Saturday, November 6, 2010

பழமொழியின் விளக்கம்

பழமொழியின் விளக்கம்

முன்னுரை இயற்கைக் கவிஞர்களாகிய பாமர மக்கள் தங்கள் அனுபவத்தைக் கற்பனைக் களஞ்சியமாகக் கொண்டு பாடப்படுபவை நாட்டுப்புறப் பாடல்கள் ஆகும். இன்பத்தைப் பாட்டால் பகிர்ந்து கொள்ளவும் சோர்வை போக்கிக் கொள்ளவும் வாய்மொழியாகத் தாலாட்டு, ஒப்பாரி, விடுகதை, விளையாட்டு பிசி, பழமொழி ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றனர். தொல்காப்பியர் வாய்மொழி. பண்ணத்தி என்று சுட்டுவது நாட்டுப்புறப் பாடல்களே எனலாம். மக்கள் தங்கள் வாழ்வில் பிசி, பழமொழிகளைப் பயன்படுத்துகின்றனர். பழமொழி என்பது மக்களின் பண்பாட்டினை ஒட்டிய வாழ்வியல் முறைகளில் தொன்மையான வாக்கிய முதிர்வு பெற்ற சொற்களைப் பழமொழி என்பர். பழமொழியை மலையாளத்தில் "பழஞ்சொல்" என்றும் தெலுங்கில் "நாதுடி" என்றும் கன்னடத்தில் "நாண்ணுடி" என்றும் ஆங்கிலத்தில் Proverb என்றும் வழங்கப்படுகின்றது. பழமொழிகள் மூலம் மக்கள் வாழ்க்கை முறையினை அறிந்து கொள்ள முடிகின்றது. சாலை இளந்திரையன் பழமொழிகளைப் பற்றி "பழமொழிகளும் ஏனைய பாமரர் இலக்கியங்களும் அவைகளைப் படைத்து வழங்கி வந்த மக்களின் கருத்தோட்டத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வந்துள்ளன. எனவே மக்களின் சமுதாய இயல், அரசு இயல், நீதிஇயல், மற்றும் மத இயல், கோட்பாடுகளைப் பற்றிய ஆய்வுக்கு இவைகளை விடச் சிறந்த சாதனங்கள் வேறு இல்லை". (சமுதாய நோக்கில் பழமொழிகள்: 10) என்று குறிப்பிடுகின்றார். எனவே மக்களின் சமுகம், நீதி, அரசு, மதம் சார்ந்த வரலாற்றை அறிந்து கொள்ள பழமொழிகள் உறுதுணை புரிகின்றன என்பதை அறிய முடிகின்றது.
பழமொழியின் தோற்றம்
மனிதன் என்று சிந்தித்துப் பேசத் தொடங்கினானோ அன்றே பழமொழிகள் தோன்றி இருக்க வேண்டும். ஏனெனில் மக்களுடைய வாழ்வில் இரண்டறக் கலந்து ஒன்றி இயைந்து இருப்பதால் இவை யாரால் எப்பொழுது தோற்றுவிக்கப்பட்டது என்பதை அறுதியிட இயலாததாக இருக்கிறது.
தமிழ் இலக்கியங்களின் அடிப்படையில் சங்க இலக்கியத்தில் பழமொழிகளைக் குறித்த செய்திகள் வருகின்றன, அவற்றைக் குறிக்க பல்வேறு பெயர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. என்பதால் அதற்கு முன்பே பழமொழிகள் சிறப்புப்பெற்று இருந்திருக்க வேண்டும். நீதி நூல்களில் "பழமொழி நானூறு" என்ற நூலும் வெண்பாவால் இயற்றப்பட்டிருப்பது பழமொழிகளுக்குச் சிறப்பு சேர்ப்பதாக இருக்கின்றது. பின்னாளில் எழுந்த, தண்டலையார் சதகம், கோவிந்த சதகம், பழமொழி போதனை, பழமொழி போதம், பழமொழித் தாலாட்டு என்ற இலக்கியங்கள் எல்லாம் பழமொழியைப் பயன்படுத்தியும் பழமொழியின் பெயரால் அமைக்கப்பட்டிருக்கின்றன.
