Saturday, October 30, 2010

குளங்களில் கருவேல மரங்கள் - ஏகாதிபத்திய சதி

குளங்களில் கருவேல மரங்கள் - ஏகாதிபத்திய சதி
Acacia tortilis - Tamil Poltics News Article குளங்களின் நடுவே உள்ள கருவேல மரங்கள், அரசின் அலட்சியத்தால் தானே வளர்ந்தவை அல்ல. திட்டமிட்டு நடப்பட்டு, வனத்துறையால் கவனமாகப் பாதுகாக்கப்பட்டு வருபவை. வறண்ட நில விவசாயத்திற்கு உயிராதாரமாக இருக்கும் ஏரிகளையும், கண்மாய்களையும், அவற்றை நம்பியுள்ள விவசாயத்தையும், மக்கள் வாழ்வையும் நாசமாக்கக்கூடிய விதத்தில் ஏரிகளில் அரசே கருவேல மரங்களை நட்டு வளர்ப்பதற்கு, அப்படியென்ன காரணம் இருந்துவிட முடியும்?
கடந்த இருபத்தி அய்ந்து ஆண்டுகளாக, தமிழகத்தில் விவசாயத் துறை அடைந்துவரும் மாற்றங்களை உன்னிப்பாகக் கவனித்து வரும் தோழர் "விடியல்" சிவாவின் ஆய்வுகள், இக்கேள்விக்குப் பதிலளிக்கின்றன.
"1960களில்தான் குளங்களின் நடுவே கருவேல மரங்களை நடும் முடிவை அரசு எடுத்தது" என்கிறார் அவர். அதற்கு முன்பு வரை குளங்களும், ஏரிகளும் கிராம மக்களின் பொதுச் சொத்தாகத்தான் கருதப்பட்டு வந்தன. அவற்றைப் பராமரிப்பது அதாவது கரைகளைப் பலப்படுத்துவது, தூர்வாருவது போன்றவற்றை மக்களேதான் செய்து வந்தனர். குளங்களில் படியும் வண்டல் மண், விவசாயிகளால் மிகச் சிறந்த உரமாகக் கருதப்பட்டது. வேனில் காலங்களில் குளங்களில் நீர் வற்றிப் போனதும், தரை சேறும் சகதியுமாக இருக்கையில் முதலில் மீன்பிடி திருவிழா நடக்குமாம். அந்தக் குறிப்பிட்ட ஏரியின் பாசனப் பகுதியில் வாழும் மக்கள் அத்தனை பேரும் ஒரே நாளில் ஏரியில் கூடி மீன்பிடிப்பார்களாம். மீன்கள் அனைத்தும் பிடிக்கப்பட்டதும் தூர்வாரும் வேலை தொடங்குமாம்.
குளங்களை சுற்றிப் பல கிலோ மீட்டர் தூரத்திற்குப் பரவியிருக்கும் கிராமங்களிலிருந்து மக்கள் மாட்டு வண்டிகளில் படை போலத் திரண்டு வருவார்கள். வண்டிகளில் ஏற்றிச் செல்லப்படும் வண்டல் மண், வயல்களில் கொட்டி உழப்படும். இந்த வண்டல் மண்ணுடன் வேறு இயற்கை உரங்களையும், சில வேளைகளில் மனிதக் கழிவுகளையும்கூட சேர்த்து விவசாயிகள் உரமாகப் பயன்படுத்துவார்களாம். "நிலவொளியில் கருவேல மரங்களற்ற பரந்து விரிந்த ஏரிகளிலிருந்து மண்ணெடுத்துச் சென்ற உழவர்களில் சில ஆயிரம் பேர்களாவது இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்கள்" என்கிறார் சிவா.
அடுத்த மழைக்காலத்துக்குள் குளங்கள் சுத்தமாகத் தூர்வாரப்பட்டு, கரைகள் பலப்படுத்தப்பட்டு புதுப்புனலை வரவேற்கத் தயாராகிவிடும். பலநூறு ஆண்டுகளாக ஏரிப்பாசனப் பகுதிகளில் விவசாயம் இப்படித்தான் நடந்து வந்தது. பெரும்பாலும் நிலப்பிரபுக்களின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருந்த விவசாயத்தில், ஏகாதிபத்தியத்தின் நேரடித் தலையீடு மிக அற்பமானதாகவே இருந்து வந்தது.
ஆனால், உரம் மற்றும் பூச்சி மருந்துகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு பல்கிப் பெருகின. உலகப் போர் நடைபெற்ற காலத்தில் மனிதர்களைக் கொன்று குவிக்கும் நச்சு வாயு போன்ற ரசாயன ஆயுதங்களை உற்பத்தி செய்து வந்த நிறுவனங்களுக்கு, அமைதிக் காலத்தில் வேறு சந்தைகள் தேவைப்பட்டன. இந்த நிறுவனங்கள் பெரும்பாலும் பூச்சிக்கொல்லிகள் மற்றும் உர உற்பத்திக்கு மாறிவிட்டன. தங்களது கண்டுபிடிப்புகள் மனிதர்களுக்குப் பதில் பூச்சிகளையும், புழுக்களையும் அழிக்கும் என்ற பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. விவசாயிகளின் நண்பன் என்று கருதப்பட்ட மண்புழுகூட, அழிக்கப்பட வேண்டிய உயிரிகளின் வரிசையில் சேர்க்கப்பட்டது.
எனவே, இந்த நிறுவனங்களுக்குச் சந்தை ஏற்படுத்திக் கொடுக்கத்தான் "பசுமைப் புரட்சி" தொடங்கப்பட்டது. வெளிநாட்டு உரங்கள் நமது வயல்களில் வெள்ளம் போல் பாயத் தொடங்கியதும், ஏகாதிபத்தியம் நேரடியாக விவசாயிகளின் வீட்டுக் கதவுகளைத் தட்டத் தொடங்கியதும் இந்தக் காலகட்டத்தில்தான். குளங்களில் ஏன் கருவேல மரங்கள் நடப்பட்டன என்ற கேள்விக்கு, "பல்லாயிரம் கோடி டாலர் செலவில் உர உற்பத்தி ஆலைகளைக் கட்டி வைத்திருக்கும் ஏகாதிபத்தியம், எப்படி பைசா செலவில்லாமல் மக்கள் ஏரிகளின் படுக்கைகளிலிருந்து உரத்தை உற்பத்தி செய்து கொள்வதை ஒப்புக் கொள்ளும்?" என்று எதிர்க் கேள்வி எழுப்புகிறார் சிவா.
தமிழகத்தின் விவசாயத்தை உர உற்பத்தி ஆலைகளின் பிடிக்குள் கொண்டுவர வேண்டுமென்றால் விவசாயிகளிடம் உர விற்பனை செய்ய வேண்டுமென்றால், அவர்கள் தங்களுக்குத் தேவையான உரத்தைத் தாங்களே தயாரித்துக் கொள்வதற்கான வாய்ப்புகளை அழித்துவிட வேண்டும். இது நடக்காதவரை உர உற்பத்தி நிறுவனங்கள், தங்கள் சந்தைகளை விரிவாக்குவதற்கு வாய்ப்பே இல்லை. அதுவரை, நம் நாட்டில் படித்த மேல்தட்டு வர்க்கத்தினர் அந்நியப் பொருட்கள் மீது தீராத மோகம் கொண்டிருந்தாலும்கூட, விவசாயிகள் தங்கள் வேர்களின் மீது நம்பிக்கை இழந்துவிடவில்லை. ஒரு வயல் முழுவதற்கும் பயன்படுத்த ஒரு சட்டைப் பையளவு நவீன உரம் போதும் என்று ஒரு விஞ்ஞானி கூறியதற்கு, ஆமாம் விளைச்சலைக் கொண்டு செல்ல இன்னொரு சட்டைப் பை போதும் என்று ஒரு விவசாயி கிண்டலடித்ததாக ஒரு கதை உண்டு.
இயற்கை உரங்களைப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கும், செயற்கை உரங்களை விவசாயிகளை ஏற்றுக் கொள்ளச் செய்வதற்கும் திட்டமிட்ட முறையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. "ஏரிப்படுக்கைகளிலிருந்து விவசாயிகள் வண்டல் மண் எடுப்பதைத் தடுப்பதற்காகத்தான் ஏரிகளின் நடுவே கருவேல மரங்கள் நடப்பட்டன" என்ற முடிவுக்கு சிவா வருகிறார். ஏரிகளிலிருந்து வண்டல் மண் எடுக்கப்படுவது தடுக்கப்படாத வரையில் உர விற்பனை சாத்தியமேயில்லை. தன்னிறைவான இந்த முறை இருக்கும் வரை, ஏகாதிபத்திய பாணி விவசாயத்திற்கு மாறிச் செல்ல விவசாயிகளைத் தூண்டுவது சாத்தியமேயில்லை.
இது எப்படி நிறைவேற்றப்பட்டதென்றால், முதலில் சில குளங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, கருவேல மரங்கள் நடுவதற்காக வனத்துறையிடம் ஒப்படைக்கப்படும். மரங்கள் நடப்பட்டவுடன் அவற்றில் பறவைகள் தங்கும். அவற்றின் எச்சம் கலந்த நீர் நிலங்களுக்குப் பாயும்போது, அது ஓர் அற்புதமான, வீரியமான சத்து நிறைந்த தண்ணீராக, நீரே உரமாக இருக்கும் என்ற பிரச்சாரத்தை வனத்துறை சுற்றியுள்ள கிராமங்களில் மேற்கொள்ளும். துண்டுப் பிரசுரங்கள் முதல் செய்திப் படங்கள் வரை அத்தனை பிரச்சார சாதனங்களும் பயன்படுத்தப்படும். ஆனால், இத்தகைய பிரச்சாரம் மிகுந்த கவனத்துடன் மேற்கொள்ளப்பட்டது. குளங்கள் ஒன்றன்பின் ஒன்றாக இடைவெளிவிட்டு வனத்துறையால் விழுங்கப்பட்டன.
கருவேல மரங்கள் நடுவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட குளங்களையும் ஏரிகளையும் சுற்றி மட்டுமே இந்தப் பிரச்சாரம் நடத்தப்பட்டன. அதாவது காதைக் கிழிக்கும் அரசின் வழக்கமான பாணியில் இல்லாமல், ஏறத்தாழ ஒரு கிசுகிசுப்புப் பாணியே நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனால் ஏதோ ஒரு பிரம்மாண்டமான திட்டம் செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது என்ற செய்தி - நகரங்களையும், மற்ற பகுதிகளையும் எட்டிவிடாமல் தடுக்கப்பட்டது.
