Wednesday, November 3, 2010

கிகுஜிரோ - சிறுவர் சினிமா

கிகுஜிரோ - சிறுவர் சினிமா ( Kikujiro - Tamil Katturaikal - General Articles
ஜப்பானியத் திரைப்பட இயக்குநர் தகேஷி கிடானோவினது படங்கள் எனில் நிழல் உலக தாதாக்களையும், அவர்களுக்கிடையிலான வன்முறைப் போக்குகளையும் பற்றியதாகவே இருக்கும் என்பதே உலக சினிமாப் பார்வையாளர்களின் ஒருமித்த கணிப்பு. அது உண்மையும்கூட. நிழல் உலக வாழ்வோட்டம் குறித்த யதார்த்தபூர்வமான திரைப்படங்களை உருவாக்க வல்லவர் கிடானோ. அவரது படங்களில் வன்முறைக் காட்சிகள் பெரும்பான்மையிடங்களில் தோன்றும் எனினும், பார்வையாளரது மனோநிலையில் அந்த வன்முறை மீதான இச்சையுணர்வினை தூண்டும்படி காட்சிப்புனைவுகளை பிரயோகித்து விடாமல், வெறுமனே வேடிக்கைப் பார்ப்பதுபோன்ற தொனியிலே காட்சிகளை வடிவமைக்கப்பட்டிருக்கும். திரைக்குள் நிகழும் வன்முறையுலகினை நாம் திரைக்கு வெளியிலிருந்து வெறுமனே கவனிக்கலாம். அவ்வளவே. மாறாக, தமிழ் சினிமா நம்மீது அள்ளித் தெளிப்பது போல வன்முறையின் மீதான இச்சையை நமது உள்ளம் கையிலெடுத்துக் கொள்ள கிடானோ அனுமதிப்பதில்லை. இது திரைப்பரப்பில் செய்தற்கரிய அணுகுமுறையாகும்.
தான் இயக்கும் அனைத்துப் படங்களிலும் கிடானோவே முதன்மைக் கதாபாத்திரமாக நடிக்கக்கூடியவர். அவரது அமைதியான தோற்றமும் பயத்தை உண்டுபண்ணும் பாவனைகளும் தனித்துவமான நடிப்புத்திறனை அவருக்கு வழங்கினதோடல்லாமல், படத்தில் சுவாரசியமான கதையோட்டத்திற்கு உறுதுணையாகவும் இருக்கவல்லது. அத்தகைய படைப்பாளருக்கு மென்மையான அனுபவம் சார்ந்த இன்னொரு படைப்புமுகமும் உண்டு என்பதை 1999 இல் வெளியான அவரது "கிகுஜிரோ" (kikujiro) எனும் திரைப்படம் நிரூபித்தது. கிகுஜிரோ ஒரு சிறுவர் திரைப்படம். தனது மற்றைய படங்களின் கதாபாத்திர குணத்தை ஒருசிறிது மாற்றம் செய்யாமல் கிடானோ இந்த படத்திலும் சிறுவனுக்கிணையான மையப் பாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார்.
மசெவ் எனும் சிறுவனின் பள்ளி முடிந்து கோடைவிடுமுறை தொடங்கும் சமயம் பள்ளியிலிருந்து திரும்பும் மசெவ்விடம் அவனது நண்பன் யூஜி, "உனது விடுமுறைக் காலத் திட்டம் என்ன? என்று கேட்கிறான். பதிலாக, மசெவ் "உனது திட்டம்?" என்று வினவ, "தனது தந்தையின் கடற்கரையோரமிருக்கும் சொந்தஊருக்குச் சென்று விடுமுறைக்காலத்தைக் கழிக்கப்போவதாக" மசெவ்விடம் கூறுகிறான் யூஜி. மசெவ் "நீ அதிர்ஷ்டசாலி" என்று தனது ஏக்கம் நிறைந்த மழலைக் குரலில் பதிலளித்தபடியே நடக்கிறான்.
