Saturday, November 6, 2010

பழமொழியும் கவிதையும்

பழமொழியும் கவிதையும்

Pazhamozhiyum Kavithaiyum - Agathiyalingam - Tamil Literature Ilakkiyam Papers
பழமொழி என்பது நாட்டுப்புறச் சொற்கலையாக்கங்களில் ஒன்று. நாட்டுப்புறக் கவிதைகள், கதைகள், கதைப்பாடல்கள் (ballads) விடுகதைகள், நாட்டுப்புற இசைகள், நாட்டுப்புறத் தொன்மங்கள் (Anyths), நாட்டுப்புற வீரக் கதைகள் (Legends), போன்றவை மொழியினால் ஆக்கப்பட்ட கலையாக்கங்கள். இத்தகைய சொற்கலையாக்கங்களில் ஒன்றுதான் பழமொழியும்.
எது பழமொழி?
பழமொழி என்றால் என்ன என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஆனால் அதனைத்துல்லியமாக விவரண நிலையில் கூறுவது சற்றுக் கடினமே. எனினும் பல வேறு விளக்கங்கள் நம்மிடையே உள்ளன. பழங்காலந்தொட்டே நம்மிடையே வழங்கிவரும் ஒரு சொற்கலையாக்கம் பழமொழி. இது பழைமை என்ற அடிப்படையில் உருவான விளக்கம். ஆனால் பழைமையான மொழி அல்லது பழைமையான சொல் மட்டுமல்லாமல் அதற்கே உரிய சில பண்புகளை இத்தொடர் (பழமொழி) காட்டுவதில்லை.
பழமொழியினுடைய பண்பும் அதன் தேவையும் (Purpose and function) நாம் அறிய வேண்டியவை. பழமொழி எதற்காகத் தோன்றியது? அதன் பயன்பாடு என்ன? அந்த பயன்பாட்டை அடைவதற்குப் பழமொழி கொண்டிருக்க வேண்டிய பண்புகள் என்னென்ன? பொருள் அடிப்படையில் அதன் பண்பென்ன? வடிவ அடிப்படையில் அதன் பண்பென்ன? என்பன போன்றவற்றை உள்ளத்தில் நிறுத்திப் பார்த்தால் பழமொழி என்பதன் விவரண விளக்கம் ஒருவாறு புலப்படும்.
விவரண விளக்கம்
இந்நிலையில் பழமொழி என்பதன் விளக்கம் இங்குத் தரப்படுகின்றது. இதற்கு முன்னால் மேலைநாட்டினராலும் தமிழ் அறிஞர்களாலும் (தொல்காப்பியர் உட்பட) விவரண விளக்கம் தரப்பட்டுள்ளது. அவை பற்றிய பின்னர் ஆராயப்படும். நம்முடைய விளக்கம் இதுதான்.
முன்னோர்களின் நீண்ட அனுபவத்தில் உருவான மனித வாழ்க்கைக்கு வேண்டிய மிக முக்கியமான அனுபவங்கள் அல்லது அறிவுரைகள் மக்கள் மனதில் படும்படியாகவும் பொதுமைப்படும் நிலையிலும் கேட்போரை அறிவுறுத்தும் மக்கள் மனதில் படும்படியாகவும் பொதுமைப்படும் நிலையிலும் கேட்போரை அறிவுறுத்தும் நிலையிலும் உருவாக்கம் பெற்றுப் பரம்பரையாக மக்கள் மத்தியில் வாய்வழிவாழும் பழைமையான, எளிமையான சுருக்கமான சொற்கலையாக்கமே பழமொழி.
"அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை"
"அடியாத மாடு படியாது"
"காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு"
போன்ற பழமொழிகள் இப்பண்பைக் காட்டும்
பழமொழிகளின் ஒரு சிறப்புப் பண்பு:-
பழமொழிகளின் ஒரு சிறப்புப் பண்பு பழமொழிகளில் கூறப்படும் உண்மைகள். அப்பழமொழியில் கூறப்படும் உண்மைகளை மட்டும் குறிக்காது அவற்றோடு ஒத்த பிறவற்றுக்கும் உரியதாக இருப்பனவாகும்.
"அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை"
என்ற பழமொழியில் காணப்படும் செய்தி அல்லது உண்மை மாட்டுக்கு மட்டும் பொருந்தாமல் அந்த நிலையிலுள்ள எல்லாவற்றுக்கும் பொருந்துவது ஆகும்.
