Thursday, November 4, 2010

மணநாள் மனநிலை

மணநாள் மனநிலை
அண்மையில் ஒரு திருமணத்துக்குச் சென்றிருந்தேன். மணமகளின் தந்தை எனது நெருங்கிய நண்பர் என்பதால் முதல்நாள் மாலை வரவேற்பு நிகழ்ச்சி முதல், மறுநாள் காலை திருமணம் முடிகிற வரை மண்டபத்திலேயே உழலும்படி நேர்ந்துவிட்டது. நான் அங்கு செலவிட்ட நேரத்தில், திருமண ஆரவாரங்களை மீறி என்னை மிகவும் வேதனைப்பட வைத்தது மணமகளின் தந்தையான என் நண்பரின் நிலைதான்.
பொருளாதார அளவில் மணப்பெண்களின் தந்தையர்களை கோடீஸ்வரத் தந்தையர், நடுத்தரத் தந்தையர், ஏழ்மைத் தந்தையர் என மூன்று வகையாகப் பிரிக்கலாம். இம் மூன்று வகையினரில் அலைச்சலுக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகிறவர்கள் நடுத்தர வகைத் தந்தையரே என்பது கண்கூடான உண்மை. தமது பொருளாதாரச் சக்திக்கு மீறித் திருமணத்துக்காகக் கடன் வாங்குவது; வீணாவது பற்றிய கவலையின்றி விதம் விதமான உணவு வகைகளைப் பட்டியலிட்டுப் பந்தியிடுவது; வரனுக்கேற்ற சவரன் என்று சமாதானம் அடைந்து கொண்டு கிலோ கணக்கில் நகைகளை வாங்கிப்போடுவது போன்ற பல சிக்கல்களை நடுத்தரவர்க்கத் தந்தையர்கள் சந்திக்க வேண்டியிருக்கிறது. அரசுத் துறையிலோ, தனியார் துறையிலோ ஓய்வுபெறும் வரை பணியாற்றி, அதற்காகக் கிடைக்கும் மொத்தத் தொகையையும் மகளின் திருமணத்திற்காக அப்படியே தாரை வார்த்து விடுகிற தந்தையர்கள் நிறையவே இருக்கிறார்கள். சில தந்தையர்கள் மகளின் திருமணத்திற்காக விருப்பு ஓய்வு பெற்றுப் பணம் பெறுவதும் உண்டு.
திருமணம் என்பது ஒரு பெருஞ் செலவு என்றால் அதற்கு முந்தைய சடங்குகளுக்கும் பிந்தைய சடங்குகள் மற்றும் விருந்துகளுக்கும் செலவு செய்தாக வேண்டிய தொகையைத் தயார் செய்வதற்கு, பல தந்தையர்கள் படுகிற பாடு கொஞ்சமல்ல. மகளுக்குத் திருமணம் செய்து வைத்த அனுபவம் எப்படியிருந்தது என்று ஒரு தந்தையிடம் கேட்டபோது மடைதிறந்த வெள்ளமாகக் கொட்டித் தீர்த்தார். பெண் வீட்டாரை ஒருபடி மிஞ்சியே செயலாற்ற விரும்புகிறார்கள் மாப்பிள்ளை வீட்டார். மாப்பிள்ளை வீட்டாரின் சிரமங்களில் எந்த வகையிலும் பங்கேற்காதவர்கள்தான், மாப்பிள்ளை வீட்டுக்கு ஆதரவாக எங்களிடம் பிரச்சினை செய்தார்கள்; மாப்பிள்ளையின் நண்பர்கள் என்று சொல்லிக்கொண்டு ஒரு குழுவாக அலைந்தவர்கள் எங்களைப் படுத்தியபாடு கொஞ்சநஞ்சமல்ல.
