Sunday, November 21, 2010

ஒலிம்பிக்கில் வெல்வதுதான் என் கனவு - யுவஸ்ரீ

ஒலிம்பிக்கில் வெல்வதுதான் என் கனவு - யுவஸ்ரீ

Swimming Star Yuvashree - Successful Stories of Women in Tamil
சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள மாநகராட்சி நீச்சல்குளம். மழை தூறும் மாலை வேளையில் டால்பினாய் தண்­ருக்குள் பாய்ந்து நீந்திக் கொண்டிருக்கிறார் யுவஸ்ரீ. 'மீன்குஞ்சுக்கு நீந்தக் கற்றுத் தர வேண்டுமா?' என்பது இவருக்கு நூற்றுக்கு நூறு பொருந்தும். யுவஸ்ரீயின் தந்தை முனியாண்டி ஒரு முன்னாள் நீச்சல் வீரர், இந்நாள் பயிற்சியாளர். அதே நீச்சல்குளத்தில் மாநகராட்சி நீச்சல் பயிற்சியாளராகப் பணியாற்றி வருகிறார். உலகின் நீளமான நீச்சல்குளங்களில் ஒன்றான மெரீனா நீச்சல்குளத்தில் நீந்திவிட்டு வந்த யுவஸ்ரீயுடன் கொஞ்சம் உரையாடினோம்...
"நான் சென்னை கே.கே. நகர் ஸ்ரீ கிருஷ்ணசாமி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறேன். இரண்டு வயதாக இருக்கும்போதே அப்பாவுடன் 'லீக் கிளப்'புக்குச் செல்வேன். அங்கு அப்பாவும் பிறரும் நீச்சல் பயிற்சியில் ஈடுபடுவதை ஆர்வத்துடன் பார்ப்பேன். அப்படியே நானும் நீச்சல்குளத்தில் இறங்கிவிட்டேன். நான்கைந்து வயதில் நன்றாக நீச்சலடிக்கும் அளவில் தேறினேன்.
நான் ஒன்றாம் வகுப்புப் படித்தபோது முதன்முதலாகப் போட்டியில் பங்கேற்றேன். மாவட்ட அளவிலான அந்த 'ரேங்கிங் போட்டி', வேளச்சேரி நீச்சல்குள வளாகத்தில் நடைபெற்றது. அந்த முதல் போட்டியிலேயே 50 மீட்டர் 'ப்ரீஸ்டைல்', 50 மீ. 'பிரெஸ்ட் ஸ்ட்ரோக்', 50 மீ. 'பேக்ஸ்ட்ரோக்' ஆகிய பிரிவுகளில் தங்கப் பதக்கம் பெற்றேன். அது எனக்கு மிகவும் தன்னம்பிக்கையை அளித்தது, என் மீது எல்லோரது பார்வையும் பதிந்தது. தொடர்ந்து பெயரைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற தீவிரத்துடன் முனைப்பாக நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டேன். அதன் விளைவாக மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று வெற்றிகளை ஈட்ட ஆரம்பித்தேன்.
ஐந்தாவது படிக்கும்போது சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான நீச்சல் போட்டியில் 50 மீ. 'பிரெஸ்ட் ஸ்ட்ரோக்' போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றேன். 50 மீ. 'ப்ரீஸ்டைல்' மற்றும் 50 மீ. 'பேக்ஸ்ட்ரோக்' போட்டிகளில் நான்காவது இடம் கிடைத்தது. பத்து வயதுக்கு உட்பட்டோருக்கான அப்போட்டியில் நான் ஒன்பது வயதில் பங்கேற்றேன். அந்த வகையில் என்னைவிட வயதில் மூத்தவர்களுடன் போட்டியிட்டு அதில் குறிப்பிடத்தக்க இடத்தையும் பெற்றது மிகவும் மகிழ்ச்சி அளித்தது.
சென்னையில் 2007-ம் ஆண்டு நடைபெற்ற தென் மண்டலப் போட்டியில் 50 மீ. 'பிரெஸ்ட் ஸ்ட்ரோக்கிலும்', 40 மீ. தொடர் நீச்சல் போட்டியிலும் இரண்டாவது இடம் பெற்றேன்.
கடந்த ஆண்டு 'தமிழ்நாடு மாநில அளவிலான வயதுப் பிரிவு நீச்சல் போட்டி' மதுரை நீச்சல் சங்கம் சார்பில் நாகர்கோவிலில் உள்ள எம்.ஜி.ஆர். நீச்சல் குளத்தில் நடைபெற்றது. அதில் 50 மீ. 'ப்ரீஸ்டைல்', 50 மீ. 'பேக் ஸ்ட்ரோக்', 50 மீ. 'பிரெஸ்ட் ஸ்ட்ரோக்' ஆகியவற்றில் தங்கப் பதக்கங்களை வென்றேன்.
'தமிழ்நாடு நீச்சல் சங்கம்' சார்பில் வேளச்சேரியில் கடந்த ஏப்ரலில் நடைபெற்ற மாநில அளவிலான நீச்சல் போட்டியில் 100 மீ. 'பிரெஸ்ட் ஸ்ட்ரோக்', 200 மீ. 'ப்ரீஸ்டைல்' ஆகியவற்றில் முதலாவது இடத்தையும், 50 மீ. 'பிரெஸ்ட் ஸ்ட்ரோக்'கில் 3-வது இடம், 100 மீ. 'ப்ரீஸ்டைலில்' 2-வது இடம் பெற்றேன்.
பள்ளிக் கல்வித் துறை சார்பில் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கில் நடந்த போட்டியில் 100 மீ. 'பிரெஸ்ட் ஸ்ட்ரோக்', 200 மீ. 'ப்ரீஸ்டைல்' ஆகிய பிரிவுகளில் முதலிடம் பெற்றேன்.
பள்ளி விளையாட்டுகள் சம்மேளனம் சார்பில் கொல்கத்தாவில் சென்ற ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை 'தேசிய பள்ளி விளையாட்டுகள் போட்டி' நடைபெற்றது. அதில் 400 மீ. 'ப்ரீஸ்டைல்' போட்டியில் மூன்றாவது இடம் பெற்றேன். போட்டிகளில் பங்கேற்கும்போது எனது அருகே யார் நீந்துகிறார்கள், அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்றெல்லாம் பார்ப்பதில்லை. எனது கவனமெல்லாம் நான் நீந்துவதில்தான் இருக்கும்.

இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றிருக்கிறேன். எனக்கு விருப்பமான பிரிவு 'ப்ரீஸ்டைல்'. முதலில் கற்றுக்கொண்டதாலோ என்னவோ, அதில் விருப்பம் அதிகம். நான் முன்மாதிரியாகக் கருதும் நீச்சல்வீரர் என்றால் எங்கப்பாதான். அவர் என்னை சாதாரணமாகத் திட்டுவாரே தவிர, போட்டிகளில் பதக்கம் வெல்லாவிட்டால் திட்ட மாட்டார். அடுத்த முறைப் பார்த்துக்கொள்ளலாம் என்று கூறுவார். எங்கம்மா முல்லைமலர், போட்டிகளுக்குக் கிளம்பும்போது நன்றாகச் செயல்படும்படி ஊக்க வார்த்தைகளைக் கூறி அனுப்புவார். போட்டிகளின்போது அக்கா சண்முகப்பிரியா, தம்பி அவினாஷ் ஆகியோர் என்னை வீட்டில் வேலை செய்யாமல் பார்த்துக்கொள்வர். மெரீனா நீச்சல்குளப் பயிற்சியாளர்களான ஜெகதீஷ், ரவி, சீனி, கோபி ஆகிய அண்ணன்களும் விசேஷ கவனம் எடுத்து பயிற்சி கொடுக்கின்றனர். எனக்கு மட்டுமல்ல, தவறை நிவர்த்தி செய்துகொள்ள நினைக்கும் எல்லோருக்கும். எனக்கு உதவியாக இருக்கும் தோழி கமலியையும் கூற வேண்டும்.
நான் நீச்சல் தவிர, ஸ்குவாஷ், டென்னிஸ், இறகுபந்து ஆகியவையும் விளையாடுவேன். அக்கா சண்முகப்பிரியா ஸ்குவாஷ் வீராங்கனை என்பதால் அவருடன் ஸ்குவாஷ் விளையாடுவது மிகவும் பிடிக்கும்.
2016 ஒலிம்பிக் போட்டியில் வென்று இந்தியாவுக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்ற கனவு இருக்கிறது. அந்த இலக்கை நோக்கி தினந்தோறும் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன்!"
மறுபடி தண்­ணீருக்குள் பாய்ந்து மாறி மாறிக் கைகளை வீசி அம்பாய் முன்னேறத் தொடங்குகிறார் யுவஸ்ரீ.

No comments:

Post a Comment