Thursday, November 4, 2010

எல்லை இல்லா வானமும் கொல்லைப்புற வேலிகளும்

எல்லை இல்லா வானமும் கொல்லைப்புற வேலிகளும்
Tamil Economics Article "நான் உங்களுடைய பல் துலக்கிக்கு என்னுடைய பற்பசையில் சிறிது தந்தால், நம் இருவருக்கும் வெள்ளை வெளீரென்று பற்கள் பிரகாசிக்கும், இந்தப் பண்டப் பரிமாற்றத்தினால் நம்முடைய பற்கள் உடைந்து விழும் என்ற அபாயம் கொஞ்சமும் இல்லை." - ஜகதீஷ் பகவதி (பொருளாதார அறிஞர்)
"IN DEFENSE OF GLOBALISATION" என்ற புதிய நூலில் மனித முகத்துடன் கூடிய உலகமயமாக்கம்" ( globalisation with a Human face ) என்று நனைந்த குரலில் பொருளாதார வளர்ச்சி பற்றி கர்ஜிப்பவர்கள் அதனுடைய தற்போதைய முகம் சாத்தானின் முகமாக உள்ளது என்பதை மறைமுகமாக ஒப்புக் கொள்கிறார்கள். சாத்தானுக்கு ஒரு புன் சிரிப்பு தவழும் மனித முகமூடி மாட்டுகையில் கிடைக்கும் காட்சி மாறல்களின் போது, முற்பட்ட நாடுகளிலிருந்தும் பிற்பட்ட நாடுகளுக்கு சுபிட்சம் ஒழுகுவது போல் ஒரு தோற்றம் தெரிகிறது. அப்படிப்பட்ட கானல் தோற்றத்தில் ஒன்றுதான் "வெளிப்பணியாக்கம்" ( Out Sourcing ) என்னும் நவீன முதலாளிய அடவு முறை என்கிறார்கள் மக்களுக்கான வளர்ச்சி முன்மாதிரிகளை மொழிகின்ற பொருளியல் வல்லுநர்கள்.
ஒரு தொழில் நிறுவனம் அல்லது அமைப்பின் வாடிக்கையாளர்/உறுப்பினருக்கான சேவைகளையும், தேவைகளையும் வெளியில் இருந்து செய்து தரும் நிறுவனங்களே (Business Process Outsourcing - BPO), இதில் பல்வேறு விதமான பணிகள் உள்ளன. சில வருடங்களுக்கு முன்பு பரபரப்பாகப் பேசப்பட்ட "மருத்துவக் குறிப்பெழுத்து" (Medical Transcription) இதிலொரு வகை, தற்போது "வினாவுத்தர மையங்கள் (Call Centres) பற்றி அலாவுதீனின் அற்புத விளங்கு கண்டெடுத்த ஆச்சரியத்துடன் பேசுகின்றனர் கணினி மாணவர்கள்.
