Saturday, November 6, 2010

புதினம்

புதினம்

Novel - Tamil Literature Ilakkiyam Papers புதினம் இலக்கிய வகை பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலத்தில் தோன்றியது. வசன காவியம் என்ற சொற்றொடர் "Prose Epic" என்னும் தொடர் மொழியின் தமிழாக்கமாகும். புதினத்தின் கருத்து வடிவம் ஆங்கிலத்தில் இருந்து பெறப்பட்டது. பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கில நாவலுலகில் சிறந்து விளங்கியவருள் ஒருவரான ஹென்றிபீல்டிங் என்பாரை ஆங்கில வசன காவியத்தின் தந்தை என்றழைப்பர் இவர் தனது படைப்புக்களான "A Comic Epic Poem in Prose" என்றே எழுதுவார் வசனத்தில் எழுதப்படும் வேடிக்கையான காவியம் என்று பொருள் மீதுயர் கருத்தும் விழுமிய நடையுங் கொண்ட பழைய காவியங்களின் வேறுபட்ட தன்மையை புதினம் பெற்றிருக்கும் உண்மையைக் குறிப்பிடவே "வேடிக்கையான காவியம்" என்றார். மேலை நாட்டார் புதினத்தை பண்பு விளக்கப் புதினம், நிகழ்ச்சிப் புதினம் என இரண்டாகப்பகுப்பார்.
தமிழில் புதினத்தின் தோற்றம்:-
புதினம் என்னும் இவ்வுரைநடை இலக்கியத்தைப் பற்றி தொல்காப்பியர் குறிப்பிடுகையில்,
"பாட்டிடைவைத்த குறிப்பினாலும்
பாவின்றி எழுந்த கிளவியானும்
பொருளோடு புணர்ந்த நகைமொழி யானும்
பொருளோடு புணர்ந்த பொய்ம்மொழியானும்
உரைவகை நடையே நான்கென மொழிப (தொல் - செய் - 171)
பாவின்றி எழுந்த கிளவி என்று ஆசிரியர் குறிப்பது உரைநடைநூல். பொருளோடு புணராப் பொய்ம்மொழி பொய்ப்புதினம் எனவும், பொருளோடு புணர்ந்த நகை மொழி புதினம் என்றும் வழங்கப்பெறுகின்றன.
தமிழில் தனிச் செய்யுட்கள் தொடர்நிலை செய்யுட்களும் கதை பொதிந்தனவாயிருந்தன. இப்படிமுறை வளர்ச்சி சிலப்பதிகாரம், சிவகசிந்தாமணி, கம்பராமாயணம் தோன்றிய கால கட்டத்தில் உச்ச நிலை அடைந்தது. பதின்மூன்றாம் நூற்றாண்டளவில் காவியம் கதை சொல்லும் சிறப்பியல்லை இழக்கத் தொடங்கியது என்று எஸ். வையாபுரிப் பிள்ளை குறிப்பிடுவார்.
காவிய நெறியின் வீழ்ச்சியானது பதினெட்டாம், பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் வீழ்ச்சியடைகிறது. இங்கிலாந்தில் கதைப்பாடல்கள் உள்ளூரக் குன்றியமையால் நாவலிலக்கியம் தோன்றுவதற்கு ஏதுவாக அமைந்தது என்று, டாக்டர் டில்யார்ட் படிப்போரைப் பிணைக்கவல்ல நெடுங்கதைகள் செய்யுளில் அமையும் நிலை காணப்படவில்லை. அக்காலத்தில் சிறப்புற்று விளங்கிய டிரைடன் என்பார் எழுதிய "Fables" என்ற கதைப்பாடற் தொகுதியும் போப் என்பவர் (1688 - 1744) யாத்த இலியாது காவியமும் மொழிப்பெயர்ப்புகள் ஆகும்.
தெய்வங்கள், அரசர்கள், உயர்குடித்தலைவர்கள் ஆகியோரை மையமாகக் கொண்டு காவியங்கள் படைக்கப்பட்டன. ஐரோப்பாவில் ஏற்பட்ட பல்வகைச் சமூக மாற்றங்களில், நிலமானியச் சமூகம் சிதைந்து முதலாளியச் சமூகம் ஏற்பட்டது. அந்நிய இயந்திரங்களின் வருகையால் கல்வி பரவலாயிற்று. கலை இலக்கியங்கள் அனைவரையும் உட்கொண்டு படைக்கப்படும் சூழல் தோன்றியது. காப்பியக் கதை சொல்லும் மரபு சிதைந்து புதினம் தோன்றியது.