பழமொழிகளின் தோற்றத்தைப் பற்றி அறிஞர்கள் பல்வேறு கருத்துகளைக் குறிப்பிடுகின்றனர். ச.சிவகாமி பழமொழிகள் பழங்காலத்தில் இருந்தே மக்களிடையே வழங்கி வருகின்றன. காலந்தோறும் அவற்றிற்கிடையே மாற்றங்கள் சூழல்களுக்கேற்ப ஏற்படுவதுடன் புதியனவும் தோன்றுகின்றன. வாழ்க்கை ஒழுங்கிற்கு எழுதாச் சட்டங்களாக நின்று வழங்கி வந்த பழமொழிகள் இலக்கிய உருவாக்கக் காலத்திற்கு முன்பே தோன்றின. (பன்முகக் பார்வையில் பழமொழிகள் ப.12) என்று உரைக்கின்றார். அதனால் பழமொழிகள் ஒவ்வொரு காலத்திலும் தோற்றம் பெற்று மக்களின் வாழ்க்கையோடு இயைந்தும் சிறந்தது நிலைத்தும் அல்லாதது மறைந்தும் போய் விடுகின்றன எனலாம். மனித வாழ்வின் ஒட்டு மொத்த பயன்பாட்டில் நல்லவற்றையும் தீயவற்றையும் சுட்ட வருவன பழமொழிகள். இவை அறிவின் அடியாக நிகழும் நிகழ்ச்சிகளையும் பண்பின் அடியாக நிகழும் நிகழ்ச்சிகளையும் தொழிலின் அடியாக நிகழும் நிகழ்ச்சிகளையும் வாழ்வியல் முறைகளின் அடியாக நிகழும் நிகழ்ச்சிகளையும் கொண்டே அந்தந்த நிகழ்ச்சிகளில் வல்லார் அந்தந்த நிகழ்ச்சிகளைச் செய்ய வேண்டிச் சிலபல பழமொழிக€ளை தோற்றுவித்தனர். அவையே பழமொழிகளாயின (பழமொழியும் பண்பாடும் ப.5) என்று செந்துறை முத்து குறிப்பிடுகின்றார்.
பழமொழி - இலக்கணம்
பழமொழிக்குத் தொன்மையான ஒரு வரையறயை முதன் முதலில் வகுத்தவர் தொல்காப்பியர்: பழமொழியை "முது மொழி" என்று சுட்டியிருக்கின்றார். நுண்மை, சுருக்கம் ஒளி உடைமை, எளிமை, குறித்த பொருளை முடித்தல், ஏது நுதலுதல் ஆகிய இலக்கணம் வாய்க்கப் பெற்றுக் குறிப்பிட்ட பொருளைக் காரணத்துடன் உணர்த்துவது பழமொழி. இதனை,
நுண்மையும் சுருக்கமும் ஒளியுடைமையும்
மென்மையும் என்று இவை விளங்கத் தோன்றிக்
குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம்
ஏது நுதலிய முதுமொழி என்ப. (தொல்- 177)
என்று பழமொழியின் அமைப்பை விளக்குகிறார். தமிழ்க் கோட்பாடு வரிசை 3 பழமொழி எப்படி இருக்க வேண்டும் என்பதை.
1. எளியோர் நாவில் வழங்கத்தக்கதாய் இருத்தல் வேண்டும்.
2. எதுகையிலோ மோனையிலோ அல்லது பிற வகையிலோ ஒரு வகை ஓசை நயம் இருத்தல் வேண்டும்.
3. கருத்தை நேரிடையாகக் குறிப்பிட வேண்டும்.
4. பழமொழி கூறும் கருத்து பலகாலும் அனுபவப்பட்டதாக இருத்தல் வேண்டும்.
5. உவமைகள் கண்ணாற் காணத்தக்கனவாக இருத்தல் வேண்டும்.
7. சொற்களை எடுத்து விட்டு வேறு சொல்லைப் பெய்து கொள்ளத் தக்க நெகிழ்ச்சி வேண்டும். (த.கோ.3.11-12)
என்று குறிப்பிடுகின்றது. அனுபவப்பட்ட மொழியாக இருப்பதோடு எல்லோராலும் பயன்படுத்தப்படும் சொல்லாக கருத்தை உணர்த்துவன பழமொழிகள் என்பதை அறியமுடிகின்றது. நன்னூல் நூலுக்குரிய பத்து அழகும் நூற்பாவுக்கு வகுத்துள்ள இலக்கணமும் பழமொழியின் இலக்கணத்திற்கு பொருந்துவனவாய் உள்ளன என்று வ.பெருமாள் குறிப்பிடுகின்றார்.
சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்

"நவின் றோர்க்கு இனிமை நன்மொழி புணர்தல்
ஓசையுடைமை ஆழமுடைத்தாதல்
முறையின் வைப்பே உலகம் மலையாமை
விழுமியது பயத்தல் விளங்குதா தெடுத்த
தாகுதல் நூலிற்கு அழகெனும் பத்தே" (நன்-13)
சுருக்கமும், விளங்க வைத்தலும் நன்மொழி புணர்த்தலும் ஆழ்ந்த கருத்து உறைத்தலும் பழமொழிக்கும் உண்டு என்பதால் இவை பொருந்துகின்றது எனலாம். பழமொழிகளின் அமைப்பினை "ஒட்டு அல்லது உருவக அணியேற்று நின்று தொடர்புடைய கருத்தை உடனடியாக நெஞ்சில் எழச் செய்யும் முழுமையான வாக்கியமே பழமொழி என்பதோடு பழமொழி முறிவு பட்ட தொடராக இல்லாமல் முழுமையான வாக்கியமாகவே அமைய வேண்டும். முற்றுப் பெற்ற வாக்கியமாக இருத்தல் வேண்டும் என்றும். எந்தப் பழமொழியும் உரையாடல் முறையில் அமைவதில்லை. சுருக்கமும் ஒளியுடைமையும் பழமொழியின் முக்கியப் பண்புகள். எதுகை, மோனை, முரண், ஓசை நயம், வினா முதலிய உத்திகளைப் பழமொழி ஏற்றுவரும். கேள்வியாகப் பழமொழியை அமைப்பதே தமிழில் காணப்படும் பரவலான கருத்து. உவமைத் தொடர்களே சில நேரங்களில் பழமொழியாகப் பயன்படுத்தப்படுகின்றது என்று (சமுதாய நோக்கில் பழமொழிகள்:15) சாலை இளந்திரையன் குறிப்பிடுகின்றார்
இதனால் சிறந்த கருத்தினைக் கொண்டதாக எல்லோரும் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக, நீதியை உரைப்பதாக, எதுகை, மோனை பெற்று சுருங்கிய வடிவில் வருவன பழமொழிகள் எனலாம்.
பழமொழியின் வேறு பெயர்கள்
பழமொழி என்னும் சொல்லுக்கு இணைப்பொருண்மைக் கொண்ட சொற்களாக இலக்கியங்களும் நிகண்டுகளும் அறிஞர்களும் பல்வேறு பெயர்களைச் சுட்டிருக்கின்றனர்.
1. ஏது நுதலிய முதுமொழி என்ப-தொல் 177
2. எவ்வஞ் சூழாது விலங்கிய கொள்கைக் (காலை யன்ன சீர்சால் வாழ்மொழி (பதி,பா,21)
3. நன்று செய் மருங்கில் தீது இல் என்னும் தொன்றுபடு பழமொழியின் (அக 101)
4. பல்லோர் கூறிய பழமொழி எல்லாம் வாயே ஆகுதல் வாய்த்தனம் தோழி (அக.66)
5. மொழிமை மூதுறை முன்சொற் பழஞ்சோல முதுசொல் என்பர் பழமொழியுமாமே (பி.நி.22)
6. மூதுரைப் பெருங்கதைகளும் மொழிவார் - (கம் சூர் 102)
8. புலிதானே புறத்து அக குட்டி போட்டது என்ற
9. ஒலி ஆழி உலகு உரைக்கும் உரை பொய்யோ (கம்.ஆர.102)
10. திருவள்ளுவ தேவர் வாய்மை யென்கிற பழமொழி யோதியே யுணர்ந்து (திருப்புகழ்)
11. வேத முதல்வர் பயந்தோன் என்பது நீ அறிந்திலையோ நெடுமொழி அன்றோ (சில ஊர் 46.49)
என்று இலக்கியங்கள் பழமொழியைச் சுட்டுகின்றன, வ.பெருமாள் பழமொழியை 33 சொற்களால் குறிப்பிடுகின்றார்.