உலக அளவில் "வணிக முறைமை வெளிப்பணியாக்கத்தின் (BPO) ஒரு பகுதியைக் தனியாக பிரித்தெடுத்து, "அறிவுசார் முறைமை தொலைப்பணியாக்கம்" (KNOWLEDGE PROCESS OFF SHORING" - K.P.O.)என்ற துறை வேகமாக வளர்ந்து வருகிறது. "கே.பி.ஓ." பணிகளில் ஈடுபடுவோர்க்கு அதிகதிறமையும், படிப்பறிவும் வேண்டப்படுகிறது. எனவே ஆங்கிலம் தெரிந்த பட்டதாரிகளுக்குப் பதிலாய் டாக்டர்கள், பொறியியலாளர்கள், எம்.பி.ஏ படித்தவர்கள்தான் இங்கே நுழைய முடியும். இவர்களுக்கு "அறிவுசார் சொத்துரிமை" (Intellectual Property Right) மற்றும் "காப்புரிமை" (Patent Right) பற்றிய விளக்கம் அளிக்கவும், கடிதங்கள் எழுதவும், வழக்குகள் பதிவு செய்யவும் வேண்டிய தொழில் நுட்ப அறிவு இருக்க வேண்டும். இதன் மூலம் அமெரிக்க வழக்கறிஞர் ஒருவர் அங்கிருந்தபடி சொல்லும் வழக்குரை காதையை இந்தியாவில் இடுக்கில் இருக்கும் கணினி மூலையிலிருந்து செப்பனிட்ட படிமமாக அனுப்பி வைக்க முடியும். இந்த "கே.பி.ஓ. சென்டர்" துவங்குவதில் பி.பி.ஓ.வை விட இரண்டு மடங்கு இலாபம் இருக்கிறது. எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதனோடு தொடர்புடைய இன்னொன்று "ஆய்வு முறைமை வெளிப்பணியாக்கம்" (Research Process Outsourcing" - RPO.) உயிரி தொழில் நுட்ப நிறுவனங்கள் ஆர்.பி.ஓ-வின் வளர்ச்சிக்கு வழிகாட்ட உள்ளன.
"தகவல் தொழில் நுட்பத்துணையுடைய பணிகள்" (Informating Technology Enabled Services" - ITES) மற்றும் "வணிக முறைமை வெளிப்பணியாக்கம் (BPO) போன்ற சேவைத் துறைகளில் அமெரிக்கர்களும், ஐரோப்பியர்களும் செய்து வந்த வேலைகள் காணாமல் போய், ஹைதராபாத்திலும், பெங்களூரிலும் உள்ள கணினி சார் நிறுவனங்களில் இந்தியர்கள் மூலம் செய்யப்படுவதாக ஓர் ஊகக்காட்சியை எல்லா ஊடகங்களிலும் பூதாகரப்படுத்தி வருகின்றனர். உண்மையில் சினப்பெருஞ்சுவர்களுக்கு நடப்பதை யாரும் அறியவில்லையோ எனத் தோன்றுகிறது. சினா இந்த வெளிப்பணியாக்க நுட்பத்தில் ஒரு டிராகனைப் போல் எல்லோரையும் விழுங்கி வளர்ந்து வருகிறது. சினர்களின் மூச்சில் அரைபட்டு ஆங்கிலம் இழுக்கிற ஆஸ்துமா ஒலி கூடி சிரமைக்கப்பட்டு விட்டதாம்.
தகவல் தொழில் நுட்பத்தின் பிதாமகன்கள் என்றறியப்படுகிற ஐபிஎம் (IBM) அக்சென்டுர் (Accenture) போன்றவை தங்களுக்குத் தங்கமுட்டையிட்டுக் கொடுக்கும் இந்திய நிறுவனங்களுடன் கலப்புத் திருமணம் செய்து கொண்டுள்ளன. தொழில் நுட்ப நிறுவனங்களான மைக்ரோஸாப்ட், இன்டல், ஓரகிள், மோட்டோரோலா, டெக்சாஸ் இன்ஸ்ட்ருமென்ஸ், பீப்பிள் ஸாப்ட், ஹனிவெல், டெல் போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் செல்பாடுகளை விரிவாக்கம் செய்துள்ளன ஏற்கனவே ஜி.இ (GE) ஜெர்மனியப் பன்னாட்டு மூலதன நிறுவனமான ஸ“மென்ஸ் (SIEMENS) பிரிட்டீஷ் வங்கி ஹெச்.எஸ்.பி.சி. (HSBC)போன்றவை களம் இறங்கி தளம் நிறுவி உள்ளன.
