Thursday, November 11, 2010

பெண்களுக்கு நவீன மூட்டு மாற்று அறுவை சிகிச்சை!

பெண்களுக்கு நவீன மூட்டு மாற்று அறுவை சிகிச்சை!

டாக்டர் ஏ.கே.வெங்கடாச்சலம் Knee Replacement Surgery for Women - Food Habits and Nutrition Guide in Tamil
மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொதுவாகத்தான் செய்யப்பட்டு வந்தது. இப்போது, அதிலும், நவீன சிகிச்சை வந்துவிட்டது.
பெண்களுக்கு, அவர்களின் உடல் அமைப்புக்கு ஏற்ப, நவீன மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியும். இதனால், துல்லியமாக மூட்டு பிரச்சினையை அறிந்து, அதற்கேற்ப ஒவ்வொரு பெண்களுக்கும் தனித்தனியான சிகிச்சையை தர முடியும். அப்படி செய்வதால், அவர்களுக்கு முழு பலன் கிடைக்கும்.
ஜிம்மர் ஜெண்டர்:
பெண்களுக்கு தனியாக செய்யப்படும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை முறைக்கு "ஜிம்மர் ஜெண்டர்" என்று அழைக்கப்படுகிறது. பெண்களின் மூட்டு வடிவமைப்பு, உடல் தோற்றம், தன்மையை கருத்தில் கொண்டு அதற்கேற்ப இந்த அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இந்த சிகிச்சைக்கு "ஜெண்டர் ஸ்பெசிபிக் ஹை ப்ளெக்ஸ் நீ சுப்ளேஸ்மென்ட்" என்று பெயர்.
இதனால், மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில், செயற்கை மூட்டு, கச்சிதமாக பொருத்தி, இயற்கையான அசைவுகளுக்கு ஏற்ப, வளைந்து கொடுக்கும்.
மூன்றில் இரண்டு பங்கு:
மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் பெண்களில், மூன்றில் இரண்டு பங்கினருக்கு இப்படி பிரத்யேக அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. மீதம் உள்ள ஒரு பங்கினருக்கு ஆண்களுக்கு ஈடான அறுவை சிகிச்சை போதுமானது.
வயதாகி விட்ட நிலையில், காயம் ஏற்படும் போது, தொற்று-நோய் காரணமாக, மூட்டு அழற்சி ஏற்படுகிறது. இந்தியாவில், 30 ஆயிரம் பேர் இந்த அழற்சி நோயால் பாதிக்கப்படுகின்றனர். இதில் நான்கில் ஒரு பங்கு ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கிறது.
தனி சிகிச்சை ஏன்?:
ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொதுவான முறையில் செய்யப்படும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையால், பெரும்பாலான பெண்களுக்கு திருப்தி இல்லை என்று, மருத்துவ ஆய்வுகளில் தெரியவந்தது. மாற்று மூட்டு அறுவை சிகிச்சையில் பொருத்தப்பட்ட செயற்கை மூட்டு, இயற்கையான அசைவுகளுக்கு ஈடு கொடுப்பதில்லை என்று பெண்கள் கருதுகின்றனர். இரு பாலருக்கும் மூட்டுப்பகுதியில் வித்தியாசம் உண்டு. ஆண்களுக்கும் பெண்களுக்கும் எப்படிப் பட்ட மூட்டு உள்ளது, அதில் பாதிப்பு வந்தால், எதனால் வருகிறது, எப்படி தீர்க்கலாம் என்பது பற்றி எல்லாம் பரிசீலிக்கப்பட்டது. இதன் பின் தான், மருத்துவ நிபுணர்கள், பெண்களுக்கு புதிய மாற்று அறுவை சிகிச்சை முறையை கண்டுபிடித்தனர். வெளிநாடுகளில் இத்தகைய சிகிச்சை முறை உள்ளது. இந்தியாவுக்கு இப்போது வந்துள்ளது.
வித்தியாசம் என்ன?:
ஆண்களின் மூட்டு பெரிதாக இருக்கும்; பெண்களின் மூட்டு சிறியதாக இருக்கும். பெண்களின் இடுப்பு பகுதி, ஆண்களின் இடுப்பை விட அகலமாக இருக்கும். பெண்களின் இடுப்பு அகலத்துக்கு ஏற்ப, மூட்டுப் பகுதியும் இருக்கும். இந்த வேறுபாட்டை கவனத்தில் கொண்டு தான் சிகிச்சை முறை தீர்மானிக்கப்படுகிறது. அமெரிக்காவில் இதுவரை ஒரு லட்சம் பெண்களுக்கு இந்த தனி மாற்று அறுவை சிகிச்சை முறையில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.
என்ன பலன்கள்?:
இந்த தனி அறுவை சிகிச்சை செய்து கொண்டால்...
* மூட்டுப்பகுதியில், ஐந்து அங்குலம் அளவில் மட்டுமே தழும்பு காணப்படும்.
* 155 டிகிரி அளவுக்கு கால்களை மடக்க முடியும்.
* மற்றவர்களை போன்று முட்டி போடவும், சம்மனமிட்டு உட்காரவும் முடியும்.
* குனிந்து எழுந்து கொள்ளவும், எந்த வகை நாற்காலியிலும் உட்காரவும் முடியும்.
எவ்வளவு செலவாகும்?:
பெண்களுக்கு தனி மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய ஒரு லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. வெளிநாடுகளில் பல மடங்கு அதிகம். நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதால், எந்த வலியும் இல்லாமல், எளிமையான முறையில் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
பெண்களுக்கு தான்:
மூட்டு வலி என்பது, ஆண்களை விட, பெண்களுக்கு தான் அதிகம் வருகிறது. வேலைக்கு செல்லாத குடும்ப பெண்களாக இருந்தாலும், வேலைக்கு செல்லும் பெண்களாக இருந்தாலும், நாற்பது வயதை தாண்டியவுடன் அவர்களுக்கு இந்த பிரச்சினை ஆரம்பமாகி விடுகிறது. அதனால், அவர்கள் உஷாராக கண்காணித்து டாக்டரிடம் காட்டி சிகிச்சை பெறுவது முக்கியம். மூட்டு வலி என்றவுடன் சிலர், தைலம் போன்றவற்றை பயன்படுத்தி சும்மா இருந்து விடுகின்றனர். ஆரம்பத்தில் கவனித்தால், எளிதில் சரியாகி விடும். முற்றவிடக் கூடாது. அறுபது வயதை தாண்டியவுடன் அதிகமான பாதிப்பு ஏற்படுகிறது. அதனால், முன்னெச்சரிக்கையுடன் இருப்பது தான் நல்லது.
உங்களுக்கு உள்ளதா?:
உங்களுக்கு இப்படி ஒரு பிரச்சினை இருந்தால், முடநீக்கியல் நிபுணரை அணுகுங்கள். மூட்டு மாற்று அறுவை சிகிச்சை தேவையெனில், அவர் உடனே பரிந்துரைப்பார். வயது, உடல் எடை ஆகியவற்றின் அடிப்படையில், இந்த அறுவை சிகிச்சை பயன் தரும். சாதாரண பாதிப்பு இருந்தால், அதற்கு மருந்துகளும், பயிற்சியும் போதுமானது. அதிக அழற்சி ஏற்பட்டு பாதிப்பு இருந்தால், மூட்டு மாற்று அறுவை சிகிச்சை அதிக பலன் தரும். அதற்கேற்ப முடிவு செய்து கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment