Thursday, November 11, 2010

அலற வைக்கும் அலர்ஜி!

அலற வைக்கும் அலர்ஜி!

டாக்டர் முருகுசுந்தரம்Tips to avoid Allergy - Food Habits and Nutrition Guide in Tamil
சருமம் முழுக்க கொப்புளங்கள்... அரிப்பு...தடிப்பு என்று நம்மை ரொம்பவே பயமுறுத்திவிடும் பிரச்சினை அலர்ஜி. அதை கவனிக்காமல் விட்டால், சில சமயம் ஆபத்தான கட்டத்துக்கும் கூட அழைத்துச் சென்று விடும். அலர்ஜி ஏற்படக் காரணம் என்ன? எந்தப் பொருட்களால் அல்லது சூழலால் நமக்கு அலர்ஜி ஏற்படுகிறது என்ற குழப்பங்கள் எல்லோர் மனதிலும் இருக்கின்றன. அந்த அலர்ஜி குறித்து ஒரு விரிவான அலசல்.
"அலர்ஜியை இருவகைப்படுத்தலாம். ஒன்று.... நம் உடலுக்கு உள்ளேயே ஏற்படும் சில மாற்றங்களால் வரக்கூடிய அலர்ஜி. இதை எண்டோஜீனஸ் (Endogenous) அலர்ஜி என்போம். இரண்டாவது, வெளியில் உள்ள தூசு, வேதிபொருட்கள், உணவுப்பொருட்கள் போன்றவற்றை நம் உடல் ஒப்புக் கொள்ளாததால் ஏற்படும் அலர்ஜி. இதனை எக்ஸோஜீனஸ் (Exogenous) அலர்ஜி என்போம்.
முதலில் நாம் உடலுக்குள்ளே ஏற்படும் அலர்ஜியைப் பற்றிப் பார்ப்போம்.
பொதுவாக, வெளியிலிருந்து வரும் வேண்டாத பொருட்களை எதிர்ப்பதற்காக நம் ரத்தத்தில் சில தற்காப்புப் புரதங்கள் உள்ளன. அதில் ஏதாவது ஒன்று மட்டும் சிலர் உடலில் அளவுக்கதிகமாக இருக்கும். நம் உடலில் நன்றாக இயங்கிக் கொண்டிருக்கும் செல்களையே திடீரென அந்தப் புரதம் தாக்கத் தொடங்கிவிடும். இதனால் அந்த செல்கள் பாதிப்படைந்து தோல் உரிதல், அரிப்பு, எரிச்சல் போன்றவை ஏற்படும். பொதுவாக, இந்த அலர்ஜி ஏற்படுவதற்கு மரபு அல்லது ஜீன்களில் உள்ள பிரச்சினைகள் காரணமாக இருக்கலாம்.
இந்த வகை அலர்ஜிகளை சிகிச்சையின் மூலம் முற்றிலும் குணப்படுத்த இயலாது. கட்டுப்பாட்டில்தான் வைக்க முடியும். ஆனால், சிலருக்கு தானாகவே படிப்படியாக குறைந்து விடுவதற்கான வாய்ப்பும் உள்ளது.
அடுத்தது, எக்ஸோஜீனஸ் அலர்ஜி பொதுவாகவே ஒவ்வொருவருக்கும் தான் வாழும் சூழலுக்கேற்றவாறு உடல் தானாகவே பழகிவிடும். இதை சென்ஸிடைசேஷன் (Sensitisation) என்போம். ஆனால், சிலருக்கு சில விஷயங்களில் இந்த சென்ஸிடைசேஷன் இயல்பிலேயே குறைவாக இருக்கும். வெளி இடங்களில் தண்ணீர் குடித்தாலே சிலர் உடல் அதை ஒப்புக் கொள்வதில்லை. மற்ற விஷயங்களில் அவர் உடல் நார்மலாகவே இருக்கும். சிலர் உடலோ தண்ணீரை ஒப்புக்கொள்ளும். ஆனால், காற்றில் லேசாக தூசு இருந்தால் கூட அதை ஒப்புக் கொள்ளாது. இதைத்தான் நாம் அலர்ஜி என்கிறோம்.
சுவாசத்தின் வழியாக அலர்ஜி, தொடும் பொருட்களால் அலர்ஜி, உணவுப் பொருள்களால் அலர்ஜி, ஒளியால் அலர்ஜி என்று அலர்ஜியை நான்காகப் பிரிக்கலாம்.
நம் நாட்டைப் பொறுத்தவரையில் அதிகமானவர்கள் பாதிக்கப்படுவது சுவாசத்தின் வழியாக ஏற்படும் அலர்ஜியால்தான். காற்றில் உள்ள தூசு, பூஞ்சைகள் வெளியிடும் "ஸ்போர்கள்" (கண்ணுக்குத் தெரியாத பூஞ்சை விதைகள்), வாகனப் புகையில் இருந்து வெளிப்படும் கார்பன் மோனாக்சைடு மற்றும் கார்பன் துகள்கள், பெயின்ட், வார்னிஷ் போன்றவற்றில் இருந்து வெளிப்படும் வாசனை போன்றவற்றால் ஏற்படும் அலர்ஜிகள் இதில் அடங்கும்.
இதனால் தும்மல், வீஸிங், ஆஸ்துமா, சைனஸ் ஸைட்டிஸ் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. மூச்சுப்பாதை, நுரையீரல் போன்றவற்றில் அழற்சியும் ஏற்படலாம். அலர்ஜியால் ஏற்படும் இந்தப் பிரச்சினைகளுக்கு மருந்துகள் எடுத்துக் கொள்ளலாமே தவிர, அலர்ஜியை முற்றிலுமாக குணப்படுத்துவது சாத்தியம் இல்லை. ஆனால், நம் உடல் ஏற்றுக் கொள்ளாத அசுத்தச் சூழலில் இருந்து விலகியிருப்பதோ, தூசியை வடிகட்டும் மாஸ்க் போன்றவற்றைப் பயன்படுத்துவதோ அவசியம்.

No comments:

Post a Comment