தமது நாட்டில் உள்ள பெருந்தொழிற் சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் தயாரிப்புகளுக்கு வேண்டிய மூலப் பொருட்கள் மற்றும் இணைப்புப் பகுதிகளை ஆசியா கண்டத்தில் அமைந்துள்ள நாடுகளிலிருந்து, குறைந்த சம்பளத்தில் வேலைக்கு ஆளமர்த்தி உருவாக்கிப் பெறுவது வளர்ச்சியடைந்த நாடுகளில் வாடிக்கை. கடந்த 25 ஆண்டுகளாக கனரக இயந்திரங்கள், ஊர்திகள், மருந்துகள், போன்ற பெருந்தயாரிப்புகளுக்கான மூலங்களை குறைந்த செலவில் பெற்றுக்கொள்ளும் "வெளிப்பணியாக்கம்" நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஏழைநாடுகள் "வெளிநாட்டு மூலதனம் கொட்டுகிறது" என அகம் மகிழ்ந்து இந்தத் தொழிலில் உவகையுடன் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. தற்போது அமெரிக்க - ஐரோப்பிய நாடுகளில் பெரும்பான்மையோர் வேலை பார்க்கும் "வாடிக்கையாளர் சேவகப் பணிகள்" (CUSTOMER SERVICE) நிறைந்த சுற்றுலா, போக்குவரத்து, ஆயுள் காப்பீடு, வங்கி, பங்குச் சந்தை போன்ற துறைகளில் கனிவான பேச்சு மூலமும், கம்ப்யூட்டர் மூலமும் செய்ய வேண்டிய வேலைகள்கூட செலவுகளில் சுருக்கம் கருதி வெளிநாடுகளில் செய்யப்படுகின்றன. இந்த "அவுட் சோர்சிங்" எனப்படும். "வெளிப்பணியாக்கம்" (OUT SOURCING) பொருளாதார வட்டத்தில் வேறுபட்ட விவாதங்களை கிளப்பி இருக்கிறது.
ஐரோப்பாவில் 100 பெரிய நிறுவனங்களில் 39% ஏற்கனவே தங்கள் உற்பத்தித் தேவைகளை வேறு நாடுகளுக்கு மாற்றிவிட்டன. 44% நிறுவனங்கள் மாற்றும் முடிவை எடுத்துள்ளனவாம். பிரிட்டீஷ் நிறுவனங்களில் 61% - ம், ஜெர்மனி நிறுவனங்களில் 15% - ம் வேறு நாடுகளிலிருந்து வெளிப்பணியாக்கம்" மூலம் உற்பத்தியை முன்னெடுத்துச் "செல்வதாகக்கணக்கு." ஆசிய நாடுகளில் இந்தியாவை ஐரோப்பிய நாடுகள் பெரிதும் விரும்புகின்றன. ஆங்கில மொழியில் நல்ல தேர்ச்சி பெற்ற நிர்வாகிகளும், தொழில் நுட்ப வல்லுநர்களும் இந்தியாவில் இருப்பதால் ஐரோப்பிய நிறுவனங்களுக்குத் தகவல் தொடர்பு எளிதாக இருக்கிறது. உற்பத்திச் செலவு அதிகம் உள்ள ஜெர்மனி, பிரான்ஸ் ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் பணி இடமாற்றம் குறித்து முழு திருப்தி அடைந்துள்ளன.