1. பழமொழி, 2. தொன்னெறி மொழி, 3. முதுமொழி, 4. முதுசொல், 5. தொன்றுபடுகிளவி, 6. தொன்றுபடு பழமொழி, 7. வாய்மை, 8. அறம், 9. நெடுமொழி, 10. பல்லவையோர் சொல். 11. பண்டைப்பழமொழி, 12. சொலவு, 13. மூதுரை, 14. பழஞ்சொல், 15. மூத்தோர் சொல், 16. வழக்கு, 17. உரை, 18. பழையநெறியினவாய்வரும்சொல், 19. பழவார்த்தை, 20. உலகமொழி, 21. உபகதை, 22. சுலோகம், 23. சொலவடை, 24. வசனம், 25. எழுதாஇலக்கியம், 26. வாய்மொழி இலக்கியம், 27. எழுதாக் கிளவி, 28. கேள்வி, 29. சுருதி, 30. நீதிமொழி, 31. முதுமை, 32. மொழிமை, 33. முன்சொல்
என்று குறிப்பிடுகின்றார். இதனால் பழமொழியைச் சுட்ட பல பெயர்கள் வழங்கப்பட்டு வந்து இருப்பதே அறிய முடிகின்றது
பழமொழியின் தன்மை
வாழ்க்கை அனுபவமே பழமொழிகள். அவை என்றும் பொய்ப்பதில்லை, பழமொழியின் பொதுத்தன்மைகள் குறித்து அறிஞர்கள்,
1. ஆயிரம் நூற்களைக் கற்பதைவிட அறிஞர்கள் கூறும் பழமொழிகளே அதிக அறிவைத் தரும் - லாவேட்டர்
2. பழமொழிகள் இருட்டில் வழிகாட்டும் தீவர்த்தி - பாஸ்ளியல் பழமொழி
3. சிறந்த பொருளை சுருங்கிய முறையில் உள்ளத்தில் பதியும் வண்ணம் கூறுவதே பழமொழியின் தன்மை-தாமஸ்கார் லைன் பழமொழி
4. வானம் இடிந்து விழுவதில்லை பழமொழி பொய்யவாதில்லை
5. பழமொழிக்கு உமியில்லை - இந்தியா
6. பால் புளிக்குமா? பழமொழி பொய்க்குமா? - அமெரிக்கா

என்று குறிப்பிடுவதால் பழமொழிகள் உண்மைகளை உரைப்பன என்பதை அறிய முடிகின்றது. பழமொழிகள் அனைத்திற்கும் பட்டறிவே அடிப்படையாக அமைகின்றது. அனுபவத்தின் குழந்தைகள் பழமொழிகள் என்று இங்கிலாந்தும் அனுபவத்தின் எதிரொலிகள் பழமொழிகள் என்று சுவிட்ஸர்லாந்து மொழியும் பழமொழியின் ஒருமித்த கருத்தாக அமைவதும் குறிப்பிடத்தக்கது.
பழமொழிகளுக்குப் பொருள் விளக்கங்களையும் மக்கள் தம் அனுபவத்தில் இருந்தே பெற்றுக் கொள்கின்றனர். பழமொழிகளைக் கூறுபவர் சூழலுக்கேற்ப பழமொழியைக் கேட்பவர் அச்சூழலை உணர்ந்து அதன் பொருளை அறிந்து கொள்கின்றனர். ஒரு மொழி பேசுபவரிடையே பல வட்டார வழக்கு மாறுபாடுகள் இருப்பதைப் போல் பழமொழிகளும் வழங்குவதில் வழக்கு மாற்றங்களைக் கொண்டிருக்கின்றன. ஒன்றைச் சிறப்பித்து மொழியும் பழமொழிகளுக்கு ஏற்ப அதே போன்று பிறிதொரு பழமொழியும் தோன்றுகிறது. இதனால் எது முந்தியது எதைப் பார்த்து எது பிறக்கிறது என்று சொல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
பயன்படும் சூழல்
ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைகளில் மட்டும் தான் பழமொழிகளைப் பயன்படுத்துவர் என்று குறிப்பிட இயலாது. எல்லாச் சூழ்நிலைகளிலும் பழமொழியைப் பயன்படுத்துவர். அறிவுரை வழங்கும் போது தன்னிலை உணர்த்தும் பொழுது மதிப்பீடு செய்யும் பொழுது, தவறு செய்வோரை ஏசும் பொழுதும் பழமொழிகள் பயன்படுத்தப்படுகின்றன. பழமொழிகள் பொருள் அடிப்படையிலும், தகுதி அடிப்படையிலும், சமுதாய அடிப்படையிலும், சமய அடிப்படையிலும், வட்டார அடிப்படையிலும், நில அடிப்படையிலும், செயல் அடிப்படையிலும், அளவு அடிப்படையிலும் வகைப்படுத்தப்படுகின்றன.
பழமொழிகள் வாழ்க்கைப் பயன் பாட்டிற்கு உதவுவதால், நன்மைத் தீமைகளைச் சுட்டுவதால் நீதிக் களஞ்சியமாகத் திகழ்கின்றன. மக்கள் தம் அனுபவத்தை என்றைக்கு வெளிப்படுத்த விரும்பினார்களோ அன்றே பழமொழிகள் தோற்றம் பெற்றன. பழமொழிகள் சுருக்கம், எளிமை கருத்து விளக்கம், எதுகை, மோனை, ஓசை நயம், வினா ஆகிய தன்மைகளைக் கொண்டு எதன் உதவியும் இன்றி தன் கருத்து வளத்தைக் கொண்டே நிலை பெறுகின்றது. மக்கள் தம் சிச்கல்களுக்கும் பேச்சுக்கும் ஓர் அழகைத் தருவதால் பழமொழிகளைக் காத்து வருகின்றனர். பயன்பாட்டில் அதிகம் இடம் பெறாத பழமொழிகள் நாளடைவில் மறைந்தும் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் புதிய பழமொழிகள் தோன்றுகின்றன. காலத்திற்கும், பேச்சாளர்களும் தங்கள் கருத்து வளத்திற்குப் பழமொழிகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment