Wednesday, November 3, 2010

நாடகம் -திரைப்படம் என்கிற இருவேறு ஊடகங்கள்

நாடகம் -திரைப்படம் என்கிற இருவேறு ஊடகங்கள்Drama - Cinema - Tamil Katturaikal - General Articles
வரலாறு நம்மை விடுதலை செய்யும்" என்கிற நம்பிக்கையினூடாகத்தான் ஒவ்வொரு ஊடகமும் வாழும் காலத்தில் வசைகளைத் தாங்கிக் கொண்டே வாழ்தலுக்காக மல்லாடிக் கொண்டிருக்கிறது. எல்லா நல்லதற்குள்ளும் கெட்டதும் இருக்கிறது; எல்லாக் கெட்டதற்குள்ளும் நல்லதும் இருக்கிறது என்கிற இயங்கியல் விதியின் நிரூபணம் மல்லாடலை இயல்பானதாக்கினாலுமே கூட, இந்த மோதல்தான் வாழ்க்கையை ருசிப்படுத்திக் கொண்டேயிருக்கிறது
அந்த வகையிலேதான் கவிதை, சிறுகதை, நாவல், நாடகம், தொலைக்காட்சி, திரைப்படம் என படைப்பிலக்கியம் சார்ந்த ஒவ்வொரு ஊடகமும் அதனதன் தொடக்க காலத்தில் இதே வகையான பிரச்சினைகளைச் சந்தித்தே வருகின்றன. அதற்குக் காரணம், படைப்புகள் அனைத்தும் பொய்மையானவையாயினும், அவை உண்மைக்கு மிக நெருக்கமாக நெருங்கி நின்று வாழ்க்கையைப் பதிவு செய்யும் உணர்வைத் தருவதாயிருக்கலாம், ஆனாலும் அவை எல்லாவற்றையும் மீறித்தான் படைப்பிலக்கியங்கள் அவை சார்ந்த ஊடகங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றன.
கவிதைகள் அதனதன் காலங்களில் என்னென்ன பிரச்சினைகளை எதிர்கொண்டனவோ அதையேதான் கதைகளும் எதிர்கொண்டன. கதைகளின் பிரச்சினைகளையே நாடகமும் எதிர்கொண்டது. நாடகத்தின் பிரச்சினைகளையே பிரமிப்புகளினூடாகத் திரைப்படமும் எதிர்கொண்டது. நல்ல கவிதை, நல்ல கதை, நல்ல நாடகம், நல்ல திரைப்படம் எல்லாமே மனதிற்குள் பூப்பூக்கிற அழகிய விந்தையைச் செய்து கொண்டிருப்பவை. ஆயின் முன்னதற்கெல்லாம் இருக்கிற தொன்மை என்கிற பழம்பெருமை திரைப்படத்திற்கில்லை. திரைப்படம் என்கிற ஊடகம் முகம் அந்தத் தொடக்க காலத்திலேயே கவிதை, நாடகம் போன்றவை தமக்கான அழுத்தமான கோட்பாடுகளை, வளமான படைப்புகளைப் பெற்று பல்þவ்று வகைகளாய்க் கிளைவிட்டு மணணில் கலந்திருக்கின்றன. ஆக, நல்ல கவிதை, நல்ல கலை, நல்ல நாடகம் ஆகியவற்றின் மடியில் தவழ்ந்து எழுந்து நடைபயின்ற வளர்ச்சி நம்முடையது. ஆனால் திரைப்படம், நம் கைபிடித்து மட்டுமே நடைபயின்று வளர்ந்த ஒரு குழந்தை!
இதில் மற்றைய படைப்பாக்க ஊடகங்களிலிருந்து நாடகம், திரைப்படம் இரண்டும் பார்வை வடிவக் கலையாயிருப்பதால், இரண்டிலும் நடிகர்கள் பங்கு பெற்றிருப்பதால் இரண்டிற்கும் ஏதோவொரு தொடர்பு இருப்பதைப் போன்றதொரு வழுவான தோற்றம் இயல்பிலேயே ஏற்பட்டு விடுகிறது, நாடகத்தின் நீட்சி திரைப்படம் என்பதாக! நாடகத்தில் பங்கேற்கிற அனுபவம் என்பது திரைப்படத்தில் பங்கேற்பதற்கான கடவுச்சிட்டு என்பதாகவும் ஒரு கருத்துப்பிழை இயல்பாகவே நமக்குள் இருந்து வருகிறது. இந்நிலையில் நாம் சொல்வதெல்லாம் இதுதான்:- இரண்டிலும் சாயல் பொருத்தங்கள் தெரியினும் இரண்டும் தன்னளவில் வேறு வேறானவை; இரண்டின் சாத்தியங்களும் வேறு வேறானவை; இரண்டின் குணப்பாடுகளும் வேறுவேறானவை!
மின்சாரம் அல்லது மின்சாரத்தை உற்பத்தி செய்கிற சாதனங்களைச் சாராமல் திரைப்பட உருவாக்கத்தின் எந்தக் கட்டமும் இல்லை! ஆனால் எந்தக் கட்டத்திலும் மின்சாரத்தை அவசியமாய்ச் சார்ந்தது இல்லை நாடகம்.
திரைப்படக்கலை என்பது பதிவு செய்யப்பெற்ற நகரும் ஒளிப்பட நறுக்குகளையும், பதிவு செய்யப் பெற்ற பல்வகை ஒலிகளின் நறுக்குகளையும் இணைத்துத் தொகுத்துப் பொருள் பொதிந்ததாய் வெளிப்படுத்துவது. தொழில் நுணுக்க வளர்ச்சியின் வெளிப்பாடு, ஒளிப்பதிவுக் கருவி, ஒலிப்பதிவுக் கருவி, தொகுக்கும் கருவி ஆகிய படைப்பாக்கக் கருவிகள் இல்லாது திரைப்படம் என்பதே சாத்தியமில்லை. இதற்கு எதிராக நாடகம் என்பது நடிகன் என்கிற உயிருள்ள படைப்பாக்கக் கருவி இல்லாமல் தான் இல்லை. நாடகத்தில் நடிகர்கள் நிஜம்; திரைப்படத்தில் நடிகர்கள் நிழல்; பார்வையாளரின் அந்நேரத்திய நடவடிக்கைகளை நிழல் நடிகர்கள் அந்தக் கணத்தில் அறிய வாய்ப்பேதுமில்லை. அது அவர்களின் அந்நேரத்திய படைப்பு நிலைச் செயல்பாட்டைப் பாதிப்பதுமில்லை. ஆனால் நாடகம் அப்படியில்லை. நாடகத்தின் முன்நிபந்தனை நடிகர்- பார்வையாளர் என்கிற இருபக்க மனஊடாட்டம் என்பதே! இது அரங்கக் கலையில் பொதுவான நியதி! ஆக, நிகழ்த்துக் கலையாக இல்லாத நிலையில், நிகழ்த்துனர் - பார்வையாளர் இடையிலான அந்நேரத்திய மனப் பரிவர்த்தனைக்குத் திரைக்கலையில் இடமேயில்லை.
பார்வையாளருக்கு நிகழ்த்துநருடனான பங்கேற்பும், நிகழ்த்துநருக்குப் பார்வையாளருடனான பங்கேற்பும் எல்லா நிலையிலும் எல்லா வகையிலும் உயிர்ப்புடன் சாத்தியம் நாடகத்தில் திரைப்படத்தில் உயிருள்ள இவ்வகைப் பங்கேற்பு சாத்தியமில்லா விடினும் பார்வையாளன் திரைப்பட நிழல்களின் அசை வியக்கங்களை அவர்களறியாமல் அவர்களுடனேயே இருந்து கண்காணித்து அனுபவிக்கிற மனப் பிரமையைப் பெறுகிறான். இது நாடகத்தில் கூடிவரச் சாத்தியமில்லை.
ஆடுகளத்தின் மொத்தப் பரப்பும் நாடகப் பார்வையாளரின் கண்களிலிருந்து விலகுவதுமில்லை; குறைவதுமில்லை. பார்வையாளருக்கும் நிகழிடத்திற்குமான தூரமும் பெருகுவதுமில்லை; குறைவதுமில்லை. அதுபோல் பார்வையாளர் நிகழிடத்தைப் பார்க்கும் கோணமும் ஏற்ற இறக்கங்களைக் கொண்டதல்ல. இவை அனைத்தையும் புற மொதுக்கியே திரைப்படம் தனக்கான குணக் கூறுகளைக் கொண்டிருக்கிறது.
திரைக்கலைஞர்களின் செயலாக்கங்கள் - படைப்புக் கணங்கள் - திரைச் சுருளாக நிரந்தரப் பதிவு பெற்று காலங்கடந்தும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால் நாடகக் கலைஞர்களின் செயலாக்கங்களுக்கு - படைப்புக் கணங்களுக்கு - நிரந்தரப் பதிவு என்பதே இல்லை. நிகழ்த்தும் அந்தக் கணத்தில் மட்டும்தான் அவர்கள் காற்றில் ஓயிமாய்க் கரைந்து மகிழ்ந்து போகின்றனர். புற்றீசல் வாழ்க்கை! ஒவ்வொரு நாள் நிகழ்த்தும்போது பிரதி புதுமெருகு பெறுகிறது. முடிந்து போகிற மனித வாழ்க்கையில் காலங்கடந்தும் வாழ நினைக்கிற மனித மனம், அதன் காரணமாகவே அழிவற்ற தன்மையைச் சாத்தியமாக்கியிருக்கிற திரைப்படத்தின்மேல் பித்துப்பிடித்து அலைகிறது என்கிற உண்மையையும் மறப்பதற்கில்லை.
ஒரு திரைப்படம் சந்தித்து வரும் பார்வையாளர் கணக்கென்பது ஒரு நாடகத்தை அதன் ஆயுட்காலத்தில் பார்ப்பவர்களின் கணக்கைவிடப் பல மடங்கு அதிகமானது. உலகமெங்கும் ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான பார்வையாளர்களை நிழல் வடிவில் சென்று சேர்வது திரைப்படம்; நிகழ்கலையான நாடகத்திற்கு அதற்கான சாத்தியம் அறவே கிடையாது. ஒளியைப் படம் பிடித்து ஒளிவடிவில் வெளிப்படுத்தும் தொழில் நுணுக்கக் கருவிகளைச் சார்ந்தது திரைப்படம்! எது பெரியது என்று கொம்பு சிவி விடுவதல்ல இதன் பொருள். இரண்டும் இரண்டு திசைகளில் அதனதன் பலம், பலவீனங்களுடன் பிரிந்து நிற்கிறது என்கிற உண்மை உணரப்பட வேண்டும் என்பதுவே முக்கியம்.
நாடகம் என்பது குணம்! முரண் அதன் வெளிப்பாடு. உறவுகளின் அக, புற முரண்கள் நாடகமாகின்றன. இதுவே நாடகம் என்பதன் குணம். இந்தக் குணம் கெட்டால் அது நாடகமாவதில்லை. இன்னொரு வடிவமாய்த் திரிந்துவிடும். நாடகியத்தன்மை கவிதையில் அமைந்திருக்கலாம். எடுத்துரைதன்மை கதையின் குணமாயிருப்பினுங்கூட நாடகியம் கதையிலும்கூட அமையக்கூடும். திரைப்படத்திலும் கூட நாடகியம் வெளிப்படமுடியும். வெளிப்பாடாமல் போனாலும் அது திரைப்படமாயிருக்கும். எடுத்துரைதன்மை (கதைகூறும் தன்மை) போதும் கதைகளும் திரைப்படத்திற்கு எந்த ஒரு கவிதையும் கூட திரைப்படமாகி விடமுடியும். திரைப்படம் என்பது குணமல்ல; தொழில் நுணுக்கம்! பதிவு செய்வது அதன் குணம், கதை, கவிதை, நாடகம் எதையுமேகூடப் பதிவு செய்யலாம். அதனாலேயே செய்திப்படம், விளம்பரப்படம், விவரணப்படம், குறும்படம், கதைப்படம் என்று தன் பதிவின் அடிப்படையில் திரைப்படம் பலவகையாய் முகம் காட்டுகிறது.
