Saturday, November 6, 2010

கோவிலன் சரித்திரம்

கோவிலன் சரித்திரம்

Kovilan History - Tamil Literature Ilakkiyam Papers கேரளத்திலுள்ள இடுக்கி மாவட்டத்தில் தமிழகத்தை ஒட்டியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் மன்னான் என்னும் பழங்குடிமக்கள் வாழ்கின்றனர். அவர்களிடையே கோவிலன் சரித்திரம் என்ற பெயரில் வாய்வழியாக ஒரு நாட்டுப்புற இசைக்கதை வழங்கி வருகிறது. இதைக் கோவிலன் கூத்து என்றும் கூறுவர். இதில் இசைப்பாட்டு, வசனம், விருத்தம் ஆகியவை உள்ளன. இதைத் தெருக்கூத்தாக இன்றும் ஆடிவருகின்றனர்.
புகழேந்திப் புலவர் பெயரில் வழங்கும் கோவிலன் கதை என்னும் கதைப்பாடலை ஒட்டியே இந்நூல் அமைந்திருக்கிறது. இதில் சில இலக்கிய வழக்குச் சொற்களும், பெரும்பாலும் பேச்சுவழக்குச் சொற்களும், சில மலையாளச் சொற்களும் காணப்படுகின்றன. பேச்சுவழக்குச் சொற்களில் பல மதுரை மாவட்ட வழக்காறுகளாக உள்ளன. எனவே இக்கதைக் கூத்து மதுரை மாவட்டச் சமவெளிப் பகுதியிலிருந்து இங்கு வந்து வழங்கியிருக்கலாம் என்ற இந்நூலைப் பதிப்பித்து வெளியிட்ட முனைவர் நசிம்தீன் (கேரளப் பல்கலைக்கழகம்) கூறுகிறார். மன்னான் பழங்குடிச் சூழலுக்கு ஏற்ப அவர்களுடன் தொடர்புடைய உள்ளூர் இடங்கள், குலதெய்வங்கள் முதலியன இந்நூலில் குறிக்கப் பெற்றுள்ளன.
இக்கதை அவர்களிடையே வாய்மொழியாக வழங்கி வருவதால் கதைச் சிதைவும், கதை மாற்றமும், சில விடுபாடுகளும் நிகழ்ந்துள்ளன. மலையாள வழக்குகள் மிகுதியாக இப்பாடலில் காணப்படாமையால், இம்மக்கள் தமிழ்ப் பகுதிகளோடு நெருக்கமான தொடர்புடையவர்களாய் இருந்திருப்பர் எனலாம்.
இந்தக் கதைக்கூத்துக்கு ஆதாரமாக உள்ள புகழேந்திப் புலவரின் கோவிலன் கதையில் சில்(முத்திரை) என்ற ஆங்கிலச் சொல்லும், முன்சிப் போன்ற உருதுச் சொல்லும் இடம் பெற்றிருப்பதால் அது 19 ம் நூற்றாண்டில் தோன்றியிருக்கலாம் என்று கருத இடமுண்டு. அதனால் இந்நூலும் 19 ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாயிருக்கலாம்.
சிலப்பதிகாரக் கதைகூட இளங்கோவடிகளின் காலத்தில் மக்களிடையே வழங்கிவந்த கோவலன்-கண்ணகி ஆகியோரின் நாட்டுப்புறக் கதையின் இலக்கிய வடிவமே என்று கூறுவோர் உளர். கோவலன் கண்ணகி கதையில் உண்மை நிகழ்ச்சிகள் எத்தனை விழுக்காடு இருக்கக்கூடும் என்பது அறியக்கூடவில்லை. புறநானூற்றுக் காலத்தில் பேகன்-கண்ணகி பற்றிய செய்திகள் வரலாற்றுச் செய்திகள் எனலாம். ஆனால் கோவலன் - கண்ணகி பற்றிய சிலப்பதிகாரச் செய்திகள் முழுவதும் வரலாற்றுச் செய்திகளே என்று ஏற்க முடிவதில்லை.
