Friday, November 12, 2010

தொற்றுநோயை தவிர்க்க...

தொற்றுநோயை தவிர்க்க...

டாக்டர். ராஜ்குமார்
 
தொற்றுநோய்கள் ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவக்கூடியது (அதனால் தானே அதற்கு அந்தப் பெயர்!). தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் பயன்படுத்திய பொருளைத் தொடும் மற்றவர்களுக்கும் அந்த நோய் பரவ வாய்ப்பு உண்டு).
இதைத்தவிர வேறு சில வகைகளிலும் தொற்றுநோய்க் கிருமிகள் நம்மைத் தொற்றிக்கொள்ள வாய்ப்பு உண்டு.
அவை என்ன என்பதைப் பார்ப்போம்:
1. தோலோடு தோல் ஏற்படும் தொடர்பு
(நட்பான அணைப்பிலிருந்து கைகுலுக்குதல் வரை எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்.)
2. காற்றில் பரவியிருக்கும் நோய்க்கிருமிகளை சுவாசத்தின் போது உள்ளே இழுத்துக்கொள்வதன் மூலம்.
3. தொற்று நோய்க்கிருமிகள் பரவியுள்ள உணவு மற்றும் நீரை உட்கொள்வதன் மூலம்.
4. பூச்சிக்கடி
5. உடலுறவு
6. சிராய்ப்பு, புண் போன்றவற்றின் மூலம்
7. அம்மாவிடமிருந்து அவள் கருவில் உள்ள குழந்தைக்கு. அதே சமயம் பொதுவாகவே நமது குடும்பத்தினரை தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்க வேண்டுமானால் கீழ்க்கண்ட வழிமுறைகளை எப்போதும் பின்பற்றுவது நல்லது.
1. கைகளைக் கழுவுங்கள்!
இது ஒரு மிகச் சிறந்த தடுப்பு வழி. அடிக்கடி கதகதப்பான தண்ணீர் மற்றும் சோப்பைப் பயன்படுத்தி கைகளைக் கழுவினால் இன்னும் நல்லது. முக்கியமாக மழைக்காலங்களில் இதை மறக்காமல் செய்யவும். எந்தக் காலத்திலுமே சாப்பிடுவதற்கு முன் நன்றாகக் கைகழுவுங்கள். முக்கியமாக நகங்களிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அதிக கவனம் செலுத்துங்கள். மூக்கைச் சிந்துவது, தும்மல், இருமல், குழந்தைக்கு டயபர் மாற்றுவது, நோய்வாய்ப்பட்டவரை கவனிப்பது. செல்லப் பிராணியோடு விளையாடுவது... இப்படிப்பட்ட காரியங்களைச் செய்த பின்பு கைகளை நன்கு கழுவுவது மிக மிக முக்கியம்.
சோப்போட்டு கைகளைக் கழுவிக்கொண்டால் தோலில் உள்ள சிறு கிருமிகள் நம் தோலிலிருந்து பிரிக்கப்படுகின்றன. பிறகு கைகளை நீரில் சுத்தம் செய்யும்போது அந்தக் கிருமிகள் நம்மிடமிருந்து நீங்கிவிடுகின்றன. குறைந்தது பதினைந்து நொடிகளுக்காவது சோப்பைப் பயன்படுத்திக் கழுவுங்கள்.
2. சமையலறையில் கவனம் தேவை!
சாப்பிடும் வரை சூடான உணவுகள் சூடாகவும், குளிர்ச்சியான உணவுகள் குளிர்ச்சியாகவும் இருக்கும்படி பார்த்துக்கொண்டால் நல்லது. ஃப்ரிட்ஜ் மற்றும் ஃப்ரீஸரில் உள்ள வெப்பநிலை சரியானதாக இருக்கிறதா என்பதை அவ்வப்போது சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
அரிவாள்மனை, துருவுமனை, கத்தி போன்ற உபகரணங்களையும் பாத்திரங்களையும் பயன்படுத்திய பிறகு மிக நன்றாகக் கழுவி வையுங்கள். பழங்கள், காய்கறிகளோ பயன்படுத்துவதற்கு முன் அவற்றின் மேற்புறத்தை நன்கு சுத்தம் செய்யுங்கள்.
இறைச்சியும் உங்கள் உணவில் சேர்ந்திருந்தால் அதைத் தனியாக சமையுங்கள். இறைச்சி பயன்படுத்திய பாத்திரத்தை பிற உணவு வகைகள் சமைக்கப் பயன்படுத்த வேண்டாம். டேஸ்ட் எப்படி இருக்கிறது என்று பார்ப்பதற்காக பச்சை இறைச்சியை துளி எடுத்து வாயில் வைத்துக்கொள்ளும் பழக்கம் இருந்தால் அதை உடனே நிறுத்திக்கொள்ளுங்கள்.