சிறுவன் மசெவ்விற்கு தந்தை இல்லை. தாய் இருப்பது வெகு தொலைவிலுள்ள டோயோஹசி எனும் நகரில். பிறப்பிலிருந்தே தனது பாட்டியுடன் டோக்கியோ நகரில் வசிக்கிறான் மசெவ். அவனது பாட்டி டோக்கியோ நகரிலிருக்கும் இனிப்புக்கடையொன்றில் பணிபுரிவதால், மசெவ்விற்கான உணவை மேஜையில் வைத்துவிட்டுச் சென்றிருக்க, வீடு திரும்பும் மசெவ் அவ்வுணவை எடுத்து உண்ணுகிறான். இந்தக் காட்சியில் பெற்றோரது பாசமும் பரிவும் சூழாதுபோன மசெவ்வின் விதிக்கப்பட்ட வெறுமையிலான மனோகதியும் அநாதைவயப்பட்ட நாள்கடப்புக்களும் அடர்கிறது. மறுநாள் பொழுதுபோகாமல் யூஜியைத் தேடிச் செல்கிறான். யூஜி வீட்டிலிருப்பதில்லை. மற்றொரு நண்பனைக் காணச்செல்ல, அவனும் தனது குடும்பத்தாரோடு விடுமுறைக்காலப் பயணத்தின் துரிதத்திலிருக்கிறான். மனதில் துயரம் கவிய இல்லம் திரும்புகிறான் மசெவ். இந்த சமயத்தில், அவனது பாட்டிக்கு தபாலாக ஒரு பெட்டி வருகிறது. அந்தப் பெட்டியை வாங்கும்பொருட்டு, பாட்டியினது முத்திரைப் பொறியினை (Stamp) தேடுகிறான். அப்போது அவனது கண்களில் அவனது தாயினது புகைப்படம் அகப்படுகிறது. புகைப்படத்தை எடுத்து ஆவலாகப் பார்க்க, உடனடியாக விடுமுறைக்காலத் திட்டம் அவனுள் தயாராகிறது. தனது தாயைக் காண டோயோஹசி நகருக்குச் செல்வது என்பதே அந்தத் திட்டம். தடுத்துவிடுவாள் என்று மேலிடுகிற அச்சத்தின் காரணமாக பாட்டியிடம் சொல்லிக் கொள்ளாமலேயே மசெவ் புறப்பட்டுச் செல்கிறான்.
சிறிது தூரத்திலேயே சிறுவர் குழாம் ஒன்றால் மசெவ்வினது கையிலுள்ள பணம் பறிக்கப்பட, மசெவ்வினது பாட்டிக்குத் தெரிந்த பெண்ணொருத்தி தனது கணவனுடன் அங்குவந்து மசெவ்வினது பணத்தை மீட்டுத் தருகிறாள். பின்பு கணவனிடம் 50,000 யென்களைக் கொடுத்து டோயோஹசி சென்று மசெவ்வை அவனது தாயிடம் சேர்த்துவிடுமாறு துணைக்கு அனுப்புகிறாள். அவளது கணவனதும் மசெவ்வினதும் பயணம் தொடங்குகிறது.
இருவருக்குமான பயணத்தில் நேரும் இடர்பாடுகள் படம்நெடுக உடன்வருகிறது. இவையனைத்தும் மிகவும் சுவாரசியமான ஈர்ப்பில் படம்பிடிக்கப்பட்டுள்ளன. பொதுவாக, லத்தீன் அமெரிக்கத் திரைப்படங்களில்தான் நமது உள்ளத்தை கொள்ளைகொள்ளும் யௌவனம் மிக்க இயற்கைப் பிரதேசங்களையும் பயணத்தின்போதான நெடுஞ்சாலைகளையும் காணமுடியும். கிகுஜிரோ திரைப்படமும் அவற்றிற்கிணையான காட்சி அழகியலை நமது கண்களின் முன் வழிபரப்பிச் செல்கிறது. ஒளிப்பதிவாளர் கட்சுமி யநாகிஷிமா படத்தின் கதையோட்டத்திலிருந்து சிறிதும் விலகிவிடாமல், அதேசமயத்தில் தனது ஒளிப்பதிவின் அழகியல்பிலிருந்தும் விலகிவிடாமல் தனது சமன்பட்ட திறத்தினை படத்திற்கு வழங்கியிருப்பது இப்படத்தின் கூடுதல் சிறப்பாகும். கிடானோ எனும் வன்முறையைக் கதைக்களனாக்கும் படைப்பாளரிடம் இவ்வளவு மென்மையான கதைக்களனும் உண்டா என வியக்கும் அளவிற்கு "கிகுஜிரோ" திரைப்படத்தின் கதையோட்டம் பார்வையாளர்களாகிய நம்மை தனது காட்சிவலைகளுக்குள் தழுவும்விதமாக உள்ளிழுத்துக்கொள்கிறது.
