Saturday, November 6, 2010

எழுத்தறிவு - மெய்யறிவு

எழுத்தறிவு - மெய்யறிவு

எழுத்தறிவு வழங்குவோருக்கு தமிழ் மொழி தந்துள்ள கௌரவம் மிக உயரியது - எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்கிறது முது சொல். உலக எழுத்தறிவு நாளான இன்று அதை நினைவு கூர வேண்டியுள்ளது.
நமது 53 ஆண்டுகாலக் குடியாட்சியில் நேரிட்ட பல கசப்பான அனுபவங்களில் எழுத்தறிவின்மை முக்கியமானது. அதை உணர்ந்த இந்திய அரசு எழுத்தறிவின்மையைப் போக்கப் பல திட்டங்கள் தீட்டியது. எழுத்தறிவின்மையை நாட்டிலிருந்தே நீக்கிவிடும் வேகத்தோடு கடந்த பத்தாண்டுகளில் பல நூறு கோடி ரூபாய்களை இதற்காகச் செலவிட்டது; செலவிட்டும் வருகிறது. சர்வ சிக்ஷா அபியான் என்ற திட்டம் அனைவருக்கும் கல்வி என்ற உயர் நோக்குடன் அறிமுகமானதுதான்.
எனினும் எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள், எழுத்தறிவு அற்றவர்கள் என்ற இருசாராரின் மனப்போக்கு, செயல்பாடுகள் ஆகியவற்றை உற்று நோக்கும்போது பெருத்த கவலையும் விரக்தியுமே மிஞ்சுகின்றன.
உலகம் முழுதும் எழுத்தறிவு இயக்கத்தின் முயற்சியும் முனைப்பும் ஓங்கி நிற்கின்ற காலம் இது. அதே நேரத்தில் என்றுமே கண்டிராத அளவில் மனிதப் பண்புகள் சிரழிந்து வருகின்றன.
எழுத்தறிவு பெற்றுவிட்டதால் மட்டுமே அல்லது பெறுவதால் மட்டுமே, மனித குலத்தைத் தீக்கொழுந்துகள் போல் தாக்கி வரும் தீமையும் வன்முறையும் குறைந்துவிடுமா ?
அரசின் புள்ளி விவரங்களைக் கடந்து சென்று எழுத்தறிவு இயக்கம் எவ்வளவு தூரம் உண்மையான வெற்றி பெற்றது என்று விமர்சிக்கும் முன், எழுத்தறிவு என்பது உண்மை அறிவாகுமா என்று யோசிக்க நேரிடுகிறது. கடந்த 10 ஆண்டு கால எழுத்தறிவிப்பு இயக்க அனுபவத்தில், புதிதாக எழுத்தறிவு பெற்றவர்கள் தாய்மொழிக்கு எந்த மதிப்பும் இங்கே இல்லை என்ற அதிர்ச்சியையே இன்று பெறுகிறார்கள். வெகு சிறுபான்மையோருக்கு ஒரு வெளிச்சம் கிட்டியது. அந்த வெளிச்சம் கண்கூச வைக்கும் பிறமொழிப் போட்டியையே அவர்களுக்கு உணர்த்தியது. மீண்டும் தலைகுனிய வைத்தது.
ஒரு மொழியறிவு, ஒரு பண்பாடே ஊடுருவ வழியமைக்கும் ஊடகமானதே நமது இன்றைய துயர அனுபவம். இந்திய நாட்டின், குறிப்பாக தமிழ்நாட்டின் எழுத்தறிவு, மொழியறிவு வளர்ச்சியில் ஆங்கிலத்தின் பிரதான தாக்கம் நமது இந்திய மற்றும் தமிழ்ப் பண்பாட்டின் அஸ்திவாரங்களை எவ்வளவு அசைத்து விட்டது என்பது சிந்தித்துப் பார்க்க வேண்டிய அபாயம். கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள் என்று மெய்ப்பொருள் நாட்டத்தில் தமது தேட்டத்தின் தோல்வியை நொந்துகொண்டார் தாயுமானவர். கற்றும் அறிவில்லாத என்னை என் சொல்லுவேன் என்ற அவரது அடுத்த வரியில், கல்வியறிவு வேறு - மெய்யறிவு வேறு என்ற சுட்டு மறைந்து நிற்கிறது.
எழுத்தறிவு வேறு, அறிவு வேறு. உண்மை அறிவைப் புகட்டாத எழுத்தறிவு ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாது என்ற பழமொழியின்படி வெறும் வீண்முயற்சியாகவே முடியும். எனில் எழுத்தறிவிக்கும் முயற்சியே வீண்தானா என்று ஒரு தொடர்வினா எழுவது இயற்கை.
எந்த முயற்சியும் வீணாவதில்லை. ஒரு சமயத்தில் வீணாகத்தோன்றும் ஒரு முயற்சி, வேறு ஒரு சமயத்தில் பெரும்பலன் விளைவிக்கும் அதிசயங்கள் நிகழ்ந்துகொண்டே வருகின்றன.
எழுத்தறிவிக்கும் பணியில் ஈடுபட்ட பலகோடி பேர்கள் எழுத்தறிவிக்கும் மெய்யறிவுக்கும் இடைப்பட்ட வேறுபாட்டை அறிந்து உணர்ந்து செயல்படுவது, மேலும் நம்பிக்கையோடு தம் பணியைச் செய்ய ஊக்கமளிக்கும். எது அறிவு? எவை அதன் பரிமாணங்கள்?
சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு - என்றும்

ஒத்த தறிவான் உயிர்வாழ்வான்; மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்
- என்றும் திருவள்ளுவர் அறிவுக்கு இரண்டு பரிமாணங்களை முன்வைக்கிறார்.
தீமையில் இருந்து மனத்தைக் காத்து நன்மையின் அணிக்குக் கொண்டு சேர்க்கவும் நம்மையொத்த பிற உயிர்களின் துன்பங்களை அறிய வேண்டியதும் உயிர் வாழ்வோர் கடன் என்று அவர் காட்டும் ஒளி, வணக்கத்திற்கு உரியது.
முழு எழுத்தறிவு இயக்கத்தின் வெற்றி என்பது நம் நாட்டில் எல்லோருக்கும் எழுதப்படிக்கத் தெரிந்துவிடுவதால் மட்டுமே நிறைவுற்று விடாது. வேறு எந்த மொழி ஊடுருவல் மூலமும் நிகழும் பண்பாட்டுத் தாக்குதலுக்கு நாம் இரையாகிவிடாமல் காப்பது நம் முதல் கடமை.
ஒத்ததை அறியும் அறிவை, தீமை நீக்கி நன்மையின்பால் நம்மைக் கொண்டு சேர்க்கும் அறிவை முழுமையாகச் செழிப்புற வைப்பது நம் அடுத்த கடமை.
வெறும் எழுத்தறிவு போதாது; அதன் வழியே தெளிந்த மெய்யறிவுக்குப் போகும் பாதை வேண்டும். இதை எழுத்தறிவு தருவோரும் அவர்களுக்குப் பின்னணியாய் நிற்போரும் உணர்வதே நாட்டிற்கும் நலம்; அவர்களுக்கும் வெற்றி.

No comments:

Post a Comment