ஐரோப்பிய நாடுகளுக்கிடையேயும் "அவுட்சோர்சிங்" நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. ஜெர்மனியில் நடைபெறுகின்ற இறுதிச்சடங்குகளை வெளிப்பணியாக்கம் மூலம் செய்து பணம் சம்பாதிக்கின்றனர். செக் குடியரசில் உள்ளவர்கள். இறந்து போனவர்களைத் தகனம் செய்வதற்கு ஜெர்மனியில் மூன்று வாரங்கள் வரை காத்திருக்க நேர்கிறது. அதற்கு மேலே நிரப்பிக் கொடுக்க வேண்டிய காகிதப் பணிகளின் பழு வேறு. பெர்லினில் ஒரு தகனச் செலவுக்கு 5,000 யூரோ செலவளிக்க வேண்டிய உள்ளது. சலித்துப் போன மக்களுக்கு சர்க்கரை விருந்தாய் அமைந்துள்ளது. ஹார்மட் வோயிட் என்பவர் செக் நாட்டு எல்லையில் "வைசோகான்ஸ்க்" என்ற இடத்தில் அமைந்துள்ளன தகன மண்டபம். பெர்லினிலிருந்து நான்கு மனி நேரப் பயணத்தின் இந்த இடத்தை அடைந்து விடலாம். நாட்டின் எல்லைக்கப்பால் பிணமான உடலை எடுத்துச் செல்வதற்கு ஜெர்மனியில் எந்தத் தடையும் இல்லை. பொறுப்பான முறையில் ஒரு மருத்துவரின் சான்றிதழ் இருந்தால் போதும். பிணத்தோடு சென்று களைப்படைந்தவர்கள் இளைப்பாற அங்கே தங்கும் வசதிகளும், உணவு விடுதியும் கூட அமைக்கப்பட்டடுள்ளன. பிறகென்ன? வாரத்துக்கு மூன்று நான்கு முறை வோயிட்டின் பிண ஊர்திகள் ஜெர்மன் அமரர்களை ஏந்தி வரும் யாத்திரையில் உள்ளன. ஆனால் வெளிநாடுகளிலிருந்து சாம்பல் எதுவும் அனுமதியுன்றி கொண்டு வரக்கூடாது என்பது ஜெர்மானியச் சட்டம், சாம்பலை சிறிதளவு மண்ணுடன் கலந்த எடுத்து வர தடையேதும் இல்லை. இப்போது வேறு வழியின்றி, இப்படி எல்லை கடந்து எரியப்போகும் பிணங்களுக்கு வரி விதிக்கத் தயாராகிவிட்டது பெர்லின்.
அமெரிக்கா, கனடா, ஐரோப்பா போன்ற நாடுகளில் ரோமன் கத்தோலிக்கப் பாதிரியார்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இங்குள்ள கிறிஸ்தவர்களின் திருப்பலிகளை நிறைவேற்றும் பொறுப்பு இந்தியா மற்றும் இதர நாடுகளில் உள்ள பாதிரியார்களுக்கு வழங்கப்படுகின்றது. கேரளத்தில் உள்ளூர் ஆத்மாக்களுக்கான திருப்பலி, நன்றித் திருப்பலி ஆகியவற்றுக்கு நன்கொடையாக சுமார் 40 ரூபாய் வசூலிக்கப்படுகிறதென்றால், அமெரிக்காவிலிருந்து வரும் திருப்பலி வேண்டுதல்களுக்கு 2000 ரூபாய் வரை வருமானம் கிடைப்பதாக தெரிகிறது. கனடாவில் இத்தகைய இறைவிண்ணப்பங்களை நிறைவேற்ற 5 கனடியன் டாலர்கள் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது அதே வகையில் அந்த விண்ணப்பம் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டால் இந்தியாவில் இருக்கும் அரும்தந்தைக்கு 5 கனடியன் டாலர்களுக்கு நிகரான கட்டணம் வழங்கப்படுகிறது. இது பற்றி சிரோ - மலபார் திருச்சபையின் செய்தித் தொடர்பாளர் அருட்திரு. பால் தேலக்கத் சொல்லும்போது. ஒவ்வொரு நாட்டில் பிஷப்களின் குழுமம் வெளிநாடுகளிலிந்து வரும் திருப்பலி வேண்டுகோள்களை நிறைவேற்றுவதற்கான கட்டணத்தைத் தீர்மானிக்கும் என்றுள்ளனர். இந்த முறையின் படி தேவாலயங்களுக்கு வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட இருக்கிறது ஜான் கெர்ரி, தாம் வெற்றி பெற்றால், வரிகளைச் சிரமைத்து, வேலை வாய்ப்புகள் கிழக்கு நாடுகளுக்குப் போய்ச் சேருவதைத் தடுப்பதாகக் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் நிர்வாகிகள் "பெனடிக்ட் அர்னால்ட்" ரக முதன்மை அதிகாரிகள்" எனக் கிண்டலடித்துப் பிரச்சாரத்தைத் துவக்கினார் கெர்ரி. அமெரிக்கப் புரட்சியின்போது புரட்சியாளர்களுக்குத் துரோகம் செய்துவிட்டு ஆங்கிலேயக் காலனியாதிக்கக்காரர்களோடு போய்ச் சேர்ந்த தளபதி பெயர்தான் பெனடிக்ட் அர்னால்ட்.
