Sunday, November 21, 2010

சர்வதேச அளவில் சாதிப்பேன்! - லாவண்யா

சர்வதேச அளவில் சாதிப்பேன்! - லாவண்யா

Lavanya says she will achieve international levels in Throw Ball - Successful Stories of Women in Tamil
லாவண்யா... 'ஆண்கள் விளையாட்டு' என்று கூறப்படும் எறிபந்து விளையாட்டுப் போட்டியில் தமிழகத்தின் பெருமையை தேசிய அளவில் உயர்த்திக் கொண்டிருக்கும் இளம்புயல். அடுத்து சர்வதேச போட்டியில் சாதிக்கப் போகும் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம். விளையாட்டு ஒதுக்கீட்டில் கோவை, பி.எஸ்.சி.பொறியியல் கல்லூரியில் சீட் கிடைத்துவிட்ட சந்தோஷத்தில், சென்னைக்கு வந்து பயிற்சி செய்து கொண்டிருந்த லாவண்யாவிடம் 'ஹாய்' சொன்னோம்! 18 வயதுக்குள் பல வெற்றிகளை ருசித்துவிட்டாலும், போட்டிகளில் மட்டுமே சூரத்தனம்! பார்த்தால்... பேசினால்... படுபாந்தம்!
'எப்படி சாத்தியமாச்சு இந்த உயரம்?' என்றால், எளிமை கலந்து வருகிறது பதில்....
"நான் வளர்ந்தது எல்லாமே தாத்தாவின் அரவணைப்பில்... அவருக்கு விளையாட்டு என்றால் ரொம்பப் பிடிக்கும் என்பதால் என்னையும் விளையாட்டில் ஊக்கப்படுத்துவார்.
மேலும், இதை செய், அதை செய்யாதே என்று தாத்தாவும், அம்மாவும் தடை போட்டதே இல்லை. 'உனக்கு எது விருப்பமோ, அதை நிறைவாக செய்'னு விட்டுட்டாங்க. பள்ளியில் படிக்கும்போது நான்காம் வகுப்பில் அத்லெட்டிக் போட்டிகளில் பங்கேற்றேன்.
அப்போது, எங்கள் பள்ளியின் பி.டி.மேடம் அனிதாவும், கோச்சர் விநாயகமும் என்னை எறிபந்து பிரிவில் சேர்த்து, நன்கு பயிற்சி அளித்தனர். ஆறாவது படிக்கும்போது போட்டியில் கலந்து கொள்ள ஆரம்பித்தேன்.
முதல் போட்டியிலேயே வெண்கலப் பதக்கமும், சிறந்த விளையாட்டு வீராங்கனை பட்டமும் வென்றேன். அந்த வெற்றிதான் என்னை இப்போது உங்களுடன் பேச வைத்துள்ளது. கண்டிப்பாக சர்வதேச அளவில் சாதிப்பேன். ஏனோ எறிபந்துக்கு என்னை பிடிச்சிருக்கு போல..." எனும்போது, டீன் குறும்பு லாவண்யாவிடம்!
"எனக்கு ரோல்மாடல்னா அது அம்மா தான். வாழ்க்கையில் போராடி ஜெயித்த அவர்களின் போராடும் குணமே, எனக்கு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிகளை குவிக்கும் காரணி! எல்லாருக்கும் ஒரு கனவு இருக்கும்... எனக்கும் அப்படித்தான்... அம்மாவின் ஆசையான "ஏதாவது ஒரு குழந்தையை தத்தெடுத்து முழுக்க முழுக்க கல்வி கொடுக்கணும்!"
இதுவரை பத்து நேஷனல், 9 ஸ்டேட் மற்றும் உள்ளூர் போட்டிகள் என கிட்டத்தட்ட நூறு போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் வென்றுள்ளேன் என்றாலும், தனியாகப் பெற்ற 'பெஸ்ட் பிளேயர் அவார்டு'கள்தான் என்னோட மீடியா வெளிச்சத்துக்கு முதல் புள்ளியாக அமைந்துள்ளது" என்றவரிடம்,
"மாணவியான நீங்கள் வீராங்கனையாக மாறிய ரகசியம்?" 

"பொதுவா, ஸ்டாமினா, டிரெயினிங் இந்த ரெண்டுலயும் நம்மளவிட மத்த நாட்டுக்காரங்க ரொம்ப ஸ்ட்ராங். காரணம்... ஸ்பான்சர்கள் மற்றும் பயிற்சிகள்! நம்முடைய பயிற்சிகளை அதிகரிக்க... அதிகரிக்க வெற்றிகளும் அதிகரிக்கும்!
நம்ம உழைப்புக்கான அங்கீகாரம் நமக்கு கண்டிப்பா கிடைக்கும். அந்த நம்பிக்கை தான் எப்பவும் என்னை இயக்குகிறது.
எனக்கும் படிப்பு, குடும்பம் என்று எத்தனையோ கடமைகள் இருந்தாலும், விளையாட்டு என்றால் மற்ற எல்லாவற்றையும் தூக்கி ஓரத்தில் வைத்துவிட்டு, எறிபந்தை கையில் எடுத்துக்குவேன். மற்ற விஷயங்களில் கவனத்தை சிதறடிக்காம... கவனத்தை ஒருமுகப்படுத்தி டெடிகேட்டா விளையாடினால் கண்டிப்பாக வெற்றி நிச்சயம்! நானும் அப்படித்தான்" லாவகமாக பந்தை பிடித்து சுற்றியபடி... சிரிக்கிறார், லாவண்யா.
"கிரிக்கெட்டுக்கு கிடைக்கும் அங்கீகாரம் எறிபந்துக்கு கிடைக்கிறதா?" என்றால், தாமதிக்காமல் மறுக்கிறார்.
"இல்லை.... கிரிக்கெட்டுக்கு கிடைக்கும் அங்கீகாரத்தில் பாதி அளவு கூட எறிபந்து விளையாட்டுக்கு கிடைப்பதில்லை. இத்தனைக்கும் கிரிக்கெட்டைவிட கடுமையான விளையாட்டு எறிபந்து. ஆனாலும், கிரிக்கெட்டுக்கு கொடுக்கற கவனத்தை அரசும், மக்களும் மற்ற விளையாட்டுகளுக்குக் கொடுக்காத வருத்தம் எல்லா விளையாட்டு வீரர்களைப் போல எனக்கும் இருக்கிறது!" என்று ஒவ்வொரு வார்த்தையிலும் நிதானம் காட்டுகிறார்.
"இந்திய அளவில் நீங்கள் எந்த ரேங்கிங்..?" என்று முடிக்கும் முன்பே...
"இந்த ரேங்கிங்ல எல்லாம் எனக்கு நம்பிக்கை கிடையாது. நான் எதிர்கொள்ளும் அனைத்துப் போட்டியாளர்களும் ரொம்ப திறமையானவங்க.
அதே மாதிரி ஒவ்வொரு போட்டியிலும் நான் எறியும் பந்து ஒவ்வொன்றும் எனக்கு வெற்றிக்கான புள்ளியாக எண்ணிக் கொள்வேன்.
ஒரு போட்டியில் தோத்துட்டா, காரணங்களைத் தேடாம, என் தவறுகளை அலசுவேன். அடுத்தப் போட்டியில் அதை சரிசெஞ்சுப்பேன். என்னோட எண்ணம் அனைத்துப் போட்டியிலும் ஜெயிக்கணும். அதுமட்டும்தான்..." என்று வார்த்தைகளுக்கு தடைபோட்டவரிடம்,
"ஓகே... கொஞ்சம் பெர்சனல் பேசலாமா?" என்றால் முகத்தில் மெடல் வாங்கிய சிரிப்பு!

"கோவையில் உள்ள பி.எஸ்.சி., பொறியியல் கல்லூரியில் ஈ.சி.இ. பிரிவில் முதலாமாண்டு படிக்கிறேன். பள்ளிப் படிப்பு அனைத்தும் மந்தவெளியில் உள்ள செயின்ட் ஜான் ஸ்கூலில். தினமும் படிப்பு தவிர மற்ற அனைத்து நேரங்களிலும் பிராக்டீஸ். அது முடிஞ்சதுக்குப் பிறகு, உடற்பயிற்சி, ஸ்டாமினா எக்ஸர்சைஸ் என எப்போதும் நான் பிஸி. அதனால் மத்த விஷயங்களைப் பத்தி சிந்திக்கிறதே இல்லை. விடுமுறை என்றால் சென்னைக்கு வந்தாலும் பயிற்சி தொடரும்.
இந்த டீன் ஏஜுக்கே உரிய குறும்புகள், சந்தோஷங்களை மிஸ் பண்ணினாலும், விளையாடுறது மட்டும்தான் உலகத்துல சந்தோஷம் தரக்கூடிய விஷயமா இருக்கு! எம்.பி.ஏ. முடித்து சாப்ட்வேர் பணியில் சேரணும். அப்புறம் சர்வதேச அளவில் எறிபந்து போட்டியில் இந்தியாவுக்கு வெற்றியை வாங்கித் தரணும். அதற்காக இந்திய அணியில் இடம் பெறணும்... இப்போதைக்கு இதுதான் என்னோட டார்கெட்!"
- வியர்வையைத் துடைத்து, பந்தை சர்வீஸ் செய்தபடி 'பை' சொல்கிறார் லாவண்யா

No comments:

Post a Comment