Friday, December 3, 2010

தேசத்தின் சாபக்கெடுவும் - தோல்பாவை பிரதமரும்

தேசத்தின் சாபக்கெடுவும் - தோல்பாவை பிரதமரும்!
 
"When truth is replaced by silence,the silence is a lie"
- Yevgeny Yevtushenko

உச்சநீதிமன்றம் இந்த முறை பாரதப் பிரதமரை மிக கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. உச்சநீதிமன்றம் பாரதர் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் "பதினைந்து மாதங்களாக ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் காத்தது ஏன்?" என்று காட்டமாக கேட்டுள்ளது. மறுபுறம் ஆ.ராசா ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் எந்த முறைகேட்டிலும் நான் ஈடுபடவில்லை. எனக்கு முன் பதவி வகித்தவர்கள் எந்த நடைமுறையைப் பின்பற்றினார்களோ, அதே நடைமுறையைத் தான் நானும் பின்பற்றினேன். பிரதமர் அலுவலகத்தின் ஒப்புதல்படிதான், அனைத்தும் மேற்கொள்ளப்பட்டன என்று கூறுகிறார். தவறு ஆ.ராசா மீதா அல்லது மன்மோகன்சிங் மீதா? ஒருவேளை ஆ.ராசா முறைகேடாகச் செயல்பட்டிருந்தால் கூட அது பிரதமர் பார்வைக்கு வராமல் நடந்திருக்க வாய்ப்பில்லை. இவ்வளவு பெரிய ஸ்பெக்ட்ரம் ஊழல். சரி வேண்டாம். ஸ்பெக்ட்ரம் ஊழல் என்ற சொல்லை அவைக்குறிப்பிலிருந்து எடுத்துவிடலாம். வருமான இழப்பு என்ற சொல்லைப் பயன்படுத்தலாம். தேசத்திற்கு இவ்வளவு பெரிய வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. இதைப் பிரதமரின் கவனக்குறைவு என்று கூறலாமா? கவனக்குறைவின் மறுபெயர் திறமையின்மை என்று கூறலாமா? எண்ணிப் பார்ப்பதற்கே சில விநாடிகள் எடுத்துக்கொள்ளும் இலக்கத்திலிருக்கும் மிகப்பெரிய தொகையில் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. மிகச் சிறந்த பொருளாதார மேதையும், தேசத்தின் முதன்மை பொறுப்பிலிருக்கும் பிரதமருமான மன்மோகன்சிங் ஸ்பெக்ட்ரம் ஊழலில் அமைதி காத்தது விநோதமாக இருக்கிறது. இப்படியொரு தோல்பாவை பிரதமர் நமக்கு வாய்த்தது, ஸ்பெக்ட்ரம் ஊழலை மீண்டும் மன்னிக்கவும், வருமான இழப்பை விட தேசத்தின் மாபெரும் இழப்பு.
மன்மோகன்சிங் மிகச் சிறந்த பொருளாதார மேதையாக இருக்கலாம். ஆனால் அவரை ஒருபோதும் சிறந்த நிர்வாகத்திறன் மிக்கவராகவோ அல்லது அரசியல் ராஜதந்திரம் மிகுந்தவராகவோ சொல்ல முடியாது. சிறந்த நிர்வாகத்திறன் இருந்திருந்தால் அவருக்கு ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கவனக்குறைவு ஏற்பட்டிருக்காது. அல்லது ஸ்பெக்ட்ரம் விசயம் சாமர்த்தியமாக மூடி மறைக்கப்பட்டிருக்கும். ராஜதந்திரம் மிகுந்தவராக இருந்திருந்தால் அவர் பலிகடா ஆகியிருக்க மாட்டார். வேறு யாராவது தலையில் பழியைப் போட்டு