கண்ணகி பற்றிய கதை தமிழகத்தின் இதிகாசமாகக் கருதப்படத் தக்கது. அது தென்னகத்திலும், இலங்கையிலும் பல்வேறு வடிவங்களில் பரவலாக வழங்கப்பட்டு வருகிறது. அவற்றுள் ஒன்றுதான் இடுக்கி மாவட்டத்தில் வழங்கும் இக்கதையாகும்.
கள ஆய்வு செய்த முனைவர் நசிம்தீன் அவர்கள் கூறும் கருத்துக்களை நோக்குவோம்.
இம்மக்களிடம் கோவிலன் சரித்திரம் கூத்தாகவும் ஆடப்பட்டு வருகிறது. தை மாத விழாக்காலங்களிலும் பிற சடங்குகள் நடைபெறும் இரவு நேரங்களிலும் இக்கூத்து ஆடப்படுகிறது. ஒருவர் பாடப் பலர் பின்பாட்டுப் பாடுகின்றனர். இளைஞர்கள் பாட்டுக்கு ஏற்பக் கூத்தாடுகின்றனர். ராஜ மன்னன், காணி ஆகியோரின் வீட்டுக் கூடங்களே கூத்துக்களமாகின்றன. கொட்டு, கஞ்சிரம், சலங்கை, மணி எனும் இசைக்கருவிகள் இசைக்கப்படுகின்றன. ஆடுவோர் அரிதாரம் எனும் பொடியைப் பூசிக் கொள்கின்றனர். பாத்திரத்திற்கேற்ப ஆடை புனையும் அமைப்பில்லை. ஆண்களும், பெண்களும் உற்சாகத்துடன் குதித்து ஆடுகின்றனர். தெருக்கூத்தில் கட்டியங்காரன் வருவதுபோல இதில் வரும் ...கூத்துக்காரன்... வேடிக்கை ஒலிகளையும் ஆட்ட அசைவுகளையும் காட்டுகிறான்.
கதையில் மாறுபாடுகள்:-
சிலப்பதிகாரக் கதையினின்றும் சில மாறுபாடுகள் இதில் காணப்படுகின்றன. கோவலனின் பெற்றோர்களின் முற்பிறப்புக்கதை கூறப்படுகிறது. கோவலன் "கோவிலன்" எனவும் கண்ணகி "கர்ணகை" என்றும் மாதவி "மாதகை" என்றும் அழைக்கப்படுகின்றனர்.
கோவலனின் தாய் வர்ணமாலை, கோப்பெருந்தேவி "கோப்புலங்கம்மா" மதுரைக்குப் பதிலாக வண்டியூர்ப் பட்டணம் வருகிறது. மாதகையின் கடனைத் தீர்க்கக் கர்ணகையின் ஒரு கால் சிலம்பைக் கோவிலன் விற்க முற்படுகிறான். கோவிலன் செல்லும்போது ஏற்படும் பல தீய நிமித்தங்களும், கர்ணகையின் கனவும் சிலப்பதிகாரத்தில் கூறப்படாதவை.
தன் பத்தினித் தன்மையால் வெட்டுண்ட கோவிலன் உடலை ஒன்று சேர்க்கிறாள் கர்ணகை. உயிர்பெற்ற கோவிலன் "மாதகையோ" "கர்ணகையோ" என்றான். அவனுக்கு மாதகைமேல் ஏற்பட்ட ஆசை இன்னும் தீரவில்லை என்று எண்ணி அவளை அங்கே வருமாறு எழுதிக் காகத்தின் காலில் கட்டிச் செய்தியனுப்புகிறாள் கர்ணகை. மாதகையும் வந்தால், கர்ணகை தன் பத்தினித் தன்மையால் பாடைதீப்பற்றுமாறு செய்து சடங்கை நிறைவேற்றினாள். மாதகை தீயில் குதித்து மாண்டாள்.
