Friday, December 3, 2010

7 தமிழர் விடுதலைக்கு குரல் கொடுப்போம்

7 தமிழர் விடுதலைக்கு குரல் கொடுப்போம்..Effective voice required for the redemption of 7 Tamils arrested in Rajiv's assasination - Tamil Katturaikal - General Articles
தமிழக சிறையில் நீண்ட நாள் சிறை வாழ்வை வாழ்ந்தும் போராடியும் வரும், நளினி, பேரறிவாளன், முருகன், சாந்தன், இராபட் பயாஸ், ரவிச்சந்திரன், செயக்குமார் ஆகியோரை விடுதலை செய்யக் கோரி இப்போது நாம் எழுப்புகிற குரல் இந்திய பேரரசுக்கு எதிராகவும் தமிழ்த் தேசியத்தின் விடுதலை குரலாக இது மாற வேண்டும்.
உலக அளவில் ஒரு கொலை வழக்காக 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் ஒரு வழக்கு இந்த வழக்காகத்தான் இருக்கும். அதேநேரத்தில் இவர்களுடைய விடுதலைக்கு இதுவரை யாரும் பெரிய அளவில் போராடாமல் இருப்பது அதை விட வேறு வேதனை ஒன்றும் இருக்க முடியாது. வெள்ளை நிற வெறி அரசை எதிர்த்து போராடிய "நெல்சன் மண்டேலா" 27 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யப்பட்டதும் அவரின் ஆதரவான உலக முழுக்காயுள்ள மனித உரிமையாளர்கள், பல நாட்டு தலைவர்கள் ஒன்று சேர்ந்து குரல் கொடுத்த பின்தான் அவரின் விடுதலை சாத்தியமாயிற்று.
அமெரிக்க கொடுஞ் சிறையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் செவ்விந்திய மக்களின் தலைவர் "லியோனார்ட் பெல்டியர்". அவரின் விடுதலைக்கும் உலக முழுக்க உள்ள மனித உரிமைப் போராளிகள் குரல் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். அப்படி இருந்தும் அவரின் சிறை வாழ்வு இன்னும் முடிவு பெறாமல் நீடித்துக் கொண்டே போகிறது. அரசின் அதிகார எல்லைக்கு கட்டுப்பட்டு தன் பெரும் வாழ்வை சிறையில் கழித்துள்ளார்.
அமெரிக்க ஆப்ரிக்க மக்களின் உரிமைக்கு போராடிய "முமியா அபு ஜமால்" என்ற எழுத்துப் போராளி செய்யாத கொலைக் குற்றத்திற்கு மரண தண்டனை ஏற்று 20 ஆண்டுகளுக்கு மேலாக தன் வாழ்வின் இளமைக் கால வசந்தத்தை தன் மக்களின் பால் ஏற்று வாழ்ந்து கொண்டுள்ளார். இப்படி எண்ணற்ற "மாமனிதர்" தன் நேசித்த மக்களுக்காகவும், தன் தேசம், மொழி, இனம், பண்பாடு, தங்களுடைய தொன்ம முறை காக்கவும் தங்கள் வாழ்க்கையை இழந்துள்ளனர்.
அப்படியான வகையில் இந்திய பேரரசின் அதிகாரக் கொலை வெறிக்கும் உட்பட்டு தன் வாழ்வை இழந்து சிறையில் வாடி வரும் நளினி, பேரறிவாளன், உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலைப் போராடுவதும் அதை உலக முழுக்க கொண்டு செல்வதும் நம் கடமை என்று உணர்ந்து செயலாற்ற வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.
ராசீவ் காந்தி கொலை வழக்கில் என்ன நடந்தது? என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். கடந்த 21.5.1991 இல் ராசீவ் காந்தி திருப்பெரும்புதூரில் கொலை செய்யப்பட்டார்.
ராசீவ் கொலை வழக்கில் நேரடியாக சம்பந்தப் பட்ட தணு சம்பவ இடத்திலேயே மரணடைந்தார். சிவராசன், சுபா ஆகியோர் பெங்களூரில் தற்கொலை செய்து கொண்டனர்.
சி.பி.ஐ. இவ்வழக்கில் 26 பேரை கைது செய்தது. 14.6.1991 அன்று நளினியும் அவரது கணவர் முருகனும் சென்னை சைதாப்பேட்டையில் வைத்து கைது செய்யப்பட்டனர். பேரறிவாளன் வீட்டிலிருந்து விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டார்.
இவ்வழக்கு தடாச் சட்டத்தின் கீழ் போடப்பட்டதால் 14.6.1991ல் கைது செய்யப்பட்ட நளினி 60 நாட்கள் கிரீன்வேஸ் சாலையில் உள்ள மல்லிகை இல்லத்தில் (சி.பி.ஐ. விசாரணை அலுவலகம்) வைத்து விசாரித்தனர். அப்போது நளினி 2 மாத கர்ப்பமாக இருந்தார்.
சாதாரணமாகவே காவல் நிலையத்தில் ஒரு குற்றம் சாட்டப்பட்டவரை காவல் துறையினர் எப்படி விசாரிப்பார்கள் என்பது நமக்குத் தெரியும். அதிலும் இராசீவ் கொலை வழக்கு என்பதால் சொல்லத் தேவையில்லை. ஒவ்வொருவரையும் தலைகீழாகத் தொங்க வைத்து நிர்வாணப்படுத்தி அடித்து உதைத்து சித்திரவதை செய்து விசாரணை செய்தனர். இப்படியான விசாரணை 60 நாட்கள் நடந்தது. பின்னர் அனைவரையும் செங்கல்பட்டு தனிக் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்கள். 17.1.93 அன்று புதிதாக கட்டப்பட்ட பூந்தமல்லி சிறப்பு தனிச் சிறைக்கு மாற்றப்பட்டனர்.
சிறையில் ஒருவர் மற்றவருடன் பேச முடியாதபடி அடைத்து வைத்தனர். வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 19.1.1994ல் சாட்சி விசாரணை தொடங்கியது. நளினி சம்பவ இடத்தில் இருந்தார் என்பதால் அவருக்கு குற்றம் நடப்பது தெரிந்திருந்தது என்று சி.பி.ஐ. தெரிவித்தது. அதேபோல் பேரறிவாளன் 9 வோல்ட் பேட்டரியை வாங்கிக் கொடுத்தார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டு. இப்படி 26 பேரின் மீதும் ஏதோ ஓர் வகையில் இந்தக் கொலையில் சம்பந்தப்பட்டிருந்தனர் என சி.பி.ஐ. குற்றம் சாட்டியது. இவ் வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்து 28.1.1998 அன்று சிறப்பு தடா நீதிமன்றம் அனைவருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்து.
29.1.1998 அன்று நளினி உள்ளிட்டவர்கள் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டனர். 26 பேரின் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டு (தடா வழக்கில் விசாரணை நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முடியாது) அய்யா நெடுமாறன் தலைமையில் உருவாக்கப்பட்ட 26 பேர் உயிர் காப்புக் குழு போராடி பொருள் சேர்த்து மூத்த வழக்கறிஞர்கள் என். நடராசன் அவர்களை வழக்காட நியமித்தது. 11.5.1999 அன்று இவ்வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. குற்றம் சாட்டப்பட்ட 26 நபர்களில் 19 நபர்களை இராசீவ் கொலையில் தொடர்பில்லாதவர்கள் என உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது.
நளினி, பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை வாழ்நாள் (ஆயுள்) தண்டனையாகக் குறைத்து தீர்ப்பளித்தது. நளினி வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
உச்சநீதிமன்ற நீதிபதி கே.டி.தாமஸ் தனது தீர்ப்பில் நளினிக்கு மரண தண்டனை கொடுக்கக் கூடாது என்று கூறி ஆயுள் தண்டனை வழங்க உத்தரவிட்டார். எனினும் மற்ற இரு உச்ச நீதிமன்றம் நீதிபதிகளும் (வாத்வா, முகமது காதிரி) மரண தண்டனையை உறுதி செய்ததால் மூன்றில் இரண்டு பேர் என்ற பெரும்பான்மை விகிதத்தில் நளினிக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது. அதேபோல் நீதியரசர் வாத்வா அவர்கள் இராபட் பயாஸ், செயக்குமார், இரவிச்சந்திரன் ஆகியோரை குற்றமற்றவர்களாக கருதி விடுதலை செய்து உத்தரவிட்டார். எனினும் மற்ற இரண்டு நீதிபதிகளும் ஆயுள் தண்டனையை உறுதி செய்த காரணத்தால் ராபட் பயாசும் ஜெயக்குமாரும் விடுதலையாக முடியவில்லை.
