Sunday, December 26, 2010

கோ

இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் 'ஆர்.எஸ்.இன்ஃபோடெய்ன்மெண்ட்' எஸ்.குமார் மற்றும் ஜெயராமன் இணைந்து தயாரிக்கும் படம் 'கோ'. கதாநாயகனாக ஜீவா நடிக்கிறார். ராதாவின் மகள் கார்த்திகா கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் அஜ்மல் அமீர் மற்றும் பியா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். வில்லனாக பிரகாஷ் ராஜ். இப்படத்தின் நாயகனாக முதலில் கார்த்தி நடிப்பதாக இருந்தது. பின் சிம்புதான் நாயகன் என்று செய்திகள் வந்தது. சிம்பு இயக்குநருடன் முட்டிக்கொள்ள ஒருவழியாக ஜீவா கதாநாயகன் ஆனார். கதைப்படி ஜீவா பத்திரிக்கைகளுக்கு புகைப்படம் எடுக்கும் போட்டோகிராபர். இவரின் கேமரா அரசியல் புள்ளியான பிரகாஷ் ராஜின் முக்கியமான ரகசியங்களை க்ளிக் செய்ய, ஆரம்பமாகிறது ஹீரோ-வில்லனின் ஆடுபுலியாட்டம். இந்தப் படத்தில் இடம்பெறும் ஒரு சண்டைக் காட்சிக்காக ஃபான்டம் ஃபிளக்ஸ் என்ற கேமராவை பயன்படுத்தியுள்ளனர். இது சினிமா உலகில் சமீபத்தில்தான் அறிமுகமானது. இந்த கேமராவில் அடுத்த ஜேம்ஸ்பாண்ட் படத்தைப் படமாக்க ஹாலிவுட்டில் திட்டமிட்டுள்ளனர். இது பற்றி இயக்குநர் ஆனந்த் கூறும்போது, 'கோ' சகல அம்சங்களும் நிறைந்த ஒரு கமர்ஷியல் த்ரில்லர். "இந்த கேமரா அறிமுகமானது பற்றி அறிந்ததும் சந்தோஷப்பட்டேன். இது டிஜிட்டலில் ஹை ஸ்பீட் ரக கேமரா. படமான உடனே அந்தக் காட்சியை திரையில் போட்டுப் பார்க்கலாம். மற்ற கேமராக்களில் இந்த வசதி கிடையாது. அடியாட்களுடன் ஜீவா மோதும் சண்டைக் காட்சியை இந்த கேமராவில் படம் பிடித்துள்ளேன்" என்றார். இப்படத்தில் நிறைய ஹீரோக்களை வைத்து வித்தியாசமான பாடல் காட்சி ஒன்றைப் படமாக்குகின்றனர். இந்தியில் ரிலீசான 'ஓம்சாந்தி ஓம்' படத்தில் இதுபோன்ற பாடலொன்று இடம் பெற்று இருந்தது. அந்தப் பாடலில் ஷாருக்கான், ஹிருத்திக்ரோஷன், தர்மேந்திரா, கோவிந்தா, பிரியங்கா சோப்ரா, கஜோல் உள்ளிட்டோர் நடனம் ஆடினர். அதேபோன்று இப்படத்திலும் காட்சிகளை எடுக்கின்றனர். ரூசா கிளப் டான்சராக வருகிறார். அவருடன் சேர்ந்து கதாநாயகர்கள் நடனம் ஆடுவதுபோல் இந்தக் காட்சி வருகிறது. இதில் நடனம் ஆட விஜய், சூர்யா, ஆர்யா, ஜெயம்ரவி, பரத், தனுஷ் ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர் என்பது தனிச் சிறப்பு. இசை: ஹாரிஸ் ஜெயராஜ். ஒளிப்பதிவு: ரிச்சர்ட் நாதன். படத்தொகுப்பு: ஆண்டனி, சண்டைப்பயிற்சி: பீட்டர் ஹெய்ன். 'கோ' விரைவில் திரையைத் தழுவும்.

No comments:

Post a Comment