Tuesday, November 9, 2010

கருவளையங்கள் மறைய...

கருவளையங்கள் மறைய...

Beauty tips for all - Beauty Care and Tips in Tamil
சுலபமாகவும், செலவில்லாமலும் கிடைக்கிற எத்தனையோ மூலிகைகள் அழகுக்கும், ஆரோக்கியத்துக்கும் உத்தரவாதம் தருபவை. தலை முதல் கால் வரை உண்டாகிற அத்தனை அழகுப் பிரச்னைகளுக்கும் மூலிகைகளில் தீர்வு உண்டு. அவற்றில் சில....
கூந்தல்
முடி உதிர்வைத் தடுக்க...
கரிசலாங்கன்னி இலை, நெல்லி முள்ளி (உலர்ந்த நெல்லிக்காய்), அதிமதுரம் இவை மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்துத் தலையில் தடவிக் குளிப்பதால் முடி உதிர்வைத் தடுக்கும்.
கரிசலாங்கன்னி சாறு 750 மி.லி., நெல்லிக்காய் சாறு 750 மி.லி., நல்லெண்ணெய் 750 மி.லி., பசும்பால் 3 லிட்டர் ஆகிய அனைத்தையும் ஒன்றாகக் கலந்து, அத்துடன் 50 கிராம் அதிமதுரத்தைப் பொடி செய்து கலந்து காய்ச்சவும். சாறு வற்றி நல்ல வாசனை வரும் சமயம் இறக்கி, வடிகட்டி ஆற விடவும். இதைத் தினசரி தலைக்குத் தடவி வந்தால், முடி உதிர்வது நிற்கும்.
பொடுகு நீங்க...
தேங்காய் எண்ணெய் 250 மி.லி., அருகம்புல் சாறு 50 மி.லி., கரிசலாங்கண்ணி சாறு 50 மி.லி., தேங்காய்ப் பால் 100 மி.லி., அதிமதுரம் 15 கிராம் எடுத்துக் கொள்ளவும். தேங்காய் எண்ணெயில் அருகம்புல் சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு கலந்து காய்ச்சவும். அது பாதியாக வற்றியதும், அதில் தேங்காய்ப் பால் கலந்து காய்யச்சவும். தண்ணீர் வற்றி, எண்ணெய் பிரியும் நேரம், அதிமதுரத்தைப் பொடி செய்து போட்டு, சிவந்ததும் இறக்கி வைக்கவும். பொடுகு உள்ளவர்கள் இந்த எண்ணெயைத் தலைக்குத் தடவி வந்தால், குணம் தெரியும். வாரம் இரண்டு முறை இந்த எண்ணெயை உபயோகித்து தலைக்கு எண்ணெய் குளியலும் செய்யலாம்.
பொடுதளை என்கிற மூலிகையை இடித்துச் சாறு எடுக்கவும். அதே அளவு நல்லெண்ணெயுடன் கலந்து காய்ச்சி, சாறு வற்றியதும் வடிகட்டி வைத்து, தலைக்குத் தடவி வந்தாலும் பொடுகு நீங்கும்.
செம்பட்டை மறைய...
கறிவேப்பிலையை அரைத்து எலுமிச்சை அளவு எடுத்து கால் லிட்டர் தேங்காய் எண்ணெயில் போட்டுக் காய்ச்சி வடிகட்டி தினமும் தடவி வர, செம்பட்டை மறையும்.
நரை நீங்க...
கரிசலாங்கன்னி சாறும், கடுக்காய் ஊறிய தண்ணீரையும் ஒன்றாகக் கலந்து தலையில் தேய்த்து, சிறிது நேரம் ஊறிய பிறகு குளித்து வருவது நரையைப் போக்கும்.
வழுக்கை நீங்க...
அதிமதுரத்தைப் பொடி செய்து, எருமைப்பால் விட்டு விழுதாக அரைத்து, இன்னும் கொஞ்சம் எருமைப் பாலில் கலந்து வழுக்கை விழுந்த இடங்களில் தேய்த்துக் குளிக்க சரியாகும்.
சருமம்
பருக்கள் போக...
சிரகம் மற்றும் கருஞ்சிரகம் இரண்டையும் சம அளவு எடுத்துப் பசும்பால் விட்டு அரைத்து, பருக்களின் மேல் தடவி, ஒரு மணி நேரம் ஊறிக் கழுவி வந்தால் பருக்கள் மறையும்.
கருந்துளசியை அரைத்துப் பருக்கள் மேல் பற்றுப் போட, பருக்கள் உடையும்.
