Sunday, November 21, 2010

பாக்ஸிங்கில் பதக்கங்களை குவிக்கும் நர்மதா!

பாக்ஸிங்கில் பதக்கங்களை குவிக்கும் நர்மதா!

Narmatha - Indian Boxing Observer with hundreds of Medals - Successful Stories of Women in Tamil
எல்லோரும் அவரை "நாக்அவுட் நர்மதா" என்றுதான் அழைக்கிறார்கள். பேசும்போது கூட கொஞ்சம் யோசித்து, அப்புறம் "படபட"வென்று வார்த்தைகளை உதிர்க்கும் நர்மதாவின், "பஞ்ச்சிங்" பாணியும் அப்படித்தான்! பாக்ஸிங்கில் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிகளை முத்தமிடும் நர்மதா, ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லவேண்டும் என்பது இவருடைய அப்பாவின் கனவு.
அப்பாவின் கனவை நனவாக்க போராடிக் கொண்டிருக்கும் நர்மதா, தற்போது சர்வதேச பாக்ஸிங் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணிக்காக தேர்வாகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் குத்துச்சண்டையில் மட்டுமல்ல... கராத்தே, கபடி, குண்டு எறிதல், ஈட்டி எறிதல், எறிபந்து என மற்ற விளையாட்டுகளிலும் பயிற்சி பெற்றுள்ளார்.
பாக்ஸிங் என்றால் கடுமையாக இருக்குமே? காயங்கள் எதுவும் ஏற்படவில்லையா? என்று கேட்டால், "முறையான பயிற்சிகள் எடுத்தால் காயங்கள் பெரிதாக ஏற்படாது. ஒரே ஒருமுறை மட்டும் போட்டியின் போது "அப்பண்டிக்ஸ் ஆபரேஷன்" காரணமாக வெளியேறும் சூழல்.
மற்றபடி இதுவரை 72 போட்டிகளில் நூற்றுக்கணக்கான மெடல்களை வென்றுள்ளேன்" என்று பதக்கங்களை அள்ளிக் காண்பிக்கிறார் நர்மதா.
தற்போது இவர் தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி., உடற்பயிற்சி மற்றும் நியூட்ரிஷியன் பிரிவில் முதலாமாண்டு படித்து வருகிறார்.
இவருடைய அப்பா டில்லிபாபு வியாபாரம் செய்து வருகிறார். அம்மா தேவிகா குடும்பத் தலைவி. உணவு, பயிற்சி மற்றும் போட்டிக்காக நர்மதாவை தயார் செய்வதில் உதவுகிறார்.
கராத்தே, பாக்ஸிங் என்று ஆண்களுக்கான பயிற்சியின் மீது அப்படி என்னதான் தீராத ஆர்வம்? என்றால், "எனக்கு சின்ன வயதிலிருந்தே கராத்தே மீது ஆர்வம். அதனால் கராத்தே கலையை முழுமையாக கற்றுக் கொண்டேன். நான் ஒரே பொண்ணு என்பதால் என்னை பையன் போலவே வளர்த்தார் அப்பா. அவருக்கு பாக்ஸிங் என்றால் மிகவும் பிடிக்கும்.
பாக்ஸிங்கில் முறையாக பயிற்சி பெற்றவர் என்றாலும் போட்டிகளில் கலந்து கொள்ள முடியாத சூழல். அப்படி அப்பா பாக்ஸிங் பயிற்சி பெறுவதைப் பார்த்து எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. அப்பாவின் ஆசையும் அதுதான் என்பதால் தீவிரமாக பயிற்சி பெற்று, ஐந்து வருடத்தில் தேசிய அளவில் சாதிக்கத் தொடங்கி விட்டேன்.
கூடிய விரைவில் ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்று அப்பாவின் கனவை நனவாக்குவேன்!" என்று நெகிழ்ச்சியாகி பேசும் நர்மதாவுக்கு ரோல்மாடல் மேரி கோம் மற்றும் லைலா அலி.
பயிற்சி மற்றும் போட்டிகளில் இதுவரை யாரிடமும் குத்து வாங்கவில்லை என்று கூறி நம்மை ஆச்சரியப்படுத்தும் நர்மதாவுக்கு ஹாலிவுட் சினிமா பார்ப்பதும், பொது அறிவு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை டிவியில் பார்ப்பதும்தான் பொழுதுபோக்கு.
 
இவர் ஒருமுறை திருவனந்தபுரத்தில் நடந்த தேசியப் போட்டியில் பங்கேற்றுவிட்டு, ரெயிலில் சென்னைக்கு திரும்பிக்கொண்டிருந்தாராம். அப்போது ரெயிலில் இடம் இல்லாமல் நின்று கொண்டு வந்த நர்மதாவை, டிக்கெட் பரிசோதகர் அடையாளம் கண்டு தனது சீட்டை ஒதுக்கிக் கொடுத்ததை பெருமையுடன் குறிப்பிடுகிறார் நர்மதா.
அதேபோல் செயின்ட் ஜோசப் கல்லூரியில் இவரிடம் சொல்லாமல் பார்வையாளராக அழைப்பு விடுத்து, திடீரென மேடை ஏற்றி பரிசு கொடுத்து பாராட்டியதையும் மறக்காமல் குறிப்பிடுகிறார்.
நர்மதாவின் வெற்றி குறித்து தமிழ்நாடு பாக்ஸிங் கழகத்தின் செயலாளர் கருணாகரன் கூறும்போது, "கடந்த 5 வருடமாக நர்மதாவுக்கு பயிற்சி அளித்து வருகிறோம். அவருடைய ஆர்வம் மற்றும் கடுமையான பயிற்சியின் காரணமாக கண்டிப்பாக அவர் சர்வதேச அளவில் சாதனை நிகழ்த்துவார். "ரிஸ் கிராப்ட்"-ல்(எதிரியிடம் குத்து வாங்காமல் தப்புவது) அவர் எக்ஸ்பர்ட்! இது அவரின் வெற்றிக்கான சூத்திரம்!
மேலும் பயிற்சியாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, தேவராஜன், குமார் ஆகியோரின் தீவிர பயிற்சியும் நர்மதாவுக்கு பெரிய பிளஸ்!" என்று பெருமிதம் கொள்ளும் கருணாகரன், கடந்த ஒலிம்பிக்கில் இந்திய "பாக்ஸிங்" அணிக்கு "அப்சர்வராக" இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment