Saturday, November 6, 2010

திசை திரும்பும் கோபம்

திசை திரும்பும் கோபம்

அயல்மாநில நகரொன்றில் சமீபத்தில் தங்கியிருந்தபோது சுவர்களெங்கும் எழுதப்பட்டிருந்த வாசகமொன்றைக் கவனிக்க நேர்ந்தது. அந்த மாநிலத்தின் மொழியை உயர்வாகவும் ஆங்கிலத்தை எச்சிலுக்கு நிகரானதாகவும் உருவகித்து எழுதப்பட்டிருந்தது அந்த வாசகம். அந்த நகரில் திரும்பிய இடங்களிலெல்லாம் அதே வகையிலான வசைவாசகங்கள் மீண்டும் மீண்டும் பார்வையில் பட்டவண்ணம் இருந்தன.
அவ்வாசகங்களை எழுதியவர்களின் ஆதங்கத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது. நாளுக்குநாள் பெருகிவரும் ஆங்கிலக்கல்வியின் ஆர்வத்தால் உயிரினும் மேலான தாய்மொழியைப் படிக்கவோ பயன்படுத்தவோ ஆளற்றுப்போய் பாழடைந்த கிணறாக தம் மொழி புறக்கணிக்கப்பட்டுவிடுமோ என்று பதைபதைப்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அந்த வேகத்தில் இன்னொரு மொழியை இழிவுபடுத்திப் பேசுவதைத்தான் புரிந்துகொள்ள முடியவில்லை. ஒன்றை அவமானப்படுத்துவதன் மூலம் மற்றொன்றின் மேன்மையை உணர்த்திவிட முடியும் என்று நம்புவது பேதமை அல்லவா?
இந்தியாவின் எல்லா மாநிலங்ளிலும் கணிசமான குழந்தைகள் தாய்மொழியில் கல்வி கற்பதில்லை என்பதுதான் இன்றைய நிதர்சன உண்மை. எல்லாருடைய தாய்மொழிகளுமே அந்தந்த மொழிக்காரர்களாலேயே புறக்கணிக்கப்படுகின்றன. எல்லாப் பெற்றோர் களுமே தம் பிள்ளைகள் ஆங்கிலக் கல்வியையே அடையவேண்டும் என்பதில் தீர்மானமாக இருக்கிறார்கள். கால்நூற்றாண்டுக் காலத்துக்குள்தான் இந்த அணுகுமுறை மாறியிருக்கிறது. இந்த மாற்றத்துக்கான காரணம் என்ன என்று ஆய்ந்தால்தான் ஓரளவாவது பிரச்சினையின் ஆழம் புரியும். மாறாக ஆங்கிலத்தின் மீது வெறுப்பைக்காட்டுவது திசை திருப்பும் முயற்சியாகவே அமையும்.
கல்வியால் மனம் பண்படும் என்கின்ற நம்பிக்கையும் கல்வி என்பது அறிவுத் தேட்டத்துக்கு வழிநடத்திச்செல்லும் ஒளி விளக்கு என்கிற நம்பிக்கையும் வெறும் வாசக அளவிலேயே தேங்கியிருக்க, நம் நெஞ்சம் கல்விக்கும் வேலைக்கும் பொருளாதார வலிமைக்கும் சுருக்கமான சமன்பாடொன்றை உருவாக்கி ஆழமாகப் பதிய வைத்துக் கொண்டதை யாராலும் தடுக்க இயலாமல் போய்விட்டது. வேலையில்லாத் திண்டாட்டத்தின் விகித அளவு உயர்ந்த வண்ணமிருப்பதைத் தடுப்பதில் எந்த அரசும் நேரிடை நடவடிக்கைகளில் இறங்கவில்லை. மாறாக, வேலைகளைத் தரவேண்டிய அரசுத்துறை களின் கதவுகளை ஒவ்வொன்றாக மூடிக்கொண்டே வருவதையும் பார்த்து வருகிறோம். எஞ்சியிருக்கும் தனியார் துறையினரின் வேலைகளை ஆங்கிலப்புலமை வழியாக வெற்றிபெற்று ஈட்டிவிடலாம் என உருவாகியிருக்கிற நம்பிக்கைகளைத் தடுக்க முடியவில்லை. ஆங்கிலக்கல்வி என்கிற துருப்புச்சிட்டுடன் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளின் கதவுகளைத் தட்டிப்பார்த்து நுழைந்துவிட்டால் ஆயுள் முழுக்கப் பிழைத்துக் கொள்ளலாம் என்று பதிந்துவிட்ட நம்பிக்கைகளையும் மாற்ற இயலவில்லை. இப்படி, இந்தக் கால்நூற்றாண்டில் நம்மால் செய்ய இயலாமல் போன விஷயங்கள் ஏராளம். இவற்றின் பக்கவிளைவுகளில் ஒன்றுதான் ஆங்கிலமொழிக்கல்வி மீதான நாட்டம் என்று தோன்றுகிறறு.