எஸ்கேப் ஆகியிருப்பார். பாவம், இப்போது என்ன செய்வது என்று விழிபிதுங்கி நிற்கிறார். இந்த தேசம் பல விநோதமான பிரதமர்களைச் சந்தித்துள்ளது. விழிக்க வைப்பதற்கு கஷ்டப்பட்ட- உறங்கிக் கொண்டே இருந்த பிரதமர், சிரிக்க வைக்க கஷ்டப்பட்ட பிரதமர், இப்போது முதல் முறையாக பேச வைப்பதற்கே கஷ்டப்படும் ஒரு பிரதமரைத் தேசம் சந்தித்துள்ளது. உச்ச நீதிமன்றத்திற்குக் கூட பதில் தராமல் அவர் மவுனமாகவே இருந்திருப்பார். பலமுனை தாக்குதல்களுக்குப் பிறகு நேற்று வேறுவழியில்லாமல் பத்து பக்க விளக்கத்தை அவர் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைத்துள்ளார்.
ஆனால் மன்மோகன்சிங் அத்திப் பூத்தாற்போல சில நேரத்தில் மவுனம் களைவார். அப்போது வெளிப்படும் அவரது மேதமையும், நிர்வாகத்திறனும் அபாரமாய் இருக்கும். உதாரணம்:- சில மாதங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றம் மன்மோகன்சிங்கைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டது. இந்திய உணவுக் கழகத்தின் உணவுக் கிடங்குகளில் முறையாகச் சேமித்து வைக்காமல் பாழாகும் அரிசியை, எலிகள் தின்றது போக மீதமிருக்கும் புழுக்கள் நெளியும் வீணாய்ப் போன அரிசியை வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழும் ஏழை பாழைகளுக்கு இலவசமாக விநியோகிக்கலாம் என்று கூறியது. மறுநாள் பத்திரிகைகள், மன்மோகன்சிங்கைச் சந்தித்து அவரது கருத்தைக் கேட்டார்கள்.
"வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள 37 விழுக்காடு ஏழைகள் அனைவருக்கும் இலவசமாக உணவுப் பொருட்களை வழங்க வேண்டுமா? உச்சநீதிமன்றம் சொல்லியிருப்பது நடைமுறை சாத்தியமற்றது. இது எப்படி சாத்தியம்?" பத்திரிகைகளிடம் மன்மோகன்சிங் கேட்டார்.
ஒரு பத்திரிக்கையாளர் இதைத் தெளிவாக மன்மோகன்சிங்கிடம் விளக்கினார். "உங்களை 37 சதவீதம் பேருக்கு இந்த அரிசியைத் தரச் சொல்லவில்லை. வீணாய்போகும் அரிசியை மட்டும் எவ்வளவு பேருக்குத் தரமுடியுமோ அவ்வளவு பேருக்குத் தந்தால் போதும்".
உடனே மன்மோகன்சிங் "நான் உச்சநீதிமன்றம் தீர்ப்பை முழுமையாக படிக்கவில்லை. படித்துவிட்டுச் சொல்கிறேன்" என்று சொன்னார். மன்மோகன்சிங் ராஜதந்திரம் மிகுந்தவராக இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்? முதல் கேள்விக்கே, உச்ச நீதிமன்றத் தீர்ப்பைப் படிக்கவில்லை. படித்துவிட்டுச் சொல்கிறேன் என்று பதில் சொல்லி டகால்டி வாங்கியிருக்கலாம். அபூர்வமாக இப்படி வாயைத் திறக்கும் நேரங்களில் கூட "ஙே" என்று மாட்டிக்கொண்டு பல்பு வாங்குவது அவருக்கு வாடிக்கையாக ஆகிவிட்டது.
