Friday, November 5, 2010

வ.உ.சிதம்பரம்பிள்ளை (1872 - 1936)

வ.உ.சிதம்பரம்பிள்ளை (1872 - 1936)
 
விடுதலைக்கு வித்திட்ட வீரர்களுள் ஒருவர். "கப்பலோட்டிய தமிழன்", "செக்கிழுத்த செம்மல்" என்றெல்லாம் விளங்கும் வ. உ. சிதம்பரம் பிள்ளை, நெல்லை மாவட்டத்தில் தோன்றியவர் இவர்; நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்டு நலிவுற்றவர். செக்கிழுத்த செம்மல். நாட்டு முன்னேற்றத்திற்காக மட்டுமின்றி, இலக்கிய இலக்கண வளர்ச்சிக்காகவும் அரும்பாடுபட்டவர். சிறந்த பதிப்பாசிரியர் திருக்குறள் மணக்குடவருரை, தொல் - இளம் பூரணர் மேலைநாட்டுத் தத்துவப் பேரறிஞராய் விளங்கிய ஜேம்ஸ் ஆலென் எழுதிய நூல்களுக்குத் தமிழாக்கம் செய்தவர்.
தமிழ் நாட்டில் உள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் ஒட்டப்பிடாரம் எனும் ஊரில் உலகநாதன் பிள்ளை - பார்வதி அம்மை என்பவர்களுக்கு மூத்த மகனாக இவர் பிறந்தார். அடிப்படைக் கல்வியை ஓட்டப்பிடாரத்திலும், உயர்நிலைக் கல்வியை தூத்துக்குடியிலும், சட்டக்கல்வியைத் திருச்சியிலும் பெற்று 1895-ல் வழக்கறிஞரானார்.
உரிமையியல், குற்றவியல் ஆகிய இரண்டு சட்டத் துறைகளிலுமே சிறந்து விளங்கிப் பொருள் குவித்தார்.தமிழாராய்ச்சி, தத்துவ ஆராய்ச்சி ஆகியவற்றிலும் ஆர்வம் கொண்டிருந்தார். விவேகபானு என்கிற மாத இதழை நடத்தி வந்தார். சைவ சித்தாந்த சபை, மதுரைத் தமிழ்ச் சங்கம், வாலிபர் சங்கம், பிரம்ம சங்கம் போன்ற சங்கங்களில் உறுப்பினராகித் தன் அறிவுப் பசிக்குத் திசைதோறும் உணவு தேடினார்.
சென்னையில் விவேகானந்தர் மடத்தைச் சேர்ந்த இராமகிருஷ்ணானந்தரின் சந்திப்பு வ.உ.சியின் உள்ளத்தில் விடுதலைக் கனலை ஓங்கச் செய்தது. அதன்பிறகே அவர் வாழ்வில் புது அத்தியாயம் தொடங்கியது. தூத்துக்குடி திரும்பியதும், கைத்தொழில்சங்கம், தருமசங்கம், நூல்நூற்பு நிறுவனம், தேசியப் பண்டகசாலை ஆகியவற்றை நிறுவி சுதேசியம் வளர்க்க ஆரம்பித்தார். வந்தே மாதர முழக்கங்களைத் துணிகளில் எழுதச் செய்து வீதிகள் தோறும் வீடுகள் தோறும் தேசிய உணர்வை வளர்த்தார். பாலகங்காதர திலகரின் விடுதலைப் போராட்டத்தில் மனதைபறிகொடுத்து, இந்திய சுதந்திரப் போராட்டத்தி்ற்காகப் பாடுபட்டார்.
கப்பலோட்டிய தமிழன்
