Friday, November 12, 2010

மது என்னும் அரக்கன்

மது என்னும் அரக்கன்

டாக்டர். ஜமுனா ஸ்ரீனிவாசன் Self Control is the best medicine for Addiction on Alcohol - Food Habits and Nutrition Guide in Tamil
உடல் ரீதியாக மனரீதியாக ஒழுக்க ரீதியாக மனிதனிடம் பாதிப்புகளை ஏற்படுத்தி அவனது வாழ்க்கையை அவனது குடும்பத்தினரின் வாழ்க்கையைச் சீரழித்து, சின்னாபின்னமாக்கக் கூடிய மற்றொருத் தீய பழக்கம் மதுக் குடிப்பழக்கம்.

மது இயற்கையில் உண்டாகிற ஒரு திரவமன்று. அது பதார்த்தங்கள் கெடுவதால் உண்டாவதாகும். கோதுமை சோளம் ஒட்ஸ் பார்லி அரிசி திரட்சை போன்றவற்றைலிருந்து இது தயாரிக்கப்படுகிறது. திராட்சை ரசத்தைப் புளிக்க வைக்கும் ஈஸ்ட் சத்தானது பழத்திலும் தானியங்களிலுமுள்ள மாவையும் சர்க்கரையையும் மதுவாக மாற்றி விடுகிறது.

சண்டை சச்சரவுகள் களவு கொலை கற்பழிப்பு போன்ற எல்லாவிதமான கீழ்த்தன்மைச் செயல்களும் குற்றங்களும் மதுவின் தூண்டுதலாலேயே நடைபெறுகின்றன.
நீதிமன்றங்களில் மிகக் கடுமையான தண்டனை அடைந்தவர்களில் பெரும்பாலானோர் இந்த மதுவினால் கீழ்த்தன்மைக்கு உள்ளானவர்களே. யுத்தம் பஞ்சம் கொள்ளைநோய் ஆகிய இம்மூன்றும் கொண்டுவந்த அழிவை விட மதுபானம் அதிகக்கேடு விளைவிக்கக் கூடியது என்று கூறுவார்கள்.
உடலினுள்ளே தப்பித் தவறி ஊடுருவும் நோய்க் கிருமிகளை அழிக்கும் சக்தி நமது உடலுக்கு இயல்பாகவே உண்டு. நோயை எதிர்க்கும் இந்த ஆற்றலை மது அழித்து விடுகிறது.
இதனால் மது அருந்துபவர் எளிதில் எந்நோய்க்கும் இரையாவார். மது அருந்துபவரின் மனம் அம்மனிதனை எளிதில் ஒரு மிருகமாக்கி விடும். மனிதத் தன்மை அழிந்து மிருக சக்தி ஏற்படுவதால் அவர்களுக்கு நல்லது கெட்டது எதுவும் புரியாது.
நாள்தோறும் சிறிது மதுவைக் குடித்து வருபவர் தனக்கு மதுவால் அதிக தீங்கு நேரவில்லை. நேராது என்று எண்ணி தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொள்வார். ஆனால் அவர் தனது ஈரல் மூளை நரம்புகள் சிறுநீரகங்கள் பாலின உறுப்புகள் நுரையீரல்கள் இரைப்பை இரத்தக் குழாய்கள் ஆகியவற்றின் உட்புறத்தைப் பாதிக்க நேர்ந்தால் இந்த உறுப்புகளெல்லாம் சிறிது சிறிதாகக் கெட்டுவருவதை அறியக் கூடும்.
ஒரு மனிதன் குடிப்பதைப் பொறுத்து குடிக்கப்படும் மதுவில் 20 சதவீதம் உடனடியாக ரத்தத்துடன் கலக்கிறது. குடிக்கப்பட்ட மது முழுவதையும் கல்லீரல் எரிக்கும் வரை அது மூளை முதலான உடல் உறுப்புகளில் பரவுகிறது. இதைத் தொடர்ந்து இரத்தத்தில் கலந்து ஆல்கஹாலின் அளவைப் பொறுத்து விளைவுகள் எற்பட்டு விடுகின்றன.
மதுவின் ஆக்கரமிப்பால் உடல் நரம்புகளும் பாதிப்படையும். பார்வை நரம்புகள் பாதிக்கப்படும் கைகால் நரம்புகள் தாக்குதலுக்குள்ளாகும். குடலின் புண் ஏற்பட்டு இரைப்பை அழற்சி நேரும். குடல் கல்லீரல் செல்கள் சேதப்படும். உடலின் ஒவ்வோர் உறுப்பிலும் பாதிப்பின் சுவடுகள் அதிகமாகும்.
பொழுதுபோக்காக ஆரம்பிக்கப்படும் மதுப்பழக்கம் பின் எந்நேரமும் மதுவைப் பற்றி நினைவுடனேயே இருக்க வைத்துவிடும். குடிக்கும் அளவு எல்லை மீறிப்போகும்.

