Saturday, November 6, 2010

நம்ப முடியாத புலமை

நம்ப முடியாத புலமை

அறிஞர் சி.சு. மணி என்கிற சிதம்பர சுப்பிரமணியன் கடந்த ஜூன் 12 ஆம் தேதி பாளையங்கோட்டையில் காலமானார். அவரது "தலை மாணாக்கர்" என்று கருதப்படும் பேராசிரியர் தொ. பரமசிவம், சி.சு மணி குறித்து ஆற்றிய இரங்கல் உரையின் எழுத்து வடிவம் இது.
தமிழ்நாட்டில் அறியப்பட்டவர்களைப் போல் அறியப்படாத பெரிய அறிஞர்களின் பட்டியல் ஒன்று இருக்கிறது. அதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு சி.சு.மணி.
தொல்காப்பியம் உயிர்ஈற்றுப் புணரியலைப் பற்றிப் பேசவேண்டுமா? சங்க இலக்கியத்தின் பிசிராந்தையார் நட்பினைப் பற்றிப் பேச வேண்டுமா? பரிமேலழகர் உரைச் சிறப்பு என்ன? தமிழிலக்கிய நெடும் பரப்பில் எங்கே எந்தக் கேள்வி கேட்டாலும் பதில் சொல்லக் கூடிய ஓர் அறிஞர் சி.சு.மணி அஞ்சல் துறையில் எழுத்தராக இருந்தார். உண்மையிலேயே அவர் நெல்லை மாவட்டத்தில் எல்லா பேராசிரியர்களுக்கும் பேராசிரியர். எந்தத் தமிழ், ஆங்கிலப் பேராசிரியருக்கும் மரபு வழி இலக்கியத்தில் ஐயம் ஏற்பட்டால் அவரிடத்திலே போய்த்தான் கேட்டுத் தெரிந்து கொள்வார்கள். அவரது வாசிப்பு அவ்வளவு விரிவானது. ஆழமானது. மிக நுணுக்கமானது.
கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரத்தில்தான் அவர் பட்டம் பெற்றிருந்தார். ஆனால் அவரிடம் இசை உட்பட பல துறைப்புலமை இருந்தது.
அவர் தன்னைத்தானே கேலியாகச் சொல்லிக் கொள்ளுகிற மாதிரி, புளிய மரத்தடியை விட்டு எங்கும் போகாமலேயே எல்லா ஞானத்தையும் பெற்றுக் கொண்ட நம்மாழ்வாராகவே அவர் விளங்கினார்.
யார் எப்போது என்ன வந்து கேட்டாலும் இல்லையென்று சொல்லாமல் கொடுக்கக்கூடிய ஒரு செல்வனைப் போல் அவருடைய வீடு, அறிவைத் தேடி வருபவர்களுக்கு திறந்தே கிடந்தது. உடல் நலம் குன்றியிருந்த கடைசி நிமிடம் வரை அது அப்படிதோன் இருந்தது.
உணர விரித்துரைத்தல் என்றால், அதுதான் நல் கலிவியின் பயன் என்று சொல்லுவார் வள்ளுவர். கற்றவன் அதை அடுத்தவர் உணருமாறு விரித்துச் சொல்ல வேண்டும். அப்படிச் சொல்லுகிற ஆற்றல் பேராசிரியர்களை விட அவருக்கு நிறைய இருந்தது. அவர் எல்லோருக்கும் ஆசிரியராக மட்டுமல்ல. கடைசி நிமிடம் வரை மாணவனாகவும் இருந்தார். என்ன புதிய புத்தகம் வந்திருக்கிறது என்று கேட்பார். 69ம் வயதில் 2003ஆம் ஆண்டு வெளி வந்த "புனைகளம்" மூன்றாவது இதழ் ஏன் வரவில்லை என்று ஒரு மாதத்திற்கு முன்னால் கேட்டார்!
அவருடைய மரபு சைவ மரபு. அவருடைய தாயார் குமர குருபரருடைய தம்பியின் வழியிலே வந்தவர். எனவே அவருக்கு ஒரு சைவ மரபு பின்புலம் இருந்தது. ஆனால் மத அடியாரைப் போல அவர் ஒரு போதும் நடந்து கொள்ளமாட்டார். தேவாரத்தை அவ்வளவு நுணுக்கமாகச் சொல்லுவார். "சடையாய் எனுமால் சரண் நீ எனுமால்" என்ற சம்பந்தர் தேவாரத்திற்குச் சைவர்கள் சொல்லுகிற கதையை ஒப்புக் கொள்ளமாட்டார். இது அகப்பொருள் பாசுரம் என்பார். சிவஞான முனிவருடைய சந்சூத்திரர்" என்று சொல்லுகிற கருத்தை அவர் ஒப்புக் கொள்ளமாட்டார். சைவ சித்தாந்தம் ரௌரவ ஆகமத்தினுடைய மொழி பெயர்ப்பு என்று சொல்லக்கூடிய கருத்தையும் அவர் ஒப்புக் கொள்ள மாட்டார். 14 சாத்திரங்களுக்கும் உரை எழுதி ஒரு பல்கலைக் கழகம் செய்ய வேண்டிய பெரும் பணியாகிய "சிவஞான மாபாடியத்துக்கு ஆயிரம் பக்கங்களில் எளிய உரையை வரைந்திருந்தாலும் சிவ தீட்சை பெற்றுக் கொள்ளவில்லை. ஆனால் ஒரு நல்ல சைவராக வாழ்ந்தார். சைவ நெறி என்பது ஒரு வாழ்நெறி என்று அடிக்கடி சொல்வார்.
