Thursday, November 4, 2010

நுகர்வு எனும் மாயவலை

நுகர்வு எனும் மாயவலை
Nano Technology - Tamil Economics Articles புதிய தொழில் நுட்பங்கள் நம் மொழியின் மீது கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி, புதிய மொழியை நம் மனங்களில் திணிக்கிறது. நம் வசம் இருந்த பல வார்த்தைகளை சிதைத்து உருமாற்றம் செய்யப்படுகிறது.
தொழில்நுட்பம் கோலோச்சுகிற உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தொழில் நுட்பம் நம்மைச் சுற்றி மலையென பொருட்களை குவித்துள்ளது. நம் முன்னோர்கள் கனவுகளில் கூட பார்த்திருக்க வாய்ப்பில்லாத பல பொருட்கள், கருவிகள் நம்மைச் சுற்றி மிக அலட்சியமாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. தொழில் நுட்பத்தின் அபரிமிதமான ஆராய்ச்சிகள் நுகர்வு கலாச்சார உலகுக்குள் நம்மை கரம் பிடித்து அழைத்துச் செல்கின்றன. மிகவும் ஆடம்பரமானவை என மனம் பிரக்ஞையுடன் ஒப்புக் கொண்ட விசயங்கள், நம்மை அறியாமல் அத்தியாவசியமாய் நம் தோள்களில் அமர்ந்து சிரித்துக் கொண்டிருக் கின்றன. நுகர்வு கலாச்சார சூறாவளியில் சிக்காத மனிதர்கள் மிக அரிதே. கிராமங்களைக் கூட விட்டு வைக்கவில்லை இந்த அலை.
புதிய புதிய வார்த்தைகளை நமக்கு தினமும் வழங்குகின்றன ஆராய்ச்சிக் கூடங்கள். குளோனிங், ஜெனிடிக்ஸ், ஐ.டி. மொபைல் எனத் தொடரும் பட்டியல் சமீபத்தில் நேனோ டெக்னாலஜியில் வந்து நிற்கிறது. (இது சாருவின் நேனோ அல்ல.) ஆட்டுக்குட்டி, குரங்கில் துவங்கிய குளோனிங் மனிதனில் வந்து முடியலாம் என அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் யூகிக்கிறார்கள். மனிதன் குளோன் செய்யப்பட்டால் உடல் உறுப்புகளுக்கான அங்காடி நம் வாழ்நாளில் சாத்தியமாகும். என்ன சார் வேண்டும் நுரையீரலா? கல்லீரலா? காது ஜவ்வா? என விலைப் பட்டியலை பெற்றுக் கொண்டு நம் செல்களை அவர்களிடம் ஒப்படைத்தால் டெலிவரி தேதி குறிப்பிடப்பட்ட ரசிது வழங்கப்படலாம்.
நகர வாழ்வில் சக மனிதர்களிடம் பேசுவதை விட, அதிக நேரம் கருவிகளிடம் பேசுகிறோம். அது வீட்டு தொலைபேசி, மொபைல் அல்லது இண்டர்நெட் உரையாடலாக இருக்கிறது. அதில் பல கொஞ்சம் நேரம் பொறுங்க சார் என்று தங்களைச் சுற்றி பலரை காத்திருக்க வைத்துவிட்டு பிரக்ஞை அற்று பல மணிநேர உரையாடலில் ஈடுபடுவது வாடிக்கையாகி விட்டது. வெளிநாடுகளில் குக்கரிடம், கதவு கைப்பிடியிடம் என பலவீட்டு உபயோக பொருட்களிடம் மனிதர்கள் பேசுவது சகஜம். கதவருகே சென்று செல்லம் நான் வந்துட்டேன்டா என்றால் உங்கள் குரலை சோதித்துவிட்டு தானியங்கி பூட்டு கதவை திறக்கிறது.
தொழில் நுட்பங்கள் நம்மை மிகவும் வேகமாக மாற்றிக் கொண்டேயிருக்கின்றன. மனிதர்கள் வரலாறு நெடுகிலும் தங்களை சூழ்நிலைக்கேற்ப, தேவைகளுக்கேற்ப தகவமைத்துக் கொண்டிருக்கிறார்கள். சிப்பாய்கள் கொலை புரிய கற்றுக் கொள்கிறார்கள். பேராசிரியர்கள் இல்லாத பல்கலைக் கழக வகுப்புகள், பெற்றோர்கள் இல்லாமல் குழந்தைகள் வீடுகளில் இயங்குதல் என தனியாக ஒரு சூழலுக்கு ஏற்ப நம்மை நாம் பலவித மாற்றங்களுக்கு உட்படுத்திக் கொண்டேயிருக்கிறோம்.
நம்முன் வந்து நின்று தன்னையும் வாழ்க்கையில் இணைத்துக் கொள்ள நம்மிடம் மீடியாக்களில் இரைச்சலோடு கெஞ்சும் எந்த சாதனத்தையாவது கேள்விக்கு உட்படுத்தி இருக்கிறோமா?
