Tuesday, November 9, 2010

கொழுகொழு குழந்தைகளா... அம்மாக்களே உஷார்!

கொழுகொழு குழந்தைகளா... அம்மாக்களே உஷார்!

'Obese Children are not chubby and healthy' is a signal of future risk to parents - Child Care Tips and Informations in Tamil
'கொழுகொழு குழந்தைதான் ஆரோக்கியம்' என்கிற எண்ணம், காலங்காலமாக அம்மாக்கள் மத்தியில் ஊறிப்போன விஷயம். குழந்தையின் ஆரோக்கியத்தைத் தீர்மானிப்பது அதன் புசுபுசு உடல்வாகில்லை என்பதில் படித்த பெண்களுக்கே இன்றளவும் விழிப்புணர்வு இல்லை. பருமன் என்பது பெரியவர்களுக்கு எந்தளவு ஆபத்தானதோ, அதே போன்றதுதான் குழந்தைகள் விஷயத்திலும்! வயதுக்கு மீறிய வளர்ச்சியுடன் காணப்படுகிற குழந்தைகளை சமீபகாலமாக பரவலாக பல வீடுகளிலும் பார்க்கிறோம். "குழந்தைதானே... வளர வளர சரியாயிடும்" என்கிற சமாதானத்துடன் அதை அலட்சியப்படுத்துகிற பெற்றோரையும் பார்க்கிறோம். "அந்த அலட்சியம் மிகத்தவறானது. குழந்தைப்பருவ பருமனை உடனடியாகக் கவனித்து சரி செய்ய வேண்டும்" என்று எச்சரிக்கிறார் குழந்தைகள் நல மருத்துவர் சங்கர்.
"அதிக எடையும் பருமனும் ஒன்றுக்குள் ஒன்று தொடர்புடையது. குழந்தை சராசரியைவிட கூடுதல் பருமன் இருக்கிறதாக நினைக்கிற பெற்றோர், குழந்தைகள் நல மருத்துவர்கிட்ட காட்டி உயரத்துக்கேற்ற எடை இருக்காங்கிறதை சரி பார்த்துக்கணும்" என்று ஆரம்பிக்கிற டாக்டர், குழந்தைப் பருவ பருமனுக்கான காரணங்களைப் பட்டியலிடுகிறார்.
"பாரம்பரியம் காரணமாக சில குடும்பங்கள்ல பருமன் தொடரலாம். "ஹைப்போ தைராய்டிசம்"னு சொல்ற தைராய்டு குறைவா சுரக்கிறது, நீரிழிவு போன்ற சில வகை நோய்களும் பருமனுக்குக் காரணமாகலாம். பாரம்பரிய உணவுப்பழக்கம் தவிர்க்கப்பட்டு, அதிகக்கொழுப்பு சேர்ந்த பீட்சா போன்ற ஃபாஸ்ட் ஃபுட் கலாசாரம், நடை என்ற விஷயமே மறக்கப்பட்டு, வாகன சுகத்துக்கும் லிஃப்டுக்கும் பழகிப் போனது. உடற்பயிற்சிங்கிற பேச்சுக்கே இடமில்லாம எந்நேரமும் டி.வி., கம்ப்யூட்டர் முன்னாடியே உட்கார்ந்திருக்கிறது.... இதெல்லாம் பிரதான காரணங்கள்" என்கிற டாக்டர் சங்கர், குழந்தைப்பருவ உடல் பருமனுக்கான முதல் வித்து குழந்தை பிறந்த உடனேயே விதைக்கப்படுவதையும் சுட்டிக் காட்டுகிறார்.
"குழந்தை பிறந்ததும், தாய்ப்பால் கொடுக்கிறதைத் தவிர்த்து, ஊட்டச்சத்துள்ள 'டின்' பால் பயன்படுத்தறாங்க பல அம்மாக்கள். அந்தப் பருவத்துலதான் கொழுப்புத் திசுக்கள் அதிகமாக உடம்புல உற்பத்தியாகும். அதிகப்படியான பால் உணவுகள், இந்த கொழுப்புத் திசுக்கள் அதிகரிக்கக்காரணம். இந்தத் திசுக்கள்தான் வருங்காலத்துல குழந்தைகளோட பருமன் நோய் பாதிப்புக்கு காரணமாகுது."
பருமனை சாதாரண பிரச்சினையாக நினைத்து ஏன் அலட்சியப்படுத்தக்கூடாது என்பதற்கான காரணங்களையும் விளக்குகிறார் டாக்டர்.
"குண்டா இருக்கிற குழந்தைகளுக்கு உடல் விகாரமா மாறும். மத்தவங்களோட கிண்டலும் கேலியும் சேர்ந்து, ஒரு கட்டத்துல அந்தக் குழந்தையோட தன்னம்பிக்கை குறைய ஆரம்பிக்கும். சின்னச் சின்ன பயிற்சிகளை செய்யறதுல கூட சிரமத்தை உணர்வாங்க குண்டுக் குழந்தைகள். உதாரணத்துக்கு வகுப்பறை மூணாவது, நாலாவது மாடியில இருக்கலாம். புத்தகப்பை, சாப்பாட்டுப் பைகளைத் தூக்கிட்டு படியேறவே சிரமப்படுவாங்க. சுவாசப்பையில மூச்சுத் திணறல், இதயக்கோளாறு போன்ற பிரச்சினைகளுக்குக் கூட பருமன் காரணமாகலாம்."
