Sunday, December 26, 2010

விராதம்

கேரளாவில் நடந்த ஒரு உண்மை சம்பவம், 'விராதம்' என்ற பெயரில் படமாகிறது. இது, சஸ்பென்ஸ்-திகில் கலந்த படம். "மகாபாரத விராட பருவத்தில், கொடிய கீசகனை வதம் செய்கிற பீமனின் புத்திசாலித்தனமும், பைபிளில், மிக பலம் வாய்ந்த பெரிய கோலியாத்தை சிறுவனான தாவீது வீழ்த்துகிற சூட்சுமமும்தான் 'விராதம்' படத்துக்கான ஆதாரம். விராதம் என்றால் முடிவு, தீர்ப்பு என்று அர்த்தம். இந்தப் படத்தின் உச்சக்கட்ட காட்சி எல்லோரையும் ஆச்சரியப்படுத்தும்" என்கிறார், படத்தின் இயக்குநர் அஜித் எம்.கோபிநாத். லூலூ கிரியேஷன்ஸ் சார்பில் சுல்ஃபிகர் எம்.எஸ். இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். விராடமலை எஸ்டேட்டில், அடுத்தடுத்து நடைபெறும் மரணங்கள் பற்றி துப்பு துலக்குகிறார், ஒரு பெண் பத்திரிகையாளர். அப்போது தெரியவரும் உண்மைகளால் அந்த பெண் பத்திரிகையாளர் அதிர்ச்சி அடைகிறார். இந்த மரணங்களின் காரணம் என்ன? என்பதில்தான் படத்தின் புதுமை அடங்கியிருக்கிறது. நட்பின் ஆழத்தையும், வஞ்சகத்தையும் ஒரு சேர வெளிப்படுத்துகிறது படம். இந்தப் படத்தின் கதையை ஜோஸ் டைட்டஸ் எழுதியிருக்கிறார். திரைக்கதை, வசனம், பாடல்களை கோவில்பட்டி உதயசங்கர் எழுதியிருக்கிறார். உதயன் அம்பானி ஒளிப்பதிவு செய்கிறார். சித்கால் சுஜித் இசையமைக்கிறார். ஜிஜாய், மிதுன், டாக்டர் ஜோசப், சமர்த்தியா, கிருஷ்ணா பிரதீப், சித்தார்த் சிவா ஆகிய புதுமுகங்கள் நடித்து இருக்கிறார்கள். படத்தின் மொத்த கதையும் கூத்துக்கலையின் மூலமாகவே சொல்லப்படுகிறது. பிரபல கூத்துக் கலைஞர் ஓம் முத்துமாரி, முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஊட்டி, குமுளி, கம்பம், தேனி, நாகர்கோவில், திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் படம் வளர்ந்துள்ளது.

No comments:

Post a Comment