மழைக்காலங்களில் குளங்களில் நீர் நிரம்பும்போது, கருவேல மரங்களால் மட்டுமே தாக்குப் பிடித்து நிற்க முடியும். எனவேதான் இம்மரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. ஒரு குளத்தில் அல்லது ஏரியில் கருவேல மரங்கள் நடப்பட்டதுமே வனத்துறை வேலியிட்டு, அதை மக்களிடமிருந்து பிரித்துவிடும். குளத்தில் வண்டல் மண் எடுப்பது மட்டுமல்ல் ஆடுமாடுகள் மேய்ப்பதுகூட வனத்துறையால் தடுக்கப்பட்டு விடும். அப்போதிருந்து இன்றுவரை ஒவ்வொரு குளமாக வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, அவற்றில் கருவேல மரங்கள் நடப்பட்டு வருகின்றன. ஆயிரம் ஆண்டுகால வரலாறு கொண்ட ஏரிகளில் இம்மரங்கள் நடப்பட்டதால், மேடுதட்டிப் போய் பெயருக்கு மட்டுமே ஏரிகளாக உள்ளன.
மக்களின் எரிபொருள் தேவைக்காகத்தான் ஏரிகளில் கருவேல மரங்கள் நடப்பட்டன என்ற அப்பட்டமான மற்றொரு பொய்யையும் சிவாவின் ஆய்வு வெட்ட வெளிச்சமாக்குகிறது. குளத்தில் வளர்ந்திருக்கும் கருவேல மரத்தில் இருந்து ஒரு சுள்ளியை உடைக்கக்கூட சட்டப்படி வனத்துறையின் அனுமதி பெற வேண்டியிருக்கும். இது, கிராம மக்கள் அத்தனை பேருக்கும் தெரிந்ததுதான். "அய்ந்தாண்டுகளுக்கு ஒருமுறை தமிழகம் முழுவதும் உள்ள ஏரிகளில் வளர்ந்திருக்கும் கருவேல மரங்கள் வனத்துறையால் வெட்டப்பட்டு, திருப்பூருக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. அவை அங்கே தொழிற்சாலைகளில் எரி பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், அது மொத்த எரிபொருள் தேவையில் ஒரு சதவிகிதம்கூட இருக்காது" என்கிறார்.
"தங்கள் வாழ்வில் இப்படியொரு பெரும் பாதிப்பு ஏற்படுவதை மக்கள் எப்படி ஏற்றுக் கொண்டார்கள் என்பது ஒரு முக்கியமான கேள்வி. எப்போதாவது ஒரு முறை ஏதாவது ஒரு விவசாயிகள் இயக்கம், குளங்களில் கருவேல மரங்களை நடக்கூடாது என்று விடுவிக்கும் அறிக்கைகளைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துத் தானிருக்கும். ஆனால், இத்திட்டத்தின் வீச்சையும் அது ஏற்படுத்தி வரும் சர்வநாசத்தையும் கணக்கிலெடுத்துக் கொண்டு பார்த்தால், இதற்கெதிராக குறிப்பிடத்தக்க போராட்டங்கள் எதுவும் நடத்தப்படவில்லை என்பது உண்மைதானே. அறுபதுகளிலும் எழுபதுகளிலும் விவசாயிகள் எதிர்கொண்ட பல்வேறு நெருக்கடிகள்/அரசின் இந்தத் திட்டமிட்ட தாக்குதலின் வெற்றிக்கு உதவிகரமாயிருந்தன" என்ற முடிவுகளுக்கு சிவா வருகிறார்.
கால்நடை வளர்ப்பு வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டது. வண்டி மாடுகள் மற்றும் உழவு மாடுகளைப் பெறுவதில் விவசாயிகளுக்கு பெரும் சிரமங்கள் ஏற்பட்டன. இது தவிர, தமிழகம் முழுவதும் கூட்டுக் குடும்பங்கள் உடைபட்டதும் இந்தக் காலகட்டத்தில்தான். விவசாயிகள் ஆயிரக்கணக்கில் சார்பதிவாளர் அலுவலகங்களுக்குப் படையெடுத்து, கண்ணீரும் கம்பலையுமாகப் பாகப்பிரிவினை செய்து கொண்டார்கள். குடும்பங்கள் தனித்தனித் தீவுகளாக மாறிப்போய் பலவீனப்பட்டுப் போன நிலையில், பழைய முறையில் குளங்களுக்கு வண்டி கட்டிச் சென்று மண்ணெடுக்கத் தேவையான ஆள்பலத்தையும் அவர்களால் திரட்ட முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. தலித்துகள் பெருமளவில் நகரங்களுக்கு இடம் பெயர்ந்தது மற்றொரு காரணம்.
கருவேல மரங்களை நடுவது முழுவேகம் பெற்றது எண்பதுகளின் தொடக்கத்தில்தான். இந்தக் காலத்தில் கால்நடை வளர்ப்பு ஏறக்குறைய அழிவை நெருங்கிவிட்டது. இந்த மரங்களினால் குளத்தில் தேக்கப்படும் நீரின் அளவு கால்பகுதியாகக் குறைந்துவிட்டது. ஆனால், நீர்ப்பாசனத்தில் ஏற்பட்ட பற்றாக்குறையைத் தற்காலிகமாகச் சமாளிக்க, பம்புசெட் நிறுவனங்கள் உதவிக்கு வந்தன. நமக்கே நமக்கென்று ஒரு போர்வெல். மழையைப் பற்றி, கொடிக்கால்கள், கால்வாய்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம். பஞ்சாயத்து வேண்டாம். கூட்டு உழைப்பு வேண்டாம். பூமி சல்லடைக் கண்களாகத் துளைக்கப்பட்டன.
எனவே, பழைய முறையில் விவசாயம் செய்வதில் விவசாயிகளுக்கு ஏற்பட்ட சிரமங்கள், செயற்கை உரம் சிறந்தது என்ற அரசின் திட்டமிட்ட பிரச்சாரம் போன்றவை, மக்களை இப்பேரழிவு ஏற்படுத்தும் திட்டத்திற்கு எதிராகப் போராடாமல் தடுத்துவிட்டன. பலநூறு கிலோ மீட்டர் பரந்து விரிந்திருக்கும் தமிழகத்தின் வறண்ட நிலப்பரப்புகளில் தலைமுறை தலைமுறையாக கடும் உழைப்பாலும், அனுபவம் தந்த அறிவாலும் மக்கள் ஏற்படுத்தியிருந்த ஏரிகளும், அவற்றைச் சுற்றியிருந்த பசுமைத் திட்டுகளும் சுருங்கி வருகின்றன.
ஏறக்குறைய ஏரிப்பாசனம் பெயரளவிலானதாகச் சுருங்கிப் போய் காவிரி வடிநிலத்தை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய நிலைக்குத் தமிழகம் தள்ளப்பட்டு வருகிறது. ஏரிகள் நாசமாக்கப்பட்டதால், ஏராளமான நெல்வகைகள் அழிந்து போய்விட்டன. மீன் வகைகள் மறைந்தே போய் விட்டன. குளங்களைச் சுற்றி வாழ்ந்து வந்த மீனவர்கள், கொடும் வறுமைக்குள் தள்ளப்பட்டு விட்டன. விவசாயிகளின் நிலையோ சொல்லவே வேண்டாம். "ஆனால், இத்திட்டத்திற்கு ஆங்காங்கே எதிர்ப்புகளும் இல்லாமல் இல்லை" என்கிறார் சிவா.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பிலாத்து என்ற கிராம மக்கள், தங்கள் கண்மாயில் கருவேல மரங்களை நடுவதற்கு வனத்துறை செய்துவரும் முயற்சியை, ஆறு ஆண்டுகளாகத் தன்னந்தனியாகப் போராடி முறியடித்து வருகின்றனர். "கொக்கோ கோலாவைப் போராடி விரட்டிய கேரள பிளாச்சி மடத்தின் போராட்டத்திற்கு எந்தவிதத்திலும் குறையாதது பிலாத்து கிராம மக்களின் போராட்டம். ஆனால், எந்தச் செய்தித்தாளும் பிலாத்து பற்றிய செய்திகளை வெளியிடவில்லை. சுற்றுச்சூழல்வாதிகள் படையெடுக்கவும் இல்லை. இருப்பினும், பிலாத்து கிராமம் தன்னந்தனியாக தொடர்ந்து எதிர்த்து நிற்கிறது. பிலாத்து வெல்வதும் வீழ்வதும் தமிழக மக்களின் கைகளில்தான் இருக்கிறது" என்கிறார் அவர்.
ஆங்காங்கே பிலாத்துகள் இருந்தாலும் அரசு (தி.மு.க., அ.தி.மு.க., தற்போதுள்ள 7 கட்சிக் கூட்டணி அரசு) எந்தவிதமான அவசரமுமின்றி, தன் வழியில் நிதானமாக முன்னேறி வருகிறது. கிசுகிசுப்புப் பிரச்சாரத்தை மேற்கொள்வதில் வனத்துறை, கடந்த இருபது ஆண்டுகளில் பெரும் நிபுணத்துவம் பெற்றுவிட்டது. சின்னஞ்சிறு ஓடைகளையும், காட்டாறுகளையும் அடிப்படையாகக் கொண்டு மக்கள் உருவாக்கிய ஏரிப்பாசனம், ஏகாதிபத்தியத்தின் லாபவெறியால் அழிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பேரழிவு மக்களின் கண்களிலிருந்து திட்டமிட்டு மறைக்கப்பட்டு மழையின்மையும், வறட்சியும்தான் விவசாயத்தின் அழிவுக்குக் காரணம் என்று நம்ப வைக்கப்பட்டுள்ளது.