கணவன்-மனைவி இருவரும் வேலைக்குச் செல்கிற குடும்பங்களில், தனித்து விடப்படுகிற குழந்தைகள் அதிகளவு உண்கிற அபாயம் இருப்பதாகச் சொல்கிற சங்கர், குழந்தைகளின் பருமனைக் குறைக்க எளிய வழிகளைக் காட்டுகிறார்.
* பெரியவங்களுக்கு சொல்ற மாதிரியான அளவு சாப்பாடோ, பத்தியச் சாப்பாடோ, குழந்தைகளுக்குத் தேவையில்லை. குழந்தைகள் ஏங்கிப் போயிடும். தவிர அந்த வயசுல அவங்களுக்குத் தேவையான முழுமையான சத்துகள் கிடைக்காமப் போகும் அபாயமும் உண்டு. உணவுக்கட்டுப்பாட்டுக்குப் பதிலா, உடற்பயிற்சிப் பழக்கத்தைக் கொண்டு வருவதே சிறந்தது.
* இன்னிக்கு பல வீடுகள்ல விளையாட இடம் இருக்கிறதில்லை. இருக்கிற சின்ன இடத்துலயோ, மொட்டை மாடியிலயோ குறுக்கே ஒரு கயிற்றைக் கட்டி, டென்னிகாய்ட் விளையாடச் செய்யலாம். இது சிம்பிளான, அதே சமயம் பலன் தரக்கூடிய உடற்பியிற்சி. பெரியவங்களும் சேர்ந்து விளையாடினா குடும்ப உறவுகளும் பலப்படும்.
* வீட்டுக்குள்ளேயே ஸ்டாட்டிக் சைக்கிள் வாங்கி வச்சு, டி.வி. பார்த்தபடியே குழந்தைகளை உடற்பயிற்சி செய்ய வைக்கலாம்.
* பார்ட்டி, விருந்துகளுக்குப் போறதைத் தவிர்க்கணும்.
* பாரம்பரிய உணவுகள் பக்கம் கவனத்தைத் திருப்பணும். பள்ளிக்கிடம் முடிஞ்சு வர்ற குழந்தைகளுக்கு பாக்கெட் தீனிகளை வாங்கித் தராம, வீட்லயே ஆரோக்கியமான முறைல செய்யக்கூடிய வேர்க்கடலை உருண்டை, பொரிமா உருண்டை, சுண்டல் தரலாம்.
* எல்லாத்தையும் விட முக்கியமா, அளவான உடல்வாகுதான் அழகானது, ஆரோக்கியமானதுங்கிற எண்ணத்தைக் குழந்தைங்க மனசுல பதிய வைக்கணும்.
ஆரோக்கியமான அளவான உணவும், உடற்பயிற்சியுமே குழந்தைப்பருவ பருமனுக்கான தீர்வுகள் என்கிற ஊட்டச்சத்து நிபுணர் புவனேஸ்வரி, பெற்றோருக்கான அறிவுரைகளுடன் தொடர்கிறார்.
"ஒரு வயசுல 9 கிலோ எடை இருந்தாலே போதும். குப்புற விழ வேண்டிய வயசுல குப்புற விழுந்து, தவழ வேண்டியபோது தவழ்ந்து... குழந்தையோட செய்கைகள் சாதாரணமா இருக்கிறதும், அடிக்கடி இன்ஃபெக்ஷன் வராம இருக்கிறதும்தான் முக்கியம். குழந்தைப் பருவத்துல குண்டா இருக்கிறவங்களுக்கு, வளர்ந்ததும் கொழுப்பு செல்கள் 3 மடங்காக அதிகரிக்கிற அபாயம் உண்டு.
"என் குழந்தை காய்கறியே சாப்பிடாது"ன்னு பெருமையா சொல்லிக்கிற அம்மாக்களை நிறைய பார்க்கலாம். குழந்தைகளுக்கு காய்கறி, பழங்களை சாப்பிடப் பழக்க வேண்டியது அம்மாக்கள்தான். அடுத்து, குழந்தை விரும்பி சாப்பிடுதுங்கிறதுக்காக சிப்ஸ், சாக்லெட், ஐஸ்கிரீம் போன்ற அயிட்டங்களை வாங்கிக் கொடுக்கிறதும் கூடாது. குழந்தை வளர்ந்ததும் அவனுக்கு சிகரெட் பிடிக்கும்னா வாங்கித் தருவாங்களா பெற்றோர்? அப்படித்தான் இதுவும். பிறந்த நாளோ, வேறு ஏதாவது கொண்டாட்டமோ, குழந்தைக்கு ஐஸ்கிரீம், சாக்லெட் கொடுக்கிறதுல தப்பில்லை. ஆனா, அளவைக் குறைச்சுத் தரலாம்.
எல்லாத்தையும் விட, இது வளரும் பருவங்கிறதால, குழந்தையை நிறைய விளையாட விடறது, வாக்கிங் போக வைக்கிறது, சைக்கிள் ஓட்டச் சொல்றதுனு உடல் இயக்கத்துக்கு வேலை கொடுத்தாலே போதுமானது."

No comments:

Post a Comment