Friday, November 19, 2010

முள்ளிவாய்க்கால் - முன்னும் பின்னும்!

முள்ளிவாய்க்கால் - முன்னும் பின்னும்!
Consequences of Mullivaikal massacre - Tamil Poltics News Article "முள்ளிவாய்க்கால் மே 19 - ஈழத் தமிழர் வரலாற்றில் நேர்ந்த ஓர் ஊழிப் பெருவெள்ளம் (பிரளயம்). அது எல்லாவற்றையும் மூழ்கடித்து விட்டது. பழைய நம்பிக்கைகள், குறிக்கோள்கள் எல்லாவற்றையும் புரட்டிப் போட்டு விட்டது. புதிய சூழலுக்கேற்பப் புதிய பார்வைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும், வேறு வழியில்லை". அண்மையில் வட அமெரிக்கா சென்றிருந்த போது, ஈழத் தமிழ்ப் பெரியவர் ஒருவர் இவ்வாறு பேசக் கேட்டேன். அவர் தம்மை ஈழத் தமிழர் என்று கூட சொல்லிக் கொள்ளாமல், "இலங்கைத் தமிழர்" என்றே அடையாளப்படுத்திக் கொண்டார்.
கருத்துப் பிளவு
தமிழர் தாயகம், இறைமை மீட்பு, தமிழீழ விடுதலை... இந்தக் குறிக்கோள்களையெல்லாம் அடியோடு மறந்து விட்டு, அங்கே துயருற்ற மக்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்தால் போதும் என்ற முடிவுக்கு இந்தப் பெரியவர் மட்டுமின்றி வேறு பலரும் வந்துள்ளனர். புலம்பெயர் நாடுகளில் ஈழத் தமிழர்களில் ஒரு பகுதியினர் இந்தப் "புதிய பார்வை"க்கு மாறியிருப்பதை உணர முடிகிறது. மொத்தத்தில் இவர்கள் பெரும்பான்மையினரா இல்லையா என்பதை நம்மால் சொல்ல முடியா விட்டாலும், சொற்பத் தொகையினர் அல்லர் என்பது உறுதி.
இப்போதும் தமிழீழ விடுதலை மீது நம்பிக்கை வைத்து அதற்காக இயன்றதனைத்தும் செய்து கொண்டிருப்பவர்கள் ஏராளமாய் இருக்கிறார்கள். ஆனால் இவர்களோடும் நிறைய விவாதிக்க வேண்டியுள்ளது.
புலம்பெயர் ஈழத் தமிழரிடையிலான கருத்துப் பிளவு அயல்வாழ் தமிழகத் தமிழர்களிடமும் ஓரளவுக்குப் பிரதிபலிப்பதை உணர முடிகிறது. ஈழத்தில் வாழும் தமிழர்களும் இவ்வாறே பிரிந்து கிடப்பார்கள் என்பதிலும் ஐயமில்லை. அதிலும் குறிப்பாகச் சிறைக் கூடங்களிலும், முள்வேலி முகாம்களிலும், இவற்றுக்கு வெளியே இராணுவக் கண்காணிப்பில் திறந்தவெளிச் சிறைச்சாலை போன்ற சூழலிலும் வாழும் ஈழத் தமிழர்களிடையே நம்பிக்கைச் சிதைவின் அளவும் தீவரமும் கூடுதலாகவே இருக்கக் கூடும் என அஞ்சுகிறேன். அண்மையில் அங்கு சென்று வந்த சிலரோடு உரையாடிய போது இந்த அச்சம் உறுதிப்படவே செய்தது.