ஓட்டுக் கட்சிகள் அத்தனையுமே கருவேல மரங்களின் விஷயத்தில் பொருள் பொதிந்த மவுனம் மட்டுமே இதுவரை சாதித்து வந்துள்ளன. அவற்றிடமிருந்து நாம் வேறெதையும் எதிர்பார்க்க முடியாது என்பது உண்மைதான். ஆனால், இந்த மாபெரும் சதி நம் சுற்றுச் சூழல்வாதிகள் மற்றும் புரட்சியாளர்களின் கவனத்தைக் கவராமல் போனதுதான் ஆச்சரியம். அவர்கள் தன்னிச்சையாகத் தோன்றும் மக்கள் எழுச்சிகளில் சவாரி செய்வதில் மட்டுமே விருப்பம் கொண்டிருப்பதால், இந்தச் சதி முழு வெற்றியை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
பசுமைப் புரட்சி, செயற்கை உரங்கள் ஆகியவை விவசாயத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து ஏராளமான ஆய்வுகள் செய்யப்பட்டிருந்தாலும், கருவேல மரங்களை நடுவதன் மூலம் ஏற்படுத்தப்பட்ட பேரழிவு, பெரும்பாலும் ஆய்வாளர்களின் கண்களுக்குத் தப்பியே வந்துள்ளது. உரிய காலத்தில் இந்த மாபெரும் சதி தடுக்கப்படாவிட்டால், போபால் விஷவாயுக் கசிவால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர் என்பதைப் போல தமிழக ஏரிப்பாசனம் ஏகாதிபத்தியத்தின் லாப வெறியால் அழிந்தது என்பதும் பின்வரும் தலைமுறைகளுக்கு வெறும் செய்தியாக மட்டுமே மாறிவிடும்.

ஈரம் கசியும் பாறை

ஈரம் கசியும் பாறை
Tamil Politics News Article பெங்களூரிலிருந்து ஓசூர் வரும் பாதையில் சிறை.
கட்டிடம் புதிதாய் இருந்தாலும், மத்திய சிறைச்சாலைகளுக்கே உரிய நீண்ட நெடிய மதில் சுவர்கள், மிகப்பெரிய கதவுகள், துப்பாக்கி ஏந்திய காவலர்கள், தடபுடலான அதிகார ஆணைகள் எல்லாம் சேர்ந்து சிறை சிறைதான் என்பதை உணர்த்தின.
தலைவர் நெடுமாறனோடு, நானும், பெங்களூர் வழக்குரைஞர் இராமமூர்த்தியும் அந்தச் சிறையை அடையும் போது, மதியம் மூன்று மணி நெருங்கிக் கொண்டிருந்தது. கடந்த ஓராண்டிற்கும் மேலாக அச்சிறையில் பேராசிரியர் நெடுஞ்செழியனும், ஆய்வாளர் குணாவும் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களைச் சந்திப்பதே எங்கள் நோக்கம். அதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்த வழக்குரைஞர் இராமமூர்த்தி, சிறை அதிகாரிகளோடு கன்னடத்தில் பேசிக் கொண்டிருந்தார். அந்த நிமிடம் வரை, அது எனக்கு ஒரு இயல்பான நிதழ்வாகவே இருந்தது.
"பொடா" சிறையில் நான் இருந்தபோது நண்பர்கள் பலர் என்னை வந்து சந்தித்துள்ளனர். உள்ளே இருந்துகொண்டு, வெளியிலிருந்து வருபவர்களைச் சந்திப்பதற்குப் பதிலாக, இப்போது வெளியில் நின்றபடி, உள்ளே இருப்பவர்களைச் சந்திக்கப் போகிறோம் என்ற எண்ணம்தான் இருந்தது. அச்சந்திப்பு என் நெஞ்சை நெகிழ வைக்கப்போகும் ஒன்றாக இருக்கும் என நான் அப்போது எண்ணவில்லை. அதிகாரிகளிடம், நண்பர் இராமமூர்த்தி அனுமதி பெற்று வந்ததும், மூவரும் உள்ளே சென்றோம்.
பொதுவாக வலைக் கம்பிகளின் வழியாகத்தான் உள்ளே இருப்பவர்களைப் பார்க்க முடியும். என்னோடு சிறையில் இருந்த மருத்துவர் தாயப்பன், தன்னைப் பார்க்க வந்த தன் தங்கையைப் பற்றி ஒரு கவிதை எழுதினார்.
கம்பிவலை மறைக்கிறது
காணமுடியவில்லை
உன் முகத்தை முழுதாய்...
எல்லோரும்
இரைந்து பேசுகின்றனர்
ஒழுங்காய்க் கேட்க
முடியவில்லை
உன் குரலை.
விழிகள் சிவந்து நிற்கும் உன்
விரல் பற்றிக் கூட என்னால்
சொல்ல முடியவில்லை
ஒரு ஆறுதல் வார்த்தை
இந்தச் சிறைச் சூழலில்
எப்படி எழுதுவேன்
உனைப் பற்றி ஒரு கவிதை
இதுதான் சிறை என்றாலும், தலைவர்களோ, புகழ்பெற்ற பெரியவர்களோ வரும்போது, சிறையதிகாரிகளின் அறையில் நேருக்கு நேர் சந்தித்து அருகில் அமர்ந்து உரையாட அனுமதிப்பார்கள். நெடுமாறன் அவர்களோடு சென்றதால், அந்த வாய்ப்பு அன்று எனக்கும் கிட்டியது. கூடுதல் கண்காணிப்பாளர் அறையில் நாங்கள் அமர்த்தப்பட்டோம். முதலில் தோழர் குணாவை அந்த அறைக்கு அழைத்து வந்தனர், அவரை நான் சந்தித்துப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. எப்போதுமே அவருடன் எனக்கு நெருங்கிய பழக்கம் இல்லை. அவருடைய நூல்கள் பலவற்றைப் படித்துள்ளேன் என்பதும், ஓரிரு முறை பொது நிகழ்ச்சிகளில் பார்த்துள்ளேன் என்பதும் தான் எங்களுக்கிடையிலான தொடர்பு. இடையில் ஒருமுறை, கோலார் தங்கவயல் கூட்டமொன்றில் அவர் தலைமையில் நான் பேசமாட்டேன் என்றும், கூடக் கூறியிருக்கிறேன். அதற்கு ஓர் அழுத்தமான காரணம் உண்டு.
தந்தைப் பெரியாரை நான் என் தாய், தந்தைக்கு இணையாக நேசிப்பவன். என் கண் திறந்த அறிவாசான் அவர்தான் என்று நம்புகிறவன். இது வெறும் உணர்ச்சி வயப்பட்ட உறவன்று. அவர் நூல்களைப் படித்தும், அவரின் உரையைச் சிறுவயதில் கேட்டும் நான் பெற்ற உணர்வு. தோழர் குணா, திராவிடத்தால் வீழ்ந்தோம் என்னும் நூலில் தந்தை பெரியாரை மிகக் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். விமர்சனம் செய்யக் கூடாது என்று நான் கூறவில்லை. அப்படிக் கூறுவது பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைக்கே எதிர் முரணானது.
அதே நேரம், விமர்சனத்திற்கும், அவதூறுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை நாம் மறந்துவிடக் கூடாது. கவிஞர் பாரதிவசந்தன் அண்மையில் எழுதியிருந்ததைப் போல "நாம் எந்தத் தளத்தில் நின்று கொண்டு யாரை விமர்சிக்கிறோம் என்பதும், நம்முடைய விமர்சனம் யாருடைய குரலாக ஒலிக்கிறது என்பதும்" மிக முக்கியமான செய்திகள். ஆனாலும், குணாவின் பரந்து விரிந்த படிப்பறிவை நான் மிகவும் மதிப்பவன். மார்க்சியப் பார்வையில் தேசிய இனச் சிக்கல்கள் குறித்து வினா - விடை முறையில் அவர் எழுதியுள்ள நூல் ஒன்றினை நான் மிக விரும்பி படித்துள்ளேன். அவருடைய "இந்திய தேசியமும், திராவிட தேசியமும்" என்னும் நூலும், "தமிழின மீட்சி" என்னும் சிறு நூலும் வெளிவந்தபோது, அக்கருத்துகளில் எனக்கு மாறுபாடு ஏற்பட்டது. வெளிநாட்டு ஆய்வாளர் இர்ஷிக் எழுதியுள்ள "1930 களில் தமிழ் மறுமலர்ச்சி" என்னும் ஆங்கில நூலில் கூறப்பட்டிருந்த பல கருத்துகள், குணாவின் இரு நூல்களிலும் இடம் பெற்றிருந்தன.
"திராவிடத்தால் வீழ்ந்தோம்" நூலோ, கருத்து விவாதங்களைத் தாண்டி, பெரியாரை மிகவும் இழிவுபடுத்துவதாக இருந்தது. சங்கராச்சாரியையும், பெரியாரையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கும் பார்வை அந்நூலில் இருந்தது. அது கண்டு வெறுப்படைந்த நான், அவரோடு சேர்ந்து பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதைக் கூட தவிர்த்தேன்.
இப்போது அவர் சிறையிலிருக்கும் வேளையில், பழைய கோபங்களைத் தாண்டி, அவரைச் சந்தித்து உரையாட வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. கூடுதல் கண்காணிப்பாளர் அறைக்கு அழைத்துவரப்பட்ட அவர் எங்களைக் கண்டதும் மகிழ்ச்சியுடன் கை குலுக்கினார். என்னிடமும் உரையாடினார். இருவரும் பகை பாராட்டவில்லை.
வழக்கு விவரங்கள் குறித்தும், சிறையில் அவர்கள் நடத்தப்படும் விதம் குறித்தும் பேசிக்கொண்டிருந்தோம். அவர் வந்து, பதினைந்து, இருபது நிமிடங்களுக்குப் பிறகு, பேராசிரியர் நெடுஞ்செழியனை அழைத்து வந்தனர். நெடுஞ்செழியன், பெரியாரியக் கொள்கைகளில் பிடிப்பும், உறுதியும் கொண்ட ஆய்வறிஞர். பகுத்தறிவுக் கொள்கைகளில் என் போன்றவர்களுக்கு முன்னோடியாய்த் திகழ்பவர். "உலகாயுதம்" குறித்த அவருடைய ஆய்வு நூல் தமிழ் அறிவுலகிற்குக் கிடைத்துள்ள பெரும் சொத்து என்றே கூறவேண்டும். திருச்சி கல்லூரியில் பணியாற்றிய காலம் தொட்டே அவரை நான் அறிவேன். பிறகு, தஞ்சைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வந்தார்.
பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு அவர் விரைவில் தேர்ந்தெடுக்கப்படக் கூடும் என்ற எண்ணம் கல்வி உலகில் இருந்தது. அதற்கான தேர்வுப் பட்டியல் வரையில் கூட, அவர் பெயர் இடம்பெற்றிருந்ததாகச் செய்திகள் உண்டு.
இத்தனை தகுதியும், திறமையும் கொண்ட பேராசியர் நெடுஞ்செழியன், 04.07.2003 காலை, திருச்சியில் உள்ள அவரது வீட்டில் கைதுசெய்யப்பட்டார். காலையில் நடைப்பயிற்சிக்காக வெளியில் சென்று திரும்பிய அவரைச் சிலர் பின்பற்றி அவர் வீட்டுக்குள் வந்துள்ளனர். அவருடைய நூல்களைப் படித்துள்ளதாகவும், அவரோடு உரையாட விரும்புவதாகவும் கூறியுள்ளனர். ஆனால் அவர்களுடைய தோற்றம் பேராசிரியருக்கு ஐயத்தைக் கொடுத்திருக்கிறது.
சில நிமிடங்களில் இந்த நாடகம் முடிந்து, தாங்கள் கர்நாடகத்திலிருந்து வந்துள்ள காவல் துறையினர் என்றும் 1986ஆம் ஆண்டு, "சுதந்திர தமிழ்நாடு" கோரி அவர் பேசிய பேச்சுக்காகக் கைது செய்ய வந்துள்ளதாகவும் கூறியுள்ளனர். தமிழ்நாட்டிற்குள் வந்து, கர்நாடக காவல்துறை ஒரு தமிழறிஞரை எளிதாகக் கைது செய்ய முடிகிறது. 1986ஆம் ஆண்டு பேசிய பேச்சுக்கு, ஏன் இவ்வளவு காலந் தாழ்ந்து நடவடிக்கை என்றால், அவர் தலைமறைவாக இருந்ததாக முதல் தகவல் அறிக்கை கூறுகின்றது. திருச்சியில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்தபோது, கண்டுபிடித்து கைது செய்ததாகவும் அவர்கள் கூறுகின்றனர். சொந்த வீட்டுக்குள்ளேயே பதுங்கி இருக்க வேண்டிய அவசியம் பேராசிரியருக்கு ஒரு நாளும் வராது. மேலும் 17 ஆண்டுகளாக அவர் தலைமறைவாக இருந்தார் என்பதைக் காட்டிலும் கேலிக் கூத்து வேறு எதுவும் இருக்க முடியாது. அவர் கைது செய்யப்படுவதற்கு முதல்நாள் வரையிலும், அவருடைய வருகையும் அதற்கான அவருடைய கையெழுத்தும் பல்கலைக்கழகப் பதிவேட்டில் பதிவாகியுள்ளது.
இவ்வளவு உண்மைகளையும் குறிப்பிட்டு, நீதிமன்றத்தில் அவர் சார்பில் தொடுக்கப்ட்ட விடுவிப்பு மனு (Discharge petition) வும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. அதனால் தொடர்ந்து அவர் சிறையில் இருந்து வருகிறார். என்னையும், தலைவர் நெடுமாறனையும் கண்ட அவர், எங்கள் கைகளை இறுகப் பற்றிக் கொண்டார். மனநெகிழ்ச்சி அழுகையாய்ப் பீறிட, அதனைக் கட்டுப்படுத்த முயன்று அவர் குலுங்குவதை அறிய முடிந்தது. அவருக்கு இருபுறமும் அமர்ந்திருந்த நாங்கள், ஆளுக்கொரு கையைப் பற்றி அறுதலாக அழுத்தினோம். அவருடைய குமுறல் அடங்கச் சில நிமிடங்கள் ஆயின. "சிறை கண்டோ தனிமையை எண்ணியோ நான் அழவில்லை. எந்தக் குற்றமும் புரியாத நான் ஓராண்டாய்ச் சிறையில் இருக்கிறேன். என்னைப் பார்க்கத் தமிழ்நாட்டிலிருந்து நீங்கள் வந்துள்ளதை எண்ணி, உங்கள் அன்பிலே நெகிழ்ந்து போனேன்" என்றார் பேராசிரியர். அவருடைய கொள்கை உறதியையும் நெஞ்சுரத்தையும் நாங்கள் அறிவோம். ஆனாலும் அன்பெனும் ஈரம் அந்தக் கொள்ளைப் பாறையிலிருந்து கசிந்தது.
"தமிழ்" என்பது கெட்ட வார்த்தையாகவும், தமிழ் உணர்வாளர்கள் தீவிரவாதிகளாகவும் கருதப்படும் காலத்தில் தான் நாம் வாழ்கிறோம் என்பதை அந்நிமிடங்கள் நெஞ்சில் ஆழப்பதித்தன. பேராசிரியர் கைது செய்யப்பட்ட போது உடைமாற்றிக் கொள்ளவும் அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லையாம். காவல் நிலையத்திலும் ஒரு குற்றவாளியைப் போலவே அவர் நடத்தப்பட்டுள்ளார்.
சிறையில், நாங்கள் சந்தித்த அன்றைய நாள்வரை, அவருக்கு முதல் வகுப்பு வழங்கப்படவில்லை. காலை உணவாகக் களிதான் கொடுக்கப்படுகிறதாம், அதுபற்றியெல்லாம் கவலைப்படாமல், ஆசிவக மதம் பற்றிய புதிய செய்திகளைக் கொண்டுவரும் நோக்கில் உள்ளே பல நூல்களைப் படித்துக் கொண்டிருப்பதாகவும், வெளியில் வந்தவுடன் சிறந்த ஆய்வு நூல் ஒன்றை எழுதத் திட்டமிட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
சிறைக்கதவுகள் திறக்குமா? ஆய்வு நூல்கள் வெளிவருமா? அல்லது "தமிழ்" எப்போதும் களி தின்று கொண்டிருப்பதுதான் நமக்குச் சம்மதமா?

இருண்ட வீடு

குடும்பத்தில் முதியோர் முதல் அனைவர்க்கும் தேவையான வசதிகள் வழங்கப்பெற்று, எல்லோரும் மகிழ்வுடன் திகழ்ந்தால், அக்குடும்பம் நிறைவு நிறைந்த குடும்பம்; நிம்மதி நிறைந்த வீடு எனக் கூறப்பெறுவதற்குரிய இலக்கணம் ஆகிறது.
முதியோர் முனகல்; குழந்தைகள் அரைப்பட்டினி; படிக்க வசதியின்றி வேலைக்குப் போகும் விபரீதம் இன்னபிற என்றால், அது சிறந்த குடும்பம் என்பதற்கில்லை. இருண்ட வீட்டுக்கு எடுத்துக்காட்டு.
இந்தக் கூட்டுக் குடும்ப இலக்கண, இலக்கியங்கள் நாட்டுக்கும் நன்கு பொருந்தும். வீட்டின் விரிவாக்கம் நாடு. தனிமனித அடித்தளம் மீதெழுந்த அடுக்குமாடிதானே, தேசம்?
நாட்டில் எல்லாம் இருந்தும், மக்கள் உயிர்க்கு மட்டும் பாதுகாப்பில்லை என்றால், அது நாடல்ல. பிணந்தின்னும் பிசாசு வாழ்வதாகப் புராணிக்கப்படும் சுடுகாடு அது.
"தினமணி" - மார்ச் 26 இதழில், "சிறுநீரகத்தை எடுக்க மாணவர் கடத்தல்: பெங்களூர்க்குச் சென்றபோது காரிலிருந்து தப்பினார்" என்ற செய்தி படித்தேன். சுதந்திர, மக்களாட்சி நாட்டில் வாழ்கின்றோமா அல்லது அறிவியல் முன்னேற்றம் அடைந்த, ஆனால் பண்புகளால் பழங்காலக் காட்டுமிராண்டிக் கூட்டமைப்பில் அங்கம் வகித்து அவதிப்படுகின்றோமா என்பதை அறிய இயலவில்லை.
தேர்வுக்குப் படிக்கச் சென்ற மாணவன் கடத்தப்பட்டிருக்கிறான். தப்பிக்க முயன்றதால், சூடு போடப்பட்டிருக்கிறான். சூடு போடப்பட்ட இடங்கள் தீக்கொப்பளங்களாக விளங்கிய பரிதாபக் காட்சியைத் தொலைக்காட்சியில் பார்க்க நேர்ந்தது.
இக்கொடுஞ்செயலுக்குப் பலமான பின்னணி, கூட்டம் - கூட்டமாக இருக்கலாம். விடுதலை பெற்று அரை நூற்றாண்டுக்குப் பின்பும் விவரிக்க முடியாத விபரீதம்! அச்சமின்றிப் பகலில் கூட நடமாட முடியா அவல நிகழ்வு.
போதைப் பொருள் போன்றவை கடத்தப்படுவதைப் படிக்கிறோம். மனித உறுப்புக் கடத்தல்கள் அண்மைக்கால அரிய கண்டுபிடிப்பு. விஞ்ஞானத்தின் வியத்தகு சாதனைத் தொடர் நிகழ்வு!
இப்புனிதப் பணிக்கு உறுதுணை மருத்துவ, மாமனிதர்கள்! மருத்துவப் படிப்புக்குச் சேரும் முன்பு, "அறத்திற்கொவ்வாச் செயல் செய்ய மாட்டேன்" என்று உறுதி மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது. இன்பம் நிறைந்திராத வீட்டை "இருண்ட வீடு" என்பதுபோல், துன்பம் தொடர்கதையான நாட்டை என்ன சொல்வது? ஒளிர்கிறது என்றால் உலகம் சிரிக்கும்.
பகலில் படிக்கப் போகிற மாணவனுக்கும் கூட பாதுகாப்பில்லை. வீடு திரும்பும் உத்தரவாதம் இல்லை. உலகில் மாபெரும் மக்களாட்சி நாடு என்று மார்தட்டப்படுகிறது.
"தன்நெஞ் சறிவது பொய்யற்க - பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்" - மனச்சாட்சி இருந்தால் உறுத்தும்.
சமுதாயக் குற்றக்கூட்டம், எய்ட்ஸ் போல் எங்கும் பரவி உள்ளது. எண்ணிக்கையில்தான் ஏற்றத்தாழ்வுகள்.