கர்ணகை ஒப்பாரி பாடி முடித்துப் பாண்டியனின் அரண்மனை சென்றாள். பாண்டியனிடம் நியாயம் கேட்டு வாதம்புரிந்தாள். அவனது அரண்மனை தீப்பற்றி எரிந்தது. இத்துடன் கதைப்பாடல் முடிகின்றது. இறுதிப்பாட்டு நாட்டில் மழை பொழிந்து நலம் பெருக வேண்டுமெனத் தெய்வத்தை வேண்டுவதாக அமைகின்றது. ஆனால் கர்ணகை தெய்வமானதாகக் குறிப்பிடவில்லை.
நாட்டுப்புறப்பாடல் அமைப்புகள்:-
1.பொதுவாக நாட்டுப்புறப்பாடல்களில் அமைவது போன்று இக்கதைப் பாடலிலும் ஒன்றிலிருந்து பத்துவரை அடுக்கிக் கூறும் பண்பு காணப்படுகிறது. பாண்டிய அரசி கோப்புலிங்கியம்மா கர்ப்பமாக இருந்து குழந்தை பெற்றதனைக் கூறம் பாடல்:
"ஒருமாசக் கருப்பமிருந்து - ஐய
தானாகவே நிறைஞ்சிருந்தா;
ரெண்டுமாசக் கருப்பமிருந்து - ஐய
தானாகவே நிறைஞ்சிருந்தா"
2. அந்தாதி அமைப்புடைய ஒரு பாடல்
"ஆத்துல போயாலிவ அவளுட தலமுழுகி,
அவளுட தலமுழுகிக் கூந்தல் விரிச்சுணக்கி,
கூந்தல் விரிச்சுணக்கிச் சிவிச் சிணுங்கெடுத்து,
சிவிச் சிணுங்கெடுத்துச் சித்திரம் போல்
கொண்ட முடிச்சு,
சித்திரம் போல் கொண்ட முடிச்சு சிந்துருக்கம்
பொட்டு வச்சு (பாடல் 180)
3. ஒப்பாரிப்பாடல்:-
கர்ணகையின் ஒப்பாரிப் பாடல்கள் ஒப்பாரி இசையுடன் பாடப்பெறுகின்றன.
"ஐயா ஆசப்பட்டுக் கிளி வளத்தே
அக்கரயில மேய விட்ட
ஐயா சலசலன்னு வந்த கிளி
கலகமான மாயமென்ன.. (181)
அன்னம் கரும்புலிக் கையில்
அகப்பட்ட மான் போல
கவலப்பட வச்சே
ஐயா வழிதன்னில் தெரிந்திடும்
பெண்களே... பெண்களே" (182)
சில பழக்கவழக்கங்கள்:-
திருமணத்தின்போது பந்தலிட்டு விருந்து படைக்கும் பழக்கம் (62) தாலிகட்டும் பழக்கம்; தாலிச்சரடு செய்விக்க வெற்றிலையும் ஒரு ரூபாவும் கொடுத்துத் தட்டானை அழைத்து வருவது (63); குழந்தை மணம் இவை இந்நூலில் காணப்படுகின்றன.
ஆசை தீராமல் இறந்தவனின் உடல் வேகாது எனும் நம்பிக்கையின் படியே மாதகையை உடனே வருமாறு வேண்டிக் கர்ணகை கடிதம் அனுப்புகிறாள் (117)
சோதிடம் பார்க்கும் பழக்கமும், நிமித்தங்களிலும் கனவு காண்பதிலும் நம்பிக்கையும் இருந்தன (41).
கலியாணப் பந்தல் பாட்டு:-
நாட்டுப்புறப்பாடல்களில் ஒரு சொல் பலமுறை வருவதோடு, ஒரு கருத்தும் பலவகையாகக் கூறப்படுவதுண்டு. இந்நூலில் அதற்கோர் எடுத்துக்காட்டு... கலியாணப்பந்தல் பாட்டு....ஆகும்.
முத்துக்கால் நிறுத்தி முதுங் காதமாம் பந்தலிட்டோ
பகளக்கால் நிறுத்திப்பங்காதமாம் பந்தலிட்டோ
முத்துபதிச்சதபோல் மூனுவரிக்கால் நாட்டி விட்டோ,
எள்ளுப் பதிச்சது போல் எட்டு வரிக்கால் நாட்டிவிட்டோ..
பகளம் பதிச்சத போல பத்துவரிக்கால் நாட்டிவிட்டோ
அந்தோ(ர்) நங்கையு மலங்கரித்த விட்டுதானாம்
அந்தோ(ர்) வெத்துலனால் வீடுவச்சு விஸ்தாரமான
கலியாணப் பந்தல்போட.. கண்டே.. ஏ .. யாம்
(வேறு)
மன்னன் கலியாணப் பந்தல்
மன்னன் கட்டி நல்லா வைத்திருந்தா;
மன்னன் பந்தலுந்தான்
மன்னன் கட்டி நல்லா வைத்திருந்தா
மன்னன் வாழ நல்லா ஐயா வெட்டி நல்லா வைத்திருந்தா
பச்ச வாழ நல்லா மன்னன் வேகுகக்க வைத்திருந்தா
மன்னன் மத்தளந்தான் மன்னன் வெகு நல்லா வைத்திருந்தா
மன்னன் ஏழு சுத்தே.. கட்டி நல்லா வைத்திருந்தா...
(தன்னம் தானுந் தன்ன..)
மன்னன் பந்திச் சோறே இன்னும் ஆக்கவில்லை ஆக்கவில்லை
மன்னன் வந்த சனமோ... இன்னும் உங்கவில்ல உங்கவில்ல
மன்னன் வந்த சனமோ... இன்னும் கலயவில்ல.. கலயவில்ல
(தன்னானே தன்ன..)
மன்னன் கலியாணமோ... மன்னன் கட்டி வைத்திருந்தா(ன்) வைத்திருந்தா
மன்னன் கலியாணந்தான்... மன்னன் கட்டி நல்லா வைத்திருந்தான்.
வழக்குச் சொற்கள்:-
இந்நூலில் ஏராளமான பேச்சுவழக்குச் சொற்கள் உள்ளன. சில வருமாறு பிளச்சவ - பிழைத்தவள், வழிதவறியவள்; கீகர - கீழ்க்கரை; பாவிமுண்ட - விதவை; மாஉஷாத்தஞ்செட்டி - மாசாத்துவன் செட்டி, வயனம்-விசனம்; புள்ள-பிள்ளை; போள-பேழை; துறவுச்சி-திறப்புக்குச்சி, திறவுகோல்; மெத்திட-நிறைத்து; பகளம்-பவளம்; மஞ்சி-மஞ்சம்; சடுகில் - விரைவில்; சவனம்-சகுனம், குருத-குதிரை; ஒட்டுகம்-ஒட்டகம்; ஆன-யானை; மாலி-மாலை; சோலக்கிளி-சோலைக்கிளி; மன-மனை; சபலம்-சகுனம்; ஆய்ச்சி அம்மினி - ஆயர்குலத்தவள்; தோந்துதே-தோன்றுதே; அரிக்கிளங்காடு-எருக்களஞ்செடி நிறைந்த காடு, இந்நூலில் பயின்றுள்ள சில மலையாளச் சொற்கள்; பிரை-வீடு, களரி-களம்; சாரம்-சாம்பல்; மொண்டி-நொண்டி.
அருமையான சொற்கள்:-
விசவன் என்றால் விஷமுடைய பாம்பு; கொதிதேவன்-ஆசை மிகுதியுடையவன்; வெள்ளன்-உண்மையுடையவன்; வெள்ளை மனத்தன்; தாட்டோந்தி-ஓணான்; கரட்டோந்தி-வெளவால், சியான்-முப்பாட்டன் (பாட்டன், பூட்டன், சியான்).
நாட்டுப்புறக் கதைப்பாடல்களுள் மிகவும் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய அருமையான நூலாகக் கோவிலன் சரித்திரம் விளங்குகிறது.

No comments:

Post a Comment