நேற்று மன்மோகன்சிங் பேசியதோ இன்னுமொரு மாபெரும் உளறல். மன்மோகன்சிங் பத்திரிகைகளிடம் இப்படி பேசியுள்ளார். பார்லிமென்டில் ஸ்பெக்ட்ரம் பிரச்சினை பற்றிய எந்தவொரு விவாதத்துக்கும் மத்திய அரசு தயாராக உள்ளது. விவாதத்தின்போது, எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்கப்படும். இதற்கு பி.ஜே.பி. பதில் சொல்லியுள்ளது. ஸ்பெக்ட்ரம் பிரச்சினை பற்றி ஏற்கனவே போதுமான அளவு விவாதித்துவிட்டோம். இனி தேவை நடவடிக்கை மட்டுமே. உங்கள் ஆட்சியில் நடந்த முறைகேடுகளுக்கு நீங்களே பொறுப்பு. நீங்கள்தான் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும். பி.ஜே.பி. தரப்பிலிருந்து நறுக்கு தெறித்தாற்போல பதில் சொல்லியுள்ளார்கள். இப்போது நடக்கும் அமளி துமளி களேபரங்களில் மன்மோகன்சிங்கிற்கு என்ன பேசுகிறோமென்றே தெரியவில்லை.
பத்திரிகைகளிடம் மன்மோகன்சிங் அடுத்துச் சொன்னது இன்னும் சூப்பர் உளறல்.
"இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் லஞ்சம்தான், முக்கிய பிரச்சினையாக உள்ளது. இதை சோதனைக் காலமாகவே கருத வேண்டும். பிரதமராக இருந்தாலும் கூட, சில நேரங்களில் உயர்நிலைப்பள்ளி மாணவனைப் போலத்தான் என்னைக் கருதுகிறேன். ஒரு தேர்விலிருந்து அடுத்த தேர்வுக்கு மாணவர்கள் செல்வதைப் போலவே, ஒரு கட்டத்திலிருந்து அடுத்த கட்டத்துக்கு நான் போகிறேன்" என்று பேசியுள்ளார். இதைக்கேட்ட பத்திரிகையாளர்களின் வெடிச்சிரிப்பு அடங்க கொஞ்ச நேரம் ஆனதாம்.
உண்மையில் அவரது பேச்சும், செயல்பாடுகளும் உயர்நிலைப்பள்ளி மாணவனைப் போலத்தான் இருக்கின்றன. தேசத்தின் பிரதமரும், சிறந்த பொருளாதார மேதையுமான ஒருவரின் நிலைமை இவ்வளவு பரிதாபத்துக்கும், நகைப்புக்குரியதுமாய் மாறியிருப்பதை என்னவென்று சொல்வது? பிரான்சில் டர்பன் அணிந்த சீக்கியர்கள் தாக்கப்பட்ட பிரச்சினை எழுந்தபோது, தனிப்பட்ட முறையில் பேசி அதனைத் தீர்த்து வைத்தவர் மன்மோகன்சிங். ஆனால் தலைபோகும் விசயமொன்றில் தேசமே பற்றியெரியும்போது அவர் கொஞ்சம் கூட வாயைத் திறக்கவில்லை. காங்கிரஸ் கட்சி பொதுச் செயலர் ஜனார்த்தன் திவேதி, பிரதமர் மன்மோகன்சிங் மேல் எந்தத் தவறும் இல்லை. அவர் திறமையானவர் என்று விளக்கம் தந்துள்ளார். ஜனார்த்தன் திவேதி சொல்வது போல நம் பிரதமர் நேர்மையானவர்தான். லஞ்சம் வாங்காதவர்தான். கறைபடியாத கைகளுக்குச் சொந்தக்காரராகவே இருக்கட்டும். ஆனால் பல நேரங்களில் கையாலாகத் தனம் என்பது கறைபடியாத கைகளை விட மோசமானதாக அமைந்துவிடுகிறது. தேசத்துக்கு தேவை நேர்மையான தோல்பாவை பிரதமரல்ல. சர்வாதிகாரமாகவே இருந்தாலும் முடிவுகளைச் சுயமாகச் சிந்தித்து எடுக்கக் கூடிய பிரதமரே.
 

No comments:

Post a Comment