ஆங்கிலேய ஆதிக்கம் கடல்வழி வணிகத்தினால் தான் வளர்ந்தது என்கிற அடிப்படையில், அவர்களை விரட்ட, அவர்களுடைய கப்பல் கம்பெனிக்குப் போட்டியாக, 1906-ஆம் ஆண்டு "சுதேசி நாவாய்ச் சங்கம்" என்கிற சங்கத்தை நிறுவி அதன் செயலாளர் ஆனார். (அதன் தலைவர் மதுரை தமிழ்ச்சங்கத் தலைவர், வள்ளல் பாண்டித்துரைதேவர்; சட்ட ஆலோசகர் சேலம் சி.விஜயராகவாச்சாரியார்). அந்தக் கம்பெனியின் சார்பில் காலியா, லாவோ ஆகிய இரண்டு கப்பல்களை வாங்கி தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து இயக்கத் தொடங்கினார். அதனால் கப்பலோட்டிய தமிழன் என்று அனைவராலும் அழைக்கப்பட்டார்.
செக்கிழுத்த செம்மல்
தொடர்ந்த இவருடைய சுதந்தரப் போராட்ட நடவடிக்கைகளால் எரிச்சலடைந்திருந்த ஆங்கிலேய அரசு, 1908-ஆம் ஆண்டு மார்ச் 9-ஆம் நாள் விபின் சந்திரபாலர் விடுதலைக் கொண்டாட்டத்தின் போது அரசாங்கத்தை அவமதித்ததாகவும், சுதந்திரத்திற்காக பொதுமக்களைத் தூண்டியதாகவும் இவர்மேல் வழக்குப் பதிவு செய்து, இவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை கொடுத்தது. (அரச நிந்தனைக்கு 20 ஆண்டுகள், சுப்ரமணிய சிவாவுக்கு உடந்தையாக இருந்ததற்கு 20 ஆண்டுகள். மொத்தம் 40 ஆண்டுகள். அதுவும் அந்தமான் சிறையில்). தீர்ப்பளித்தவர் திருநெல்வேலி ஜில்லா செஷன்ஸ் நீதிபதி ஏ.எஃப்.ஃபின்ஹே. அந்தத் தீர்ப்பினை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. முறையீட்டின் போது அந்தமான் அனுப்ப இயலாது என்பதால் கோவைச் சிறையில் அடைக்கப்பட்டார் வ.உ.சி. அங்கே தான் செக்கிழுக்க வைக்கப்பட்டார். செக்கிழுத்த செம்மல் என்ற பெயரும் இவருக்கு உண்டு. சென்னை உயர் நீதிமன்றம் அவருடைய தண்டனைக் காலத்தைப் பத்தாண்டுகளாகவும், லண்டன் பிரிவியூ கவுன்ஸில், ஆறு ஆண்டுகள் கடுங்காவலாகவும் குறைத்தன.
"சிரெல்லாம் நிறைந்து விளங்கும் செந்தமிழ் நூல்களிற் சிறந்தது, "திருக்குறள்" என்று வழங்கும் வள்ளுவர் நூல்.
"தருமர், மணக்குடவர், .தாமத்தர். நச்சர், பரிமேலழகர், பருதி, திருமலையர், மல்லர், கவிப்பெருமாள், காளிங்கர் வள்ளுவர் நூற்கெல்லைஉரை யெழுதினோர். " அப்பதின்மர் உரைகளில் தற்காலம் தமிழ் நாட்டில் பயின்று வழங்குவது பரிமேலழகருரை ஒன்றே. அவ்வுரையைச் சில வருடங்களுக்கு முன்னர் யான் படிக்கத் தொடங்கினேன். அப்பொழுது மற்றைய ஒன்பதின்மர் உரைகளையும் பார்க்க வேண்டுமென்னும் அவா எனக்கு உண்டாயிற்று. அதுமுதல் தமிழ் நூல்கள் இருக்கும் இடங்களில் அவற்றைத் தேடவும் தேடுவிக்கவும் முயன்றேன். அம்
முயற்சியின் பயனாக எனக்குக் கிடைத்தவற்றில் மணக்குடவருரைப் பிரதி ஒன்று.
- "கப்பலோட்டிய தமிழ" னின் (மணக்குடவருரை)

No comments:

Post a Comment