ஆங்கிலத்தில் நாவல் என்பதை "Fiction" என்ற பொதுப்பிரிவிற்குள் கற்பனைக் கதைகள் என்று வழங்குகின்றனர். புதினம் மனிதனை மனிதனாக பிரதிபலிக்கச் செய்கிறது. உலக வாழ்வோடு ஒட்டி அமையும் பண்பையும், அடித்தள மக்களின் வாழ்வியல் சூழலை பிரதிபலிக்கும் பிம்பமாகவும், சூழ்ச்சி (அ) சதி பாத்திரங்கள், உரையாடல், காலம், இடம், நடை வெளிப்படையாகவோ, குறிப்பாகவோ காட்டப்பட்டுள்ள வாழ்க்கை தத்துவத்தை மையமாக வைத்து எழுதப்படும் இவற்றை நெடுங்கதை என்றும் குறிப்பிடுவர்.
தமிழில் முதல் மூன்று புதினம்:-
மயிலாடுதுறை வேதநாயகம் 1876 இல் பிரதாப முதலியார் சரித்திரத்தில் பெண்மானம், பெண்கல்வி, பெண் தலைமையும் பல கிளைக்கதைகளையும் பழமொழிகளையும் காணமுடிகிறது. இரண்டாவது புதினம் பி.ஆர். ராஜம் ஐயர் எழுதிய கமலாம்பாள் சரித்திரத்தில் குடும்ப வாழ்க்கையில் உருவாகும் உறவுச் சிக்கலை இயல்பாக குறிப்பிடப்படுகிறது. மூன்றாவது புதினம் மாதவையா எழுதிய பத்மாவதி சரித்திரத்தில் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் சடங்கினால் பிணைக்கப்பட்டுள்ளதை சாடுகிறார்.
துப்பறியும் புதினம்:-
இருபதாம் நூற்றாண்டின் முதல் முப்பதாண்டுக் காலம் துப்பறியும் படைப்புகள் பெருகின 1902 இல் ச.ம. நடேச சாஸ்திரியின் தீனதயாளுவும் பவானந்தரின் ஆபூர்வ சாமர்த்தியங்கள் 1909 இல் வெளியிடப்பட்டது. கொலை எப்படி நடந்தது என்பதை மையமாக வைத்து எழுதப்பட்டதாகும். பிரணதார்த்தி ஹெரிசிவா எழுதிய அனுமான்சிங் அல்லது கொலைகளவுத் திறவுகோல், ங.ந. கிருஷ்ணசாமி அய்யர் எழுதிய வேலியின்கூலி அல்லது கள்வர் கவர்ந்த கல்யாணப் பெண் (1912) இல் எழுதப்பட்டது. துப்பறியும் நிபுணரான சுந்தரமய்யரின் அன்பின் வலிமை காணமற்போன மரண சாசனம் என்ற புதினம், வடுவூர் துரைசாமி ஐயங்கார் சமயச்சஞ்சிவியும் பெண் நாவலாசிரியரில் வை.மு. கோதைநாயகி அம்மாள் தான் எழுதிய ராஜமோகன், கடமையின் எல்லை என துப்பறியும் நாவலை எழுதினார்.
சுப்பிரமணியத்தின் அறுவடை, சட்டிசுட்டது, பொய்த்தேர்வு போன்ற நாவல்களில் பணம், பதவி, புகழ், இன்பம் இவற்றில் குறிக்கோளாக உடையவர்களின் வாழ்க்கை பொருளற்று போய்விடும் என்றும், ஆர். சண்முகசுந்தரத்தின் நாகம்மாள் என்னும் நாவல் கள்ளம் கபடுமில்லாத பெண்ணின் வாழ்வில் குடும்ப உறவுச் சிக்கலை மையமாக வைத்து எழுதியுள்ளார். மனிதர் மண், பொன், பெண்மீது அளவுக்கு அதிகமாக ஆசை வைக்கும் போது எவ்வளவு அலைக்கழிப்புக்கு ஆளாகிறார்கள் என்பதை நடேசன் என்னும் சங்கரராமின் மண்ணாசை நாவலில் காணமுடிகிறது. சுதந்திரத்தின் பயன் எளியவர் வாழ்விலும் மாற்றத்தை தரவேண்டும் என்று முருகன் ஓர் உழவன் என்ற நாவலும் தேசபக்தன், கந்தன், விடுதலை போராட்ட நாவலாகவும் கே.எஸ் வேங்கடரமணி எழுதியுள்ளார்.