நளினி உள்ளிட்டவர்களின் மீதான நிரூபிக்கப்பட்ட குற்றம் என்னவெனில் அவர்கள் ராசீவ் கொலை சதியில் ஈடுபட்டார்கள் என்பதுதான்.
மரண தண்டனை விதிக்கப்பட்ட நால்வரும் மரண தண்டனையை நீக்கவேண்டும் என தமிழக ஆளுநருக்கு கருணை மனு அளித்தனர். கருணை மனுக்களை ஆளுநர் பாத்திமா பீவி நிராகரித்தார். இதனைத் தொடர்ந்து நளினி உள்ளிட்ட நால்வரும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். நளினியின் சார்பாக வழக்காடிய மூத்த வழக்கறிஞர் சந்துரு (தற்பொழுது உயர்நீதிமன்ற நீதிபதியாக உள்ளார்) நளினியின் கருணை மனுவை தமிழக அமைச்சரவை கூடித்தான் முடிவு எடுக்க வேண்டும் என்றும் ஆளுநர் தானாகவே தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது என வாதிட்டார். இதனை உயர் நீதிமன்றம் ஏற்று நளினி உள்ளிட்ட நால்வரின் கருணை மனுவை தள்ளுபடி செய்தது தவறு என தீர்ப்பளித்தது.
இதற்கிடையில் மனித உரிமையாளர்கள், முன்னால் இந்திய குடியரசு தலைவர் வி.வி.கிரியின் மகள் மோகினிகிரி உள்ளிட்ட பலரின் வேண்டுகோள், திருமதி சோனியா காந்தியின் கடிதம் ஆகியவற்றின் தொடர்ச்சியாக நளினியின் கருணை மனுவை பரிசீலனை செய்த தமிழக அரசு 24.4.2000 அன்று அரசியல் அமைப்புச் சட்டம் சரத்து 161 இன்படி (அரசு ஆணை எண். 406, உள்துறை நாள் 24.4.2000) நளினியின் மரண தண்டனை வாழ்நாள் (ஆயுள்) தண்டனையாகக் குறைக்கப்பட்டது.
இவர்கள் சிறையில் அனைத்து சிறையாளிகளுக்கு அளிக்கப்படும் அனைத்து சட்ட விதிகளும் இவர்களுக்கு பொருந்துவது இல்லை. ரவிச்சந்திரன் தன் தாய் தந்தையரை பார்ப்பதற்கு விடுப்பு (பரோல்) பல முறை கேட்டு 10 ஆண்டுகளுக்கு பின்னர் தான் அவருக்கு விடுப்பு அளிக்கப்பட்டது. மற்ற வாழ்நாள் சிறையாளிகள் இராபட் பயாஸ் செயக்குமார் போன்றவர்களுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
நளினி, முருகன், கணவன் மனைவி என்ற முறையில் சிறையில் சந்திக்க முடியுமே தவிர தன் உறவினர்களை, தன் சொந்த ஒரு மகளை வெளியில் பார்ப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நளினி, முருகன், மகள், அரித்திரா, தன் தாய் தந்தையரை பார்க்க தமிழினத தலைவர் கலைஞர் ஆட்சியில் நான்கு ஆண்டு காலமாக மறுக்கப்பட்டுள்ளது.
சட்டம் ஒவ்வொரு மனிதனுக்கும் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்டுள்ளனர் இவ் எழுவர்.