தகவல் வழித்தடங்கள் முழுவீச்சில் இயங்கத் துவங்கினால் நமக்கு 1000 சேனல்களுக்கு மேல் தொலைக்காட்சியில் காணக் கிடைக்கும் என்கிறார்கள். தற்சமயம் உள்ள 40,50 சேனல்களையே பார்க்க நேரமற்று இருக்கும் சூழலில், இந்த தொழில் நுட்பம் யாருக்கானது என்ற கேள்வி எழுகிறது. இதர மென்பொருள் துறைக்காக பிரத்யேகமாக உருவாகும் கட்டுமானங்களில் ஒன்று. இந்த கட்டுமானங்கள் அரசு வருவாயில் உருவாகி வருபவை. மென்பொருள் தொழிற்சாலைகள் பிரத்யேகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் இந்த கட்டுமானங்களுக்கு மிகவும் சொற்பமான பணத்தை அரசாங்கம் வசூலிக்கிறது.
அதிவேக ஜெட் விமானங்களை நம் நாட்டிலும் வாங்க வேண்டும். பல உலக நாடுகளில் அந்த விமானங்கள் வந்து விட்டன என்கிறார்கள். நாம் பின் தங்கியிருக்கிறோம் என்று நம் மனங்களில் தாழ்வு மனப்பான்மையை உருவாக்க போதாக்குறைக்கு மீடியாக்கள் வேறு. இந்த ஜெட் விமானங்களால் என்ன பயன்? நம் பயண நேரம் பாதியாகக் குறையும். அப்படி நேரத்தைச் சேமித்து நம்மில் அனேகமானவர்கள் என்ன செய்யப் போகிறோம்? மிக விரைவாக இல்லங்களுக்குச் சென்று தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்போம். இத்தனைக் கோடிகளை செலவிடுவதற்குப் பதிலாக தற்சமயம் பறக்கும் விமானங்களில் தொலைக்காட்சியைப் பொருத்தினால் முடிந்தது பிரச்சனை. ஜெட் விமானங்களை யார் பயன்படுத்தியிருக்கிறார்கள்? சினிமா நடிகர்கள், பாடகர்கள், அரசியல்வாதிகள், பன்னாட்டு நிறுவன உயர் அதிகாரிகள். தொடர்ந்து சிலரின் பிரச்சனையை நாட்டின் பிரச்சனையாக்கப் பார்க்கிறார்கள், மாற்றுகிறார்கள்.
வாகனங்கள் நம்மில் ஏறக்குறைய அனைவரின் போக்குவரத்து, பயணம் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கொணர்ந்தது. ஆனால் இன்று காற்று மாசு ஏறி நகரங்கள் நெரிசலில் மூச்சுத் திணறுகின்றன. சாலைகளுக்காக நம் வெளிகள் மாற்றியமைக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. வளர்ந்த ஏகாதிபத்திய நாடுகள் விழித்துக் கொண்டு அங்கு பலவிதமான சிக்கலான நடைமுறைகளை ஏற்படுத்திக் கொண்டன. உதாரணத்திற்கு சிங்கப்பூரில் நீங்கள் எவ்வளவு வசதி படைத்தவராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் உங்களால் ஒரு இருசக்கர வாகனத்தைக் கூட வாங்க இயலாது. உரிய இலாகாக்களிடம் சென்று பதிவு செய்து மாதக் கணக்கில், ஏன் வருடக் கணக்கில் கூட காத்துக் கிடக்க நேரிடும். அதிகப்படியான வாகனங்கள் சூழலை மாசுபடுத்துவதால் அரசாங்கமே பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துமாறு மக்களை வலியுறுத்துகிறது. ஐரோப்பாவில் கூட இந்த நடைமுறைகள் அமுலில் உள்ளன. அங்கு தங்கள் கடைகளை விரிக்க முடியாததால், இந்தியா போன்ற தடைகளற்ற பிரதேசங்களுக்குள் போர்டு, ஹூண்டாய் என பல நிறுவனங்கள் வரிசைகட்டி நிற்கின்றன.
மருத்துவத் துறை கணக்கிட முடியாத சிரழிவுகளைச் சந்தித்து நிற்கிறது. தடுப்பூசிகள் நோய்களைத் தடுத்தது. ஆனால் நம் நோய் எதிர்ப்புத் திறனை அழித்துவிட்டது. உடலை, மனதை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் பல மருந்துகள் சந்தையில் சிரழிந்து கிடக்கிறது. அந்த மருந்துகளை நீங்கள் ஒருமுறை உட்கொண்டால் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து பிரயோகிக்க வேண்டிவரும்.
பென்டிக்டைன் முனிவர்கள் இறைவனை தினமும் ஏழு முறை தொழுவதற்காக சூரியக் கடிகாரத்தைக் கண்டுபிடித்தார்கள். இப்படி ஒன்றை உருவாக்குகிற நேரம் அவர்கள் இந்த சாதனம் எதிர்காலத்தில் ஒழுங்கமைக்கப் பட்ட வேலைநேரத்தைக் கணக்கிட முதலாளிகள் பயன்படுத்தக் கூடும் என நினைத்துப் பார்த்திருக்க வாய்ப்பில்லை.