கரும்புள்ளிகள் அகல...
எலுமிச்சை சாற்றில் தயிர் கலந்து குழைத்தால் கிரீமை போல் வரும். அதை முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவிட, கரும்புள்ளிகள் மறையும்.
தாமரைக் கிழங்கு, அதிமதுரம், அல்லிக் கிழங்கு, அருகம்புல், வெட்டிவேர், சடாமஞ்சில், மரமஞ்சள் இவை எல்லாம் தலா 30 கிராம் எடுத்துப் பொடியாக்கி, தண்ணீரில் குழைத்துக் கரும்புள்ளிகளின் மேல் தடவினால், கரும் புள்ளிகள் சரியாகும்.
சரும நிறம் அதிகரிக்க...
ஊற வைத்த கொண்டைக் கடலையைக் கைப்பிடியளவு எடுத்து பால் விட்டு அரைத்து, முகத்தில் தடவி சிறிது நேரம் காயவிட்டு, பிறகு மஞ்சள் தூளும், எலுமிச்சை சாறும் கலந்த கலவை உபயோகித்துக் கழுவி வந்தால், நிறம் கூடும்.
நன்னாரி வேர், ஆலம்பட்டை, ஆவாரம் பூ மூன்றும் சம அளவு எடுத்து 100 மி.லி. தண்ணீரில் போட்டுப் பாதியாக வற்ற விட்டு, காலையில் வெறும் வயிற்றில் குடித்து வரலாம். அதையே சருமத்திலும் தடவலாம். தொடர்ந்து இப்படிச் செய்துவர, சருமம் பொன்னிறம் பெறும்.
சுருக்கங்கள் மறைய...
காய்ச்சிய பாலில் ஒரு எலுமிச்சம் பழத்தின் சாற்றைப் பிழிந்து, அதில் 1 டீஸ்பூன் கிளிசரின் விட்டு, ஒரு மணி நேரம் வைக்கவும். இரவு படுக்கும் முன்பாக இதை முகத்தில் தடவி உலர விடவும். காலையில் குளிர்ந்த தண்ணீரால் முகம் கழுவிட, சுருக்கங்கள் மறைந்து, இளமை திரும்பும்.
கருவளையங்கள் மறைய...
வெள்ளரிக்காயைத் துருவி சாறு எடுத்து, பஞ்சில் நனைத்துக் குளிர வைத்து, கண்களின் மேல் வைத்துக் கொண்டு, இருட்டான அறையில் சிறிது நேரம் ஓய்வெடுக்கவும். அடிக்கடி இப்படிச் செய்துவர, கருவளையங்கள் காணாமல் போகும்.
உதடுகள் பளபளக்க...
முட்டையின் வெண் கரு, பாதாம் பவுடர், பாலாடை மூன்றையும் கலந்து உதடுகளின் மேல் தடவி, காய்ந்ததும் வெந்நீரில் கழுவி விட்டு, தேங்காய் எண்ணெய் தடவலாம்.
வியர்வை நாற்றம் போக...
ஆவாரம் பூவைக் காய வைத்து, சம அளவு பயத்தம் மாவு கலந்து, தினம் சோப்புக்குப் பதில் உடலுக்குத் தேய்த்துக் குளித்து வரலாம்.
நகங்கள் பளபளக்க...
பாலைக் கொதிக்க வைத்து, இளம் சூடாக இருக்கும்போது, அதில் நகங்கள் நனையுமாறு வைத்திருந்து, பிறகு பஞ்சினால் துடைத்து விடலாம். இதனால் நகங்களில் அழுக்கும், கறைகளும் மறைந்து பளபளப்புக் கூடும்.
கைகள் அழகாக...
பாலாடை மற்றும் முட்டையின் வெண்கரு இரண்டையும் சேர்த்து கைகள் முழுக்கத் தடவி சிறிது நேரம் காயவிட்டு, பயத்தம் மாவால் தேய்த்துக் கழுவலாம்.
பாதங்கள் பளபளப்பு பெற...
வேப்பிலை, மருதாணி இலை இரண்டும் சம அளவு எடுத்து, ஒரு துண்டு மஞ்சளுடன் சேர்த்து பால்விட்டு அரைத்து வெடிப்புகளின் மேல் திக்காகத் தடவி நன்கு காய விட்டு வெந்நீரில் கழுவிட, பாத வெடிப்புகள் மறைந்து மென்மையாகும்.
அரச மரத்தின் அடிப்பகுதியைக் கீறினால் பால் வரும். அதை வெடிப்புகளின் மேல் தடவி வர, பாதங்கள் பட்டுப் போலாகும்.

No comments:

Post a Comment