பெரும் சத்துணவு என்று நாம் நினைக்கும் முட்டையில் கூட அபாயகரமான கிருமிகள் இருக்கலாம். மேற்புறம் சிறிதும் விரிசல் இல்லாத சுத்தமான முட்டைகளை மட்டுமே வாங்குங்கள். அவற்றை வீட்டுக்கு வந்தவுடனேயே குளிர்ப்பதனப் பெட்டியில் வைத்துவிடுங்கள். பச்சை முட்டையை ஒரு போதும் சாப்பிட வேண்டாம். பச்சை முட்டையை வைக்கும் பாத்திரங்களைக் கூட நன்கு கழுவிவிட்டுப் பிறகே பயன்படுத்துங்கள்.
ஃப்ரிட்ஜில் ஏதாவது உணவுத் துகள்கள் சிந்தியிருக்கலாம். கவனித்து, அவற்றை அவ்வப்போது அப்புறப்படுத்திவிடுங்கள்.
3. பொம்மைகளை சுத்தமாக வைத்திருங்கள்!
பொம்மையை வாயில் வைத்துக்கொள்ளும் பழக்கம் குழந்தைகளுக்கு உண்டு. அது மட்டுமல்ல, பொம்மையைத் தரையில் தூக்கி வீசுவதும் சகஜம்தான். குழந்தைகளுக்கு இதனால் நோய்க் கிருமிகள் பரவலாம். அவர்கள் அதை மற்றவர்களுக்குப் பரப்பும் வாய்ப்பும் அதிகம்.
தண்ணீர் விட்டு அவ்வப்போது சுத்தம் செய்ய முடியாத பொம்மைகள் இருந்தால் அவற்றைப் பயன்படுத்தாமல் தூக்கி எறிந்துவிடுவதே நல்லது.
4. மிருகங்கள் ஜாக்கிரதை!
காட்டு மிருகங்களோ, உழவு மிருகங்களோ பலவித தொற்றுநோய்களுக்குக் காரணமாக அமைகின்றன. ஏதாவது மிருகம் உங்களைக் கடித்தாலோ அல்லது அவற்றின் கொம்பு அல்லது வால் பகுதி உங்கள் உடலில் காயத்தை ஏற்படுத்தினாலோ உடனடியாக அந்தப் பகுதியை சோப்புத் தண்ணீரினால் தொடர்ந்து சில முறைகள் கழுவ வேண்டும். விலங்குகள் போடும் கழிவுகளிலிருந்தும் தொற்றுநோய்க் கிருமிகள் பரவ வாய்ப்பு உண்டு என்பது ஞாபகம் இருக்கட்டும்.
வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளால்கூட வட்டப்புழு போன்றவை குழந்தைகளுக்குப் பரப்பிவிட வாய்ப்பு உண்டு. செல்லப் பிராணிகளை சுத்தமாகப் பராமரியுங்கள். அவற்றின் கழிவுகளை உடனுக்குடன் அப்புறப்படுத்துங்கள்.
வீட்டில் எலித் தொல்லை இருக்கக்கூடாது. உணவுப் பொருள்களைக் கடித்துவைக்கும் என்பதனால் பலவித தொற்றுநோய்கள் இதனால் உண்டாகலாம். பொறி வைத்துப் பிடிப்பீர்களோ, மருந்தை வைப்பீர்களோ... வீட்டில் எலிகள் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
5. பயணம் செல்லும்போது...
வெளிநாடுகளுக்குச் செல்லும்போது அங்கே என்ன மாதிரி வியாதி நிலவுகிறது என்பதை முதலில் அறிந்துகொள்ளுங்கள். அதற்கான தடுப்பூசி இருந்தால் தவறாமல் போட்டுக்கொண்டு செல்லுங்கள். எந்த இடத்துக்குப் போனாலும் கொசுவலை போன்ற கொசுக்கெதிரான ஏதாவது தடுப்புச் சாதனத்தை எடுத்துச் செல்வது நல்லது.
6. மனம்போன போக்கெல்லாம் போகவேண்டாமே...!
ஒருவனுக்கு ஒருத்தி என்பது மிகவும் கர்நாடகமான நல்லொழுக்க நெறியாக இருக்கலாம். சாகஸ விரும்பிகளுக்கு இது எட்டிக்காயாகக் கசக்கலாம். ஆனால் பலவித அபாயகரமான வியாதிகள். தவறான நபர்களிடம் கொள்ளும் உடலுறவின் மூலம் பரவுகின்றன என்பதை மறந்து, நமக்கு நாமே சவக்குழி தோண்டிக்கொள்ளலாமா?

No comments:

Post a Comment