Wednesday, November 3, 2010

குளிர் நடுக்கும் பாலைவனம்

குளிர் நடுக்கும் பாலைவனம்! Cold Desert - Tamil Katturaikal - General Articles
பாலைவனம் என்றால் உடனே சகாரா பாலைவனம்தான் நினைவுக்கு வரும். அத்துடன் சுட்டெரிக்கும் வெயிலும் தகிக்கும் மணலும் தான் நம் கண் முன்னே நிற்கும். உலகில் சகாரா மட்டுமன்றி பல பாலைவனங்கள் உள்ளன. இந்தியாவில் உள்ள தார் பாலைவனமும் இதில் அடங்கும். பாலைவனங்கள் எல்லாமே கடும் வெயில் வீசுவதாக இருக்க வேண்டும் என்பதில்லை. எப்போதும் கடும் குளிர் வீசுகிற பாலைவனமும் உண்டு. தவிர, பாலைவனம் என்றால் ஒரு கோடியில் இருந்து மறு கோடி வரை ஒரே மணலாக இருக்க வேண்டும் என்பதில்லை. பாலைவனத்தில் உயிரினங்களோ தாவரமோ இருக்க முடியாது என்பதில்லை.
எது பாலைவனம் என்பதற்கு விஞ்ஞானிகள் பொதுப்படையான ஓர் அளவுகோல் நிர்ணயித்துள்ளனர். ஆண்டொன்றில் சராசரி மழை அளவு 250 மில்லிமீட்டருக்கும் (10 அங்குலம்) குறைவாக உள்ள பிராந்தியம் பாலைவனம் என்று அவர்கள் கூறியுள்ளனர். வெயில், குளிர், மணல் பற்றி அவர்கள் குறிப்பிடவில்லை.
உலகிலேயே மிகப் பெரிய சகாரா பாலைவனம் கிழக்கே எகிப்து நாட்டில் தொடங்கி மேற்கே மொராக்கோ வரை 4,800 கிலோ மீட்டர் நீளத்துக்கு அமைந்துள்ளது. அகலம் சுமார் 2,000 கிலோமீட்டர். பாலைவனம் மொத்தமும் ஒரே மணலாக உள்ளதாக நினைத்தால் அது தவறு. சகாராவில் 30 சதவிகிதப் பரப்புதான் மணல். மீதிப் பிராந்தியம் சரளைகள், பாறைகள் ஆகியவற்றால் ஆனது. இத்துடன் ஒப்பிட்டால் உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில் அரேபியப் பாலைவனத்தில் தான் மிக நீண்ட தூரத்துக்கு இடையறாது ஒரே மணல் பிராந்தியம் உள்ளது.
நிபுணர்கள் பாலைவனங்களை பல வகைகளாகப் பிரித்துள்ளனர். எனினும் இவை அனைத்துக்கும் பொதுவான அம்சம் மழையின்மையே. ஆகவே அவை மக்கள் வசிக்க லாயக்கற்றவையாக உள்ளன. இருந்த போதிலும் சில பாலைவனங்களில் நாடோடிகள் எனப்படும் மக்கள் அங்குமிங்கும் வசிக்கத்தான் செய்கின்றனர். அரேபியப் பாலைவனம் இதற்கு உதாரணம். அமெரிக்காவில் அரிசோனா மாநிலத்தில் பாலைவனப் பகுதி என்று சொல்லத்தக்க அளவில் உள்ள பகுதியில் பீனிக்ஸ், டூசான் ஆகிய நகரங்கள் இருக்கத்தான் செய்கின்றன. டூசான் நகரில் ஆண்டு சராசரி மழை அளவு 11 அங்குலம்.
சகாரா, அரேபியப் பாலைவனம், தார் பாலைவனம் போன்றவற்றில் கோடையில் வெயில் மிகக் கடுமையாகவே இருக்கும். சகாராவில் (லிபியா நாட்டில் உள்ள அசிசியா எனும் நகரில்) சாதனையாக -கோடைக்காலத்தில் -136 டிகிரி பாரன்ஹைட் வெயில் பதிவாகியது. எனினும் இப்படி வெயில் அடிக்கிற பாலைவனங்களில் கோடைக்காலமாக இருந்தாலும் இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவும். அதற்குக் காரணங்கள் உண்டு. காற்றில் ஈரப்பசை இல்லாததால் பகலில் அடித்த வெயிலின் வெப்பத்தைக் காற்றினால் இருத்தி வைத்துக்கொள்ள முடிவதில்லை. தவிர, பாலைவன மணல் விரைவில் வெப்பத்தை இழந்துவிடுகிறது. பாலைவனங்களில் வானில் மேகங்கள் அனேகமாக இராது என்பதால் தரையிலிருந்து வெப்பம் எளிதில் உயரே சென்று விடுகிறது. உங்கள் ஊரிலும் சரி, நல்ல குளிர் காலத்தில் வானில்மேகமூட்டம் இருந்தால் குளிர் அவ்வளவாக இராது. வானம் மிகத் தெளிவாக இருந்தால் குளிர் நன்றாகத் தெரியும். வெயில் காலத்தில் இதே போல வானில் மேகங்கள் இருந்தால் புழுக்கம் அதிகமாகத் தெரியும்.
சகாரா போன்ற பாலைவனங்களுக்கு நேர் மாறாக எப்போதும் கடும் குளிர் வீசுகிற பாலைவனம் உண்டு. இதற்கு உதாரணம் தென் துருவப் பகுதியில் அமைந்த அண்டார்டிகா கண்டத்தில் உள்ள பாலைவனமாகும். இது எப்போதும் பனிக்கட்டியால் மூடப்பட்ட பிராந்தியமாகும். இங்கு பனிப்பொழிவு குறைவு. சகாராவில் புழுதிப் புயல் வீசுவது போலவே இங்கு பனிப் புயல் வீசும். இப்படியான பனிப்புயலின் போது நுண்ணிய பனித் துகள் ஊசி குத்துவது போல தாக்கும். தரையில் உறைந்த பனிக்கட்டியில் பள்ளம் தோண்டி அதில் பதுங்குவதைத் தவிர வேறு வழியில்லை.
பெரும்பாலான பாலைவனங்களில் சிறு பிராணிகள் வசிக்கத்தான் செய்கின்றன. இவை பகலில் வெயிலின்போது எங்காவது ஒண்டிக்கொள்ளும். இவற்றில் சில, கொஞ்சநஞ்ச ஈரப்பசையை தங்களுக்கு வேண்டிய நீராக மாற்றிக்கொள்ளும் திறன் படைத்தவை.
பாலைவனங்களில் எப்படியாவது சமாளித்துக் கொள்ளும் திறன் படைத்த தாவரங்களும் உள்ளன. பாலைவனங்களில் காணப்படும் சில பூண்டு வகைத் தாவரங்களின் வேர்கள் நிலத்துக்கு அடியில் பக்கவாட்டில் சில நூறு மீட்டர் தூரம் வரை செல்லும். அமெரிக்காவில் அரிசோனா, மெக்சிக்கோ ஆகிய இடங்களில் பரவி அமைந்த பாலைவனத்தில் சவோரா என்னும் கற்றாழை வகைத் தாவரம் சுமார் 50 அடி உயரம் வரை வளரக்கூடியது. ஆக, பாலைவனம் என்பது உயிரற்ற ஒன்று அல்ல.

No comments:

Post a Comment