"சுதந்திரமாகச் செயல்படும் வணிகச் சக்திகளின் புதிய வெளிப்பாடுதான் வெளிப் பணியாக்கம்.... அது காலப்போக்கில் அமெரிக்காவுக்கு இலாபம் அளிப்பதாகவே அமையும்" என்பது ஜார்ஜ் புஷ்ஷின் கட்சி முன்வைக்கும் கோஷம். தற்போதைய நிலவரப்படி, பன்னாட்டு மூலதன நிறுவனங்கள் வெளிப்பணியாக்கத்துக்கு ஆதரவு காட்டுவதானல் ஜான் கெர்ரியும் அடக்கி வாசிக்கத் துவங்கி உள்ளார்.
அமெரிக்காவின் "சேம்பர் ஆஃப் காமர்ஸ்" தலைவர் தேமாஸ் டோனவூ இந்தியத் தொழிலதிபர் கூட்டமைப்பு ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில் "அவுட் சோர்சிங்"குக்கு ஆதரவாகவே பேசியுள்ளார். "அவுட்சோர்சிங்" அமெரிக்கப் பொருளதாரத்துக்கு நன்மை பயக்கவல்லது. "அவுட்சோர்சிங்" முறையில் பணிகளை முடித்துக் கொள்ளும் நிறுவனங்கள் தங்கள் வழி கவனத்தை புதிய பொருட்கள் தயாரிப்பதலும், புதிய வேலைகளை உருவாக்குவதிலும் செலுத்தலாம். இதனால் நிறுவனங்களின் ஆதாரநிலை மெச்சப்படும். இதன் மூலம் பங்குகளின் மதிப்பு கூடும். அமெரிக்காவின் குடும்பங்களில் பாதிக்கு மேல் தங்கள் கைவசம் பங்குகள் வைத்துள்ளதனால் குடும்பப் பொருளாதாரம் மேம்படும். "அவுட் சோர்சிங்" மூலம் எத்தனை வேலை வாய்ப்புகள் அமெரிக்காவுக்கு வெளியே தாரை வார்க்கப்படுகின்றன என்பது முக்கியமல்ல. அமெரிக்காவின் திறந்த வெளிப் பொருளாதாரக் கொள்கை காரணமாக "அகப் பணியாக்கம்" மூலம் அதைவிட நிறைய வேலைகள் உள்நாட்டில் உருவாகும் என்பது தான் உண்மை...." என்பது டோனாவூவின் பேச்சின் சாராம்சம்.
நல்ல தொழில் நுட்பமும், ஆங்கில அறிவும் கூடிய 20 இலட்சம் பட்டதாரிகள் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் உருவாகிறார்கள். 10 ஆண்டுகளாக "அவுட்சோர்சிங்" துறையில் இந்தியாவுக்கு அனுபவம் உள்ளது. இரவு பகலாக கண்விழித்து குறைந்த சம்பளத்துக்கு வேலை பார்க்க இந்தியர்களுக்கு நிகர் இந்தியர்களே. எனவே திறமை மற்றும் குறைந்த சம்பளம் காரணமாக, பன்னாட்டுப் பெரிய நிறுவனங்கள் தங்கள் "சேவைகளை இந்தியா மூலமாக நிறைவேற்றிக் கொள்கின்றன.
