Sunday, December 26, 2010

நந்தலாலா

ஐய்ங்கரன் நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் மிஷ்கின் இயக்கி நடிக்கும் படம் 'நந்தலாலா', 'அஞ்சாதே', 'சித்திரம் பேசுதடி' போன்ற தனது மூன்றாம் தர திரைப்படங்களே வெற்றி பெற்றுவிட்ட நிலையில், தனது சிறந்த படமான 'நந்தலாலா' திரைப்படத்தை வெளியிட விநியோகஸ்தர்கள் இல்லாத நிலையே தற்பொழுது தமிழ் சினிமாவில் உள்ளது என சில நாட்களுக்கு முன்பு மிஷ்கின் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். வித்தியாசமான படங்களை ரசிப்பவர்களுக்கு 'நந்தலாலா' சிறந்த உணர்வினைத் தரும் என்றும் மிஷ்கின் தெரிவித்திருந்தார். தயாராகி வெகு நாட்களாகியும் வெளியிடுவதற்கு ஆள் இன்றி தவித்து வந்த 'நந்தலாலா' வரும் நவம்பர் 26ல் வெளியாகும் எனத் தெரிகிறது. இப்படத்தின் நாயகனாக மிஷ்கின் நடித்துள்ளார், அவருக்கு ஜோடியாக 'கத்தாழ கண்ணால' பாடல் மூலம் புகழ் பெற்ற ஸ்னிக்தா நடித்துள்ளார். இளையராஜாவின் இசை இப்படத்திற்கு மேலும் சிறப்பு சேர்த்துள்ளது. 'வாள மீனுக்கும்', 'கத்தாழ கண்ணால' போன்ற குத்துப்பாடல்களால்தான் தனது படங்கள் ஓடுகிறது என இனி யாரும் பேசி விடக்கூடாது என முடிவெடுத்திருக்கும் மிஷ்கின், 'நந்தலாலா' படத்தில் இரண்டே பாடல்கள் போதுமென்று இசைஞானி இளையராஜாவிடம் கூறிவிட்டாராம். எடுத்த வரைக்கும் படத்தை போட்டுப் பார்த்த இளையராஜா, மிஷ்கினை வாயார பாராட்டினாராம். க்ளைமாக்சில் வசனங்களுக்கு பதிலாக சுமார் 45 நிமிடம் இடம் பெறும் ரீரெக்கார்டிங்தான் படத்தின் ஹைலைட் என்கிறார்கள். இந்த ஒரு விஷயத்துக்காகவே இளையராஜாவை ஒப்பந்தம் செய்திருந்தாராம் மிஷ்கின். படத்தின் கதை ஜப்பானிய திரைப்படம் 'Kikujiro'வின் தழுவல். ஒரு சிறு பையன் அவன் அம்மாவைத் தேடி பல நூறு மைல் தூரம் இருக்கும் ஊருக்குப் போகிறான். அந்தப் பையனுக்குத் துணையாக மனநோயாளி ஒருவன் உதவுகிறான். இந்த பயணத்தில் இவர்கள் சந்திக்கும் மனிதர்களை பற்றிதான் கதை. சிறுவனாக அஸ்வத்ராம் நடித்துள்ளான். மிஷ்கின் மனநோயாளியாக நடித்துள்ளார். ஸ்டண்ட் நடிகர் பிரகாஷ், நாசர், ரோஹினி மற்றும் பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு: மகேஷ் முத்துசாமி, தயாரிப்பு: கே.கருணாமூர்த்தி, சி.அருண்பாண்டியன், சண்டைப்பயிற்சி: 'ஆக்ஷன்' பிரகாஷ். நிர்வாகத் தயாரிப்பு: கே.விஜயகுமார், தயாரிப்பு ஒருங்கிணைப்பு: எல்.வி.ஸ்ரீகாந்த். 'நந்தலாலா' விரைவில் தாலாட்ட வருகிறது.

No comments:

Post a Comment