திரைப்படம், பல கெடுதல்களுக்கு வித்தாக அமைந்தாலும் மனித உறுப்புத் திருட்டு பற்றி மிகச் சிறப்பாகச் செயல்விளக்கம் தருகிறது. (ரமணா) புனிதமான பல மருத்துவப் பெருமக்கட்கு மத்தியில், இந்தப் பொல்லாக் கூட்டம் இருப்பதையும் விளக்குகிறது. நல்ல மருத்துவர்கள் இந்த நச்சுக் கொடிகளை உலகுக்குக் காட்டினால், இக்கொடுமைகள் நிகழா. உலகம் புகழும்.
திரைப்படத்தின் அரைகுறையை, ஆட்டத்தை விமர்சிப்போர் உறுப்புத் திருட்டுப் பற்றிப் பேசவோ, உரிய நிவாரணம் தேடவோ முனைவதில்லையே, ஏன்?
பள்ளியில் நடக்கும் விபரீதங்களுக்கு முழு நிர்வாகமும் பொறுப்பேற்கிறது. ஒரு மாவட்டத்தில் இதுபோன்ற குற்றம் நிகழ்ந்தால், மாவட்டத் தலைமை பொறுப்பேற்க வேண்டும் என்பது தவறா? இன்றைய நிலையில் கடுந்தண்டனைகளே நல்ல தீர்ப்பு ஆகும்.
தனியார், பொதுத்துறை என்ற பாகுபாடின்றி, மருத்துவமனைகள் நல்லிதயம் கொண்ட நேர்மையாளர்களால் தீவிரமாகக் கண்காணிக்கப்பட வேண்டும்.
உயிர் காக்கும் தெய்வீகப் பணியாளர்கள் நிறைந்த மருத்துவத் துறையில் பொருள் வெறி கொண்ட சில கொலைகாரக் கறுப்பாடுகள் "போட்டோ பிடிக்கும்" கூட்டமாக, இருட்டுப் படம் தயாரிக்கும் கும்பலாகச் செயல்படத் தொடங்கிவிட்டன. "பணம் பறிக்கும் இடம்" என்பதைத் திரைப்படங்கள் காட்டும்போது, கற்பனை என்று கூறியது, மாபெரும் குற்றம் என்றாகிவிட்டது.
அரசியல் அமைப்புகள், கருணை இயக்கங்கள், தொடர்புடைய துறைகள் இச்சமுதாயத் துரோகக் குற்றவாளிக் கூட்டத்தை வேருடன் களையாவிட்டால், வேதாந்தப் பேச்சுகள் வெற்றுரையாகும்.
கடத்தப்பட்டு, சூடு போடப்பட்ட மாணவனைக் கண்டு, பொறுப்புள்ளோர்க்குத் தம் நெஞ்சு தம்மைச் சுடுகிறதோ இல்லையோ, கொடுமை கண்டு கொதிக்கும் உள்ளம் கொண்ட நல்லோர் கூட்டம், உரிய முறையில் சூடுபோடும் இயற்கை நியதி.
"வெள்ளைக்காரன் ஆட்சியிலே இப்படிப்பட்ட கொடுமையெல்லாம், முளைக்கும்போதே கிள்ளிவீசப்படும்" என்று புலம்புகிற "பெரிசுகளை, "நாட்டுப்பற்று அற்ற, அடிமை மோகம் கொண்ட துரோகக் கூட்டம்" என்று கொடுமைக்கு எதிராகக் குரல் கொடுக்கும் எந்த அருள் இதயமும் கூறாது என்பது மட்டும் உறுதி. இருள் அகற்றப்பட்டால்தான் ஒளி பிறக்கும் - வீட்டிலும் நாட்டிலும்!

என்ன வித்தியாசம்?

என்ன வித்தியாசம்?
ஏறக்குறைய 25 ஆண்டுகளாகியிருக்கலாம். எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில், ஆந்திரத்திலிருந்து ஓர் உறவுப் பெண், குரோம்பேட்டைத் தொழில் நுட்பக் கல்வி நிறுவனத்தில் ஆசியராகப் பணிபுரிய வந்தாள். உறவுக் குடும்பத்துடனே தங்கியிருந்து பணிக்குச் சென்று வாழ்வது அவளுக்கு உகந்ததாகப்படவில்லை. எனவே தங்குவதற்கு ஒரு தனியிடம் பார்த்துத் தர என் உதவியைக் கோரினாள். அக்காலத்தில் அந்தப் பகுதிகளில் வசதியான மகளிர் விடுதிகள் இல்லை. நானும் அவள் நிலைமையைப் புரிந்து கொண்டு, தாம்பரம் பகுதிகளில், அவள் தங்கி, சமைத்து, உண்டு, பணிக்குச் சென்று வர, பல வீடுகளில் வாடகைக்கு இடம் கேட்டேன். ஆனால் வீடுகளில் வாடகைக்கு என்ற பகுதிகள் காலியாக இருந்தும், ஒரு திருமணமாகாத பெண்ணுக்கு வாடகைக்கு விட எவரும் இசையவில்லை. வயதான தம்பதி, தனியே ஒரு பகுதியில் இருந்து கொண்டு, இன்னொரு பகுதியை வாடகைக்கென்று விட்டிருப்பவர்கள் கூட, இந்த இளம்பெண்ணுக்கு அந்தப் பகுதியைவிட இசையவில்லை. திருமணமாகாத ஆண்களுக்கு இத்துணை கண்டிப்புகளில்லை. ஆனால் அந்த ஆண் செய்யும் உதவிகளுக்கு மேலாக இவள் அவர்களுக்கு உதவ முடியும். அதேசமயம் அவளுக்கு அவர்கள் பாதுகாப்பாகவும் இருக்க முடியும். ஏனோ தெரியவில்லை. திருமணமாகாத, வேலைக்குச் சென்று சம்பாதிக்கும் பெண், நன்னடத்தையுடையவளாக இருக்க மாட்டாள் என்ற அனுமானமே, ஓர் ஒடுக்குதல் முத்திரையாக இருந்தது.
அந்தப் பெண் பிறகு எழும்பூரில் உள்ள ஒரு மகளிர் விடுதியில் தங்கப் போனாள். அவளுக்குக் காலை எட்டு மணிக்குள் கல்லூரிக்கு வரவேண்டும். எனவே விடுதியில் இருந்து ஏழு மணிக்குள் கிளம்பிவிட வேண்டும். அந்த நேரத்தில் விடுதியில் காலை உணவோ, மதிய உணவோ எதுவும் கிடைக்காது. ஆனால் இவை அனைத்துக்கும் அவள் மொத்தமாகப் பணம் கட்டியாக வேண்டும். என்னை இடையில் ஒருநாள் வந்து சந்தித்துச் சங்கடங்களைச் சொல்லி, வேலையை விட்டுவிட்டுப் போவதாகத் தீர்மானம் செய்திருப்பதையும் தெரிவித்தாள். ஐந்தாறு மாதங்கள் சென்ற பின் அவள் பெங்களூரில் நல்ல வேலையிலிருப்பதாகவும், அங்கு தங்குவதற்கு மகளிருக்கான வசதியுள்ள விடுதிகள் இருப்பதாகவும் எனக்கு எழுதினாள். திருமணமாகாத பெண்களுக்குத் தனியே தங்க இட வசதி எல்லா இடங்களிலும் எளிதாக இல்லை. என்றாலும், சென்னையைப் போல், மகளிர் வேலைக்குப் போனாலே ஒழுக்கக் குறைவானவர்களாகி விடுவார்கள் என்ற அனுமான முத்திரை குத்தி விடுவதில்லை என்று தோன்றுகிறது.
அண்மையில், அழகிப் போட்டியில் வெற்றி பெற்ற பெண் லட்சுமி பண்டிட், திருமணமானவள் என்ற உண்மையை மறைத்த குற்றத்தை ஏற்று, அழகிப் பட்டத்தைத் திருப்பித் தந்திருப்பதாகச் செய்தி வெளிவந்தது. இது இந்நாட்டிலுள்ள பெண் சார்ந்த கலாசார ஒடுக்குதல் சித்தாந்தங்களின் மோசடிகளை அம்பலப்படுத்தியிருக்கிறது. இதில் வேதனை தரும் நடப்பியல், பெண்கள் கண்டுகொள்ளாமலே தலைகுனிந்து ஏற்பதுதான்.
அழகிப் போட்டி சமாசாரமே நம் கலாசார மரபில்லை. கண்ணகி, சிதை, நளாயினி என்று மாதிரிகளைக் காட்டி, வறுமைக் கோட்டுக்குக் கீழ் குடிகாரக் கணவர்களிடம் வதைபடும் ஆயிரமாயிரம் பெண்கள் உயிரை மாய்த்துக் கொள்ள, கழுத்தை நெரிக்கும் கற்புக்கலாசாரமே வழிவகுத்துக் கொண்டிருக்கிறது. ஆணுக்கு எந்தக் கலாசாரமும் கிடையாது. எனவே, அவனுடைய ஆதிக்கங்களை, பெண் குலத்தின் மீதுள்ள உரிமையைப் பதிக்க, அழகுப்போட்டி என்ற கலாசாரம் சிறுமிகள் கல்வி பயிலும் பள்ளிகளைக் கூட விட்டுவைக்காமல் அரங்கேறுகிறது. பெண் வர்க்கத்தை நுகர் பொருள் வாணிபச் சரக்காக்க, இது ஏதோ அவள் உரிமை என்ற கருத்தையும் தந்திரமாகப் புகுத்துகிறது. சந்தை, வாணிபமே, மக்கள் தொடர்புச் சாதனங்களாகிய ஊடகங்களுக்கும் இலக்காகிப் போனதால், கலாசாரம் என்ற பெயரில், இரண்டு எதிர் எதிர் முனைகளும் பெண்ணுடலைக் குறி வைத்து, மூளைச்சலவை செய்யவே இயங்குகின்றன.
கலாசார மரபுகளின் வழுவாத தொடர்களாலும், ஆடை உரித்து ஆடவைக்கும் பாடல் காட்சிகள், விளம்பரங்கள் ஆகிய சேவைகளாலும் மக்களின் வாழ்வில் இன்றியமையாத இடம்பெற்றிருக்கிறது.
மாட்டு வாணிபப் பேரத்தில் விற்பவரும் வாங்குபவரும் தத்தம் கை விரல்களின் மேல் துணி போர்த்து, விரல்களைத் தொட்டு பேரம் முடிப்பார்களாம். ஏனெனில் அந்த மாட்டுக்கு இந்தச் சொந்தக்காரனிடம் இருந்து இன்னொருவனிடம் போகிறோம் என்று தெரியக்கூடாதாம்! அந்த அளவுக்கு விலங்கு விற்பனையின் போது காட்டப்படும் பண்பாடுகள் கூட, இந்தப் பெண் வாணிபத்தில் இல்லை. பத்துப் பேர் முன்னிலையில் ஆடைகள் உரியப்பட்ட நிலையில் பவனி வருவதும், அவர்களைத் தேர்ந்தெடுப்பதும், ஒரு காப்பாளன் என்ற திருமண உரிமையாளன் இருக்கும் போது, நெருடலைத் தோற்றுவிக்குமாம்! வெற்றி பெற்ற பெண், குடியிருக்க இடம் வேண்டி ஒரு பொய்ச் சான்று கொடுத்ததாக ஒப்புக் கொண்டிருக்கிறாள். விதிகள், திருமணம் என்று மட்டுமே குறிப்பிடுகிறதே தவிர, கன்னிமை குறித்து ஏதும் குறிப்பிட்டதாகத் தெரியவில்லை. ஓர் அயல்நாட்டில் இந்தியப் பெண் நுழையும் போது, கன்னிமைக்கான சோதனை கட்டாயமாக்கப்பட்ட போது, தீவிரப் போராட்டம் தோன்றியது.
இப்போது, பலரும் ஓர் உடலை உரிமையாக்கிக் கொள்ள, இவள் சம்பந்தமான அழகு சாதனங்கள், உள்ளாடை, மேலாடைகள் அனைத்தையும் விற்பனை செய்ய, இவளுக்கென்று உரிமையுள்ளவன் இருக்கலாகாது! இது மட்டுமே கலாசாரம்!
உடல் கவர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட சில பணிகளுக்கும், திருமணமாகாதவர் என்ற நிலை முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. பணி ஓய்வு, மூப்பு என்ற விதிகளில் கூட, ஆணுக்கும் பெண்ணுக்கும் வேற்றுமை காட்டப்படுகிறது. ஒவ்வொன்றுக்கும் போராட்டம் தேவையாகிறது. ஆனால், இந்தக் கவர்ச்சித் தத்துவத்தை, காட்சி ஊடகமாகிய தொலைக்காட்சி, பல்வேறு தொழில் நுணுக்க உத்திகளைக் கையாண்டு, பெண்களின் அறிவு சார்ந்த சிந்தனைத் தெளிவை மழுங்கடித்துவிடுகிறது. இவர்கள் தாமே உடல்களைக் காட்டிக் குதிக்கிறார்கள்? மறுக்கலாம் இல்லையா? என்று பொதுவாகப் பழியைத் திருப்பிவிட்டு, அந்தக் காட்சிகளை ரசிக்கும் ஆண்களே அதிகமானவர்கள். கறுப்புத்தான் எனக்குப் புடிச்ச கலரு என்ற ஹிட் பாடலை பாடுபவள் சிவப்பாகவே இருக்கிறாள். இந்தப் பாடலின் இலக்கு, தான் கட்டிக் கொள்ளும் ஆண் கறுப்பாக இருப்பதே மகிழ்ச்சி என்ற ஒப்புதல் வாக்குமூலம்!
ஆக, பெண், இருத்தலுக்காக, எதையும் விட்டுக் கொடுக்கலாம் என்ற நிலைக்கு நாள்தோறும் தள்ளப்படுகிறாள்.
நூற்றாண்டுகளாக அவளை ஒடுக்கி அடக்கிய கலாசார வடுக்கள் இன்றைய கல்வி மேம்பாடுகளிலும் தன்னுணவர்வுப் போராட்டங்களிலும் அழியவில்லை.
நலங்கள் வற்றிய வறுமைச் சூழலில் இவள் அடுத்தடுத்துப் பிறக்கும் பெண் குழந்தைகளைக் கொல்கிறாள். ஓர் ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காகக் கருத்தடை நலத்திட்டத்தைச் செல்லாக்காசாக்கி, தண்டனைகளையும் ஏற்றுக் கொள்கிறாள். அழகிப் போட்டியில் உலகறிய வெற்றி பெற்ற பின், போலி விதியை ஏற்று, பட்டத்தைத் திருப்பிய நாகரிகப் பெண்ணுக்கும், அடுத்தடுத்துப் பெண் குழந்தையைக் கொன்று சிறைவாசம் ஏற்கும் பெண்ணுக்கும் என்ன வித்தியாசம்?

கணிப்பா? திணிப்பா?

கணிப்பா? திணிப்பா?
தேர்தல்களை ஒழுங்காகவும் முறையாகவும் சுதந்திரமாகவும் நடத்துவதில் தேர்தல் ஆணையம் பல அம்சங்களிலும் முழு முனைப்புக் காட்டி வருவது உண்மையே. இது பெருமைக்குரியதும்கூட. ஆயினும் இத்தேர்தல்கள் சமதளத்திலோ, சமத்துவ வசதி வாய்ப்புகளுடனோ நடைபெறுவதாகக் கருதுவதற்கில்லை. ஏனெனில் தேர்தலில் போட்டியிட ஏராளமான நிதி வசதி தேவை. பெரிய பணக்காரர்கள் சொந்தப் பணத்தைச் செலவிடலாம். ஆனால் நாடாளுமன்றத்தில் சிறந்த முறையில் பணியாற்றுவதற்கான தகுதிகளும் ஆற்றலும் உடையவர்கள் எல்லோரும் தேர்தல்களில் போட்டியிட வாய்ப்பில்லை. ஏனெனில் தேர்தல் செலவுக்கான பணத்திற்கு எங்கே போவது?
இது ஒரு புறமிருக்க, தேர்தல் கருத்துக் கணிப்பு என்ற பெயரால் இத்துறையில் தேர்ச்சி பெற்ற நிறுவனங்கள் சில நவீன உத்திகளைப் பயன்படுத்தி ஒத்திகை நடத்தி, புள்ளிவிவரங்களைச் சேகரித்து அந்த அடிப்படையில் மதிப்பீடுகளை வெளியிடுகின்றன. அண்மைக்காலத்தில் இத்தகைய கருத்துக் கணிப்புகள் புதிய மவுசைப் பெற்றுவிட்டன. இவை நூற்றுக்கு நூறு சரியானவை என்று கூறுவதற்கில்லை. கடந்த ஆண்டு இறுதியில் வடமாநிலங்கள் நான்கில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் வெளியான கருத்துக் கணிப்புகளை - இறுதியில் தேர்தல் முடிவுகள் பொய்ப்பித்துவிட்டன.
ஆயினும் இத்தகைய கருத்துக் கணிப்புமுறை - மக்களுடைய நினைவோட்டத்தைப் பிரதிபலிப்பதற்குப் பதிலாக, அவர்களுடைய கருத்தோட்டத்தைத் திரிப்பதற்கே பயன்படுகின்றன என்று எழுப்பப்படுகின்ற புகாரை வழித்து எறிந்துவிடுவதற்கில்லை. அதோடு ஏராளமான பணச்செலவில் நடத்தப்படுகின்ற இக்கணிப்புகள் பெரிய கட்சிகளைப் பெரிதும் பாதிக்கக் கூடியன. சிறிய கட்சிகளை இருட்டில் தள்ளிவிடக் கூடியவை. பிரபல வழக்கறிஞர் கபில் சிபல் கூறியிருப்பதைப்போல இத்தகைய கணிப்பு - மக்களின் கருத்தைப் பிரதிபலிப்பதல்ல; ஒரு குறிப்பிட்ட கட்சிக்குச் சாதகமாகக் கருத்தோட்டத்தை உருவாக்கக் கூடியது என்ற விளக்கமும் குறிப்பிடத்தக்கது.
இத்தகைய கருத்துக் கணிப்புகள் இருதடவை நடத்தப்படுகின்றன. வாக்குப் பதிவுக்கு முன் நடத்தப்படுவது கருத்துக் கணிப்பு. வாக்குப் பதிவுக்குப் பிறகு - வெற்றி தோல்வி எத்தரப்புக்கு என்பது குறித்து நடைபெறுவது - வாக்குக் கணிப்பு. மக்களவைத் தேர்தல்கள் ஐந்து கட்டங்களில் நடைபெற இருக்கின்றன. அப்படியிருக்க, கருத்துக் கணிப்பு - வாக்குக் கணிப்பு ஆகிய இரண்டுமே பிந்திய கட்டத் தேர்தல்களைப் பாதிக்கக்கூடுமல்லவா! எனவே தேர்தல் ஆணையம் முன்னின்று நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இந்த இருவகையான கணிப்புகள் குறித்தும் ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது. கடைசிக்கட்டத் தேர்தல்கள் முடிவதுவரையில் கருத்துக் கணிப்பு - வாக்குக் கணிப்பு இரண்டுக்குமே தடை விதிக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சிகளும் கோரியுள்ளன. இதையொட்டி இவ்விருவிதக் கணிப்புகளைத் தடை செய்ய அவசரச் சட்டம் பிறப்பிக்குமாறு கோரி மத்திய அரசுக்குத் தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. இந்த யோசனை குறித்து மத்திய சட்ட அமைச்சகம் பரிசிலித்து வருகிறது.
இந்நிலையில் கருத்துக் கணிப்புக்குத் தடை விதிப்பது, அரசியல் சட்டம் உத்தரவாதம் அளிக்கிற பேச்சுரிமை - கருத்து வெளியிடும் உரிமைக்கு மாறுபட்டதல்லவா - என்ற சட்டநுட்ப சர்ச்சை எழுவதற்கு வாய்ப்புண்டு. இதில் 1999-ல் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு இத்தகைய சர்ச்சைக்குப் பலம் சேர்ப்பதும்கூட.
ஆயினும் - பொதுநலன்களுக்கு முன்னுரிமை அளித்து, அடிப்படை உரிமைகளின் விரிவமைப்புக்கு வரையறை செய்வது உண்டு. அதே நியதியைக் கருத்துக் கணிப்புப் பிரச்சினையிலும் அனுசரிப்பதில் தவறில்லை. ஏனெனில் யதார்த்த நிலவரங்களைக் கவனிக்கும்பொழுது, இருவகைக் கணிப்புகளுக்கும் தடை விதிப்பது நியாயமே. அதன்மூலம் தேர்தல் முறையில் நேர்மையும் சுதந்திரமும் காப்பாற்றப்படுகின்றன.