விதிவிலக்கான ஒருசிலரைத் தவிர பெரும்பாலான உயர்தட்டுக்காரர்கள் எப்போதுமே தம் நாட்டின் மீதான பாசத்தை உணர்ந்ததுமில்லை, காட்டிக்கொண்டதுமில்லை. நாடு என்பதைத் தம் வணிகத்தை நிலைநிறுத்தும் களமாகவும் செல்வத்தையும் தொழிலறிவையும் முதலீடு செய்து லாபமீட்டத் தோதாக உருவாக்கிவைக்கப்பட்ட ஒரு சந்தையாகவும் மட்டுமே பார்ப்பவர்கள் அவர்கள். மொழி ஆர்வத்தையும் நாட்டுப்பற்றையும் புலப்படுத்தி வந்தவர்கள் நடுத்தட்டு மக்களும் அடித்தட்டு மக்களும் மட்டுமே என்பது மிகையான கூற்றாகாது. இவர்கள் ஆர்வம் திசைமாறத் தொடங்கிய ஆரம்பக்கட்டத்தில் அதை யாரும் அவ்வளவாகப் பொருட்படுத்தவில்லை. ஆனால் பொருளாதார வெற்றி களும் வசதிகளும் அவர்கள் வாழ்வில் பெருகியதை நேருக்கு நேராகக் கண்ட மற்றவர்கள், அந்த நிலைக்குத் தாமும் உயரவும் அதைச்தாண்டிச் செல்லவும் தாம் துறக்கவேண்டிய முதல் விஷயம் மொழி ஆர்வத்தைத்தான் என்கிற முடிவுக்கு வந்தபோது யாராலும் தடுக்க இயலவில்லை. அவர்கள் மனங்களில் மாற்று ஆர்வங்களும் மாற்று மதிப்பீடுகளும் வேகவேகமாகத் தோன்றி நிலைத்துவிட்டன. ஆங்கிலக்கல்வியும் அவற்றில் ஒன்றாகும்.
குழந்தைகளும் பெற்றோர்களும் ஒன்றாகக் காணப்படுகிற பூங்காக்களிலும் கடற்ரையிலும் உணவகங்களிலும் பத்துநிமிட நேரம் தொடர்ச்சியாகக் கவனித்தால் பெரும்பாலான பெற்றோர் தம் குழந்தையிடம் தாய்மொழியில் பேசுவதில்லை என்பதைக் கண்டுபிடித்துவிட முடியும். எல்லா மொழிகளிலும் இந்த நிலைமைதான். வீட்டு நாய்களிடமும் பூனைகளிடமும்கூட ஆங்கிலத்தில் மட்டுமே உரையாடுகிற அளவுக்கு ஆங்கில ஆர்வம் தலைக்கேறிவிட்டது. தெருவோரத்தில் பலூன்களை விற்பவனிடமும் வேர்க்கடலை விற்பவனிடமும் மட்டுமே பேரம்பேசி வாங்க உதவுகிற ஒரு மொழியாகத் தாய்மொழி சுருங்கிவிட்டது. சுற்றுலாவுக்கென்று இங்கே வருபவர்கள் கூட ஒருசில வாரங்களில் அந்தந்தப் பிரதேசத்தில் புழங்கும் மொழியின் வார்த்தைகளைக் கற்றுக்கொண்டு தட்டுத்தடுமாறியாவது ஆட்டோக்காரர்களிடமும் கூலிக்காரர்களிடமும் பேச முனைகிறார்கள். ஆனால் இங்கேயே பிறந்து இங்கேயே வளர்ந்தவர்களிடம் அந்தச் சிறுமுனைப்பு கூட இல்லாதது வேதனையாக இருக்கிறது.
கொழுகொழுவென்று கறிக்கோழிகளை வளர்த்துச் சந்தைக்கு விற்பனைக்காக அனுப்புகிற பண்ணைகளைப்போல குடும்பம் என்பது ஏதோ ஒரு நாட்டில் எங்கோ ஒரு தொழில் செய்து பணம் சம்பாதிக்க ஆங்கிலக்கல்வி புகட்டிப் பிள்ளைகளைத் தயார்செய்து அனுப்புகிற நிறுவனமல்ல என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். கல்வி என்பது புரிதலை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும் ஒளிவிளக்கு. பரஸ்பர மனிதர்களிடையேயான புரிதலிலிருந்து இந்தப் பிரபஞ்சப் புரிதல் வரை பலவித புரிதல்களை இது உள்ளடக்கியது. இந்த ஒளியின் துணையோடு புரியாமைப் புதிர்களை நோக்கி நடக்கிறவர்களில் சிலர்தாம் தம் இடையறாத விழைவின் விளைவாகப் படைப்பாளிகளாகவும் விஞ்ஞானிகளாகவும் கலைஞர்களாகவும் சிந்தனையாளர்களாகவும் ஆன்மிகவாதிகளாகவும் மலர்கிறார்கள். இத்தகு பயணமே இல்லையென்றால் இவர்களில் யாருமே உருவாகப் போவதில்லை. எல்லாருமே யாரோ ஒருவரின் உணவுக்காக வளர்க்கப்பட்ட கறிக்கோழிகளாகவே எஞ்சுவார்கள்.
அபாயக் குறிப்புகளை எடுத்துச்செல்ல வேண்டியது அறிந்தவர்களின் கடமை. ஆபத்துகளை உணராமல் லாபங்களை மட்டுமே கணக்கிலெடுத்துக் கொள்பவர்களிடம் இடித்துரைப்பதிலும் தவறில்லை. அரசுகளின் உதாசினத்தையும் அரசியல்வாதிகளின் திசைதிருப்பும் தந்திரங்களையும் சுட்டிக்காட்டிக் குறைகூறுவதிலும் தவறில்லை. தம் நம்பிக்கைகளைத் தம் குடும்பங்களில் நடைமுறைப்படுத்தி எதார்த்த சாட்சிகளை உருவாக்குவதிலும் தவறில்லை. இதற்கு மாறாக, மற்றொரு மொழியைக் கற்பனை எதிரியாகப் பாவித்து வசைவாசகங்களை உருவாக்கிப் பரப்புவதில் எவ்விதமான பொருளுமில்லை, ஆதாயமுமில்லை.

No comments:

Post a Comment