இதனுடைய பொருள் "மனிதன் தனக்கு உரியவற்றில் பக்கத்தில் உள்ளவற்றில் காணமுடியாத சிறப்பைப் பிறருக்கு உரியவற்றில் தூரத்தில் உள்ளவற்றில் காண்கிறான்" என்பது தான். தன்னுடையது சிறப்பாக இருந்தும் பிறருடையதுதான் சிறப்பாகத் தோன்றுகின்றது. அது தவறு என்ற உண்மையைக் கூற வருவதுதான் இந்தப் பழமொழியின் நோக்கம். பழமொழியில் காணப்படும் மொழிப் பொருளுடன் ஒத்த பிறவற்றையும் இணைத்துப் பொதுமைப்படுத்திக் கூறுவதுதான் பழமொழியின் ஒரு சிறப்புப் பண்பு எனக் கருதலாம். இதனைத் தான் பொதுமைப்படுத்திக் கூறுதல் என விளக்கத்தில் கூறுபட்டது. பெரும்பாலான பழமொழிகளில் இப்பண்பைக் காணமுடியும்.
"அடியாத மாடு படியாது"
என்பது மாட்டை பற்றி மட்டும் கூறாது மனிதர்களைப் பற்றியும் குறிப்பிடுவது காணலாம்.
"அடியாத மனிதன் பணியமாட்டான்"
போன்றவற்றைக் கூற வருவதுதான் இப்பழமொழி.
மக்களிடையே வாழக்காரணம்
இத்தகைய பழமொழிகள் மக்களிடையே வாழக்காரணங்கள்; முக்கியமான காரணங்கள் இரண்டு. ஒன்று அது கூறும் உண்மை அல்லது பொருள். இரண்டு அதன் வடிவ அமைப்பு. சிறந்த கவிதைகளுக்கு உரிய இந்த இரண்டு பண்புகளும் எந்தப் பழமொழிக்கு உள்ளதோ அந்தப் பழமொழிதான் வாழும். மக்களிடையே தவழும்.
நம்மிடையே வாழும் பழமொழிகளில் ஒன்று.
"அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்"
என்பது. இது நம்மிடையே இன்றும் வாழக் காரணம், இது கூறும் பொருள். "நகர்த்த முடியாத அம்மியையும் அடித்துக் கொண்டே இருந்தால் நகர்ந்துவிடும்" என்பது இதன் சொற்பொருள் என்றாலும் முயற்சியைப் பற்றிக் கூறுவது இது "மனிதனுக்கு வேண்டிய ஒரு பண்பு இது. இந்த நிலையில்தான் இது இன்றும் நம்மிடையே தவழ்கின்றது. கவிதையைப் பற்றிக்கூறும் ஆர்னால்ட் மனிதனுக்கு வேண்டிய அடிப்படையான சில பண்புகளை, உணர்வுகளைக் கூறும் கவிதைகளே வாழும்" என்று கூறுவது கவனித்தற் கூறியது ஆகும்.
வடிவம் - சொல்நிலை
அதுகூறும் பொருள் மட்டும் அல்லாது அதன் வடிவமும் சிறந்து விளங்க வேண்டும்.
"அடிமேல் அடிஅடித்தால் அம்மியும் நகரும்"
என்பது மோனை நயம் கொண்டு, செறிவும் செம்மையும் பெற்று விளங்கும் நிலையும் இதன் வாழ்வுக்குக் காரணம். மேலும் "அடி" என்ற ஒரே சொல்லையும் கொண்டு சில பாடல்களைத் திருவள்ளுவர் ஆக்கியிருப்பது போன்று ஆக்கப்பட்டிருப்பது இந்தப் பழமொழி.
வாக்கிய நிலை:-
சொல் நிலையில் மட்டுமல்லாமல் வாக்கிய நிலையிலும் ஒரே மாதிரியான வாக்கியங்களைக் கொண்டு வாழும் பழமொழிகளும் ஏராளம் ஏராளம்!
"அடிக்கும் ஒரு கை; அணைக்கும் ஒரு கை
பிடித்தால் கற்றை; விட்டால் கூளம்"
ஆடிக் கறக்கிற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும்
பாடிக்கறக்கிற மாட்டைப் பாடிக் கறக்க வேண்டும்"
"கூழ் ஆனாலும் குளித்துக்குடி
கந்தையாயினும் கசக்கிக் கட்டு"
போன்ற பழமொழிகள் இரண்டு வாக்கியங்களைக் கொண்டவை. ஆனால் ஒரே மாதிரியான வடிவத்தைக் (முற்றுவினை+பெயர்த்தொடர், நிபந்தனையச்சம்+பெயர்) கொண்டு உள்ளமைக் காணத்தக்கது. இவற்றைப் போன்றே மூன்றுவாக்கியங்களைக் கொண்டுள்ள சில பழமொழிகளும் காணக்கிடக்கின்றன.
