Friday, November 12, 2010

போதையின் விஸ்வரூபம்

போதையின் விஸ்வரூபம்

டாக்டர். ஜமுனா ஸ்ரீனிவாசன் Effects of Drugs and alcohol - Food Habits and Nutrition Guide in Tamil
நமக்கு பீதியும் அச்சமும் ஏற்படும் விதத்தில் நம்மை நமது இளைய தலைமுறையை தொற்று நோயின் வேகத்தோடு தாக்கி பலவீனப்படுத்தி சேதப்படுத்தி ஒரு சமுதாயத்தையே செயலிழக்கச் செய்யும் சக்தி படைத்தது போதை மருந்துப் பழக்கம்.
இப்போது இப்பழக்கம் மிக வேக வேகமாக மேலை நாடுகளுக்கு இணையாக நம் நாட்டிலும் பரவி வருவது மிக மிக அதிர்ச்சி தரும் செய்தியாகும்.
வெளிநாட்டினரிடமிருந்து தொற்றிக் கொண்ட இந்தப் பழக்கம் வளர்ந்து விஸ்வரூபம் எடுத்து உற்பத்தி உபயோகிப்பு என பல விதங்களில் வெளிநாட்டினரையே மிஞ்சி விடக் கூடிய நிலையை நம் நாட்டில் இன்று தோற்றுவித்துள்ளது.
கஞ்சா போன்ற போதைப் பொருள்களை சிகரெட்டில் திணித்துப் புகைத்து இன்று பல இளைஞர்கள் மயங்கி இன்பம் கொள்கிறார்கள். அதேபோல் ஊசி மூலம் சிலர் பெத்தடின் போன்ற போதை மருந்துகளை ஏற்றிக் கொண்டு அந்தரத்தில் பறக்கிறார்கள்.
அதேபோன்று போதை மாத்திரைகளை விழுங்கி விட்டு ஏதோ ஒரு மயக்க நிலையில் தனிச் சுகம் காண்பதை இன்றைய இளைஞர்கள் பெரிதும் விரும்புகிறார்கள். மாத்திரைகள் எளிதில் கிடைப்பதாலும் அவற்றை வாங்கி வைத்துக் கொண்டு தமது அறைக்குள்ளிலிருந்தே மாத்திரைகளைப் பயன்படுத்துவோர் தொகை அதிகமாகி வருகின்றது.
இதன் அளவை அதிகமாக்கி அதிகமாக்கி விளையாட்டாகத் தொடங்கிய பழக்கம் பின் அவற்றை விட முடியாத நிலைக்கு ஆளாக்கி தனக்கு அடிமையாக்கி விடுகிறது. இந்த போதை மருந்துகளால் சிலர் இல்லற வாழ்க்கைக்கே தகுதியற்றவர்களாகவும் சிலர் ஆண் மலட்டுத் தன்மைக்கும் ஆளாக்கப்படுகிறார்கள்.
இதில் வேதனை தரும் விஷயம் என்னவெனில். ஆண்கள் மட்டுமின்றி, இன்றைய நாளில் நாகரிக மயக்கத்தின் கல்லூரிப் பெண்களிலும் பலர் போதை மருந்துப் பழக்கத்திற்கு அடிமையாகி வருவதும் கசப்பான உண்மை.
முதலில் நண்பர்களின் தூண்டுதல்களாலும் கட்டாயத்தாலும் மற்றவர்களின் அனுபவங்களைக் கேட்டும் தவறான ஆர்வத்தை உருவாக்கிக் கொண்டு இந்தப் போதைப் பழக்கத்தைத் தொடங்குகிறார்கள்.
போதை மருந்து எப்படி இருக்கும் பரீட்சித்துத்தான் பார்ப்போமே என்று அறியும் ஆர்வம். அடுத்தவரின் நிர்ப்பந்தம். இன்பம் தரும் என்ற நம்பிக்கை, தவறான சுதந்தர தாகம். சிரமமில்லாமல் போதை மருந்துகள் கிடைக்கும் வாய்ப்பு. அதிகமான பணப்புழக்கம். அடிக்கடி அளவில்லாத எதிர்காலக் கற்பனைகள் தன்னை யாரும் புரிந்து கொள்ளவில்லையே என்ற ஏக்கம். கனவுகள் நனவாகாததால் ஏற்படும் ஏமாற்றங்கள் படித்திருந்தும் வேலை கிடைக்காததால் ஏற்பட்ட விரக்தி. வாழ்க்கையில் சந்தித்த தோல்விகள். கவலைகள். மனச்சோர்வுகள் போன்றவை காரணமாக இப்பழக்கமெனும் ஆழ்கிணற்றில் வீழ்கிறார்கள்.
