Saturday, November 6, 2010

வரலாற்றுச் சின்னங்களின் கதி

வரலாற்றுச் சின்னங்களின் கதி

உலகமே அண்ணாந்து பார்ப்பது - நமது நாட்டு வரலாற்றுச் சின்னங்களையும் வானளாவிய கோபுரங்கள் மின்னும் கோயில்களையும் சிற்பக்கலைக் காவியங்களையுமே. அந்தப் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ள தாஜ்மஹால் உலக அதிசயங்களில் ஒன்று. அதைப்போலவே இன்னொரு அதிசயம் என்னவென்றால் அதைப்பாதுகாப்பதில், பராமரிப்பதில் நமது நாட்டவர் காட்டிவரும் அலட்சியம்!
வெள்ளைப் பளிங்குக்கற்களால் வடிக்கப்பட்டுள்ள சிற்பக்கலையின் உயிரோவியம் தாஜ்மஹால் . அதைச் சுற்றிலும் நிறுவுவதற்கு அனுமதிக்கப்பட்ட சிறுசிறு தொழிற்கூடங்களிலிருந்து வெளியாகிய புகைமேகம் - மெல்ல மெல்ல தாஜ்மஹாலையே பாதிக்க ஆரம்பித்தது. நல்ல வேளையாக தக்க சமயத்தில் இப்பிரச்சினை உச்ச நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதால் பரிகாரம் கிடைத்தது. உத்தரப்பிரதேச அரசினால் விவஸ்தையின்றி அனுமதிக்கப்பட்ட தொழிற்கூடங்கள் வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டன; தாஜ்மஹாலும் தப்பியது.
இப்பொழுது தாஜ்மஹாலுக்குப் புதிய பிரச்சினை எழுந்துள்ளது. தாஜ்மஹாலின் பின்புறத்தில் நீண்ட வணிக வளாகத்தை அமைக்கும் நூதனம் திட்டம் ஒன்று 8 மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டு படுவேகத்தில் செயற்படுத்த பட்டு வந்தது. தொல்லியல் துறையின் பராமரிப்பில் தாஜ்மஹால் இருந்து வருகிறது. அத்துறையின் அனுமதி பெறாமலே இத்திட்டம் செயற்படுத்தப்படும் விவரங்கள் பற்றி செய்தித்தாள்கள் மூலம் தெரிந்து கொண்ட மத்திய சுற்றுலா மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் ஜக்மோகன், ஆக்ராவுக்கு விரைந்து சென்றிருக்கிறார். தாஜ்மஹாலுக்குப் பின்புறத்தில் மும்முரமாக நடைபெற்றுவரும் கட்டுமான வேலைகளை நேரில் பார்வையிட்டிருக்கிறார். அதையடுத்து, மத்திய அரசின் அனுமதியை, குறிப்பாகத் தொல்லியல் துறையின் அங்கீகாரத்தைப் பெறாத இத்திட்டப்பணிகளை உடனே நிறுத்துமாறு அந்த இடத்திலேயே ஆணையிட்டிருக்கிறார். நமது நாட்டின் நல்ல காலம், முறைகேடுகளைக் களைவதில் கண்டிப்புக் காட்டக்கூடிய ஜக்மோகன், பண்பாட்டுத் துறையின் அமைச்சராகப் பொறுப்பு வகித்துவருவதாகும்.
பிரச்சினை இந்த அளவிலும் முடியவில்லை. தாஜ்மஹாலுக்குப் பின்புறத்தில் ஓடுகிற யமுனை நதியின் பிரவாகத்தையே - வணிக வளாகத்துக்காகத் திசைதிருப்பி விடுவது இத்திட்டத்தின் ஓர் அம்சம். இதன் விளைவாக, வெள்ளப்பெருக்கு மிகுந்த காலங்களில் தாஜ்மஹாலே கூட பாதிப்புக்கு உள்ளாகக் கூடும். அதோடு, சுற்றுச்சூழலும் சேதம் அடைய வாய்ப்புண்டு - என்று கருதிய அமைச்சர் திட்டப்பணிகளை உடனடியாக நிறுத்திவைத்திருக்கிறார்.
இதைப்போலவே உலக நாகரிகத்தின் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாக விளங்கிவருவது - ஹம்பி. விஜயநகர மன்னர்களின் ஆட்சிப்பீடமாக ஒருகாலத்தில் பொலிந்து நின்ற இடம் இது. இந்த நினைவுச்சின்னப் பகுதிக்குள் - எந்த அனுமதியும் இன்றி, இரு பாலங்கள் கட்டப்பட்டன. இதன் விளைவாக, ஹம்பிக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக ஐ.நா. கலாசார அமைப்பான யுனெஸ்கோ அண்மையில் அறிவித்துள்ளது. இந்த அவல நிலைக்கு என்ன காரணம்? தொல்லியல் துறையின் நிர்வாகத்தில் காணப்படும் மெத்தனமா? அல்லது சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் வரன்முறை கடந்த போக்கா? எதுவென்று திட்டமாகத் தெரியவில்லை. உலகப் புகழ்பெற்ற நாகரிகச் சின்னங்களின் கதியே இது என்றால், தொல்லியல் துறையின் பொறுப்பில் நாடு முழுவதிலும் பரவலாக அமைந்துள்ள சுமார் 10 ஆயிரம் வரலாற்றுச் சின்னங்களின் நிலை எப்படி இருக்குமோ? அதை நினைத்துப் பார்த்தாலே பகீர் என்கிறது. இந்தத் தலைமுறை, பெரிய வரலாறு எதையும் படைக்கப்போவதாகத் தோன்றவில்லை. ஆயினும் நமது முன்னோர் நமக்கு விட்டுச்சென்றுள்ள கலாசார சிதனங்களைப் பாதுகாக்கும் சக்தி கூட இல்லாத பாமரர் என்ற புகழைத் தேடிக்கொள்ளலாமா?

No comments:

Post a Comment