Sunday, November 21, 2010

ஏன் தமிழ் உயர்நீதிமன்ற அலுவல் மொழியாக வேண்டும்?

ஏன் தமிழ் உயர்நீதிமன்ற அலுவல் மொழியாக வேண்டும்?

Why tamil should be the official court language? - Tamil Literature Ilakkiyam Papers ஆங்கிலம் நீதித்துறை மொழியாக இருப்பதால் ஏற்படும் கேடுகள் ஒருபக்கம் இருக்க, தமிழ் முழுமையான நீதித்துறை மொழியாக மாறுவதன் மூலம் குறிப்பாக உயர்நீதிமன்ற மொழியாக மாறுவதன் மூலம் தமிழர்களுக்கு கிடைக்கும் பயன்கள் ஏராளம்.
1. ஒரு கூட்டாட்சி நாட்டில் உள்ளடங்கியுள்ள ஒரு மாநிலத்து மக்கள் அவர்களுடைய அனைத்து வளங்களையும், மொழியையும், பண்பாட்டையும் காத்துக்கொள்ள உரிமை உடையவர்களாவர். அந்த அடிப்படையில் அவர்களுடைய நீதித்துறை நடவடிக்கைகள் அனைத்தும் அவர்களது மொழியில் இருப்பதற்கான உரிமை உடையவர்களாவர். இதனால் தான், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 348 ன் உட்கூறு (2) இயற்றப்பட்டுள்ளது. அக்கூறின் கீழ் ஒரு மாநிலம் அதன் மொழியில் உயர்நீதிமன்ற நடவடிக்கைகள் அமைய வேண்டும் என்று கோரினால் அதனை நடுவண் அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கு வாய்ப்பளித்துள்ளது.
அதற்கு நாடாளுமன்றம் இரு அவைகளின் ஒப்புதல் கூட தேவைப்படவில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது. இந்திய உச்சநீதிமன்றம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி கூட்டாட்சி என்பது அதன் அடிப்படையான ஒரு கட்டமைப்பு என்று குறிப்பட்டுள்ளது இங்கு ஈண்டு இணைத்துப் பார்க்கத்தக்கது. எனவே அனைத்து வகையிலும் கூட்டாட்சி தத்துவத்திற்கு உட்பட்ட இக்கோரிக்கையை மறுதளிப்பது என்பது அரசியலமைப்பு சட்டத்திற்கே எதிரானதாகும்.
2. தாய்மொழியில் தொடக்கக் கல்வி முதல் சட்டக்கல்வி வரை பயின்ற ஒரு வழக்குரைஞருக்கு ஆங்கில மொழியில் பேச்சுத்திறனை வளர்த்துக்கொள்ள குறைந்தது பத்து ஆண்டுகள் தேவைப்படுகிறது. எனவே பெரும்பான்மை வழக்குரைஞர்கள் ஆங்கிலத்தில் வழக்குகளை எடுத்துரைப்பதில் சிரமம் அடைகின்றனர். இதனால் ஆங்கில பேச்சுத்திறன் கொண்டுள்ள மிகவும் குறைவான எண்ணிக்கையிலான வழக்குரைஞர்கள் மட்டுமே உயர்நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்கு பெறுகின்றனர். 80 சதவீதத்திற்கும் மேலான வழக்குரைஞர்கள் அந்நடவடிக்கைகளில் பங்கு பெற முடியாமல் தடுக்கப்படுகின்றன. இதன் மூலம் பெரும்பான்மை வழக்குரைஞர்கள் பங்கு பெற முடியாத நடவடிக்கையாக உயர்நீதிமன்ற நடவடிக்கை அமைந்து விடுகிறது. இதனால்
அ) வழக்குரைஞர்களிடையே போட்டியின்மையால் வழக்கு கட்டணம் அதிகமாகிறது. மேலும் சாமான்யர்கள் உயர்நீதிமன்றத்தில் நீதிபெறுவதிலிருந்து தடுக்கப்படுகிறார்கள்.
ஆ) குறைந்த எண்ணிக்கையிலான வழக்குரைஞர்கள் பெரும்பான்மை வழக்குகளை கையாளுவதால் வழக்குகள் முடிவுகளை எட்டுவதில் தாமதம் ஏற்படுகிறது.
3. பெருன்பான்மை வழக்குரைஞர்கள் உயர்நீதிமன்ற நடவடிக்கையில் பங்குபெற வாய்ப்பளிக்கப்படாமையால்,
அ) அவர்களின் கருத்துக்கள் வழக்குகள் மூலம் வெளிப்படுவது தடுக்கப்படுகிறது. இதனால் நீதித் துறையில் கருத்துப் பரிமாற்றம் சுருக்கமடைகிறது. இது சட்டம் குறித்த விரிவான விவாதங்கள் நடப்பதை தடுத்துவிடுகிறது. இது குடியாட்சி முறைக்கு எதிரானதாகும்.
ஆ) சிறுபான்மை வழக்குரைஞர்கள் நீதிபதிகளிடம் தங்களது தொழிலுக்கு பாதகமில்லாமல் நடந்து கொள்ள வேண்டும் என்று எண்ணி செயல்படும் நிலையில் பெரும்பான்மை வழக்குரைஞர்கள் தடுக்கப்படுவதால் நீதிபதிகளின் தவறுகள் சுட்டிக்காட்டப்படுவது தவிர்க்கப்படுகிறது. இதனால் நீதித்துறையின் சுதந்திரமும், நடு நிலையும் பாதிக்கப்படுகிறது.
4) உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் முடிவுகள் எட்டுவதில் ஏற்படும் காலதாமதத்திற்கு ஆங்கிலம் ஒரு காரணம். ஏனெனில்,
அ) வழக்கின் அனைத்து விவரங்களும் தமிழில் உள்ள நிலையில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து பேசுவதால் தாமதம் ஏற்படுகிறது. மொழி பெயர்ப்பில் துல்லியம் தேவைப்படுவதால் மூளைச் சோர்வும் உண்டாகிறது. இத்தேவையற்ற மொழிபெயர்ப்பு தவிர்க்கப்பட்டால் காலவிரையமும் தவிர்க்கப்படும்.
ஆ) பல நேரங்களில் வழக்குரைஞர்கள் எடுத்துரைக்கும் விவரங்களை நீதிபதிகள் துல்லியமாக புரிந்துகொள்வதிற்கே படும்பாடு பெரிதாகிறது.
இ) ஒவ்வொரு சொல்லுக்கும் இடையில் "......" என்று கூச்சலிடுவது நீதிமன்ற நேரத்தை வீணடிக்கிறது.
5. உயர்நீதிமன்ற நடவடிக்கைகள் தமிழில் அமைவதால் சட்டத்தின் ஆட்சி என்பது வலுப்பெறவும் குடியாட்சி முறை நிலைபெறவும் உதவுகிறது.
அ) சட்டம் பற்றிய விவரங்கள் அனைத்தும் பொதுமக்களிடையேயும் அரசு ஊழியர்களிடையேயும் துல்லியமாக தெரிய வந்து விடுவதால் பொதுமக்கள் விழிப்பு பெறவும் அரசு ஊழியர்கள் அவர்களது கடமைகளை உணர்ந்து செயல்படுவதற்கும் வாய்ப்பளிக்கிறது. ஆங்கிலத்தில் சட்டங்களும் அதன்படியான தீர்ப்புகளும் இருப்பதால் அரசு ஊழியர்கள் சட்டம் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளாமல் போய்விடுகின்றனர். இதனால் அவர்கள் எந்த பணியையும் முழுமையாக சரிவர புரிந்து கொண்டு தயக்கமின்றி தாமதமில்லாமல் செயல்பட முடியவில்லை. நீதிமன்ற தீர்ப்புகளின் முழு விபரங்கள் அவர்கள் தெரிய வரும் நிலையில் அவர்கள் குடிமக்களின் உரிமைகளை தெரிந்து அதற்கு மதிப்பளித்து செயல்படும் வாய்ப்பு உருவாகும். பொதுமக்களும் தங்களது உரிமைகள் குறித்த முழு விவரங்களை தெரிந்து கொள்வர்.
ஆ) காவல் துறையினர் குடி மக்களின் மனித உரிமைகளை மதித்து செயல்படுவதற்கும் முறையான விசாரணை முறைகளை கடைபிடித்து சட்டப்படி செயல்படுவதற்கும் உயர்நீதிமன்ற நடவடிக்கைகள் தமிழில் அமைவது மிகவும் உறுதுணையாக இருக்கும்.
அடிப்படை உரிமைகள் பற்றியும் காவல்துறை விசாரணை முறைப் பற்றியும் எத்தகைய சாட்சியங்கள் செல்லத்தக்கவை என்பது குறித்தும் உயர்நீதிமன்றம் தனது தீர்ப்புகளில் தெரிவிக்கும் சட்டக்கூற்றுகளை காவல்துறையினர் முழுமையாக தெரிந்து கொள்வதில்லை. அதனால் தங்களது செயல்பாட்டு வரம்புகளையும் குடிமக்களின் உரிமைகள் குறித்தும் அறியாமையில் உள்ளனர்.
தற்போதைய முறையில், ஒரு மேல்முறையீட்டு வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை அவ்வழக்கை விசாரணை செய்த காவல்துறை அதிகாரி கூட தெரிந்து கொள்ள முடியாமல் போய் விடுகிறார். இதனால் அவர்கள் தங்களது தவறை திருத்திக்கொண்டு சரிவர செயல்பட வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது. எனவே இன்னும் ஆங்கிலத்தையே சுமந்து திரிய வேண்டும் என்று கூறுவது சிலருக்கு வேண்டுமானால் பயனளிக்கலாம். குடியாட்சி முறையில் நம்பிக்கை கொண்ட எவரும் தமிழ் மொழியில் உயர்நீதிமன்ற நடவடிக்கைகள் அமைவதையே விரும்புவர்.

No comments:

Post a Comment