பெண்ணிய புதினம்:-
பெண் உரிமையும், பொதுவுடமை சிந்தனைகளையும் குடும்பசிக்கலை மையமாக வைத்தும், ராஜம் கிருஷ்ணனின் "வேருக்கு நீர்", "குறிஞ்சித்தேன்", "அலைவாய்க் கரையில்", "சேற்றில் மனிதர்கள்" போன்ற நாவலின் வழி அறிய முடிகிறது. பெண்ணுக்கு உரிமைக்குரல் கொடுத்த புரட்சிநாவலாக விந்தனின் பாலும் பாவையும் ஆண் பெண் இருவருக்கும் கற்புக்கோட்பாட்டை வலியுறுத்தப்பட்டுள்ளது. திரிபுர சுந்தரி என்கிற லட்சுமி எழுதிய பெண் என்னும் நாவலில் இன்றைய பெண்கள் கல்வி கற்று வீட்டிலும், வெளியிலும் அடிமை மனோபாவத்துடன் வாழ்வதையும், சந்திரா என்னும் பெண் புதுமைப் பெண்ணாக வாழ முயலும் போது எதிர் கொள்ளும் போராட்டங்களையும், வைரமூக்குத்தியில் ஆணாதிக்கத்தை கொண்டவன் கணவன், அவனது குடும்பத்து உறுப்பினர்களால் துன்பம் அடைவதைச் சாடுகிறார்.
சமூக சிக்கலை மையமாக கொண்ட புதினம்:-
பொருந்தாத திருமணத்தால் தோல்வியும், துயரமும் ஏற்படும் என்பதை மு. வரதராசனார் 1950 - இல் தாம் எழுதிய அல்லி, பாவை, கரித்துண்டு, வாடாமலர், கள்ளோகாவியமோ, பெற்றமனம், மண்குடிசை, செந்தாமரை, ஆகிய புதினங்களில் விளக்கியுள்ளார். நெஞ்சில் ஒரு முள், கயமை, மண்குடிசை, அகல்விளக்கு ஆகியன பரிசு பெற்ற நாவல்களாகும்.
வரலாற்றுப் புதினம்
தில்லி, ஆக்ரா, பஞ்சாப் முதலிய இடங்களில் விடுதலைப் பெற்ற காலகட்டத்தில் நிகழ்வுகளை குறிப்பெடுத்து அலையோசையை வரலாற்று புதினமாக எழுதியுள்ளார். மேலும் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், ஆகிய வரலாறு தழுவிய புதினங்களை கல்கி எழுதியுள்ளார். கலைஞர் மு. கருணாநிதியின் உரோமபுரி பாண்டியன், தென்பாண்டிசிங்கம் குறிப்பிடத்தக்க வரலாற்று புதினமாகும்.
பட்டாளி மக்களின் அவல நிலையும், போராட்டமும்:-
நெசவாளர்களின் வாழ்க்கைப் போராட்டத்தை மையமாகக் கொண்டு, அந்நிய நாட்டு மூலதனத்தாலும், உள்நாட்டுத் துணி உற்பத்திக் கொள்கையாலும், நசிந்துபோன கைத்தொழிலாலும், பட்டாளி மக்களின் அவல வாழ்க்கை சிதம்பர ரகுநாதனின் பஞ்சும் பசியும், நாவலின் வழி அறிய முடிகிறது.
அகிலனின் கயல்விழி, பெண், சிநேகிதி, நெஞ்சின் அலைகள், வேங்கையின் மைந்தன், பாவை விளக்கு போன்ற நாவல்களை எழுதியுள்ள இவர் ஞானபீட பரிசும் பெற்றுள்ளார். இவரது படைப்புகள் சமுதாயச் சிக்கல்களை எதிர்கொள்வதும் உளவியல், சமூகவியல், நோக்கில் படைக்கப்பட்டுள்ளது. கலைஞனது வாழ்க்கை சமுதாய மேம்பாட்டுக்கு பயன்படவேண்டும் என்று உணர்த்துமாறு ஐம்பதுகளின் இறுதியில் எழுதப்பட்டன.
1970 களில் தி. ஜானகிராமனின் மோகமுள், உயிர்த்தேன், செம்பருத்தி, அமிர்தம், அம்மா வந்தாள், அன்பே ஆரமுதே, மரப்பசு, நளபாகம் போன்ற நாவல்களில் அடிமனத்து ஆழங்களையும், சமூக உறவுச் சிக்கல்களையும் கண்டறிந்து எழுதப்பட்டுள்ளது. தலைமுறை இடைவெளிகளால் முரண்பாடுகள் ஏற்படுவதை ஹப்சியா ஏசுதாசனின் புத்தம் புது வீடு, ஆனாதை, ஆர். சண்முக சுந்தரத்தின் சட்டி சுட்டது, நாகம்மா, நாஞ்சில் நாடனின் அன்பிலாதனை, ஆ. மாதவனின் மாமிசப்படைப்பு போன்றவற்றை எம்.வீ. வெங்கட்ராமனின் அரும்பு என்ற புதினத்தில் மனிதன் எண்ணங்களால் ஆக்கப்பட்டவன் என்பதையும், நித்திய கன்னி, கேள்வித்தீ ஒரு பெண் போராடுகின்றாள், இருளும் ஒளியும் போன்றவை இவரது படைப்புக்களாகும்.