கம்ப்யூட்டர்கள் சமீபமாக பல தளங்களில் மனிதர்களின் பிரதிநிதியாக மாறி வருகிறது. ஏராளமான பல்கலைக் கழகங்களில் வெளிநாடுகளிலிருந்து ஆசிரியர்கள் இங்குள்ள மாணவர்களுக்கு... வகுப்புகள் எடுக்கத் துவங்கி விட்டனர். நம் இந்திய பல்கலைக்கழகங்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் ஒப்பந்தம் செய்து வருவது கவனிக்கத்தக்கவை. பல பெரு நகரங்களில் துவங்கப்பட்டுள்ள வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள் முதுகலைப் பட்டங்களை மாதக் கணக்கில் படித்தாலே கொடுத்து வருகிறது. படிப்பின் காலம் குறித்த நம் முந்தைய வரைமுறைகள் மாற்றம் பெற்று வருகின்றன.
புதிய தொழில் நுட்பங்கள் நம் மொழியின் மீது கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி, புதிய மொழியை நம் மனங்களில் திணிக்கிறது. நம் வசம் இருந்த பல வார்த்தைகளை சிதைத்து உருமாற்றம் செய்கிறது. பல நிகழ்ச்சிகளில் ஒருவரிடம் நீண்ட கேள்விகள் கேட்கப்படுகிறது. பல சமயங்களில் அவர் ஓரிரு வார்த்தைகளில் பதிலளிப்பார். இதை விவாதம் என்கிறது மீடியா. இரு கருத்துடையோர் பல மணிநேரம் தங்கள் கருத்துக்களை ஒரு சுற்று முன்வைத்து, பின்னர் அடுத்த சுற்றில் விமர்சனங்களை கூறுவதென, விவாதம் என்பது ஒரு செயல் முறையுடையது. விவாதம் என்ற வார்த்தையை கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கிறது மீடியா.
தொலைக்காட்சிகள் அறிவை விசாலமாக்குவதாக வாக்குறுதி அளித்து நம் குடும்பங்களின் உரையாடல்களை விழுங்கி விட்டன. தொலைக்காட்சி வந்த பிறகு சிலருக்கு தங்கள் கருத்துக்களை சந்தைப் படுத்துவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் சமூகத்தின் பெரும் பகுதி ஜனங்கள் நிரந்தர தாழ்வு மனப்பான்மையுடைய பார்வையாளர்களாக தகவமைக்கப் பட்டுள்ளார்கள்.
இந்த மொத்த நுகர்வுச் சந்தையும் மத்திய தர வர்க்கத்தின் சம்பளக் கவர்களை அபகரிக்கவே தங்கள் பயணத்தைத் துவங்கியுள்ளன. வாங்கும் திறன் குறைந்து சந்தையை மந்தைத்தனம் கவ்விக் கொண்டதும் கடன் அட்டைகள் தங்கள் தலையை வெளியே காட்டியது. இன்று பெரும் பகுதி குடும்பங்களுக்கு சேமிப்பு இருக்கிறதோ இல்லையோ 10-15 ஆண்டுகள் கட்ட வேண்டிய தவணைக் கடன் உத்திரவாதம். நம்மை வந்தடையும் தொழில் நுட்பம் எந்த சௌகர்யத்தை வழங்கி, என்ன புதிய விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. நம் தேவைகளை எங்கோ எவரோ உருவாக்குகிறார். அடுத்து நம் வீட்டு வாசலில் அல்லது இன்னும் நெருங்கி நம் அருகில் ஏதேனும் ஒரு சாதனம் வந்தால், அதனிடம் சில கேள்விகளை நாம் கேட்கலாம்.
இப்பொழுது பிரச்சனை என்ன?
இது யாருடைய பிரச்சனை?
எந்த புதிய பிரச்சனைகள் இதை உபயோகிப்பதால் உருவாகும்?
எந்த பகுதி மக்கள் மற்றும் நிறுவனங்கள் இதனால் தீவிர பாதிப்புக்குள்ளாவார்கள்?
புதிய பொருளாதார மற்றும் அரசியல் மதிப்பீடுகள் இதனால் உருவாகுமா?
மொழியில் எந்த வித மாற்றங்கள் உருவாகும்?
அத்தியாவசியம் என்ற பதத்தின் அர்த்தம் மறு உருவாக்கம் செய்யப்பட்டுக் கொண்டே இருக்கிறது. மீடியாக்களின் உள் அரசியல், தொழில் நுட்பங்களின் ரகசியங்கள் மற்றும் எதிர்காலம் குறித்த முழுமையான புரிதலை கோருபவர்களுக்கு இந்த கேள்விகள் துணை புரியலாம்.

No comments:

Post a Comment