Sunday, November 21, 2010

வாலிபாலில் அசத்தும் பூவிழி..!

வாலிபாலில் அசத்தும் பூவிழி..!

My confidence is increased: Poovizhi, Volleyball player - Successful Stories of Women in Tamil
சென்னைக்கு அருகில் உள்ள எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழகத்தில் 'எங்கள் கல்லூரியின் ஸ்டார்' என்று முதல்வர் முதல் மாணவியர் வரை கொண்டாடும் பூவிழி ஒரு சூப்பர் வாலிபால் வீராங்கனை. வாலிபால் போட்டிக்காக மைதானத்துக்குள் இறங்கிட்டா.... 'தடதட'ன்னு கலக்குற அதிரடி ஆல்ரவுண்டர்.
"ஹாய்... ஐயாம் பூவிழி, எம்.பில்.," என்று அறிமுகமாகிற பூவிழியின் பேச்சு ரொம்பவே சாப்ட்!
"திருச்சியில் பிறந்து வளர்ந்த பொண்ணு நான். அம்மா கீதாவின் அரவணைப்பிலும், அண்ணன் புகழேந்தியின்(போலீஸ் கமாண்டோ பிரிவில் வேலை) அன்பிலும் வளர்ந்தேன். அவர் ஒரு கபடி வீரர் என்பதால், எனக்கும் விளையாட்டு மீது ஆர்வம்.
திருச்சியில் பள்ளியில் படிக்கும்போது 400 மீட்டர் ஓட்டத்தில் பள்ளிகள் அளவில் பல பரிசுகளை வென்றேன். அப்போதுதான் எனக்கு வாலிபால் பிரிவில் இணையும் வாய்ப்பு கிடைத்தது. பயிற்சியாளர் சண்முகம் எனக்கு நன்கு பயிற்சி அளித்தார்.
ஏழாம் வகுப்பு முதல் வாலிபால் விளையாட்டு மீது அதிக கவனம் செலுத்தினேன். எட்டாம் வகுப்பு படிக்கும்போது, திருச்சி, டால்மியாபுரத்தில் நடந்த பள்ளி அளவிலான போட்டியில் முதன் முதலாக பங்கேற்று முதல் பரிசை வென்றேன். அதற்காக பள்ளியில் பாராட்டு விழா நடத்தினார்கள்" என்று பெருமை பொங்க கூறும் பூவிழி படிப்பிலும் படுகெட்டி!
"வாலிபால் விளையாட ஆரம்பித்த பின்னர் என்னோட தன்னம்பிக்கை கூடினதை அனுபவப் பூர்வமாக உணர்ந்தேன். வாலிபாலுக்குள் நுழைந்து கடந்த 11 ஆண்டுகளில் ஏறக்குறைய 600-க்கும் மேற்பட்ட போட்டிகளில் பங்கேற்று பெரும்பாலும் வெற்றி பெற்றுள்ளோம். இதுல நேஷனல், சீனியர் நேஷனல் என அனைத்து பிரிவுகளும் அடங்கும்" - தனது வெற்றிகளை கணக்கு பண்ணி சொல்கிறார்.
"என்னுடைய விளையாட்டுத் திறமைக்காகவே எங்க பல்கலைக்கழக சேர்மன் பச்சமுத்து எனக்கு பிரீ சீட் கொடுத்ததோட, ஸ்போர்ட்ஸ், டோர்னமென்ட்ஸ், பயிற்சிகளுக்கான அத்தனை வசதிகளையும் செய்து கொடுத்தார். அதனால்தான் கல்லூரிக்கு வந்தபின்னர், தேசிய அளவில் சாதிக்க முடிந்தது. என்னுடைய வாழ்க்கையின் மிகப் பெரிய திருப்பம்... எஸ்.ஆர்.எம்-ல் சேர்ந்ததுதான்"னு சந்தோஷப்படும் பூவிழி, "போட்டியின் போது டென்ஷன் ஆகி, பந்தை நெட்டில் அடித்து விடுவாராம். அணியின் கேப்டன் என்பதால் எனது இந்தப் பழக்கம், அணியின் மற்ற வீராங்கனைகளையும் டென்ஷன் ஆக்கி விளையாட்டை பாதித்து விடும்" என்கிறார்.

இது குறித்து கூறும்போது, "நான் திருத்திக் கொள்ள நினைக்கும் விஷயமும் இதுதான்! 'அட்டாக்' பாணியில் விளையாடுவது என்னுடைய ஸ்பெஷல்." - தன்னடக்கத்துடன் கூறுகிறார். எதிர்காலத்தில் ஆசிரியை பணியில் சேரவேண்டும் என்பது பூவிழியின் கனவு. அதுமட்டுமின்றி, வாலிபால் விளையாட்டில் இளம் தலைமுறைக்கு பயிற்சி அளித்து நிறைய வீராங்கனைகளை உருவாக்க வேண்டும் என்பதும் இவரது ஆசை.
எதிர்பாராத வெற்றி குறித்து கூறுகையில், "சில ஆண்டுகளுக்கு முன்பு, மதுரையில் நடந்த தேசிய பெண்கள் வாலிபால் போட்டியில் பங்கேற்றோம். எங்கள் அணியில் இருந்தவர்கள் எல்லாமே சின்னப் பெண்கள். போட்டியின்போதே எல்லோருக்கும் எங்களுக்கு தோல்வி உறுதி என்று தெரிந்து விட்டது. ஆனாலும் இறுதி வரை போராடுவது என்று முடிவெடுத்து 'உயிரைக் கொடுத்து' விளையாடினோம். கடைசி நிமிடங்களில் வெற்றி எங்கள் பக்கம் சாய்ந்தது!
அந்தப் போட்டியின் போக்கும், தாக்கமும் என்றும் மறக்க முடியாது. வாலிபால் விளையாட்டில் என்னுடைய ரோல்மாடல் சதர்ன் ரெயில்வே வீராங்கனை பிரீத்தி கர்த்தா. வருங்கால பேராசிரியை என்ற முறையில் நான் சந்திக்க விரும்பும் நபர் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம். அவரை சந்தித்தால் மாணவர்களை எப்படி வழிநடத்துவது? என்று ஆலோசனை கேட்பேன்.
மேலும் நான் உதவும் மனப்பான்மை உடையவள். எங்களுடைய விடுதியில் யாருக்கு உடல்நிலை சரியில்லை என்றாலும் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிப்பேன். சம்பாதித்த பின்னர் அனாதை குழந்தைகளை தத்தெடுத்து கல்வி, விளையாட்டு, உடை என அனைத்தும் வழங்கவேண்டும்" என்று தனது விருப்பத்தையும் வெளிப்படுத்துகிறார் பூவிழி.
2006-ம் ஆண்டில் பயிற்சியின்போது அதிகமாக குதித்ததால் வயிற்றில் தசை பிரிந்து, ஆறு மாதம் சிகிச்சை பெற்றதையும் நினைவு கூறுகிறார் பூவிழி.

No comments:

Post a Comment