தேடிவரும் வேலை

எல்லா தேர்தல் அறிக்கைகளிலும் தவறாமல் காணப்படும் ஒரு வாக்குறுதி - "இத்தனை லட்சம் பேருக்கு இத்தனை ஆண்டுகளில் கட்டாயம் வேலைவாய்ப்பு" என்பதாகும். இந்த வாக்குறுதி தொடர்ந்து கொடுக்கப்படுவதே வேலையில்லாத் திண்டாட்டம் ஒரு தொடர்கதை என்பதை உறுதி செய்கிறது.
பொறியியல், மருத்துவம், கணக்குத் தணிக்கையாளர் போன்ற தொழில் சார்ந்த கல்வி கற்போர் பெரும்பாலும் சுலபமாகக் காலுன்றிவிடுகிறார்கள். ஆனால் ஏறத்தாழ ஏட்டுப்படிப்பு என்றே சொல்லக்கூடிய சில பட்டங்களைப் பெறுபவர்களும், இதுபோன்ற பிற பட்டயங்களைப் பெறுபவர்களும் வேலை பெறுவது மிகக்கடினமாக உள்ளது.
ஒரு மிகப்பெரிய வட்டவடிவ மைதானம் இருக்கிறது. அதற்குப் பல இடங்களில் வாயிற்கதவுகள் இருக்கின்றன. ஒரு கதவில் ஆ.அ., என்று எழுதப்பட்டுள்ளது. இது போல ஒவ்வொரு கதவிலும் ஒரு பட்டம் / பட்டயப் படிப்பின் பெயர் காட்டப்பட்டுள்ளது. வேலை தேடும் இளைஞர்கள் கூட்டம் கனவுகளோடு கதவுகளைத் தட்ட, என்ன வியப்பு - உடனடியாகத் திறக்கப்படுகின்றன கதவுகள். மகிழ்ச்சி ஆரவாரத்தோடு உள்ளே நுழையும் ஒவ்வொருவரும் இப்போது திகைத்துப் போய் நிற்கின்றனர். ஏன்?
உள்ளே அவர்கள் கண்களில் தென்படுகிறது இன்னொரு சிறிய வட்ட வடிவ மைதானமும், அதில் உள்ள பல கதவுகளும். "போட்டித்தேர்வுகள் - அரசு சார் நிறுவனங்கள்" "ஆசிரியர் பயிற்சி போன்ற வேலைவாய்ப்பு சார்ந்த படிப்புகள்", "தனியார் துறை" போன்ற சில வார்த்தைகள் அக்கதவுகளில் காணப்படுகின்றன. "அரசு சார் நிறுவனங்களின்" கதவின் முன் அளவிட முடியாத கூட்டம். இந்த வரிசையில் கடைசியாக இணையும் இரண்டு இளைஞர்கள் பேசிக் கொள்கிறார்கள் - "டேய், அங்கே பாரு, நாம் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது, காலேஜில் படித்தாரே, அந்த அங்கிள் நிற்கிறார்".
தனியார் துறையின் கதவுகள் மட்டும் பெரிதாகவும், எத்தனை பேர் வந்தாலும் உள்ளே நுழைய முடியும் போலவும் தோன்றின. "நாளைக்குக் கிடைக்கும் பலாக்காயை விட, இன்று கிடைக்கும் களாக்காயே மேல்" என்ற சொலவடையை நம்பும் ஒரு கூட்டம் தனியார் துறையின் கதவுகளைத் தாண்டி உள்ளே நுழைகின்றது.
என்ன இது? உரிக்க, உரிக்க வெங்காயத்தில் தோலாக வருவதுபோல், இங்கேயும் ஒரு மைதானச் சுவரும், சில கதவுகளும்! இக் கதவுகளில் "தட்டச்சு, சுருக்கெழுத்து, கணிப்பொறி அறிவு, ஆளுமைத் திறன், விளையாட்டுத் திறன், வேற்று மொழிப் புலமை, உணர்வாக்கத் திறன் போன்ற பல வார்த்தைகள் காணப்படுகின்றன.
உள்ளே வந்த இளைஞர்களில் சிலர் மட்டும் கலங்காமல் இப்போதும் சில கதவுகளைத் (அவரவர் திறமைக்கு ஏற்ப) தட்டி, உள்ளே நுழைகின்றனர். என்ன அநியாயம்! இங்கேயும் இன்னொரு மைதானத்தின் கதவுகளே காணப்படுகின்றன. ஆனால் ஒரு வேறுபாடு. இங்கே "முன் அனுபவம் உள்ளவர்", "புதியவர்" என்ற இரண்டே இரண்டு கதவுகள் மட்டுமே காணப்படுகின்றன.
"புதியவர்" கதவின் முன் புலம்பல்கள் கேட்கின்றன. "அந்த கம்பெனியில் சர்டிபிகேட் எல்லாம் வாங்கி வைச்சுக்குவாங்களாம்", "அதாவது பரவாயில்லை. இந்தக் கம்பெனியில் முதல் ஆறு மாசத்துக்கு வெறும் ஐநூறு ரூபாய் தான் சம்பளமாம்", "ஒருநாள் லீவு போட்டால் கூட சம்பளம் கட் பண்ணிடுவாங்களாம்".
"முன் அனுபவம் உள்ளவர்" கதவின் முன்னே நிற்பவர்களோ ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். "அட சும்மா புலம்பாதீங்கப்பா. முதல்லே ஒரு வேலையைப் பிடிங்க. அதிலே முழுமூச்சோடு ஈடுபடுங்க. அதே சமயம் உங்க திறமைகளையும் வளர்த்துக் கிட்டே வாங்க. நிறுவனத்திற்கு நீங்க அத்தியாவசியத் தேவை என்ற நிலை வரும்போது, பதவி உயர்வும், சம்பள உயர்வும் உங்களைத் தேடி வரும். அப்படி வராவிட்டால் வெளியில் வந்து, இந்த வரிசையில் நில்லுங்க. உங்க தகுதி, திறமை இவற்றோடு அனுபவமும் சேரும்போது நல்ல வாய்ப்புகள் கட்டாயம் வரும்".
இப்படிப்பட்ட ஒரு சூழலில் நமது படிப்பின் காரணமாகக் கிடைக்கும் பட்டங்கள், பட்டயங்கள் போன்றவை ஒரு "நுழைவு அனுமதிச் சிட்டு" மட்டுமே என்பதுதான் உண்மை.
இளைஞர்களே, கற்றுத் தேர்வதற்கு ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. "இதனை, இதனால் நான் கற்பேன்" என்று குறிக்கோளுடன், உங்களுக்கு ஒத்திசைவானவற்றைக் கற்றுத் தேர்ந்தால், எண்ணியாங்கு எய்த முடியும். வேலையைத் தேடி நீங்கள் போக வேண்டாம். உங்களைத் தேடி வரும் வேலைகளிலிருந்து பிடித்ததைத் தேர்ந்தெடுக்க முடியும். சொல்லப் போனால் நீங்கள் பலருக்கு வேலை கொடுக்கும் காலம் சிக்கிரம் வரும்.

நாட்டுப்புற வாழ்வு

நாட்டுப்புற வாழ்வு
Tamil Politics News Article இன்று நாட்டில் மேலை நாட்டு நாகரிகம் மிக விரைவாகப் பரவி வருகின்றது. மக்களுடைய பழக்க வழக்கங்களும் நடையுடைகளும் எண்ணப் போக்கும் மாறிவருகின்றன. இதனால் தமிழருடைய பண்டைய மரபுகள் வலுவிழந்து வருகின்றன எனலாம். காலத்திற்கேற்ற மாற்றங்கள் ஏற்படுவதனைத் தடுக்க வியலாது என்றாலும் நமது அடிப்படை நாகரிகம் குழைந்தொழியா வண்ணம் அரண்செய்வது வேண்டத்தக்கதாகும். எத்துணையோ புதுமைகள் புகுந்த பிறகும் ஆங்கிலேயர் தமக்கேயுரிய பண்டைய மரபுகளைப் பேணுவதில் கண்ணுங்கருத்துமாயுள்ளமை ஞாலமறிந்தது. இவ்வகையில் தமிழர் அவர்களைப் பின்பற்றியொழுகுதல் நலமாகும். பெரிய நகரங்களில் அயலவரின் பண்பாட்டுக் கூறுகள் மிகுந்து வருகின்றன எனினும், நெடுந்தொலைவிலுள்ள சிற்றூர்கள் இப்புதிய நாகரிகத்தின் தாக்குதலிருந்து பேரளவு தப்பியுள்ளன எனலாம். அறிவியல் முன்னேற்றத்தாலும், போக்குவரத்து வசதிகளாலும் சிற்றூர்களிலும் இப்புது நாகரிகம் சிறிதளவு இடம் பெற்றுள்ளது. எனினும் நமது பழைய பண்பாட்டின் அடிப்படையைப் பேரளவுக்குக் கட்டிக்காத்து வருவன நாட்டுப்புறங்களே என்பதில் ஐயமில்லை. எனவே பண்பாட்டாராய்ச்சி செய்ய விழைவார் நகர்ப்புறங்களை விட நாட்டுப் புறங்களை நாடுவதே சாலச்சிறந்தது.
