Saturday, November 6, 2010

தாலாட்டு

தாலாட்டு

Lullaby - Tamil Literature Ilakkiyam Papers ஏட்டு இலக்கியங்களுக்கெல்லாம் தாய்மை இலக்கியமாகத் திகழ்வது வாய்மொழி இலக்கியம் இதனை "எழுதாக் கிளவி" என்பர். நாட்டுப்புறப் பாடல்கள் எளிமையானவை, இனிமையானவை. வாயில், பிறந்து செவிகளில் உலவி, காற்றில் மிதந்து கருத்தில் இனிப்பவை. இது நாட்டுப்புற மக்களின் சொத்து. இந்த இலக்கியம் என்று பிறந்தது எவரால் பிறந்தது என எடுத்துச் சொல்ல இயலாத பண்பும் பாங்கும் கொண்டவை.
"ஏட்டிலே எழுதவில்லை
எழுதிநான் படிக்கவில்லை
வாயிலே வந்தபடி
வகையுடனே நான் படிப்பேன்"
என்ற வரிகள் இதனை மெய்ப்பிக்கும். நாட்டுப்புறப் பாடல்கள் பல வகைகளில் இருந்தாலும் தாலாட்டுக்கென்று தனிச் சிறப்பு உண்டு. தாயன்பின் வெளிப்பாடாகத் திகழும் தாலாட்டுப்பற்றி இவண் காண்போம்.
சொல் விளக்கம்:-
தாலாட்டு என்ற இப்பெயர் காரணம் பற்றி அமைந்ததாகும் "தால்" என்றால் நாக்கு "ஆட்டுதல்" என்பது அசைத்தல், நாவினை அசைத்து, சுழித்து, குரவையிட்டு, ஆட்டிப் பாடுவதால் தால்+ஆட்டு=தாலாட்டு எனப் பெயர் பெற்றது. அதனைத் தொடர்ந்து இசைக்கும் பாடலையும் தாலாட்டு என்கிறோம்.
இதனை தாலாட்டு, ஓராட்டு எனத் தாய்மார்கள் வழங்கினாலும் இத் தாலாட்டுப் பாடல்களைத் தலைமையாகக் கொண்டு எழுந்த இடைக்கால இலக்கியங்கள் "தாராட்டு" என்றும் பிள்ளைத்தமிழ் நூல்கள் "தாலேலோ" என்றும் குறிப்பிடுகின்றன.
தாலாட்டின் அளவும், பண்ணும்:-
தாயின் அன்பு வெளிப்பாடே தாலாட்டு. அவர்கள் தங்கள் மனத்தின் பாரங்களான மகிழ்ச்சி, துக்கம் இவைகளை வெளிப்படுத்த தாலாட்டு அவர்களுக்கு ஒரு ஊடகமாகப் பயன்படுகிறது. தாலாட்டுப் பாடல்கள் குறிப்பிட்ட கடவுளையோ, உறவினரையோ, பாடவேண்டும் என்ற வரையறை இல்லை. தாயின் மன இயல்புக்கு ஏற்றவாறும், குழந்தையின் உறக்கத்திற்கு ஏற்றவாறும் தாலாட்டின் அளவும், ஓசையும் கூடுதலும் குறைதலும் உண்டு.
தாலாட்டின் பண் "நீலாம்பரி" என்று கூறுவார்கள். தாலாட்டுப் பாடும் பெண்கள், ஒரே பண்ணிலே பாடுவது இல்லை ஒவ்வொருவருடைய பேச்சு ஒலிக்கு ஏற்பவும் மாறுபாடு அடைவதுண்டு. இவ்வாறே பல்வேறு விதமாகத் தாலாட்டின் அளவும் பண்ணும் அமைந்துள்ளன.
குழந்தைப் பேறு:-
ஒரு பெண் முழுமையடைவது தாய்மை அடைந்தபிறகுதான் என்பர். அத்தகைய சிறப்பிற்குத் தன்னை ஆளாக்கிய குழந்தையின்மீது தாய் அளவுகடந்த அன்பு பாராட்டுகிறாள். அதனால் ஒரு குழந்தையின் சிறப்பு என்ன என்று சொல்ல நினைத்த வள்ளுவன்
"குழலினிது யாழினிது என்ப தம்மக்கள்
மழலைச் சொல் கேளாதவர்"
என்ற ஒரு குழந்தையின் மழலைப் பேச்சு என்பது இனிமையாக ஒலிக்கக் கூடிய குழலும், யாழும் கூட ஒரு குழந்தையின் மழலையின் இனிமைக்கு ஈடாகா என உரைக்கிறார். குழந்தைப் பேற்றுக்காக எவ்வாறெல்லாம் கடவுளை வேண்டுகிறாள் என்பதை
"அரசே உனை வேண்டி
ஆடாத தீர்த்த மில்லை
பொருளே உனை வேண்டி
போகாத கோயிலில்லை"
எனத் தொடங்கி ஆடிய தீர்த்தங்களையும் பாடல் வரிகளாக உரைக்கும் விதத்தில் குழந்தைப் பேற்றின் அவசியத்தையும் தான் தாலாட்டுகின்ற அந்தக் குழந்தைப் பேற்றிற்காக அவள் பட்ட துன்பங்களைத் தாலாட்டின் வாயிலாகவே உரைக்கிறாள்.