"அங்கும் இருப்பான்; இங்கும் இருப்பான்;
ஆக்கின சோற்றுக்குப் பங்கும் இருப்பான்"
இவ்வாறு ஒரே வகையான இலக்கியங்களைக் கொண்டு உருவாக்கப்படும் கவிதைகளும் ஏராளம். ஏராளம்!
"யாயும் ஞாயும் யாரா கியரோ"
"நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று"
போன்ற பாடல்கள் இத்தகைய நிலையில் உருவாக்கப்பட்டவை தாம்.
தொடை நயம்:-
எதுகை மோனை போன்றவற்றைக் கொண்டு ஏராளமான பழமொழிகள் காணப்படுகின்றன. இவை இல்லாத பழமொழிகளே இல்லை என்று சொல்லும் நிலையில் பழமொழிகள் காணப்படுகின்றன.
"அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்"
"அக்குத் தொக்கு இல்லாதவனுக்குத் துக்கம் ஏது"
அடாது செய்பவன் படாது படுவான் (தலையாகு எதுகை)
போன்ற பழமொழிகள் எதுகை மோனை நயம் கொண்டு விளங்குவன.
முரண்:-
எதுகை, மோனை போன்று முரண் (தொடை) கொண்டு விளங்கும் நிலையும் காணக்கிடக்கின்றது.
"அகத்தின் அழகு முகத்தில் தெரியும்"
"அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை"
போன்ற பழமொழிகள் முரண்காட்டி நிற்பவை.
ஒரே வகை இலக்கணக் கூறுகள்:-
பல பழமொழிகள் ஒரே வகையான இலக்கணக் கூறுகளை உரிய இடத்தில் கொண்டு அருமையாக ஆக்கப்பட்டுயிருக்கின்றன.
"அத்தோடே நின்னுது அலைச்சல்
கொட்டோடே நின்னுது குலைச்சல்"
"அண்டர் எப்படியோ, தொண்டரும் அப்படியே"
அடித்தாலும் புருஷன் பிடித்தாலும் புருஷன்"
போன்று வருவது காணத்தக்கது.
பொதுப் பண்பு மிக்கவை:-
சிறந்த கவிதைகள் உலகப் பொதுமை கொண்டு விளங்குபவை.
"யாயும் ஞாயும் யாராகி யரோ"
"நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று"
போன்ற கவிதைகள் உலகப் பொதுப்பண்பு கொண்டவை. இது போன்றே சிறந்த பழமொழிகளிளும் உலகப் பொதுமை கொண்டவை.
"அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை"
"கூடி வாழ்ந்தால் கோடி நன்மை"
"ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்"
போன்ற தமிழ்ப்பழமொழிகள் தமிழ்மக்களுக்கு மட்டுமல்லாமல் உலக மக்கள் அனைவருக்குமே பொருந்தி வருவது காணத்தக்கது.
கவிதையும் பழமொழியும்:-
பழமொழிகள் சிறந்த உண்மைகளையும் செம்மையான அனுபவங்களையும் உள்ளடக்கி நிற்பதுடன் சிறப்பான வடிவ அமைப்பையும் கொண்டு விளங்குவன. இதே நிலையைத்தான் கவிதைகளிலும் காண்கிறோம். பழமொழி நாட்டு மக்களால் உருவாக்கப்படுவது. கவிதை, நயம் செறிந்த கவிதைப் பெருமக்களால் உருவாக்கம் பெறுவது. எனினும் கவிதைகளில் காணப்படும் எல்லாக் கூறுகளும் உத்திகளும் இதிலும் காணப்படுகின்றன.
ஓரடிக் கவிதைகளைப் போல இவையும் சிறந்த அமைப்பைக் கொண்டு விளங்குகின்றன. கவிதைகளைப் பற்றிப் பேசும் அரிஸ்டாட்டில், எமர்சன் போன்றவர்கள் "ஓரடியில் காணப்படும் சில சொல்லாக்கங்களும் சிறந்த கவிதைகளே" எனக்கூறிய போந்தனர் நாட்டுப்புற மக்களால் உருவாக்கப்பட்ட பழமொழிகளும் சிறந்த கவிதைப் பண்புகளைப் பெற்று விளங்குகின்றன என்றால் அதுமிகையாகாது.

No comments:

Post a Comment