Saturday, November 6, 2010

விருந்தோம்பலின் சிறப்பு

விருந்தோம்பலின் சிறப்பு

Speciality of hospitality - Tamil Literature Ilakkiyam Papers தமிழ் மக்களின் பண்டைக்கால பழக்க வழக்கங்களில் விருந்தோம்பல் ஒன்று.
கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு
முன்தோன்றிய மூத்தகுடி (புறப் 35)
தமிழ்க்குடி என்று அனைவராலும் போற்றப்படும் தமிழ் மக்களின் பண்பாட்டில் விருந்தோம்பல் சிறப்புமிக்கதாகும். ஆனால் இப்போது அதன் சிறப்பு குறைந்துகொண்டே வருகின்றது. அதனை எடுத்துக்கூறும் வகையில் இக்கட்டுரை அமைகின்றது.
விருந்தோம்பலின் சிறப்பை விளக்கும் வகையில் இலக்கண நூலான தொல்காப்பியம், சங்க இலக்கியத்தில் எட்டுத்தொகை நூல்களான நற்றிணை, புறநானுறு, பத்துப்பாட்டு நூலான சிறுபானாற்றுப்படை, நீதி நூலான திருக்குறள், காப்பிய நூலான சிலப்பதிகாரம் ஆகிய நூல்கள் இக்கட்டுரையில் இடம் பெறுகின்றன.
தொல்காப்பியம் கூறும் விருந்து
தொல்காப்பியம் புதியதாக வரும் எல்லா இலக்கியங்களையும் விருந்து என்ற பொருளில் குறிப்பிடுகின்றது.
விருந்தே தானும்
புதுவது புனைந்த யாப்பின் மேற்றே (பொருள் 1495)
இதனை அடிப்படையாகக் கொண்டே புதியதாக வருபவர்களை விருந்தினர் என்கிறோம்.
நற்றிணையில் விருந்தோம்பலின் சிறப்பு:-
தம் இல்லத்திற்கு விருந்தினர் வரவேண்டும் என்ற எண்ணத்தையும் அவ்விருந்தினருக்கு இனிய உணவு அளிக்க வேண்டும் என்ற விருப்பத்தையும் கொண்டிருப்பர். அதனால் மீன் வேட்டைக்குச் சென்ற கணவர் விரைவில் திரும்பி வரவேண்டும் என்று எதிர்நோக்கிக் காத்திருக்கும் செய்தியும் இரவில் விருந்தினர் வந்தாலும் மனைவியும் கணவனும் சேர்ந்து மகிழ்ச்சியுடன் வரவேற்று விருந்து படைக்கும் செய்தியும் நற்றிணையில் இடம் பெற்றுள்ளன.
"............................ மனையிலிருந்து
இருங்கழி துழவும் பனித்தலைப்பரதவர்
திண்திமில் விளக்கம் எண்ணும்" (நற்:372)
"அல்லி லாயினும் விருந்துவரின் உவக்கும்
முல்லை சான்ற கற்பின் மெல்லியல்" (42, 9-18)
புறநானூற்றில் விருந்தோம்பலின் சிறப்பு:-
பெருங்குன்றூர்கிழார் இளஞ்சேட் சென்னியிடம் பரிசில் பெறச் சென்ற பொழுது எனக்கு எந்தக் குறையும் இல்லை என்றாலும் விருந்தினர் வந்தால் அவர்களை உபசரிப்பதற்குத் தேவையான செல்வம் இல்லாத வறுமைநிலை மட்டும் என்னிடம் இருக்கின்றது. அதனை மட்டும் தீர்த்து வைப்பாயாக என்று கூறுவதன் மூலம் விருந்தோம்பலின் சிறப்பு வலியுறுத்தப்படுகின்றது.
விருந்துகண் டொளிக்குந் திருந்தா வாழ்க்கைப்
பொறிப்புன ருடம்பிற் றோன்றியென்
அறிவுகெட நின்ற நல் கூர்மையே (புற:266)
என்ற பாடல் வரிகள் விருந்தோம்பலின் முக்கியத்துவத்தைக் கூறுகின்றது.
இதைப் போன்று 213, 254, 265, 279, 306, 316, 369 ஆகிய பாடல்களிலும் விருந்தோம்பல் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன.
சிறுபாணாற்றுப் படையில் விருந்தோம்பலின் சிறப்பு:-
சிறுபாணாற்றுப்படை அரசர்களின் கொடைச் சிறப்பைக் கூறுவதுடன் விருந்தோம்பல் பற்றிய செய்திகளையும் கூறுகின்றது.
எயில்பட்டின பரதவப் பெண்கள் சூடான குழல் மீன் கறியையும், வேலூரில் இருக்கும் எயினர் குலப்பெண்கள் இனிய புளிக்கறி சேர்த்து சமைத்த சோற்றுடன் காட்டுப்பசு இறைச்சியையும், ஆழுரைச் சார்ந்த உழவர்களின் தங்கைகள், குற்றிச் சமைத்த சோற்றுக் கட்டியுடன் பிளந்த காலுடைய நண்டுக்கறியையும் விருந்தோம்பலுக்குப் பயன்படுத்துவர் என்று சிறுபாணாற்றுப்படை கூறுகின்றது.
எயிற்றியர் அட்ட இன்புளி வெஞ்சோறு
தேமா மேனிச் சில்வளை ஆயமொடு
ஆமான் நாட்டின் அமைவரப் பெறுகுவீர் (சிறு 175 - 177)
சுவைப்பு மான் அரிசி அமலை வெண்சோறு
சுவைத்தாள் அலவன் கலவையொடு பெறுகுவீர் (சிறு 194-195)
விருந்தோம்பலின் முக்கியத்துவத்தைக் கூறுவதுடன் ஒவ்வொரு ஊரிலும் என்ன வகையான உணவுகள் விருந்துக்குப் பயன்படுத்தப்பட்டன என்பதையும் சிறுபாணாற்றுப்படை சுட்டிக் காட்டுகின்றது.
திருக்குறள் கூறும் விருந்தோம்பலின் சிறப்பு:-
திருவள்ளுவர் விருந்தோம்பலுக்கு என்று தனி அதிகாரம் (விருந்தோம்பல் 9) படைத்து அதில் உள்ள பத்து குறள்களில் விருந்தோம்பலின் முக்கியத்துவத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
அவையாவன:
1. மனைவியுடன் வீட்டில் இருந்து பொருள்களைப் பாதுகாத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவி செய்யும் தன்மையுடையதாகும்.
2. விருந்தாக வந்தவர் வீட்டின் வெளியே இருக்கத் தான் மட்டும் உண்பது, சாவா மருந்தாகிய அமிழ்தமே என்றாலும் அது விரும்பத்தக்கது அன்று.
3. நாள்தோறும் தன்னை நாடிவரும் விருந்தினரைப் போற்றுகின்றவனுடைய வாழ்க்கை துன்பத்தால் வருந்திக்கெடுதல் என்பது என்றுமே இல்லாத ஒன்றாகும்.
4. முகமலர்ச்சியுடன் நல்ல விருந்தினரைப் போற்றுகின்றவனுடைய வீட்டில் திருமகள் மனம் மகிழ்ந்து வாழ்வாள்.
5. விருந்தினரைப் போற்றி உணவிட்டபின் எஞ்சியதைத் தான் உண்ணுகின்றவனுடைய நிலத்தில் விதைக்காமலேயே பயன் விளையும்.
6. வந்த விருந்தினரைப் போற்றி இனிவரும் விருந்தினரை எதிர்பார்க்கின்றவன் வானுலகத்தில் உள்ள தேவர்க்கும் நல்ல விருந்தினனாவான்.
7. விருந்தோம்பலாகிய வேள்வியின் பயன் இன்ன அளவிலானது என்று கூற முடியாது. விருந்தினரின் தகுதிக்கு ஏற்ற தன்மை உடையதாக அமையும்.
8. விருந்தினரை மதித்து உபசரிக்கும் வேள்வியில் ஈடுபடாதவர் பின்னர் பொருளை வருந்திக் காத்துப் பயனை அடையாமல் போனோமே என்று வருந்தும் நிலையை அடைவர்.
9. செல்வச் செழிப்புடன் இருக்கும் காலத்தில் வறுமை என்பது விருந்தோம்பலைப் போற்றாத அறியாமையாகும் அது. அறிவில்லாதவர்களிடம் மட்டுமே காணப்படும்.
10. அனிச்சமலர் முகர்ந்தவுடன் வாடிவிடும் விருந்தினரோ விருந்தளிப்பவரின் முகம் மலராமல் வேறுபட்டுத் தோன்றிய உடனேயே வாடிவிடுவர்.
"இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு" (81)
"மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து" (90)
சிலப்பதிகாரத்தில் விருந்தோம்பலின் சிறப்பு:-
இளங்கோவடிகள் மனையறும் படுத்த காதையில் "விருந்து புறந்தரூஉம் பெருந்தண் வாழ்க்கையைக்" கூறும்போது கண்ணகியின் விருந்தோம்பும் திறனைக் குறைக்கவில்லை. கொலைக்களக்காதையில்,
"அறவோர்க்கு அளித்தலும் அந்தணர் ஓம்பலும்
துறவோர்க்கு எதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும்..."
என்ற பாடல்வரிகள் அறநெறிச் செல்வோர்க்கு உணவு, உடை, அளிப்பதும் மேலோர்களைப் பேணிப் பாதுகாப்பதும் தவ வாழ்வு மேற்கொண்டு ஒழுகுபவர்களை வரவேற்று உபசரிப்பதும் மிகச் சிறப்புடையதான விருந்தினர்களுக்கு உணவளித்துக் காப்பதும் போன்ற விருந்தோம்பல் முறைகளைக் கோவலன் பிரிவினால் கண்ணகி செய்யாதிருந்தாள் என்பதையும் சுட்டிக் காட்டுகின்றன.
விருந்தோம்பலின் சிறப்பு:-
புதியதாக வருகின்ற விருந்தினரை வரவேண்டாம் என்று கூறுவது தமிழர் பண்பாடு இல்லை. அதுபோன்று உண்ணும்நேரம் பார்த்து வந்த விருந்தினரை ஒழிந்து போகுக என்று கூறுவதும் குற்றமாகும். விருந்தோம்பலின் மூலம் குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் உண்டாகும்.
தொகுப்புரை:-
தொல்காப்பியம் "விருந்து" என்பதை புதியது என்ற பொருளில் குறிப்பிடுகின்றது.
விருந்தினரை எதிர்நோக்கும் பண்பும், இரவில் விருந்தோம்பும் முறையும் நற்றிணையில் கூறப்பட்டுள்ளன. வறுமையிலும் விருந்தோம்ப வேண்டும் என்ற செய்தி புறநானூற்றில் இடம் பெற்றுள்ளது.
விருந்தோம்பலுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒவ்வொரு ஊரிலும் வெவ்வேறு வகையான உணவைப் படைக்கும் செய்தி சிறுபாணாற்றுப்படையில் இடம் பெற்றுள்ளது.
திருக்குறள் விருந்தோம்பலுக்கு உவமையாக அனிச்சமலரைக் குறிப்பிடுகின்றது.
சிலப்பதிகாரம், கணவனைப் பிரிந்த நிலையில் விருந்தோம்பல் பெறாது என்கின்றது.
விருந்தோம்பல் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது. சிறப்பு மிக்கது என்பதை நூல்களின் மூலம் அறிய முடிகின்றது. ஆனால் இன்றைய காலத்தில் விருந்தோம்பும் பண்பு குறைந்து கொண்டே வருகின்றது. இந்த நிலை மாறவேண்டும் என்பதை உணர்த்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

No comments:

Post a Comment