Friday, November 12, 2010

புகைக்கும் புண்ணியவான்களுக்கு...

புகைக்கும் புண்ணியவான்களுக்கு...

டாக்டர். இளம்வழுதி Health Tips : Chain Smokers .. Pl. Stop Smoking - Food Habits and Nutrition Guide in Tamil
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்ட திருக்குறளில் மக்களிடையே நிலவிய பல்வேறு தீய பழக்கங்களைத் தவிர்ப்பது பற்றிய குறட்பாக்கள் உள்ளன. ஆனால் புகைத்தல் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை.
ஆதிகாலத்தில் புகைப் பழக்கம் அறவே இல்லாத நம் தமிழகத்தில் இப்பழக்கத்தை இந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்கள் தான் உருவாக்கினர்.
இன்று இளைஞர் முதல் பெரியவர்கள் வரை வயது. இன மத பேதமின்றி பலராலும் புகைப்பிடிக்கும் பழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஒரு நல்ல உடல் நலமுள்ளவரின் இரத்தச் சிகப்பணுக்கள் சுவாசிக்கும் காற்றில் உள்ள பிராண வாயுவை 96 சதவிகிதம் உடலெங்கும் கொண்டு செல்லும் திறன் கொண்டவை. ஆனால் புகைபிடிக்கும் பழக்கம் உள்ளோருக்கு அத்திறன் 88 சதவீதமாகக் குறைந்து விடுகிறது என்று இதன் விளைவாக புகைப்பவர்களின் ஆயுள் ஒவ்வொரு சிகரெட்டிற்கு ஐந்தரை நிமிடம் வீதம் குறைந்து வருவதாகவும் மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.
புகைக்கும் புண்ணியவான்கள் தாங்கள் உண்டு உமிழ்ந்த நச்சுப் புகையால் பிறர் சுவாசிக்கும் காற்றிலும் மாசு ஏற்படுத்திக் கேடு செய்து அவர்கள் நலனையும் கெடுக்கிறார்கள். தங்கள் உடலைக் கெடுத்துக் கொள்வதுடன் தம்மருகில் உள்ளோரையும் புகை பாதிக்குமே என்ற மனசாட்சி இல்லாத இவர்கள் வெகு காலமாக சவப்பெட்டி ஆணிகளை தங்கள் கைகளிலும் உதடுகளிலும் மாறி மாறி வைத்துக் கொண்டு ஊதித் தள்ளுகிறார்கள்.
உண்ண உணவில்லாமல் சில வாரங்களும் குடிக்கத் தண்ணீரின்றி சில நாள்களும் உயிர் வாழ முடியும் ஆனால் சுவாசிக்கக் காற்று இல்லாவிட்டால் சில நிமிடங்களுக்கு மேல் நம்மால் உயிர் வாழ முடியாது என்பது நிச்சயிக்கப்பட்ட ஒன்று.
கடவுளின் வரப்பிரசாதமான தூயகாற்றை காசு கொடுத்து மாசுபடுத்தும் புகை பிடிப்போருக்கு எந்தத் தண்டனை கொடுத்தாலும் தகும்.
குடலைப் புரட்டும் நாற்றம் கொண்ட, காண அருவருப்பான புகைப்பழக்கத்தால் உள்ளுரப்புகள் அனைத்தும் நிதானமாக, ஆனால் நிச்சயமாகக் கேடடைகின்றன. அதிகமாகப் புகைப்பிடிப்பவனின் உடலில் நீர்வாழ் இனமான அட்டையை ஒட்டிக் கொள்ளச் செய்தால் அது அவனின் ரத்தத்தை உறிஞ்சி விஷமேறி விரைவில் இறந்துவிடும். நமது மூளை உணர்ச்சி மிக்க உறுப்பு ஆனால் சிகரெட் புகையோ அதன் எண்ணற்ற கண்ணறைகளைப் பாழாக்கி விடுகிறது. சிகரெட்டிலுள்ள பார்ப்ரால் என்ற நஞ்சினால் மூளை நலிவடைவதால். பல்வேறு கேடுகளுடன் நியாய உணர்வு குன்றி குற்றம் புரியக் கூடிய சூழ்நிலை உருவாகின்றது.
நுரையீரல் புற்றுநோயால் இறப்பவர்களில் 90 சதவீதம் பேர் சிகரெட். பீடி புகைப்பவர்கள். மூச்சுக் குழாய் அழற்சியின் முக்கால் பங்குக்கும் இதயக் கோளாறுகளில் கால் பங்குக்கும் சிகரெட்தான் காரணம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
சிகரெட் புகையிலுள்ள நிக்கோட்டினும் காட்மியமும் இணைந்து மனித விந்து உயிரணுக்களிலிருக்கும் குரோமோஸோம்களை அழிக்கின்றன. இதன் காரணமாக மலட்டுத் தன்மை ஆண்மைக் குறைவு ஏற்படுகிறது.
