Saturday, November 6, 2010

தவம் செய்வார் தம் கருமம் செய்வார்

தவம் செய்வார் தம் கருமம் செய்வார்

சாதனையின்றிச் சாதிப்பார் இல்லை என்பது ஆன்றோர் கூற்று. சாதனை என்பது இடைவிடாப் பயிற்சி அல்லது பழக்கம் எனப்படுகிறது. நாம் இப்பொழுது எந்த நிலையில் இருக்கின்றோம்? எத்தகைய பண்பாட்டைப் பெற்றிருக்கின்றோம்? இவையாவும் முன்பு நாம் செய்த சாதனைகள் மூலம் வந்ததேயாம்.
உயிர்களின் நலனுக்கென்று உழைத்தல் தொண்டு எனப்படுகின்றது. தொண்டு, மனத்தாலும் வாக்காலும் கையினாலும் செய்யலாம். தூயமனம் உடையவர்களாய் இருந்துகொண்டு, உயிர்கள் அனைத்தும் இன்புற்று இருக்க வேண்டும் என்று ஆழ்ந்து எண்ணுவது மனத்தினால் செய்கின்ற தொண்டாம்.
கைகளினால் செய்யப்படுகின்ற பணிவிடை, கைங்கரியம் எனப்படுகிறது. ஆலயங்களில் மெழுகிடுதல், நந்தவனம் அமைத்தல், பூமாலை புனைதல் முதலியன கையினால் செய்யப்படுகின்ற பணிவிடைகளாம். உழவாரப்பணி செய்தல் கடவுளுக்குரிய கைத்தொண்டாம்.
தேவார, திருவாசக, திருமுறைகளைப் பாடுதல், இறைவன் புகழைப் பேசுதல், அர்ச்சனை செய்தல் முதலியன இறைவனுக்குச் செய்கின்ற வாய்த்தொண்டாம். யாவரிடத்தும் முகமலர்ந்து இன்சொல் பேசுதலும் வாய்த்தொண்டாம்.
மானுட வாழ்வு தொண்டில் தொடங்கி தொண்டிலேயே முடிவடைய வேண்டும். ஐந்து வயதுக்குழந்தை தாய்க்குப் பணிவிடை செய்து பழக வேண்டும். வளர வளரத் தாய், தந்தை இருவருக்கும் பணிவிடை செய்ய வேண்டும். பின்னர் ஆசிரியரையும் உடன் சேர்த்து மூவரது பணிவிடையாக மலர வேண்டும். மேலும் அது சமுதாயத் தொண்டாகவும் வடிவெடுக்க வேண்டும். மனத்தூய்மையையும், இறையருளையும் பெறுதற்குத் தொண்டு துணை செய்யும். இளம் வயதி#ருந்து இறைத் தொண்டாற்றுதல் சிறந்த சாதனையாம்.
மனிதன் செய்யும் ஆத்ம சாதனைகள் அனைத்தும் மனத்தைத் தூயதாக்குதற்கும், மனத்தகத்து அமைதியும் சாந்தியும் நிலவுதற்கேயாம். மனத்தகத்து எத்தனையோ அழுக்குகள் படிந்து கிடக்கின்றன. எத்தனை எத்தனையோ ஆசைகள் மண்டிக் கிடக்கின்றன. அவையாவும் பல ஜன்மாந்திரங்களில் சேர்ந்தவை. அந்த ஆசாபாசங்களெல்லாம் துடைக்கப்படும்பொழுதுதான் மனது தூயதாகும்.
மனத்தில் அமைதி நிலைபெறுதற்கும் நமது சுவாசப் போக்குவரத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. மனது அமைதியுற்றிருக்கும்போது நமது சுவாசப் போக்குவரத்திலும் அமைதி குடிகொண்டிருக்கும். கோபம், பொறாமை, காமம், அச்சம் முதலிய உணர்வுகளுக்கு மனம் அடிமையாகும் பொழுது அதற்கேற்ப சுவாசத்தின் போக்குவரவு வெவ்வேறு பாங்கில் மாறுபடும்.
மனம் - அடங்காத் தன்மையது. மனத்தை ஒழுங்குபடுத்துதற்கும், அதை நம் வசப்படுத்துதற்கும் இடைவிடாப் பயிற்சியும் முயற்சியும் இன்றியமையாதவையாம். நாள்தோறும் காலையும் மாலையும் தீவிரமாக ஆத்ம சாதனைகளில் ஈடுபட வேண்டும்.
ஆத்ம சாதனை என்பது எளிதானதல்ல. அது எத்தனை எத்தனையோ பிறவிகளில் சேர்த்து வைத்துள்ள மனப்பதிவுகளையெல்லாம் துடைத்தெறியும் போராட்டமாகும். துடைக்கத் துடைக்க அவை துளிர்விட்டு வளரும். வெட்ட வெட்ட அவை முளைவிட்டுத் தளைக்கும். உண்ணும் உணவையும், உறக்கத்தையும் மறந்தாலும் மனத்தைச் செம்மைப்படுத்தும் ஆத்ம சாதனைகளைச் செய்ய மறந்துவிடலாகாது.
மானுட சமுதாயத்தில் இன்று இல்லறம், துறவறம் என்ற இரண்டு அறங்கள்தான் இருக்கின்றன. பெரும்பாலான மக்கள் இல்லறத்தை இனிது விரும்பி ஏற்றுக் கொள்கின்றனர். யாரோ ஒரு சிலர் தான் துறவை மேற்கொள்ளுகின்றனர்.