தாலாட்டில் ஏழ்மை:-
எல்லாத் தாயும் தன் குழந்தையை எவ்வாறெல்லாம் சிறப்போடு வளர்க்க வேண்டும் என்று எண்ணுகிறாள். ஆனால் அவளின் ஏழ்மை நிலை அவளின் ஆசையைக் செயலாற்ற முடியாத நிலை ஏற்படும். தன் குழந்தையை ராஜ குமாரனாகவே கற்பனை செய்யும் தாயின் உள்ளம் சில வேளைகளில் ஏழ்மையின் தாக்குதலால் அதனைத் தாலாட்டின் போது வெளிப்படுத்துதலும் உண்டு.
"முத்துச் சிரிப்பழகா
முல்லைப்பூ பல்லழகா
வெத்துக் குடிசையிலே
விளையாட வந்தாயோ?
ஏழைக் குடிசையிலே
ஈரத் தரைமேலே
தாழம்பாய் போட்டுத்
தவழ்ந்தாட வந்தாயோ
தரையெல்லாம் மேடுபள்ளம்
தவழ்ந்தால் உறுத்தாதோ
பச்சரிசி சோளம்
பாதிநாள் பட்டினிதான்
பசும்பால் கொடுத்துந்தன்
பசி தீர்க்கப் பார்த்தாலும்
பருத்திவிதை இல்லையடா
பசு பாலை தரலையடா
பிள்ளைப்பால் ஊட்டியுனைப்
போசனைகள் செய்திடவே
கொள்ளையுத்தம் பஞ்சங்
குரங்காகிப் போனேண்டா"
என தன் ஏழ்மையின் தாக்கத்தைத் தாலாட்டில் வெளிப்படுத்துகிறாள். உள்ளத்துத் துன்பம் தாங்கவியலாத நிலையில் அதனை எடுத்துப் புறத்தே சொல்லுவது ஆறுதல் பெறும் வழியாகும் என்ற மனவியலே இதற்கடிப்படையாகும்.
தாலாட்டில் கற்பனை:-
குழந்தையைத் தாலாட்டும்போது பல்வேறு வகையாகக் கற்பனை செய்து தாலாட்டுவது இயல்பு அவ்வகையில் இயைபுக் கற்பனையும், மிகைக்கற்பனையும் உண்டு. மனம் உணரும் உணர்ச்சியில் மிகை தோன்றி வளரும், கற்பனையை மிகைக் கற்பனை என்பர். குழந்தை அழும் கண்ணீர் ஆறாகப் பெருகி அதில் முந்நூறுபேர் குளித்தனர். ஐநூறு பேர் கைகழுவினர். அதன்பிறகு அது குளத்தை நிறைத்து, வாய்க்கால் வழியோடி, வழிப்போக்கர் வருத்தம் தீர்த்தது, இஞ்சி, இருவாட்சி, மஞ்சள், மருதாணி, தாழைகட்குப் பாய்ந்து வாழைக் கொல்லையில் வற்றுவதாக அந்தக் கற்பனை அமைந்திருக்கும்.
தாலாட்டில் உறவினர்:-
பெண் திருமணமாகி கணவன் வீடு சென்றாலும் தன் தாய்வீட்டின் பற்று சிறிது அதிகமாகவே இருக்கும். இதன் காரணமாகக் குழந்தையைத் தாலாட்டும் போது தன் பிறந்தவர்களின் பெருமையை உரைக்கும் விதத்தில் நாட்டுப்புற இலக்கியத்தில் பல்வேறு வகையான பாடல்கள் வழங்கி வருகின்றன.
"வெள்ளியால் செய்த ஏட்டில்
வைர எழுத்தாணி கொண்டெழுத
பள்ளியில் சேர்க்க மாமன்
பணிவுடன் வந்திடுவான்"
என்ற பாடலில் ஒரு குழந்தைக்குக் கல்வியின் முக்கியத்துவம் உணர்த்தப்பட்டு, மாமனின் உதவி உரைக்கப்படுகிறது.
குழந்தையை உறங்க வைக்க மட்டும் தாலாட்டு என்ற இந்த நாட்டுப்புற இலக்கியவகை உதவாமல் அக்குழந்தைக்கு முதலில் இசையின் பெருமையை உணர்த்தியும் வளரும் பருவத்தே எவ்வாறெல்லாம் இருக்க வேண்டும் என்பதைச் சொல்லும் விதத்திலும், கல்வியின் சிறப்பை உணர்த்தும் பாடல்களும், உறவின் பெருமைகளைச் சொல்லும் பாடல்களும் சமுதாயச் சிர்கேடுகள் சொல்லும் பாடல்களும் எனப் பல்வேறு பொருள்களில் இந்தத் தாலாட்டு எனும் இலக்கியம் நாட்டுப்புற இலக்கியத்தில் தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பெற்றிருக்கிறது.

No comments:

Post a Comment