்படலாம். சின்ன இடறல் கூட எலும்பு முறிவு போன்றவற்றை உருவாக்கிவிடும். சும்மா இப்படி கையை ஊன்றியது போலத்தான் விழுந்தேன். எலும்பு முறிஞ்சிட்டுங்க என்பார்கள் சிலர். இதனை - Trivial Truma என்போம். எனவேதான் இக்குறைபாட்டை ஆரம்பத்திலேயே கவனிக்க வேண்டும் என்கிறோம். எலும்பு தேய்மானம் எந்தளவு உள்ளது என்பதை முன் கூட்டியே அறிய Bone Dencito metre என்ற கருவி வந்துள்ளது. அக்கருவி மூலம் எலும்பு தேய்மானத்தையும், எலும்பில் கால்சியம் பற்றாக்குறை இருப்பதையும் துல்லியமாக கண்டுபிடித்து விடலாம். Dencito metre என்பது ஒரு நவீன சாதனமாகும். நமது இந்தியாவிற்கு அறிமுகமாகி இரண்டு வருடம்தான் ஆகிறது.

இந்த எலும்பு தேய்மானம் வயதான பெண்களுக்கு மட்டும்தான் வருமா?
வயதான பெண்களுக்கு மட்டும்தான் என்றில்லை. சமீப காலமாக நமது வாழ்க்கை முறையே Life Style ஆனதும் பெரிதும் மாறி விட்டது. நம்மில் பலருக்கு உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, கடின உழைப்பு என்பது மறந்துபோய்விட்டது. பல ஆண்டுகள் இளம் வயதிலேயே புகை, மதுப்பழக்கங்களுக்கு அடிமை ஆகிவிடுகிறார்கள். இதனால் இன்றைய நாட்களில் இளம் வயது ஆண்களும் எலும்பு தேய்மானத்திற்கு ஆளாகிறார்கள். வேறு சில உடல் நல குறைபாடுகளுக்கு குறிப்பாக ஆஸ்துமா, போன்ற நோய்களுக்கு என்று வீரியமிக்க (Sleroid) மருந்து எடுப்பவர்களுக்கும் எலும்பு தேய்மானம் அதிக அளவில் ஏற்பட வாய்ப்புள்ளது.

எலும்பு தேய்மானத்திற்கு என்ன சிகிச்சை முறை உள்ளது?
வரும் முன் காப்பது என்பதுதான் எலும்பு தேய்மானத்திற்குரிய முதல் எச்சரிக்கையாகும். வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டு, உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் முன் கூட்டியே எலும்பு டாக்டரிடம் சென்று எலும்பு பற்றி அறிந்து கொள்வது நல்லது. எலும்பு தேய்மானம் இருப்பது தெரிந்தால் கால்சியம் ரி-பிளேஸ் மெண்ட் தெரபி மூலம் குணம் பெறலாம். பெண்களாக இருந்தால் அவர்கள் கால்சியம் ரி-பிளேஸ் மெண்ட் தெரபியுடன், ஹார்மோன் ரி-பிளேஸ் மெண்ட் தெரபியும் தேவைப்படும்.

முன்பு கால்சியம் மாத்திரைகளை உட்கொள்வது மட்டுமே எலும்பு தேய்மானத்திற்குரிய சிகிச்சையாக இருந்தது. கால்சியம் மாத்திரைகளை உட்கொள்வதனால் விளைவு அவ்வளவு திருப்திகரமாக இருக்கவில்லை. எனவே பின்னர் இன்ஸெக்ஷன் மூலம் கால்சியம் தரப்பட்டது. அண்மைக் காலமாக ஸ்ப்ரே மூலம் மூக்கு வழியே கால்சியத்தை உட்செலுத்தும் நவீன முறை வந்துள்ளது. இந்த நவீன கால்சியம் ரி-பிளேஸ்மெண்ட் தெரபி மிகுந்த பயன் தரக்கூடியதாகும். இந்த Nasal Spray அதிக அளவில் தீவிர கால்சியம் பற்றாக்குறை இருப்பவர்களுக்கு தேவைப்படும்.

கால்சியம் பற்றாக்குறை இருப்பவர்களுக்கு மூட்டு தேய்மானம் உடன் வருமா?
முதலில் மூட்டு தேய்மானம் என்பது என்ன என்பதை தெரிந்து கொண்டால் - எலும்பு தேய்மானம் என்பது மூட்டு தேய்மானத்திலிருந்து வேறுபட்டது என்பதை புரிந்து கொள்வீர்கள். மூட்டு தேய்மானம் - உடற்பயிற்சியின்மை, உடல் பருமன், தரையில் அமர்ந்து பணிபுரிவது. Indian toiletகளை பயன்படுத்துவது, போன்ற பழக்கம் உள்ளவர்களுக்கு எளிதில் வர வாய்ப்புள்ளது. மூட்டு தேய்மானம் ஒரு Degernerative நோயாகும். அதாவது வயது ஆக ஆக உடம்பின் உறுதிப்பாடும், உடற்கட்டும் மெல்ல உருமாறுவதனால் ஏற்படுகின்ற பாதிப்பாகும்.

நமது மூட்டு பகுதிக்குள்-கார்டிலேஜ் என்கின்ற அமைப்பு இருக்கும். கார்டிலேஜ்க்குள் திரவம் இருக்கும். வயதான சிலருக்கு இந்த திரவம் குறைய ஆரம்பிக்கும். இதனால் ஏற்படுவதுதான் மூட்டு தேய்மானம் ஆகும். ஆனால் கால்சியம் பற்றாக்குறை இருப்பவர் அத்தனை பேர்களுக்கும் மூட்டு தேய்மானம் வரும் என்று சொல்வதற்கில்லை. எலும்பு தேய்மானம் என்பது வேறு, மூட்டு தேய்மானம் என்பது வேறு.

மூட்டு தேய்மானம், எலும்பு தேய்மானம் இதனை காட்டும் அறிகுறிகள் என்ன?
எலும்பு தேய்மானத்திற்கு என்று பிரத்தியேகமான அறிகுறிகள் இல்லை. முன்பு கூறியது போல் Risk Factor உள்ளவர்கள் அதாவது - உடற்பயிற்சி செய்யாதவர்கள், கடின உழைப்பில்லாதவர்கள், மாதவிலக்கு சுழற்சி நின்ற பெண்கள், கருப்பை எடுத்த பெண்கள் டாக்டரை பார்த்து முன்கூட்டி பரிசோதித்து தெரிந்து கொள்ளலாம்.

மூட்டு தேய்மானத்தில் அறிகுறி...?
மூட்டு வலிதான் முதல் அறிகுறியாகும். கெண்டைக்கால் வலி, தொடையில் வலி போன்றவையாகும். படிக்கட்டில் ஏறும்போது, தரையில் உட்கார்ந்து எழும்போது, சிறிது தூரம் நடந்தால் வலிப்பது போன்றவை மூட்டு தேய்மானத்தின் ஆரம்ப அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் - தொடர்ந்து ஓய்வு எடுக்கும்போதுகூட வலிக்கலாம். இப்படி ஓய்வு எடுக்கும்போது வலிப்பது தீவிர மூட்டு தேய்மானத்திற்குரிய அறிகுறியாகும்.

மூட்டு தேய்மானத்திற்கு என்ன நவீன சிகிச்சை உள்ளது?
ஆரம்ப நிலையில் டாக்டரிடம் வந்தால் வலி நிவாரண மருந்துகளும் மூட்டுப்பகுதியை சுற்றியுள்ள சதைகளை வலுப்படுத்தும் பிஸியோதெரபி பயிற்சிகள் தரப்படும். கூடவே வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளச் சொல்வோம். அதாவது படிகள் அதிகம் ஏறாமல், Western toilet பயன்படுத்துவது, சமதரையில் சிறிது தூரம் நடப்பது, நாற்காலியில் அமர்வது போன்றவற்றை கடைபிடிக்க அறிவுரைத்தரப்படும்.

இதன் அடுத்த நிலை மூட்டு தேய்மானம் என்றால் Knee caps (மூட்டு மேல் போட்டுக் கொள்ளும் உறை) மற்றும் Knee - brace போட்டுக் கொள்ள சொல்வோம். வலி அதிகமாக இருந்தால் மூட்டுக்குள் Steroid ஊசி போடப்படும். இந்த ஊசி மருந்து தகுதி பெற்ற எலும்பு மருத்துவரால் மட்டுமே போடப்பட வேண்டும். இந்த ஊசி மூட்டு தேய்மானத்தை குணப்படுத்த அல்ல-மூட்டு வலியை போக்க மட்டுமே போடப்படுவதாகும். முற்றிய (தீவிர) நிலையில் மூட்டு தேய்மானம் என்றால் - அவர்கள் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்வதுதான் சிறந்ததாகும்.

உண்ணும் உணவின் மூலமாக மூட்டு தேய்மானம், எலும்பு தேய்மானத்தை முன் எச்சரிக்கையாக தடுத்துக்கொள்ள முடியுமா?
எலும்பு தேய்மானத்தினை தடுக்க-கால்சியம் அதிகம் உள்ள உணவுப் பொருட்கள் உதாரணமாக பால், முட்டை, சீஸ், பச்சை காய்கறிகளை உண்ண வேண்டும். மூட்டு தேய்மானத்திற்கு உடல் பருமன் அதிகரிக்கும் உணவுகளை தவிர்ப்பது நல்லது. இது தவிர வாழ்க்கை முறை மாற்றத்தையும் கடைபிடிக்க வேண்டும்.

No comments:

Post a Comment