குடிக்கு அடிமையான பின் நரம்புத் தளர்ச்சியால் கை கால்கள் நடுங்கும். நடுங்கும் அறிகுறிகளைத் தவிர்க்க மேலும் குடிப்பார்கள். மதுவை வாங்கி வீட்டில் வைத்துக் கொண்டு குடிக்க ஆரம்பிப்பார்கள். பின் வெளிப்படையாகத் தெரிய ஆரம்பித்து சுயக் கட்டுப்பாடு மீறிப் போய்விட்டால் குடிப்பதற்காகப் பலவித காரணங்களைக் கூறுவார்கள். அந்த காரணங்களை நியாயப்படுத்துவார்கள. சொல்லியும் கேட்காமல் குடித்ததற்கு மன்னிப்புகளை அள்ளி விடுவார்கள்.
குழந்தை இல்லையென்ற கவலையை மறக்கச் சில ஆண்கள் மது அருந்துவதும் உண்டு. குழந்தை இல்லாமைக்காக அவரின் மனைவியும் மது அருந்த ஆரம்பித்தால் சமுதாயம் என்னாவது ?
நட்புக்காகக் குடிப்பதற்கும் அடிமையாவதற்கும் இடையேயான நூலிழை போன்ற அளவுக்கோட்டை எப்போது நாம் தாண்டினோம் என்பதைப் பல குடிகாரர்கள் அறிய நினைத்தும் முடிவதில்லை. தங்கள் வாழ்க்கையை மெல்ல மெல்ல அது அழித்துக் கொண்டு வருகிறது. என்று அவர்கள் உணர்ந்த நிலையிலும்கூட அப்பழக்கத்தை அவர்களால் கைவிட முடியாது.
மது அருந்துவது உடல் நலத்தை மட்டுமின்றி மன நலத்தையும் அதிக அளவில் பாதிக்கும். அளவுக்கு மீறி மது குடிப்பது. மது குடிப்பது பற்றியே நெடுநேரம் சிந்தித்துக் கொண்டிருப்பது. குடிக்காமல் நிறுத்திய உடனே உடலளவிலும் மனத்தளவிலும் பதற்றம். நடுக்கம் ஏற்படுவது போன்றவை ஒருவன் மதுப் பழக்கத்திலிருந்து குடி நோயாளியாகவே மாறிவிட்டதை உணர்த்தும். மெல்ல மெல்லக் காரணமற்ற பயம் தன்னைப் பற்றியும் தன் குடும்பம் பற்றியும் அவநம்பிக்கையான எண்ணங்கள் வெறித்தனம் தாம்பத்ய உறவில் பிரச்னைகள் மூளையின் செயல்திறன் மங்கிப்போதல் முக்கியமாக நினைவாற்றல் இழக்கும் நிலை மது குடிக்கவில்லை என்றால் ஒருவித மனப்ழீரமை அதிம்சி நடுக்கம் எரிச்சல் போன்ற மனநலக் குறைபாடுகள் தோன்றும்.
இது முற்றிய நிலையில் குடும்பத்தினர் நண்பர்கள் சக ஊழியர்கள் போன்றோரின் தொடர்பும் உறவும் துண்டிக்கப்படுவதுடன் உடல் ரீதியாக வேறு பாதிப்புகளும் அதிகமாகி விடும். ஒரு கட்டத்தில் அந்த வகை மதுவை எவ்வளவுதான் குடித்தாலும் போதை ஏறாததால் அதிலும் மட்டமான ஆனால் மேலும் போதை தரக்கூடிய சாராயம் போன்றவற்றைக் குடிக்க ஆரம்பிப்பர். குறைந்த செலவில் அதிக போதை நாடி கள்ளச் சாராயம் குடித்து கண் இழந்து உறுப்புகள் செயலிழந்து எத்தனை குடும்பங்கள் தவித்து நிற்கின்றன என்பதைத்தான் நாம் அவ்வப்பொழுது பத்திரிகைகளில் பார்க்கிறோமே? அதைத் குடித்தும் மரத்துப் போய் போதையின் அளவு குறையக் குறைய தூக்க மாத்திரைகளை சிலர் பயன்படுத்த ஆரம்பிப்பர். பின்னர் தூக்க மாத்திரைகளை அதிகம் போட்டும் அவற்றாலும் பயனின்றிப் போக அடுத்த கட்டமாக போதையை இன்னும் அதிகம் நாடி போதை மருந்துகளை ருசி பார்க்க முயலுவர்.
இவ்விதம் குடிகாரனின் போதை உணர்வு அதிகமாகிக் கொண்டே போய் ஒரு வெறியாய் மாறிவிடும். கடைசியில் கோமா என்னும் நிலைக்குப் போய் விடுவோரும் உண்டு.
உலகில் மதுவால் அழிவுள்ள மனிதர்கள் குடும்பங்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காது. நன்றாக வாழ வேண்டும் மதிப்பு மிக்கவர்களாக வாழ வேண்டும் என்ற எண்ணமுடையவர்கள் கண்டிப்பாக மதுவைத் தொடக் கூடாது.

மனம் கட்டுப்பாடாக இருந்தால் சூழ்நிலை படு மோசமானதாக இருந்தாலும் மனக் கட்டுப்பாடு கொண்டவர்களை யாராலும் குடிகாரனாக்க முடியாது. குடிகாரர்கள் மத்தியிலும் கூட ஒழுக்கத்தில் உயர்தவராகளாகவே வாழலாம். எனவே மனக் கட்டுப்பாட்டுடன் மதுவை வெறுப்போம்.

No comments:

Post a Comment