அமெரிக்காவில் தகவல் தொழில் நுட்பத் துறையில் வேலை பார்ப்பவர் எண்ணிக்கை 10 மில்லியனைத் தாண்டும். இந்தியாவில் 8 இலட்சம் பேர் மட்டுமே இந்தத் துறையில் வேலை பார்க்கிறார்கள். இன்னும் 5 ஆண்டுகளில் இந்தத் துறையில் வேலை பார்ப்பவரின் எண்ணிக்கை 2 மில்லியனாக அதிகரிக்கலாம். (அதற்கு வெளிப் பணியாக்கம் இதே கதியில் நடக்க வேண்டும்) அடுத்த 5 ஆண்டுகளில் இதே துறையில் அமெரிக்கர்களின் எண்ணிக்கை எத்தனை மில்லியன் அதிகரிக்கும் என்று சொல்ல முடியாத நிலையில், 8லட்சம் எங்கே - 1கோடி எங்கே என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.
அமெரிக்காவில் உள்ள சேவைத்துறை வேலைகளில் 14 மில்லியன் வேலைகள் வெளிப்பணியாக்கத்தினால் திரிசங்கு சொர்க்கத்தில் நிற்கும் நிலையில் உள்ளன என்கிறது ஓர்ஆய்வு. எனவே நியூஜெர்சி. மேரிலாண்ட், வாஷிங்டன், மிசோரி ஆகிய மாநிலங்கள் உள்நாட்டு வேலைகள் வெளிநாட்டுக்குத் தாவுவதைத் தவிர்க்க சட்டம் இயற்ற முன் வந்துள்ளன.
சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவின் வாய்ப்பந்தலில் மயங்கி இந்தியாவின் பத்திரிக்கைகளில் "டாட்காம்" வணிக நிறுவனங்களின் தோற்றம் பற்றி மழைக்காளானாய் விளம்பரங்கள் முளைத்தன. இன்று அவை இருக்குமிடம் தெரியவில்லை. வங்கிகள் வாரிக் கொடுத்த கடன்களின் கோடிக் கணக்கு இன்னமும் இரகசியமாகவே விவாதிக்கப்படுகிறது.
வெளிப்பணியாக்கம் மூலமாக வேலை பறி போனதால் அமெரிக்காவில் உள்ள ஒரு வங்கியின் கணினி அலுவலர் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி அமெரிக்காவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அலுவலர் ஒருவர் தற்கொலை செய்ய நேர்ந்ததற்கே நாடு முழுவதும் உள்ள நிறுவனங்களும், அரசியல் கட்சிகளும் மறுப்பும் எதிர்ப்பும் தெரிவிக்க வேண்டிய நிர்ப்பந்தம் அங்கே ஏற்பட்டுள்ளது.
ஆனால் அமெரிக்காவின் வணிக ஆதிக்கத்துக்குத் துணை போகும் வண்ணம் இந்தியா ஏற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்தி வரும் உலகமய-தாராளமய கொள்கைகளினால் நாடு இழந்த வேலைகள் எத்தனை லட்சம்? பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவுக்குள் நுழைந்த பிறகு அவற்றுடன் போட்டி போட முடியாமல் மூடப்பட்ட தொழிற்சாலைகள் எத்தனை? உலக வங்கியின் மூப்புகளுக்குத் தலை வணங்கி உரங்களின் விலையை ஏற்றி, மின்சார மானியத்தை நிறுத்தியதன் காரணமாக தற்கொலை செய்து கொண்ட ஆந்திரா-கர்நாடகா விவசாயிகளின் புள்ளி விவரம் பற்றிக் கவலைப்படுவர் யார்?
"சுதந்திர வணிகம் என்பது ( FREE TRADE ) ஒருவித சூதாட்டம்: வெளிப்பணியாக்கம் / வேலை வாய்ப்பு என்பதெல்லம் அதில் ஒருவித உத்தி மட்டுமே" என்று தெருமுனையில் யாரோ சில வருடங்களுக்கு முன்பு கத்திக் கொண்டு நின்றது இப்போதும் நினைவில் மிதக்கிறது.

No comments:

Post a Comment