நண்பனின் திருமண நிகழ்வு, நண்பர்களின் கொண்டாட்டக் களமாக மாற்றப்பட்டுவிடும் போக்கு சற்றுக் கூடுதலாகவே தலைதூக்குவதை நிறைய திருமணங்களில் காணமுடிகிறது. திருமண நிகழ்வுகளில் நண்பர்களின் அத்துமீறலைக் கண்டிக்கப்போய், அது மாப்பிள்ளை வீட்டாரின் மானப் பிரச்சினையாக மாறி, தன் மகள் வாழ்க்கை பாதிக்கப்பட்டு விடுமோ என்றெல்லாம் தொலைநோக்கோடு கணக்குப்போடுகிற மணப்பெண்களின் தந்தையர் தம் இயல்பான, நியாயமான கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு, வெடிக்க முடியா குண்டுகளாகக் காட்சியளிக்கின்றனர்.
என்ன சார் விடியற்காலை மூன்று மணிக்குத்தான் லேசா கண் அசந்தேன். தட தடன்னு கதவு தட்டற சத்தம் கேட்டது. என்னன்னு திறந்து பார்த்தா மாப்பிள்ளை வீட்டுக்காரங்க சுடு தண்ணி கேக்கறாங்கன்னு ஒருத்தன் வந்து சொல்லிட்டுப்போறான். இதுக்கு என்ன சொல்றீங்க என்று கேள்விகேட்டு விரக்தியோடு சிரிக்கிறார் அண்மையில் தன் மகனைக் கரையேற்றி விட்டதாக நினைத்துக்கொண்டிருக்கிற ஒருவர்.
ஒரு நடுத்தரக் குடும்பத்தின் திருமண நிகழ்வில் மணமகளின் தந்தை அடைகிற மன உளைச்சலுக்கும் அதிகமாகவே அப்பெண்ணின் தாயும் உளைச்சல் அடைகிறார். இதைத் தன் கணவரின் கவனத்துக்குக் கொண்டு செல்வதன் வாயிலாகத் தன் கணவரது மனோநிலையை மேலும் சிறிது சிக்கலாக்குகிறார்.
தாலி கட்டி முடிந்த பின் பெண்ணின் தந்தை விடுகிற பெருமூச்சில் ஆயிரம் அர்த்தங்கள் தொனிக்கின்றன.
ஒரு திருமணத்துக்கு நாள் குறிக்கப்பட்டு விட்டால் பெண்ணுக்குப் போடவேண்டிய நகை, மணநாளில் பரிமாற வேண்டிய உணவு வகைகள் என்று பல ஒப்பந்தங்கள் போடப்படுகின்றன. அவ்வளவும் மிகச் சரியாக நிறைவேற்றப்படுவதும் நடக்கிறது. ஆனால் இந்த ஒப்பந்தங்கள், மணமகன் - மணமகள் ஆகியோரது இருமனம் இணையும் வாழ்க்கை ஒப்பந்தத்திற்கு எந்த அளவுக்குக் கை கொடுக்கின்றன என்பது மிகப்பெரிய கேள்விக்குறி!
ஒரு திருமணத்தை வைத்து எத்தனைவிதமான வேட்டைகளுக்குத் திட்டமிடப்படுகிறது என்பதைக் கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் துல்லியமாகப் பட்டியலிடலாம். தன் பொருட்டுத் தன் குடும்பத்தினர், அதிலும் குறிப்பாகத் தன் தந்தை சுமக்கிற பல்வேறு சுமைகளை நினைத்துக் குமுறியபடிதான் பல பெண்கள் கணவனின் வீட்டில் காலடி எடுத்து வைக்கிறார்கள்.
நடுத்தர வர்க்கத்தின் திருமண நிகழ்வுகளைப் பொருத்தவரை இங்கே மாற வேண்டியது வேட்டையாடுகிற மனோபாவம் மட்டுமல்ல - தன்னையே வேட்டைக்களமாக மாற்றிக்கொண்டு திண்டாடுகிற மனோபாவமும்தான்.

No comments:

Post a Comment