சிகரெட், புகையிலை ஆகியவற்றின் காரணமாக இந்தியாவில் நாள்தோறும் 2200 பேர் இறப்பதாக இந்திய இருதயநலக் கழகத்தின் கணக்கெடுப்பு தெரிவிக்கின்றது. விமானப்படை வீரர்கள் இரவு நேரத்தில் பறக்கும் போது ஒரு சிகரெட்டைப் புகைத்தாலும் அவர்களது பார்வைக்கு பாதிப்பு ஏற்பட்டு விடுகிறது. எனவேதான் அவர்கள் விமானம் ஓட்டுவதற்கு முன் சிகரெட் குடிக்க அனுமதிப்பதில்லை.
8000 அடி உயிரத்தில் நமக்கு ஏற்படும் பார்வை இழப்பிற்கு சமமான அளவு 3 சிகரெட்டுகளின் புகையை உள்ளிழுத்தால் ஏற்படுகிறது என்பதையும் கண்டறிந்துள்ளனர். வடிகட்டி மூலம் நச்சுத் தன்மைகள் நீக்கப்பட்டு விடுவதால் வடிகட்டி பொருத்தப்பட்ட சிகரெட்டைப் புகைப்பதனால் தீமை ஏதுமில்லை என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் வடிகட்டிய பின்பும் வாடிக்கையாளர்களுக்கு வழக்கமாகக் கிடைத்து வந்த போதையின் அளவு சிறிதும் குறையாமலிருக்க முன்பை விட அதிக அளவில் அந்த நஞ்சுகள் அவ்வித சிகரெட்களில் கலக்கப்படுகின்றன என்பது பலருக்குத் தெரியாது.
சிகரெட்டினால் விளையும் தீமைகளை எடுத்துக் கூறிச் சிறுவர்களை நல்வழிப்படுத்தலாம் என்று முயலும் போது அவர்களால் பெரிதும் மதிக்கப்படும் தலைவர்கள் திரைப்பட நடிகர்கள் ஆசிரியர்கள் போன்றோரே அச்சிறுவர்கள் முன்னிலையில் புகை பிடிக்கிறார்கள்.
புகை பிடிப்பதால் ஆபத்து நேரலாம் என்பதை நன்கறிந்த எல்லாருக்கும் அறிவுறுத்த வேண்டிய மருத்துவர்களே புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் கைவிடுவதில்லை.
சமுதாயத்தைக் குறைகூறுவதைவிட நாம் இந்த வகை நஞ்சுக் கேட்டைக்களைவது எப்படி என்று சொல்லித் தரவேண்டும். இப்பழக்கம் ஏற்படுவதால் விளையக்கூடிய தீமைகளை எடுத்துச் சொல்லிக் கண்டிக்க வேண்டும்.
குறிப்பாக பலரும் கூடும் கூட்டங்களில் திரைப்பட அரங்குகள் பொது இடங்களில் கண்டிப்பாக புகைப்பிடிக்கக் கூடாது என்று எழுதுவதும் மட்டுமல்ல. கடைப்பிடிக்கவும் செய்ய வேண்டும். மீறுபவர்களைக் கண்டிப்பாகத் தண்டிக்க வேண்டும்.
புகைப்பவர்களின் முகத்தில் கரிபூசி அவமானப்படுத்த வேண்டும். அதையும் மீறி புகைப்பழக்கம் தொடர்ந்தால் அவர்களது உதடுகளை வெட்டி விடவேண்டும் - இது அரண்மனையிலிருந்து புகைப்பிடிக்கும் பழக்கத்தை விரட்டியடிக்க மன்னர் ஜஹாங்கீர் கொண்டு வந்த சட்டமாகும்.
புகைப்பவர்களுக்கு உணவு விடுதிகளில் உணவளிக்கக் கூடாது என்று சுவிட்சர்லாந்து நாட்டில் 17 ஆம் நூற்றாண்டில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. புகைப்பிடிப்பர்களை நாடு கடத்த வேண்டும் என்று கூட சட்டத்தில் வகை செய்யப்பட்டிருந்தது.
பிரபல அமெரிக்க நீக்ரோ விஞ்ஞானியான பகர் ஓர் உண்மையை சற்றுக் கேலியாக இவ்வாறு குறிப்பிடுகிறார்.
மனிதன் மூக்கு ஒரு புகைப்போக்கியாகப் பயன்பட வேண்டுமென்று இறைவன் கருதியிருந்தால் நம்முடைய நாதித் துவாரங்களை மேல் நோக்கி அல்லவா படைத்திருப்பான் ?
ஒரு கொசுவே புகை இருக்கும் இடத்தை விட்டு அகன்று புகைபோய் விட்டதை உறுதி செய்து கொண்ட பிறகே வந்து நம்மைக் கடிக்கிறது. இப்படியிருக்கையில் நாம் ஏன் காசு கொடுத்து வாங்கிப் புகையை ஊதி வாழ்க்கையை வறண்ட பாலைவனமாக்கிக் கொள்ள வேண்டும் என்பது பற்றிச் சிந்தித்துச் செயல்பட வேண்டும்.

No comments:

Post a Comment