நாட்டுப்புற மக்கள் இயற்கையன்னையின் மடியில் தவழ்ந்து விளையாடி இன்பம் நுகர்கின்றனர். ஆறுகளிலும், குளங்களிலும் நீராடி மகிழ்கின்றனர். சோலைகளிலும் மலைச்சாரல்களிலும், வெளிகளிலும், இயற்கையின்பம் நுகர்கின்றனர். புகையும், தூசும், பேரிரைச்சலும், சந்தடிகளும் அற்ற இனிய சூழல் அவர்களது உடலையும் உள்ளத்தையும் என்றும் வலிமையும் மலர்ச்சியும் கொண்டனவாக வைத்துள்ளது. உழைப்பே அவர்களது தெய்வமாக விளங்குகிறது. ஆணும், பெண்ணும் இணைந்து தொழிலாற்றுகின்றனர். நீரிறைக்கும் போதும், நாற்று நடும்போதும் களைபறிக்கும் பொழுதும் அவர்கள் பாடும் இனிய பாடல்கள் நெஞ்சையள்ளுகின்றன. இளம்பெண்கள் வட்டமிட்டுத் தம் வளைக்கரங்கள் ஒலிக்கக் கொட்டியிசைத்திடும் கூட்டமுதப் பாட்டொலியையும், சுண்ணம் அடிப்பார்தம் சுவை மிகுந்த பண்ணொலியையும், மண்ணை மடவார்தம் பழகு பல பாட்டொலியையும் இன்றும் கேட்டு மகிழலாம். துன்ப நிகழ்ச்சிகளின் போது பெண்கள் பாடும் ஒப்பாரிப் பாடலும், குழந்தைகளைத் தொட்டிலில் கிடத்தித் தாலாட்டும் பாடல்களும் இன்றும் நாட்டுப் புறங்களில் உயிரோடு வாழ்கின்றன. எண்ணற்ற பழமொழிகளைச் சிற்றூர் வாழ் மக்கள் போற்றிக் காத்து வருகின்றனர். நாட்டுப் பாடல்களின் பெருமையுணர்ந்த சான்றோர் சிலர் அவற்றைத் தொகுக்கும் பணியிலீடுபட்டிருப்பது மகிழ்ச்சிக்குரியதாகும்.
எண்ணற்ற புதிய விளையாட்டுக்கள் நகர நம்பியரிடையே செல்வாக்குப் பெற்றுள்ளன. பண்டையோர் பெரிதும் போற்றிய உடல் நலமளிக்கும் விளையாட்டுக்கள் அடியோடு மறக்கப்பட்டுவிட்டன. இந்நிலையிலும் சிற்றூர்களில் கிட்டிப்புள், உப்புக்கோடு, தட்டுக்கோடு, நொண்டிக்கோடு, சில்லுக்கோடு முதலிய விளையாட்டுகள் வாழ்கின்றன. முல்லை நிலத்து ஆரியரிடையே வழங்கிய ஏறுதழுவல் என்னும் வீரவிளையாட்டு பொங்கல் பண்டிகைக் காலத்தில் இன்னும் சிற்றூர்களில் நடந்து வருகின்றது. சிறுவர், சிறுமியர் மரக்கிளைகளில் கயிற்றூஞ்சல் கட்டி ஆடி மகிழ்கின்றனர். சிறுமியர் கூடி, பாடிக் கொண்டே கழங்காடி மகிழ்கின்றனர். பரண்களில் நின்று கொண்டு, கவண்வீசிக் கல்யெறிந்து பறவைகளை யோட்டுவதனை இன்னும் காண முடிகின்றது.
சிற்றூர் வாழ்வின் சிறப்புக் கூறுகளில் தலையாயது "எளிமையாகும்." உணவு, உடை, உரையுள் அனைத்திலும் இவ்வெளிமையைக் காணலாம். கம்பு, கேழ்வரகு, சோளம் ஆகியவற்றாலான கூழையும், பழஞ்சோற்றையும் விரும்பியுண்டு உடல் நலத்தோடு வாழ்கின்றனர். "உண்பது நாழி, உடுப்பவை இரண்டே" என்ற பழந்தமிழ்க் கோட்பாட்டையொட்டி ஆண்களும் பெண்களும் வாழ்கின்றனர். எத்துணையோ புதுவகையான ஆடைகள் நகர வாழ்வில் இடம் பெற்றபோதும், நாட்டுப்புற மக்கள் பழைய உடைகளைப் போற்றி வருகின்றனர். அரையாடையொன்றும், மேலாடையொன்றும் அணிந்த ஆடவர்களே இன்னும் மிகுதி. நகரப்புறத்து ஆடைக் குறைப்பு நாகரிகம் அவர்களை தீண்ட அஞ்சுகின்றது. உதட்டுச் சாயமும், வெண்மாவும் நகரப் பெண்களைப் பிடித்துக் கொண்டுள்ளன. மங்கலமான மஞ்சள் விடைபெற்று விட்டது. எனினும் நாட்டுப்புறப் பெண்கள் மஞ்சளை விடாது பற்றிக் கொண்டுள்ளனர்.
பண்டைக் காலத்தில் "ஊராட்சி முறை" மிகவும் சிறப்புற்றிருந்தது. ஊர்மன்றங்கள் எண்ணற்ற அதிகாரங்களைப் பெற்றிருந்தன. ஒவ்வொரூரும் ஒருசிறு குடியரசாக விளங்கிற்று. எத்தணையோ அரசியல் மாற்றங்களுக்கு இடையில் இன்னும் பஞ்சாயத்து முறை சிற்றூர்களிலும் வளமுடன் வாழ்கிறது. தேர்தல் நடத்தித் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றங்கள் செயற்படும் தற்பொழுதும், பழைய நாட்டாண்மைக்காரரின் ஆட்சி நிலவி வருகின்றது. ஊரில் ஏற்படும் சிறு வழக்குகளைத் தீர்த்து "ஒற்றுமையைக்" காத்து வருகின்றது.
ஆண்டுதோறும் கிராம தேவதைகட்குத் திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. ஊரின் ஒற்றுமைக்கு இவ்விழாக்களே அடிப்படையாக அமைந்துள்ளன. தமக்குள்ளிருக்கும் "வேற்றுமைகளை" மறந்து அனைவரும் ஒன்றுபட்டே திருவிழா நடத்துகின்றனர். உறவினரையும் நண்பர்களையும் அழைத்து, விருந்து படைத்து மகிழ்கின்றனர். விழாவைக் காணவரும் அயலூரார்க்கு அவர்கள் காட்டும் "பணிவும் பரிவும்" குறிப்பிடத்தக்கவை. அவர்கட்கு உணவளிக்கும் பொறுப்பை அனைவரும் பகிர்ந்து கொள்கின்றனர். பூசை முடிந்த பின்னர் வெளியூரார்க்கே முதலில் திருநீறு வழங்குவர். இஃது அவர்களது "விருந்தோம்பற் பண்பாட்டிற்கு" நல்ல சான்றாகும். கம்பசேவை என்ற பெயரில் நடக்கும் திருவிழாவில் ஏழைகட்கு உணவிடுவதே சிறந்து நிற்கின்றது. விழாவின் முடிவில் நாடகம் நடத்தி மகிழ்வது குறிப்பிடத்தக்கது. தெருக்கூத்துகள் பழைய இசை மரபையொட்டி நடப்பது போற்றத்தக்கதாகும்.
திருமணக் காலங்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகளிலும் "ஏழை செல்வர் என்ற வேற்றுமையின்றி" அனைவரும் கூடுகின்றனர். ஒவ்வொருவரும் தத்தம் குடும்ப நிகழ்ச்சியாகவே கருதுகின்றனர். நிகழ்ச்சி முடியும் வரையில் இருந்து, பிறகே தமது சொந்தக்கடமைகளைச் செய்வர். வாழ்வைத் தள்ளினாலும் சாவைத் தள்ள மாட்டார்கள். பகைவராக இருந்தாலும் இறப்பு நிகழ்ச்சியைத் தள்ளாத உயர்ந்த பண்பாடு அங்கே நிலவுகின்றது. இறப்பு வீட்டுக்குச் செல்பவர் அரிசியும், நெல்லும், இளநீரும் கொண்டு செல்வர். இறுதிச் சடங்கு முதலியவற்றுக்கு ஆகும் "செலவினை ஈடுசெய்வதே" "இவ்வேற்பாட்டின் நோக்கமாகும்".
ஒருவர் வீட்டில் விழா நடந்தால் அனைவரையும் வீடு வீடாகச் சென்று அழைப்பர். பலகாரங்கள் செய்தால் அண்டை அயல் வீட்டாருக்கும் கொடுத்து மகிழ்வர். இறப்பு நிகழ்ந்த வீட்டார் அவ்வாண்டு முழுவதும் விழாக்கள் கொண்டாட மாட்டார். ஏனையோர் அவர்கட்குப் பலகாரங்களைக் கொடுத்து மகிழ்வர். கிராமங்களிலுள்ள தச்சர், நாவிதர், குயவர், பள்ளர், பறையர் முதலியோரையும் தமது உறவினரைப் போலவே கருதி அன்புடன் வாழ்கின்றனர். அறுவடைக் காலங்களில் அவர்களுக்கு நெல் கொடுத்து மகிழ்கின்றனர். அவர்கள் வீட்டு நன்மை தீமைகளிலும் கலந்து கொள்கின்றனர்.
பழைய நாட்டு "மருத்துவ முறையினைப்" போற்றிக் காப்பதும் சிற்றூரே. பச்சிலை மூலிகைகளைக் கொண்டு நோய்தீர்க்கும் மருத்துவர் பலரைச் சிற்றூர்களில் காணலாம். அவர்களை மக்கள் மிகவும் பெருமையாகப் போற்றி வருகின்றனர். ஒவ்வொரு தாயும் ஒரு மருத்துவர் என்று கூறுமளவுக்குக் குழந்தை மருத்துவத்தில் தேர்ந்துள்ளனர். இன்னும் மொழியின் பழைய வழக்காறுகளைக் காத்து வருவதும் சிற்றூர் மக்களே. நகரங்களில் வழக்கிழந்து போன பழைய சொற்களை அங்கே காணலாம். என் தாய் என்னும் பொருளுடைய யாய் என்ற சொல்லையும் அம்மா என்ற பொருளுடைய ஆத்தா என்ற சொல்லையும், சோறு என்ற சொல்லையும் நாட்டுப்புறத்திலன்றிக் காணமுடியாது. பிள்ளைகட்கு இன்று என்னென்னவோ பெயரிடுகின்றனர். பாட்டன் பெயரை இடும் பழைய மரபு இன்னும் நிலைத்துள்ளது. கணவன் பெயரையும், மாமன் மாமியார், நாத்தூணார், கொழுந்தன் ஆகியோர் பெயரையும் சொல்லாத பண்பாட்டை நாட்டுப் புறத்தில்தான் காணமுடியும்.
இதுகாறும் கூறியவற்றால், நாட்டுப்புறங்களே பழைய மரபுகளைக் கட்டிக் காப்பவை என்று உணரலாம். "உயர்ந்த பண்பாட்டை அடிப்படையாகக் கொண்டது நாட்டுப்புற வாழ்வு" என உணரலாம்