சில குடும்பங்களில் தந்தை பணம் சேர்க்கப் பாடுபடுவார். தாயோ அந்தஸ்துக்காக விருந்து கேளிகைளில் நேரத்தைச் செலவிடுவார். இது போதை மருந்துப் பழக்கத்திற்குப் பொருத்தமான சூழ்நிலையை அவர்களின் குழந்தைகளிடம் உருவாகி விடுகிறது.
வாழ்க்கையில் பிரச்னைகளே இல்லாத வாழ்க்கையில் பற்றுக்கோடு இல்லாத நல்லவர் சொல்லுக்கு மதிப்புக் கொடுக்காத இளைஞர்களிடம் தான் இந்தப் பழக்கம் அதிகமாகக் காணப்படுகிறது. பணம் படைத்தவர்களின் வாரிசுகளாகயிருந்து தூய அன்புக்கு ஏங்கி தனிமையின் ஏக்கத்தை விரட்டி அடிக்க இப்பழக்கத்தில் ஈடுபடுகிறார்கள்.
இளைஞர்களின் உணர்வுகள் அலட்சியப்படுத்தப்படுவதும். அவர்கள் மீது பெற்றோர் அன்பு செலுத்தி அவர்களைப் புரிந்து கொள்ளாமல் இருப்பதும். அவர்களுக்கிடையே இணக்கமான உறவு இல்லாததும் இத்தீய பழக்கத்திற்கு அவர்கள் அடிமையாக நேர்கிறது.
மேலும் இவ்வித இளைஞர்கள் அளவுக்கு மீறிய பாதுகாப்பினால் பிரிக்கப்பட்டுத் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். அடைய முடியாத இலட்சியத்தை சில பெற்றோர் முன் வைப்பதாலும் அல்லது அவர்கள் கூறியபடி சாதனை நிகழ்த்தாவிடில் தங்கள் பெற்றோரை ஏமாற்றத்திற்கு உள்ளாக்க வேண்டியிருக்குமோ என்ற சஞ்சலத்தாலும் அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
ஓபியம், அபினி, கஞ்சா, அகீஷ், பிரவுன் சுகர், ஹெராயின், மார்முவானா, மர்பிட் சரேட்ஸ் அம்படாமின் என பல்வேறுவகை போதை மருந்துகள்.. . போதை நஞ்சுகள் இன்று பரவியுள்ளன. இவற்றால் கவலையைச் சற்று மறக்கச் செய்ய முடியுமே தவிர அறவே போக்க முடியாது.
ஒருவருக்கு நீரிழிவு நோய் ஒரு முறை வந்தால் அது எப்படி அவரோடு நிர்ந்தரமாகி விடுகிறதோ அதேபோல் போதைப் பழக்கமும் ஒருமுறை தொற்றிக்கொண்டால் வாழ்நாள் முழுவதும் தனக்கு அடிமையாக்கி விடுகிறது.
இருபது ஆண்டு பெருங்குடியினால் ஏற்படக்கூடிய மோசமான விளைவுகளை பிரவுன் சுகர் போன்ற போதை மருந்துகள் வெறும் இரண்டே ஆண்டுகளில் ஒருவனது உடலில் ஏற்படுத்தி விடுகின்றனவாம்.
போதைப் பழக்கத்தினர் அனைவரும் அதற்கு முன் நல்லவர்களாக இருந்தவர்கள் தாம். இந்தக் கொடுமைக்குப் பின் அறிவுக் கூர்மை மிக்க இளைஞர்கள் தங்கள் அறிவாற்றலை இழந்து விடுகின்றனர்.
வாலிப நெஞ்சங்கள் நடமாடும் எலும்புக் கூடுகளாக மாறிவிடுகின்றனர். பொறுப்பு மிக்க குடிமக்கள் பொறுப்புகள் அற்றவர்களாக தங்கள் வீட்டை விட்டு ஓடத் தொடங்கி மதிப்பு மரியாதையை இழந்து விடுகின்றனர்.

No comments:

Post a Comment