Thursday, November 11, 2010

நடை - நோய்க்கு தடை!

நடை - நோய்க்கு தடை!

டாக்டர் ந.ஆறுமுகம்Walking chase diseases - Food Habits and Nutrition Guide in Tamil
"யாதும் ஊரே, யாவரும் கேளிர்!" என்ற கணியன் பூங்குன்றன் வரிகளை நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். இதற்கு அடுத்த வரி, "நன்றும் தீதும் பிறர்தரவாரா!" இதன்பொருள் "நன்மையும் தீமையும் அடுத்தவர்களால் வராது. நமக்கு நாமே காரணம்! நமது உடலுக்கு வரும் நோய்க்குக் காரணம் நாம்தான். சரிவிகித உணவுமுறை, தேவையான அளவு தண்ணீர், முறையான உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி, உண்ணாநோன்பு ஆகிய ஆரோக்கிய வழிமுறைகளைப் பின்பற்றினால் நோயின்றி நலமுடன் வாழ முடியும்.
மேற்கண்டவற்றில் உடற்பயிற்சி பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம். தற்போதைய விஞ்ஞான யுகத்தில், பரபரப்பான வாழ்க்கை முறையில் எல்லா வயதினரும் முறையான உடற்பயிற்சி செய்வது கடினம்.
இதற்கு சரியான மாற்று வழி என்ன?
நடைப்பயிற்சி ஒன்றுதான்! ஆண், பெண், சிறுவர் சிறுமியர் வயது முதிர்ந்தவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது நடைப்பயிற்சிதான்!
நடைப்பயிற்சியில் சாதாரண நடை, வேக நடை, நடை ஓட்டம், ஓட்டம் இப்படி பல வகை உண்டு. அவரவர் வயது, உடல்நிலை, சூழ்நிலை, மனநிலைக்கேற்ப நடைப்பயிற்சியில் ஈடுபடலாம்!
நடைப் பயிற்சிக்கு முன்:
* முதல்நாள் இரவு உணவை நீங்கள் தூங்கப்போவதற்கு மூன்று மணி நேரம் முன்னதாகவே உண்ண வேண்டும்.

* தூங்குவதற்கு முன்பாக பல் துலக்க வேண்டும்.
* இரவு 10 மணிக்குப் பிறகு அவசியம் தூங்கிவிட வேண்டும்.
* காலை 4 மணி முதல் 5 மணிக்குள்ளாக படுக்கையிலிருந்து எழுந்துவிடவேண்டும்.
* எழுந்தவுடன் வாய் கொப்பளித்துவிட்டு 6 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
* மலச்சிக்கல் இல்லாமல் காலைக்கடனை முடிக்க வேண்டும்.
* மலச்சிக்கல் இருப்பின் "இயற்கை எனிமா" கருவி மூலம் குடலைக் கழுவ வேண்டும்.
* நடைப்பயிற்சிக்கு முன் எதுவும் சாப்பிடக்கூடாது.
நடைப்பயிற்சி:
* போக்குவரத்து இல்லாத, சுற்றுப்புறக் காற்று மாசுபடாத நிலையில் உள்ள இடத்தில் நடக்க வேண்டும்.
* வயல் வெளிகளில் நடக்கலாம்.
* வீட்டு மொட்டை மாடி, வீட்டுத்தாழ்வாரம் ஆகிய இடங்களில் நடக்கலாம்.
* வீட்டுக்கு வெளியில் போக முடியாத சூழ்நிலையில் உள்ள பெண்கள் 10 x 10 உள்ள தாழ்வாரம், கூடம், அறையில் "8" என்ற எண்களை வரைந்து அதன் மேலேயே நடந்து பழகலாம்.
* கடற்கரை ஓரம், ஏரிக்கரை, குளக்கரை, கண்மாய்க்கரை ஆகிய இடங்களில் நடக்கலாம்.
* நடக்கும்போது தலைநிமிர்ந்து, நெஞ்சு நிமிர்த்தி, இரு கைகளையும் நன்றாக வீசி பட்டாள நடை நடக்க வேண்டும்.
* உடல் முழுதும், வியர்த்துக் கொட்டினாலும் கவலைப்படாமல் நடக்கவேண்டும்.
* தினமும் காலை குறைந்தது மூன்று கிலோ மீட்டர் தூரம் நடக்க வேண்டும். தூரத்தை விட நேரம் தான் முக்கியம்.
* மாலையில் உடலில் வெய்யில்படுமாறு நடந்தால் மிக நல்லது!
நடப்பதால் என்ன நன்மை?
* உச்சி முதல் உள்ளங்கால் வரை இரத்த ஓட்டம் ஒரே சீராக இயங்கும்.
* உடலும், மனமும் இளமையாகவும், நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.
* நரம்பு மண்டலங்கள் சுறுசுறுப்பாக இயங்கும்.
* நுரையீரல் வலுவடையும், மார்புச் சளி குணமாகும்.
* இதயம் சீராக இயங்கும். நாளமில்லாச் சுரப்பிகள் புத்துணர்ச்சியடையும்.
* குண்டான உடல் மெலியும், தொப்பை மறையும்.
* மன அழுத்தம் குறையும். மனதில் உற்சாகம் பிறக்கும்.
* ஆஸ்துமா, நீரிழிவு, இரத்த அழுத்தம் ஆகிய நோய்கள் குணமாகும்.
* கண் பார்வை தெளிவாகும். இரவில் நன்றாகத் தூக்கம் வரும்.
* முதுகு கூன் விழாமல் நிமிர்ந்து நிற்கும்.
* இடுப்பு சதைகள் மறையும். உடலில் உள்ள அசுத்தம் முழுவதும் வியர்வை மூலம் வெளியேறும்.
* உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு குறைந்து உடல் உறுதியடையும்.
* நாள் முழுவதும் எவ்வளவு உழைத்தாலும் சோர்வு இருக்காது.
* நோயின்றி நீண்ட நாட்கள் வாழமுடியும்.

* முதுகு வலி, மூட்டு வலி குணமாகும். உடலிலுள்ள திசுக்களுக்கு உயர்க்காற்று நிறைய கிடைக்கிறது.
* கால்களின் தசைகளுக்கு தாங்கும் சக்தி கிடைக்கும்.
* மன இறுக்கம் (டென்ஷன்) குறைந்து தன்னம்பிக்கை பிறக்கும்.
* சிந்திக்கும் ஆற்றல் பெருகும்.
* உடல் முழுவதும் மின்சாரம் பாய்வது போல் அற்புத உணர்வு பரவும்.
* மாலை வெய்யிலில் தினமும் நடந்தால் தோல் நோய்கள் வராது.
மற்ற எல்லா உடற்பயிற்சிகளையும் விட, நடைப்பயிற்சியே மிகவும் எளிமையானது. சிறந்தது. டாக்டர், மருந்து, மாத்திரை, காசு செலவில்லாதது நடைப்பயிற்சி. நடைப்பயிற்சி முடிந்து வியர்வை அடங்கியபிறகு சுமார் பதினைந்து நிமிடங்களுக்குப்பின், தண்ணீர், பழச்சாறு, அருகம்புல் சாறு குடிக்கலாம். நடைப்பயிற்சி முடிந்து அரைமணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் தலைக்கு ஊற்றிக் குளிக்க வேண்டும். இதனால் தலையில் உள்ள சூடு குறைந்து மறையும். தலைக்குத் தண்ணீர், ஊற்றிக் குளிக்காமல், உடம்பில் மட்டும் படுமாறு குளித்தால் உடலின் சூடு முழுவதும் தலைக்குச் சென்று ஏதேனும் நோய் வரலாம். நடைப்பயிற்சியின் போது உடலிலுள்ள 72,000 நாடி நரம்புகளுக்கும் இரத்தம் பாய்ந்து சுறுசுறுப்பு அடைகிறது.
"நடைப்பயிற்சி செய்யாதவர்களுக்கெல்லாம் மரணம் ஒவ்வொரு இரவும் படுக்கையைத் தட்டிப் போடுகிறது" என்பதை மறவாதீர்கள். "சூரிய ஒளி, தண்ணீர், காற்று, சரிவிகித உணவு, நடைப்பயிற்சி, சரியான ஓய்வு இவை ஆறும் உங்களிடம் காசு வாங்காத டாக்டர்கள்!" என்பதை நினைவில் கொள்ளுங்கள்

No comments:

Post a Comment