வேறுபாடுகளுடைய களங்களைக் கொண்டிருப்பினும் நாடகத்தில் நிகழ்த்தும் தளம் மாற முடியாது. வேறுபட்ட களங்களைத் தன் குறியீட்டுத்தன்மையால் ஒரே தளத்திற்குள் கொண்டு வரவேண்டிய நிர்ப்பந்தம் நாடகத்திற்கு உண்டு. அதாவது நாடகம் நிகழும் அந்தத் தளம்தான் குறியீட்டு நிலையிலான அரங்க வடிவமைப்புகளின் வழி நாடகாசிரியன் காட்டும் பல்வேறு களங்களாகி பார்வையாளர் மனங்களில் வெவ்வேறு படிமங்களாகிப் புதிய அனுபவத்திற்கு அவர்களை இட்டுச் செல்லும். ஆயின் திரைப்படம் என்பது, ஒளிப்பட யதார்த்தம் களங்களை அதனதன் இயல்புச் சூழலில் - யதார்த்த தன்மையில் - படம்பிடித்து நிழலாகக் காட்டக் கூடியதாகும். ஆக, குறியீட்டியல், யதார்த்தம் என்கிற இருவேறு பாங்குகளின் மேல் எழுப்பப்பட்டதே இவ்விரு கலைவடிவங்களும்!
நாடகத்தின் மைய அச்சு நடிகன்! அவனின்றி நாடகத்தை நிகழ்த்தல் என்பது சாத்தியம் இல்லை. ஆகவே நாடகம் நடிகனின் ஊடகம். அவனின் உடலும், குரலும்தான் அதற்கான கிரியாசக்திகள்! திரைப்படம் அப்படியில்லை. நடிகன் இல்லாமலும் திரைப்படம் சாத்தியப்படும். வானம் மட்டுமேகூட ஒரு திரைப்படமாய் அழகை விரிக்கக் கூடியதாயிருக்கும். மரங்களும், செடிகளும், பறவைகளும், மிருகங்களும்கூட ஒரு திரைப்படத்தின் நாயகத் தன்மையைப் பெற்றுத் திரைப்படமாக முடியும். ஆனால் நாடகத்தில் மரம், செடி, பறவை, மிருகம் எதாயிருந்தாலும் அது நடிகனால் மட்டுமே செய்யப்படக் கூடியதாயிருக்கும். இந்நிலையில் திரைப்படம் என்பது நெறிபாளுநரின் ஊடகமாகி விடுகிறது. ஒளிப்பதிவுக் கருவி இல்லாமல்தான் திரைப்படம் என்கிற கலை ஊடகம் இல்லாததாயிருக்கும். ஒளிப்பதிவுக் கருவியின் சொடுக்குகள் (Shots). கோணங்கள், நகர்வுகள், பயன்படுத்தப்படும் ஆடிகளின் தன்மை ஆகியவற்றைப் பொருத்தே அதனதன் குணத்திற்கேற்ப படம் பதிவாகின்றது.
இதில் எங்குமே நாடகத்திற்கும் திரைப்படத்திற்கும் ஊடகரீதியில் எந்தக் கொள்வினையும் கொடுப்பினையும் இல்லாத நிலையில் எப்படி நாடகத்திலிருந்து திரைப்படம் வந்திருக்க முடியும்? எப்படி நாடக நடிப்பு திரைப்படத்தில் நடிப்பதற்குக் கடவுச்சிட்டாக முடியும்?

No comments:

Post a Comment