அவருடைய எழுத்துப்பணி மிக விரிவானது. 14 சித்தாந்த சாத்திரங்களுக்கும் உரை எழுதியிருக்கிறார். சிவஞான மாபாடியத்துக்கு உரை எழுதுவது அவ்வளவு எளிதான காரியமல். அதிலே உள்ள கடுமையான இலக்கணப் பகுதிகளெல்லாம் யாரையும் மலைக்க வைக்கும். அது அவருடைய மிகப் பெரிய பங்களிப்பு.50, 60 ஆண்டுக்காலமாக யாருமே படிக்காது இருந்த சிவஞான மாபாடியத்தை இன்னுமொரு நூறாண்டு காலத்திற்கு ஒரு கல்லூரி மாணவன் தைரியமாகத் தொட்டுப் பார்க்கலாம். அந்த அளவுக்கு அந்த உரை எளிமையான உரை.
சைவம் மட்டுமல்ல, வைணவ, நூல்களையும் படிப்பார். ஆச்சர்ய ஹிருதயமும், மும்மூச்சுப்படியும், ஸ்ரீ வைஷ்ணவ பூஷணமும் அவருடைய நாவிலே சாதாரணமாக வந்து விழும். "செந்நிறத்த தமிழோசை என்றதனாலே அகஸ்தியமும் அனாதி என்று சொன்னாரல்லவா.." திடீரென்று அவர் மேற்கோள் காட்டுகிற போது நமக்குத் தலைசுற்றும். ஒரு திருநீறணிந்த சைவர் இவ்வளவு சாதாரணமாக மேற்கோள் காட்டுகிறார்.
பைபிளிலே ஜேம்ஸ் எடிசன்னிலிருந்து 13 பதிப்புகள் அவரிடத்திலே இருந்தன. இமாம் கஸாலி பற்றிய நூல்களையெல்லாம் அவர் வைத்திருந்தார். ஒரு இஸ்லாமியரிடம் இமாம் கஸாலியரைப் பற்றி அவரால் பேச முடியும். கூடுதலாகச் சில விஷயங்களை சொல்லவும் முடியும். அவர் கடைசியாக என்னிடத்தலே வாங்கிப் படித்த புத்தகம், சமண ஷியாத் வாதம் பற்றியது.`
அவரது நினைவாற்றல் ஒரு கணிப்பொறியை நினைவுபடுத்துவதாக இருந்தது; மனப்பாடமாக சொல்லி நடத்துவார். அவர் வீட்டு மாடியிலே. ஒரு காலத்திலே எல்லோருக்கும் உணவளிக்கும் அளவுக்கு அவருக்குப் பொருள் வசதி இருந்தது. செய்தார். எல்லோரும் வந்து உட்கார்ந்திருப்போம். கேட்பவர்கள் பெறுவான் தவம் என்பது மாதிரி வந்து உட்காருவார்கள். சொல்லிக்கொண்டே இருப்பார். எல்லோரும் கேட்டுக் கொண்டே இருப்போம். எல்லா பக்கமும் சுற்றிச் சுற்றி வருவார்.
மூல இலக்கியங்களை மட்டுமல்லாமல் உரைகளையும் நுணுக்கமாகப் படித்திருந்தார். சிலப்பதிகார உரையிலே அவருக்கு இருந்த பயிற்சி, பண்ணாராய்ச்சி வித்தகர் சுத்தரேசனார் போன்றவர்கள் மெச்சும்படி இருந்தது. தவத்திரு குன்றக்குடி அடிகளார், பேரறிஞர் வானமாமலை, நுண்கலைச் செல்வர் சாத்தான்குளம் அ.ராகவன் போன்ற எல்லோரும் அவரை மதித்தார்கள். எல்லோரும் அவர் வீடு தேடி வந்து சென்றார்கள். குன்றக்குடி திருமடம் அவருக்கு, சேக்கிழார் விருதை ஏற்படுத்திய முதல் ஆண்டு அழைத்து வழங்கியது.
பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னாலே வரைக்கும் அவருடைய குரல்வளம் மிக அருமையாக இருந்தது. செவ்வியல் இசையையும், காவடிச் சிந்தையும், தேவாரத்தையும் பாடுவார். இத்தனைக்கும் ஓயாது புகைபிடிக்கிற வழக்கம் உடையவர். இருந்தாலும் அவரது குரல் மணிக்குரலாக இருந்தது.
அவருடைய நடை, தோற்றம், எழுத்து, பேச்சு, காசுக்கு தன்னுடைய புலமையை விற்காத வாழ்க்கை... எல்லாமே கம்பீரம் நிறைந்ததாக இருந்தது. அந்தக் கம்பீரத்தைக் கடைசிவரை காப்பாற்றினார். ஆக, ஒட்டு மொத்தத்தில் நான் என்னுடைய குருநாதரை இழந்து போனேன். சைவ உலகம் ஒரு மிகப்பெரிய சைவ சித்தாந்தியை இழந்து போய் விட்டது. தமிழ் இலக்கியம் ஒரு பெரிய மரபிலக்கியப் பேரறிஞரை இழந்து போய் விட்டது. எங்கள் நெல்லை மாவட்டம் ஒரு பல்துறை அறிஞரை இழந்து போய் விட்டது.

No comments:

Post a Comment