அதே நேரத்தில் தமிழக அரசு அண்ணா பிறந்த நாளில் முன் விடுதலை அளிக்கும். இவ்வகையில் இதுவரை 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையாளர்கள் 2,000க்கும் மேற்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் முன் விடுதலை
நளினியின் தண்டனை வாழ்நாளாக (ஆயுளாக) குறைக்கப்பட்ட 2000 ஆம் ஆண்டுக்குப் பின் அறிஞர் அண்ணாவின் 93வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகத்தின் அனைத்துச் சிறைகளில் உள்ள 10 ஆண்டுகள் தண்டனை கழித்த 61 வாழ்நாள் (ஆயுள்) தண்டனை சிறையாளிகள் 15.9.2001 அன்று முன் விடுதலை செய்யப்பட்டனர். இந்த 61 சிறையாளிகள் (கைதிகள்) விடுதலை செய்யப்பட்ட போது நளினி, இரவிச்சந்திரன், இராபட் பயாஸ், செயக்குமார் ஆகியோர் 10 ஆண்டுகளுக்கும் மேல் தண்டனை முடித்திருந்தனர். ஆனால் அவர்களை தமிழக அரசு முன்விடுதலை செய்யவில்லை.
2006ம் ஆண்டு அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 15.9.2006 அன்று 10 ஆண்டு கள் தண்டனை முடித்த 472 ஆயுள் தண்டனை சிறையாளிகள் முன் விடுதலை செய்யப்பட்டனர்.
2007ம் ஆண்டு தமிழக முதல்வர் கருணாநிதியின் சட்டமன்ற பொன்விழாவை முன்னிட்டு 14 ஆண்டுகள் தண்டனை முடித்த 27 வாழ்நாள் (ஆயுள்) தண்டனை சிறையாளிகள் முன்விடுதலைச் செய்யப்பட்டனர். (இவர்கள் அனைவரும் சிறையிலிருந்து பரோல் விடுமுறையில் வீட்டிற்கு வந்து சிறைக்குத் திரும்பாமல் ஓடி விட்டவர்கள் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள்)
2007 ம் ஆண்டு அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 16.9.2009 அன்று 10 ஆண்டுகள் தண்டனை முடித்த 190 ஆயுள் தண்டனைச் சிறையாளிகள் முன் விடுதலை செய்யப்பட்டனர்.
2008ம் ஆண்டு அறிஞர் அண்ணாவின் 100வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக சிறைகளில் உள்ள 7 ஆண்டுகள் தண்டனை கழித்த வாழ்நாள் சிறைத் தண்டனை பெற்ற 1405 கைதிகள் முன் விடுதலை செய்யப்பட்டனர்.
2009ம்ஆண்டு வாழ்நாள் (ஆயுள்) தண்டனைச் சிறைவாசிகள் யாரும் விடுதலை செய்யப்படவில்லை. ஆனால் 10 ஆண்டுகள் தண்டனை முடித்த 13 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்ட 10 சிறையாளிகள் முன் விடுதலை செய்யப்பட்டனர்.
(இவர்கள் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் 13 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள். இவ் வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரித்தது) 2010 ம் ஆண்டு அண்ணா பிறந்த நாளான 15.92010 அன்று 70 வயதைக் கடந்த 13 ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
நளினி, இராபட் பயாஸ், ரவிச்சந்திரன், செயக்குமார் ஆகியோரின் தண்டனை வாழ்நாள் (ஆயுள்) தண்டனையாக மாற்றப்பட்ட பின்னர் (2001ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை) தமிழக அரசு இதுவரை 2155 வாழ்நாள் தண்டனை சிறையாளிகளை விடுதலை செய்துள்ளது.
மறுக்கப்பட்ட முன் விடுதலை
ஒரு கொலையை நேரடியாகச் செய்து தண்டனை பெற்ற வாழ்நாள் சிறைக் கைதிகள் 7 ஆண்டுகள் / 10 ஆண்டுகள் / 14 ஆண்டுகள் கழித்த பின்னர் விடுவிக்கப்பட்டபோதும், 20 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினி, இராபட் பயாஸ், செயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோர் விடுதலை செய்யப்படவில்லை. (இவர்கள் யாரும் கொலை செயலில் நேரடியாக ஈடுபடவில்லை. இராசீவ் கொல்லப்பட போகிறார் என்பது இவர்களுக்கு முன்பே தெரியும் என்பதுதான் குற்றச்சாட்டு)
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றால் நளினிக்குப் பின் தண்டனை பெற்று 2155 வாழ்நாள் (ஆயுள்) தண்டனை சிறையாளிகள் விடுவிக்கப்பட்ட போதும் நளினி உள்ளிட்டவர்கள் ஏன் விடுவிக்கப்படவில்லை.