ல.ச இராமாமிர்தம் எழுதிய பத்ரா, அபிதாவும் தத்துவ நோக்குடன் எழுதப்பட்ட குறிப்பிடத்தக்க புதினமாகும். நீலபத்மநாபனின் தலைமுறைகள், பள்ளி கொண்டபுரம், மின் உலகம், தேரோடும் வீதி, முதலான புதினங்கள் நனவோடைக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டவையாகும். டி. செல்வராஜ் எழுதிய மலரும் சருகும் வர்க்கப்பார்வை அணுகுமுறையையும், இந்திரா பார்த்தசாரதியின் தந்திரபூமி, மாயமான் வேட்டை, தீவுகள், வெந்து தணிந்தகாடுகள் மற்றும் தந்திரபூமியின் முதலாளித்துவ ஆளுமையையும், ச. கந்தசாமியின் சாயாவனம் என்ற நாவலில் எளிய மனிதர்களது மரபுசார்ந்த மதிப்பீடுகளையும், போராட்டங்களையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தலித்திய புதினம்:-
பொன்னீலனின் கரிசல் முதலாளித்துக் கொடுமைகளையும் ஒருங்கிணைந்த போராட்டங்களையும் அறிய முடிகிறது. ராஜம் கிருஷ்ணனின் அலைவாய்க்கரையில் மீனவத் தொழிலாளர்களது உரிமைப் போராட்டத்தை மையமாகவும், சேற்றில் மனிதர்கள் என்ற புதினம் அடித்தள கூலி விவசாய மக்களைப் பற்றியும் தொழிலாளரது வாழ்வின் துன்பதை "கரிப்புமணிகள்" புதினத்தின் வழி அறியலாம்.
ஜீ. நாகராசன் எழுதிய நாளை மற்றொருநாளே பிறரின் பலவீனத்தைப் பயன்படுத்தி பிழைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்ற மனிதனின் கதையாகும். பூமணியின் பிறகு, வெக்கை புதினங்கள் செருப்பு தைக்கும் தொழிலாளியின் வாழ்க்கை மையமாக வைத்து எழுதப்பட்டவையாகும். சிவகாமியின் பழையன கழிதலும், ஆனந்தாயி, பாமாவின் கருக்கு, சங்கதி ஆகிய நடப்பில் வாழ்வியல் உண்மைகளை சித்தரிக்கும் புதினங்கள். இமயம் எழுதிய கோவேறு கழுதைகள், ஆறுமுகம், ஆதிக்க சாதியின் கொடுமையினையும் விபச்சாரத்தில் ஈடுபடும் தாயை நேரில் பார்த்த மகனின் மனநிலை, தாயின் மனநிலையையும் சித்திரிக்கும் புதினமாக அமைகிறது.
நகர வாழ்வியல் சூழலை வாழ்க்கைப் போராட்டங்களை ஜெயகாந்தனின் ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள். சில நேரங்களில் சில மனிதர்கள், சுந்தரகாண்டம் முதலியன சமூக உளவியல் கண்ணோட்டத்தில் படைக்கப்பட்ட புதினமாகும். சு. சமுத்திரத்தின் வேரில் பழுத்த பலா கட்டிடத் தொழிலாளரின் வாழ்வையும், முட்டம் இந்து முஸ்லீம் மதக்கலவரத்தைக் கதைக் கருவாக கொண்டும், பாலைப்புறா எயிட்ஸ் நோயாளியின் வாழ்வியல் நிலையைப் பதிவு செய்தும் வெளிவந்துள்ளன.
தொகுப்புரை:-
நிகழ்காலச் சூழ்நிலை புதின எழுத்தாளர்களின் படைப்புகள் ஆரவாரம் மிக்க நகரச் சூழ்நிலைகளைப் பின்புலனாகக் கொண்டும், சமுதாயக் கொடுமைகளை சாடியும், தனிமனித உணர்வுகளை முன்னிறுத்தியும், சிர்திருத்த வாதங்களை அறிவுறுத்தியும் எழுதப்பட்டுள்ளன.
அவ்எழுத்தாளர்கள் டேவிட், சிந்தையா, வண்ணநிலவன், திலகவதி, பொன்னீலன், முகமதுமீரான், பிரபஞ்சன், ஜெயமோகன், அழகிய பெரியவன், பூமணி, பாமா, சிவகாமி, கோணங்கி, தமிழவன் ஆகியோர் வேதநாயகம் பிள்ளையில் தொடங்கி இன்று வரை காலத்தால் அழியாத சிறந்த தமிழ்ப் புதினங்களை தமிழ் இலக்கிய உலகிற்கு கொணர்ந்துள்ளனர்.

No comments:

Post a Comment