Friday, November 12, 2010

கண் கோளாறா? - உடனே கவனியுங்கள்

கண் கோளாறா? - உடனே கவனியுங்கள்

டாக்டர் ஏ. செந்தூர்பாண்டியன் Dr. Interview : Any Eye deffects, Check Immediately - Food Habits and Nutrition Guide in Tamil
கிளாகோமா என்பது ஒருவித கண் நோய். இதன் சிறப்பு என்ன? பலருக்கு இந்நோய் இருப்பது தெரியாது. அதன் காரணம், கண்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த வித வலியோ மற்ற அறிகுறிகளோ அதிகமாக இருக்காது. ஆனால் பார்வை, முக்கியமாக பக்கப்பார்வை கொஞ்சம் கொஞ்சமாக பழுதடைந்து கொண்டே இருக்கும்.
இறுதியில் சிறு குழாய் வழியாக பார்ப்பது போல் ஆகி, மேலும் குறைந்து முற்றிலுமாக போய் விடும் என்கிறார் டாக்டர் ஏ.செந்தூர் பாண்டியன். அவர் மேலும் கூறியதாவது:-
சாதாரணமாக நம் கண்கள் காற்றடைத்த பந்து போன்றவை. கண்களுக்கு உருவம் கொடுக்க, காற்றுக்குப்பதிலாக கண்களுக்குள் ஒரு வித திரவம் உள்ளது. அதனால் கண் தன் உருவத்தைப் பெறுகிறது. அதற்கு கண்ணுள் அழுத்தம் தேவைப்படுகிறது. இந்த அழுத்ததின் அளவு சாதாரணமாக 15-21 எம்எம்எச்ஜி இருக்கும்.
ஆனால், எந்த காரணத்தாலும் இந்த அழுத்தம் 22 எம்எம்எச்ஜிக்கு மேல் அதிகரித்தால் கண்ணின் நரம்பு பாதிக்கப்படும் வாய்ப்பு ஏற்படுகிறது. நரம்பிற்கு இரத்தம் கொடுக்கும் நுண்ணிய இரத்த குழாய்கள் சரியாக செயல்பட முடியாமல் அதனால் நரம்பு கெட்டுவிடும். இதைத் தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக பக்கப்பார்வை இழப்பு ஏற்படும். பார்வை போனது திரும்பக் கிடைக்காது.
இந்த "கிளாகோமா" நோயில் 40 க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. சில வகைகளில் வலி இருக்கும். வலியிருந்தால் அதற்காக மக்கள் கண் மருத்துவரை நாடி வருவார்கள். ஆனால் வலி இல்லாத அறிகுறிகள் அற்ற "குரோனிக் கிளாக்கோமா" என்ற பாதிப்பு இருப்பவர்களுக்கு, இந்நோய் கண்பார்வையை மிகவும் கெடுத்து விடும்.
இந்த வகை "கிளாகோமா"தான் மக்களை அதிக அளவில் பாதிக்கிறது. எந்தவித வலியோ, உறுத்துதலோ, நேர் பார்வை பாதிப்போ இருக்காது.
பின் எவ்வாறு கண்டுபிடிப்பது?
கண் மருத்துவர் சோதனை செய்தால் ஆரம்பத்திலேயே இந்நோயினை கண்டுபிடித்து, தேவையான சிகிச்சைசெய்து பார்வை இழப்பைத் தடுக்கலாம்.
இவர்கள் கண்களில் அழுத்தம் அதிகமாக இருக்கும். சோதனைகள் மூலம் பக்கப்பார்வை பாதிப்பு, மற்றும் கண் நரம்பு மாற்றங்களை கண்டறிந்து, கண் மருந்துவர் இந்நோய் இருப்பதை கண்டுபிடிப்பார். சிலருக்கு அடிக்கடி லேசான தலைவலி, கண்வலி, இருக்கலாம்.
அடிக்கடி கண்ணாடி மாற்றுவது மட்டும் சிலருக்குத் தேவைப்படலாம். ஆனால் நிறைய பேருக்கு எந்தவித அறிகுறியும் இருக்காது. சோதனைகள் மூலம்தான் கண்டுபிடிக்க முடியும். சர்க்கரை நோய் உள்ளவர்கள், அதிக இரத்த அழுத்தம் இருப்பவர்கள், கிட்டப்பார்வை பாதிப்பு உள்ளவர்களுக்கு மற்றும் குடும்பத்தில் யாருக்காவது "கிளாகோமா" பாதிப்பு இருந்தால், இந்நோய் வருவதற்கு வாய்ப்பு அதிகம்.
நோயை கண்டு பிடித்ததும் அதற்கு மருத்துவம் செய்தாக வேண்டும். கண் அழுத்தத்தைக் குறைப்பதுதான் பார்வையைக் காப்பாற்ற உள்ள ஒரே வழி.
இதற்கு கண் சொட்டு மருந்துகள் உள்ளன. அதை தவறாமல் உபயோகித்துக் கொண்டேயிருந்தால் கண் அழுத்தத்தைச் சீராக வைத்திருக்கலாம். இது வாழ்நாள் முழுவதும் தேவைப்படும்.
மேலும் சிலருக்கு, சொட்டு மருந்துகள் மட்டும் தேவையான அளவு அழுத்தத்தைக் குறைக்காது. அவர்கள் மாத்திரைகள் உட்கொள்ள வேண்டியிருக்கும். அதன் வழியாக அழுத்தத்தைக் குறைக்கலாம்.
"லேசர்" சிகிச்சையும் அழுத்ததைக் குறைக்க சிலருக்கு தேவைப்படுகிறது.
மற்றும் பலருக்கு அறுவை சிகிச்சைதான் சிறந்த வழி. ஏனென்றால் வாழ்நாள் முழுவதும் மருந்துகளை உபயோகிப்பது கடினம். செலவும் அதிகம். இவ்வாறு பல வழிகளில் அழுத்தத்தைக் குறைத்து சாதாரண நிலைக்கு கொண்டு வந்தால் மேற்கொண்டு பார்வை கெடாமல் இருக்கும். பாதிக்கப்பட்டவர்கள் அடிக்கடி கண்களை சோதனை செய்து கொள்ள வேண்டும்.
இந்த கிளாகோமாவில் நான் முன்பு கூறியதைப் போல் பல வகைகள் உள்ளன. பிறந்த குழந்தை முதல் முதியோர் வரை பாதிப்பு பல வகையான "கிளாகோமா"வினால் ஏற்படுகிறது. அதனால்தான் கண் சோதனை அனைவருக்கும் அடிக்கடி அவசியம் என்று கண் மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

No comments:

Post a Comment