பலவிதமான சிரங்களைக் கடந்து மசெவ்வினது தாய் வசிக்கும் டோயோஹசி நகரை இருவரும் சென்றடைந்துவிடுகிறார்கள். மசெவ் தயக்கத்துடன் வீட்டிற்குச் சற்று தூரத்தில் நிற்க, உடன்வந்த நபர் குறிப்பிட்ட விலாசத்தின் வீட்டைநோக்கிச் செல்கிறார். வீட்டின் முன்பலகையில் "யோஷிமுரா குடும்பம்" என எழுதப்பட்டிருக்க, அவருக்கு குழப்பம் உருவாகிறது. அந்தச் சமயத்தில் வீட்டின் கதவு திறந்து பெண்ணொருத்தி வெளியே நடந்துவருகிறாள். நடந்துவரும் தனது தாயை மசெவ் தூரத்திலிருந்தபடியே காண்கிறான். உள்ளழுத்தமும் மிக்க அமைதிகுணம் நிரம்பின அவனுள் உணர்ச்சி வெள்ளம் சன்னமாக அலைபுரள்கிறது. அவனது தாயைத் தொடர்ந்து ஒரு சிறுமியும், ஒரு ஆணும் வர, மசெவ்வின் தாய் இன்னொரு மண வாழ்வை மேற் கொண்டுவிட்டிருப்பதை அவனோடு நாமும் உள்ளுணர்கிறோம். துக்கம் மனம்கவிழ, திரும்பி ஏமாற்றத்துடன் நடக்கிறான் மசெவ். அவனுடன் வந்த நபருக்கும் தெரியும், அவள் மசெவ்வின் தாய்தான் என்பது. ஆனால் அவள் இப்போது மசெவ்வின் தாயாக மாத்திரம் இல்லை, மற்றொரு குடும்பத்தைச் சேர்ந்தவளும்கூட என்பது அதிர்ச்சியாகப் புரிபட, மசெவ்வை சமாதானம் செய்யும் பொருட்டு, விலாசம் சரிதான், ஆனால், வெளியே வந்தது அவனது தாயில்லை, வேறொரு பெண் என பொய்கூறி சமாளிக்கப் பார்க்கிறார். மசெவ் பதிலேதும் அளிக்காமல் மௌனமாக நடக்கிறான்.
இத்துடன் படம் முடிந்துவிடும் என்று நாம் எண்ணும்படி காட்சியமைப்புகள் நகர்ந்துசென்றாலும், இதற்கடுத்து தொடரும் படத்தின் கதைக்களம் படத்தின் மேன்மையை மேலும் வலிமைப்படுத்துகிறது என்பதை குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். ஏனெனில், வெறுமனே ஏமாற்றத்துடன் மசெவ்வுடன் டோக்கியோ திரும்ப உடன் வந்தவர் அனுமதியாமல், மசெவ்வினது கோடை விடுமுறைக்காலம் அவனது தாயிடம் கிட்டும் உற்சாகத்திற்கு இணையாக கழிய வேண்டும் என்றெண்ணி வழியில் சந்திக்கும் சில நபர்களோடு இணைந்து கடற்கரையோரமிருக்கும் ஒரு ஓய்விடத்தில் தங்கி மசெவ்வின் பொழுதுகளை உற்சாகப்படுத்துகிறார். மசெவ்வின் விடுமுறைக்காலம் புதிய சூழலில் புதிய மனிதர்களோடு கொண்டாட்டத்துடன் கடந்துசெல்கிறது.
இந்தச் சூழலில், இன்னொரு கிளைக்கதையும் படத்தில் வருகிறது. ஓய்வெடுக்கும் அந்தப் பிரதேசத்திற்கு சற்றுத் தொலைவிலிருக்கும் ஒரு மனநல விடுதிக்கு மசெவ்வின் உடன்வரும் நபர் செல்கிறார். அங்கு யாருடனும் பேசவிரும்பாத ஒரு வயோதிகப் பெண்மணியை தூரத்திலிருந்து பார்த்துவிட்டு மீண்டும் ஓய்வெடுக்கும் பிரதேசத்திற்குத் திரும்புகிறார். அந்தப் பெண்மணி அவரது தாய் என்பதை நாம் எளிதில் உணர்ந்துவிடுகிறோம். வாழ்வின் துர்கணம் அந்தப் பெண்மணியை அந்த மனநல விடுதியில் சேர்த்திருக்கக்கூடும். தாய் மீதான ஏக்கத்தில் மசெவ்விற்கு இணையானவர்தான் அவனது உடன்வந்த நபரும் என்பது நமக்கு இந்தக் காட்சியில் புலனாகிறது. ஒரு புள்ளியில் ஒருசேர துயரமும் ஏக்கமும் கவிய இணையும் கதாபாத்திரங்களாகவும் இருவரும் தென்படுகின்றனர். மசெவ்வின் முதிய கதாபாத்திரமாகக்கூட உடன்வரும் நபரை நாம் அவதானிக்கலாம்.