வாழ்க்கையில் மிகவும் உன்னதமானது துறவுநெறி. உண்மையான துறவு தியாக மயமானது, தொண்டு மயமானது. துறத்தல், தொண்டு செய்தற்கேயாம். மானுட வாழ்க்கையில் துறவு எல்லாப் படித்தரங்களிலும் இடம்பெற்றிருக்கின்றது. குழந்தையின் பிறப்பே தாயின் கருப்பையைத் துறத்தலில் தான் தொடங்குகிறது. மானுட வாழ்வின் முடிவாகிய மரணமும், உயிர் உடலைத் துறத்தலில் தான் வந்தமைகிறது. ஆக, பிறப்பும் இறப்பும் துறத்தலில் தொடங்கித் துறத்தலிலேயே முடிவடைகின்றது.
ஜீவனின் முன்னேற்றம் துறவில் தான் அடங்கி இருக்கிறது. மரத்தில் பூக்கும் பூ பிஞ்சாகிக் காயாகிக் கனியாகிறது. கனியானபின் அது தன்னை உருவாக்கிய மரத்தினின்று விடுபடுகின்றது. அதாவது தன்னை ஈன்று வளர்த்த மரத்தைத் துறந்துவிடுகிறது. அதன் பிறகு தான் அது மக்களுக்கு உணவாகப் பயன்படுகிறது. அது போன்று பக்குவம் அடைந்த மனிதன் உலகைத் துறக்க வேண்டும். துறந்தவன் தான் உலகிற்கு நன்கு பயன்படுகின்றான். புத்தரும், மகாவீரரும், யேசுவும், சங்கரரும், ராமானுஜரும், ராமகிருஷ்ணரும், சுவாமி விவேகானந்தரும் போன்ற அருளாளர் ஆற்றிய பணிகளே அரும் பெரும் பணிகளாகும். மானுடத்தைத் தெய்வீகத்திற்கு எடுத்துச் செல்லும் திருப்பணிகள் அவை.
"காலம் உண்டாகவே காதல் செய்து உய்மின்" என்கிறார் அப்பர் சுவாமிகள். சோம்பலும் உறக்கமும், காலம் தாழ்த்துதலும் மானுட வாழ்க்கையின் முன்னேற்றத்துக்குப் பெரும் தடைக்கற்களாம்.
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்
என்பது வள்ளுவம்.
உயிர்கள் அனைத்திடத்தும் அச்சம் குடிகொண்டுள்ளது; மரணபயம், எல்லா உயிர்களையும் ஆட்டிப் படைக்கின்றது. கற்றவர் கல்லாதவர், பண்டிதர் பாமரர் எல்லோரும் இறப்பைக் குறித்து அஞ்சுகின்றனர். அருளாளர்கள் மரணத்தைக் குறித்து அஞ்சுவதில்லை. "நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்" என்பது அப்பரது வாக்கு.
காலனுக்குக் காலனாக இருக்கின்றவன் இறைவன். அவனது அடியார்கள் மரணத்தைக் கண்டு அஞ்சுவதில்லை. மரணபயத்தை வென்றவர்களே ஆன்மஞானம் அடையப் பெற்றவர்களாவர். பிறப்பு, இறப்பு இரண்டிற்கும் அப்பாற்பட்டது ஆன்மா. சத்சித் ஆனந்தமயமானது. இந்த உண்மையை உணர்ந்தவர்கள் மரணத்தைக் கண்டு அஞ்சாது அமைதியாக வரவேற்கின்றனர்.
பாரமார்த்திக வாழ்வில் பெருநிலையடைந்தோர் புறத்தோற்றத்தில் பாமரரைப் போன்றே இருப்பர். பாலர் போன்றும், பேயர் போன்றும் அன்னவர் காட்சியளிப்பர். காரிருளில் கண் தெரியாது. கண்களைக் கூசும் மிகுந்த ஒளியிலும் கண் தெரியாது. ஆனால் இரண்டும் ஒரு நிலையல்ல. அது போன்று பாமரரது நிலையும் பரமஹம்சப் பெருமக்களது நிலையும் பார்ப்பதற்கு ஒன்றே போல் தோன்றிடினும் இரண்டும் இருவேறு நிலைகள். வடதுருவமும் தென்துருவமும் போன்றவைகளாம்.
மனிதன் குற்றங்குறைகளை உடையவன். ஆசாபாசங்கள் பலவற்றிற்கு அடிமைப்பட்டுக் கிடப்பவன். ஆயினும் ஈசனது அருளை வேண்டி அவன் அழ வேண்டும். அழுது பிரார்த்திக்க வேண்டும். காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்க இறைவன் நாமத்தை ஓத வேண்டும். "வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே" என்பது மாணிக்கவாசகர் திருவாக்கு.
இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவன்; தாயினும் சாலப்பரிந்து பேணுபவன்; கற்பக விருக்ஷம் போன்றவன்; காமதேனுவும் அவனே. வேண்டுவோர் வேண்டியதை எல்லாம் எடுத்து வழங்கும் வள்ளல். நமக்கு எது நல்லதோ, எதைப் பெறுதற்கு நாம் தகுதியுடையவரோ அதை நமக்கு நல்குவான். நம்மைத் தகுதி உடையவர்களாக்கிக் கொள்ளுவது நமது கடமையாகும். நம்மை ஆத்ம சாதனத்தில் ஈடுபடுத்திக் கொள்ளுதல் மானுடத்தின் தலையாய கடமையாகும்.
"தவம் செய்வார் தம் கருமம் செய்வார்" என்னும் வள்ளுவத்தை நெஞ்சகத்தில் நிலைநிறுத்துவோமாக.

No comments:

Post a Comment