Saturday, November 6, 2010

அவனும் நானும்

அவனும் நானும்

இயற்கையின் இளமை கொஞ்சமும் குறையாதது அந்தவூர். பச்சையாடை அணிந்த மரஞ்செடி, கொடிகளை, மனிதர்களை, விலங்குகளை நலம் விசாரிக்க அடிக்கடி அந்த ஊருகூகுள் புதுவிருந்தாளியாய்த் தென்றல் போய் வருவதுண்டு.
பறிப்பதற்கு ஆளின்றி பழுத்துக் குலுங்கும் பழங்களை உடைய மரங்கள் நிறைந்த ஆற்றங்கரைகளின் அழகை, கோடிக்கண்கள் கொண்டு பார்த்தாலும் கொஞ்சந்தான் தெரியும். இல்லை என்று சொல்லாத வண்ணம் எல்லா வளமும் பெற்ற அவ்வூர் மக்களைக் காண்பதற்கு பொறாமைப்பட்டு நிலாக்கூட மாதமொரு நாள் வெளிச்சம் தர மறுத்துவிடும். அந்த ஊரில் ஒரு காதலன், காதலி!
உண்ணும் போதும், உறங்கும் போதும் அவனையே நினைக்கிறாள் அவள். அவனோ காக்கை குருவியிடம் கூட தன் காதலியின் நலம் பற்றி வினவுகிறான். இப்படியே பொழுதுகள் ஒவ்வொன்றும் புதைந்து போக, அவர்களது காதல் விருட்சமாக வளர்கிறது. ஆரம்பத்தில் காற்றுக்கும் கூடத் தெரியாமல் இருந்த இவர்களின் காதலை இன்று ஊரெல்லாம் உரக்கப் பேசுகிறது. அந்தச் செய்தி இருவரின் பெற்றோர்களையும் இடியெனத் தாக்குகிறது. காதலுக்கு பலமான எதிர்ப்பு கிளம்புகிறது. இருவரையும் பிரித்து விடுவார்களோ என்ற பயத்தில் காதலனும், காதலியும் ஊரைவிட்டு ஓடுகிறார்கள்.
அவர்கள் ஊரைவிட்டு நடந்து செல்கின்ற காடு கொசுக்கள் கூட சுதந்திரமாய் பறக்க முடியாத அளவுக்கு அடர்த்தி கொண்டது. சிறு வண்டுகள் முதல் பெரிய யானைகள் வரை அந்தக் காட்டில் தனி ஆட்சியை நடத்தின.
இருவரும் கைகோர்த்த படியே நடந்து செல்கிறார்கள். ஒற்றையடிப் பாதை வரும்போதெல்லாம் அவன் முன்னே செல்ல, இவள் பின்னால் செல்கிறாள். ஏதோ ஒரு சூழலில் தீடீரென காதலன் கீழே விழுகிறான். துடிதுடிக்கிறான். இறந்து விடுகிறான். காதலியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தலையில் அடிக்கிறாள். நெஞ்சில் அடிக்கிறாள். அருகிலிருந்த மரத்தில் மாறி மாறி முட்டுகிறாள். யாரை நம்பி வந்தாளோ, அவனைப் பறிகொடுத்த சோகத்தில் பதபதைக்கிறாள் கீழே விழுந்து புரண்டழுது புலம்புகிறாள். நடுக்காட்டுக்குள் நாதியற்றவளாய் நிற்பதைப் பார்த்து காற்று கூட உறைந்து போய் கண்ணீர் வடிக்கிறது. மரஞ்செடி, கொடிகள் மௌன அஞ்சலி செலுத்துகின்றன.
அவளோ, "சத்தமிட்டு அழுதால், அது கேட்டு புலி வந்து இறந்த காதலனின் உடலை ஏதாவது செய்துவிடுமோ என்று அஞ்சுகிறாள். இவ்விடத்தில் இருந்து அவனது உடம்பை எடுத்துச் செல்வோமென்றால், அவனது நெஞ்சு அகலமானதாக இருக்கிறது. தன்னுடைய இடுப்பு மிகவும் சிறியதாக இருப்பதால் தூக்க முடியுமா? என்று சந்தேகப் படுகிறாள். அவன் இறந்தது இவளுக்கு எப்படி நடுக்கத்தை ஏற்படுத்தியதோ, அதே நடுக்கம் எமனுக்கும் ஏற்படட்டும் என்று சாபமிடுகிறாள். அதிக துக்கத்தில் நினைவை இழந்தவளாக அந்த மலையின் பக்கத்தில் போவோம். வளையல் நிறைந்த என் முன்கையைப் பற்றிக் கொண்டு மெல்ல நடப்பாயாக" என்று காதலனிடம் பேசுவதாக புறநானூறில் ஒரு பாடல் உள்ளது. அப்பாடல் இதோ....
ஐயோ எனின்யான் புலியஞ் சுவலே
அணைத்தனன் கொளினே அகன்மார்பு எடுக்க வல்லேன்
என்போல் பெருவிதிர்ப்பு உறுக நின்னை
இன்னா துற்ற வறனில் கூற்றே
நிரைவளை முன்கை பற்றி
வரைநிழற் சேர்க நடத்திசிற் சிறிதே (புறம் 255)
இப்பாடலின் பொருளே கதையாக கற்பனை கலந்து விளக்கப்பட்டு இருக்கிறது. தமிழ் இலக்கியம் எத்தனை கற்பனை வளம் உடையது என்பதையும், எத்தனை சுவை நயம் உடையது என்பதையும் அறிய இப்பாடலும் நல்ல சான்றாகும். கதை போன்ற வடிவில் புறநானூற்றுப் பாடலின் விளக்கத்தை இக்கட்டுரையில் கண்டோம்!

No comments:

Post a Comment