இருவரும் மீண்டும் டோக்கியோ திரும்புகிறார்கள். தற்செயலாக பிணைப்புக் கொண்டவர்கள் இப்போது வலுவாகப் பிரியவேண்டிய தருணம். அந்தத் தருணத்தில், மசெவ் மகவின் ஏக்கத்துடன் உடன்வந்தவரைப் பார்ப்பான். அதேபோல அவரும் தந்தைமையுணர்வுடன் மசெவ்வைப் பார்ப்பார். நமது உள்ளத்தில் பனிமூட்டத்தை உருவாக்கும் காட்சியிது. பிரிந்துசெல்லுமுன், மசெவ் ஆவலாக, "உங்களது பெயர் என்ன?" என்று முதன்முதலாக அவரது பெயரைக் கேட்பான். அவர் திரும்பிப் பார்த்துக் கூறுவார், "கிகுஜிரோ".
கிகுஜிரோ எனும் தந்தைமைமிக்க நபரிடமிருந்து விடைபெற்று, மசெவ் தனது பாட்டியின் இருப்பிடத்திற்கு ஓடத்துவங்குகிறான். அவன் ஓடிக்கடக்கும் பாலத்தினடியில் ஒரு படகொன்று நதியின் திசையினூடே நகர்ந்து செல்கிறது. அது மனிதர்கள்மீது விதிக்கப்பட்ட வாழ்வினோட்டமாகவும் குறியீடு செய்யும் பேரர்த்தத்துடன் விரிவடைந்து படம் முடிகிறது. பாசமும் அரவணைப்பும் உறவாய் நேரிட்ட சுற்றத்திடம் மட்டுமல்ல, மனிதராய்ப் பிறந்த எவரொருவரிடமிருந்தும் மடை திறந்த வெள்ளமாக பெருகிவழிய வல்லதாகும் என்பதும் அந்தப் பேரர்த்தத்தில் பொதிந்தலையும் ஓர் அன்புச்சொல்லாகப் பரிணமிக்கிறது.
நான் பார்வையிட்டவரை, ஜப்பானிய சினிமாவின் ஜென் இயக்குநர் என வர்ணிக்கப்படும் கோஹேய் ஒகூரியின் "சேற்று நதி" (Muddy River) திரைப்படத்திற்குப் பின்பு பார்வையாளர்களது மதிமயங்கச்செய்யும் சிறுவர் திரைப்படமாக முன்வைக்கத் தகுமானது "கிகுஜிரோ" திரைப்படம்தான். "சேற்று நதி" அளித்த அதே ஏக்கத்திலான மனவுணர்வினை வேறொரு தொனியில் "கிகுஜிரோ"வும் அளித்துவிடுகிறது. இவ்விடத்தில், சிறுவரின் வாழ்வுலகை குழந்தைமையுணர்வுடன் பிரதிசெய்த ஜப்பானியத் திரைமேதை யசுஜிரோ ஒசுவையும் குறிப்பிடவேண்டும். அவரது படங்களில் சிறுவர் வந்துசெல்லும் காட்சிகள் நமது மன ஆழத்தில் ரசிக்கும்படி யதார்த்தத்துடன் அணுகப்பட்டவை. இயக்குநர் தகேஷி கிடானோவிடம் ஒசுவின் திரைத்தன்மை உண்டு என்பதற்கு கிகுஜிரோ ஒரு வெளிப்படையான சாட்சி.
அதேபோல், மௌனப்பட்ட நடிப்பின் வழியாக சகல உணர்வுகளையும் வெளிப்படுத்தும் திறன்பெற்ற நடிகர் தகேஷி கிடானோ இந்தப் படத்திற்குத் தனது கதாபாத்திரத்தின் வழி அளித்திருக்கும் நகைச்சுவைக்களம் மிகவும் புதியது. ஒருவிதத்தில், விளிம்புநிலை மனிதர்களையும், சமூகம் நிராகரித்த மனிதர்களையும் திரையில் உலவவிடும் ஃபின்லாந்து திரைப்பட இயக்குநர் அக்கி கௌரிஷ்மேக்கியினது திரைப்பாணியிலமைந்த நகைச்சுவைக் காட்சிகளுக்கு இணையானது எனவும் கூறலாம். தகேஷி கிடானோ எனும் தனித்துவம் மிக்க படைப்பாளர் திரையுலகிற்கு வழங்கின படைப்புக் கொடைகளில் "கிகுஜிரோ" திரைப்படம் அனைத்துக்குமான மேன்மைப்பட்ட ஒன்றாகத் திகழும் என்பதை அந்தத் திரைப்படத்தைக் காணநேரும் எவரொருவரும் இதயத்தின் உயிர்த் துடிப்பாக எளிதில் கண்டுணரலாம்.

No comments:

Post a Comment