அறமும் நீதியும் அனைவருக்கும் ஆகுக
தமிழக அரசு நளினி உள்ளிட்டவர்களை விடுதலை செய்ய மறுக்கிறது. காரணம் அரசியல். கொல்லப்பட்டவர் காங்கிரஸ் கட்சி தலைவர் இராசீவ் காந்தி என்பதால்தான்.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 161 இன்படி எந்த ஓர் தண்டனையையும் மாற்றியமைக்க, நீக்கம் செய்ய, தண்டனை குறைக்க ஆளுநருக்கு அதிகாரம் அளித்துள்ளது. இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தித்தான் 2001 முதல் 2008 வரை தமிழக அரசு 2155 வாழ்நாள் சிறையாளிகளை விடுதலை செய்துள்ளது. இந்த 2155 சிறையாளிகளும் யாரைக் கொன்றார்கள் என்று பார்த்து முன் விடுதலை செய்யவில்லை. மதுரையில் சி.பி.ஐ. கட்சியின் நகர் மன்ற உறுப்பினர் லீலாவதியைக் கொன்றவர்கள் 7 ஆண்டு தண்டனை முடிந்ததும் விடுவிக்கப்பட்டார்கள். ஆனால் நளினி, ரவிச்சந்திரன், இராபட் பயாஸ், செயக்குமார்க்கு மட்டும் ஏன் இந்த பாரபட்சம்?
காந்தியைக் கொன்ற வழக்கில் வாழ்நாள் தண்டனை பெற்ற கோபால் கோட்சே தன்னை முன் விடுதலை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சென்றார். உச்சநீதிமன்றம் வாழ்நாள் தண்டனை என்பது "உயிரோடு இருக்கும் வரையிலான சிறைத் தண்டனை" என வரையறுத்து விடுவிக்க மறுத்தது. ஆனால் கோபால் கோட்சேயை மராட்டிய மாநில காங்கிரஸ் அரசு விடுதலை செய்தது.
ஆந்திராவில் மேற்கு வங்கத்தில், கேராளவில் மக்களுக்காக போராடிய அரசியல் வாழ்நாள் சிறையாளிகளை 7 ஆண்டுகள் கழித்தவர்களையும் விடுதலை செய்தது. அப்படி தமிழகத்தில் பல்வேறு அரசியல் இயக்க போராளிகளையும் விடுதலை செய்யப்பட்டனர். அப்படி எண்ணற்ற அரசியல் சிறையாளிகளை விடுதலை செய்த அரசு ராசீவ் கொலை வழக்கில் உள்ள நளினி, ரவிச்சந்திரன், இராபட் பயாஸ், செயக்குமார் போன்றோர்களை விடுதலை செய்ய மறுப்பது அநீதியாகும்.
குரல் கொடுப்பதும், அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையை தமிழக முழுக்க மக்களிடம் எடுத்துச் சொல்வதும் அதை அரசியல் கோரிக்கையாக மாற்றுவதும் இன்றைய தேவை.
மரண தண்டனை சிறையாளிகள் பேரறிவாளன், முருகன், சாந்தன் அவர்களின் மரண தண்டனை நீக்க கோருவதும் அவர்களை விடுதலைக்கு தமிழகம் தழுவிய இயக்கம் எடுப்பதும் மனித உணர்வுள்ள அனைவரின் கடமையாகும்.
"பழ.நெடுமாறன் அவர்களின் தலைமையில் 26 பேர் மரண தண்டனை நீக்க செய்யக் கோரி தமிழகத்தில் எழுந்த அந்த விடுதலைக் குரலைத் தொடர்ந்து "நால்வர் உயிர் நம்மவர் உயிர்" கோரி தமிழகம் தழுவிய அந்த விடுதலை கோரிக்கை நாம் இன்று ஈழத் தமிழர் விடுதலை என்ற கோரிக்கையை முன் எடுக்க வேண்டும். நம்முடைய குரல் மரண கொட்டடியில் இருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தனை மீட்கவும், அவர்கள் விடுதலை காற்றை சுவாசிக்கவும் வழிவகை செய்ய வேண்டும்.
நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர், சொல்வது போல "பேரறிவாளன் ஆன்மா உயர்வானது. விலை மதிப்பற்றது. அதன் விழுமியங்கள் உன்னதமானவை. சிறையில் அடைப்பட்டிருப்பதாலேயே அவர் குற்றவாளியாகி விடுவதில்லை. உண்மையில் அவர் தன் சக மனிதர்களின் மீட்சிக்காக உழைக்கிறார்".
அதேபோல் நீதிபதி எம்.சுரேஷ் அவர்கள், குடியரசுத் தலைவர் தமது கருணை அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும். இந்த கருணை அதிகாரத்தின் வாயிலாக மன்னிப்புப் பெற்று விடுதலை பெறுவதற்கான அனைத்து தகுதியும் பேரறிவாளனுக்கு உண்டு.
மரண தண்டனை மனிதத் தன்மையற்றது என்பதைச் சொல்லத் தேவையில்லை. யாவற்றிலும் மோசமானது என்னவென்றால் பல்லுக்கு பல், உயிருக்கு உயிர் என்ற மத்திய காலப் பழக்கத்தை அது நிரந்தரமாக்குகிறது என்பதே. அக்காலத்தில் இருந்து வெகு தூரம் முன்னேறி விட்டது.
நீதிக்காக வேண்டி ஒருவரின் உயிரைப் பறிப்பது நாகரிக நடைமுறையாகாது என்று அது உணர்ந்து விட்டது. சமயப் பற்றுடன் வாழ்பவர்களுக்கு வேறு ஒரு சிந்தனையும் உள்ளது. இறைவன் கொடுக்கும் உயிரை மனிதர் பறிக்க உரிமையில்லை.
ஒருவரின் உயிரைப் பறிக்கும் அளவிற்குப் பழிக்குப் பழி வாங்கும்படி அறிவுரை சொல்லும் புனித நூல் எதுவும் இல்லை. மரண தண்டனை என்பது உயிரைப் பறித்துப் பழி தீர்ப்பதே தவிர வேறல்ல என்கிறார் பிரபல பத்திரிகையாளர் குல்தீப் நையார்.
ராசீவ் கொலை வழக்கில் அனைத்து வகையிலும் அடிப்படை மனித உரிமை மீறல் நடந்துள்ளது என்பதை எண்ணற்ற அறிஞர்களின் மேற்கோள் காட்ட முடியும்.
மரண தண்டனை பெற்று மரண கொட்டடியில் உள்ள 3 தமிழர்களை மீட்பது தமிழகத்தின் கடமை, நமது உரிமை என்பதை உணர்ந்து, கட்சி, சாதி, மத இயக்க எல்லைகளைக் கடந்து, அடிமைத் தமிழகத்தின் விடுதலைக் குரலாக நம் கோரிக்கை ஒலிக்க வேண்டும்.
அதேபோல் 4 தமிழர்களின் 20 ஆண்டு சிறை வாழ்வின் துயரத்தை கொடுமையை எதிர்த்தும் 3 தமிழர்களின் மரணக் கொட்டடியிலிருந்து மீட்கவும் உறுதிமிக்க போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். 7 தமிழர்கள் விடுதலைக் காற்றை சுவாசிப்பதற்கும் நாம் வழிவகை செய்ய வேண்டும் என்பதே ஒவ்வொரு மனிதனின் கடமை. அதேபோல் ஒவ்வொரு தமிழனும் உண்மை உணர்வுடன் அவர்களோடு கைகோர்க்க வேண்டும்.
அதை நோக்கி நாம் தொடர்ந்து குரல் கொடுப்போம். ஒருங்கிணைவோம். மனித உரிமை நாள் திசம்பர் 10 அன்று சென்னையில் ஒன்றுகூடுவோம் உரிமையை நிலைநாட்டுவோம்.

No comments:

Post a Comment