பின்னடைவு என்னும் தன்னாறுதல்
சிங்களப் பேரினவாதம் தமிழின அழிப்புப் போரில் பல்லாயிரம் தமிழர்களைக் கொடிய முறையில் கொன்றொழிப்பதிலும், தமிழீழ விடுதலைப் படையை நசுக்கி அழிப்பதிலும் வெற்றி கண்டிருப்பதோடு, தமிழீழ விடுதலைக் குறிக்கோளில் ஈழத் தமிழர்களும், பொதுவாக உலகத் தமிழர்களும் கொண்டிருந்த நம்பிக்கை யையும் பற்றுறுதியையும் பெருமளவுக்கு ஆட்டங் காணச் செய்திருப்பதையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். முள்ளிவாய்க்கால் முழுப்பேரழிவின் இந்த முழுப் பொருளையும் உள்வாங்கிக் கொள்ளாமல் "சிறு பின்னடைவு", "தற்காலிகப் பின்னடைவு" என்றெல்லாம் தன்னாறுதல் தேடிக் கொண்டிருப்போமானால், விடியலை நோக்கி ஓரடியும் எடுத்துவைக்க முடியாது.
ஈழத் தமிழ் மக்கள் அடைந்துள்ள துயரத்தையும், இன்றளவும் அடைந்து வரும் துன்பத்தையும் உங்களால் உணர்ந்து கொள்ள முடிந்தால், "விடுதலை வேண்டாம், நிம்மதியாக உயிர் வாழ்ந்தால் போதும்" என்று பேசுகிற அத்தனை பேரையும் கோழைகள், துரோகிகள் என்று முத்திரையிட்டு ஒதுக்கி விடுவதற்கில்லை என்பதைப் புரிந்து கொள்வீர்கள். இடர்மிகுந்த சூழலைப் பயன்படுத்திக் கொண்டு பகைவனின் காலில் விழும் கோழைகள், அவனிடம் காட்டிக் கொடுக்கும் துரோகிகள் சிலர் உண்டு என்பது உண்மையென்றாலும், எல்லாரையும் அப்படி ஒதுக்கித் தள்ளுவது உதவாது. கடந்த காலத்தில் தமிழீழ விடுதலைக்காக அர்ப்பணிப்புடன் உழைத்த சிலரும் கூட இப்போது நம்பிக்கையிழப்புக்கு ஆளாகியிருப்பதைப் பார்க்க வேண்டும்.
மே 19 உடன் எல்லாம் முடிந்து விட்டது என்னும் மனச் சோர்வுக்குள்ள நியாயத்தை ஏற்றுக் கொண்டு, அதேபோது "புதிய பார்வை" என்று முன்வைக்கப்படுவது சரிதானா? என்ற வினாவை எழுப்பி உரையாடிய போது புலப்பட்ட உண்மை: இவர்கள் யாரும் தமிழீழம் வேண்டாம் என்று சொல்லவில்லை, அதற்கு இனி வாய்ப்பில்லை என்ற முடிவுக்குத்தான் வந்து விட்டார்கள்.
தொடரும் கொடுமைகள்
எல்லாம் முடிந்து விட்டது என்றால் எதெல்லாம் முடிந்து விட்டது? சிங்களப் பேரினவாதம் முடிந்து விட்டதா? அதன் இன ஒடுக்குமுறையும் அடக்குமுறையும் முடிந்து விட்டதா? இல்லை. தமிழர் பகுதிகளில் ஏற்படுத்தப்பட்ட அதியுயர் பாதுகாப்பு வலையங்கள் நீடிப்பதோடு, புதிய படைமுகாம்கள் அமைக்கும் வேலைகளும் தொடர்கின்றன. முள்வேலி முகாம்களில் இப்போதும் இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் அடைபட்டுக் கிடக்க, முகாம்களிலிருந்து மீண்டவர்களில் பெரும்பாலார் அவரவர் பழைய இடத்தில் மீள் குடியமர்த்தம் செய்யப்படவும் இல்லை. தமிழர் தாயகப் பகுதிகளில் சிங்களரைக் குடியேற்றும் முயற்சிகளும் தொடர்கின்றன.
விடுதலை இயக்கத்தின் முன்னோடிகள் பலர் சரணடைந்த பின் துன்புறுத்திக் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் அரசியல், கலை இலக்கியப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் அடக்கம். நடேசன்-புலித்தேவனுக்கு என்ன நடந்தது என்று உலகறியும். பாலகுமாரன், புதுவை இரத்தினதுரை, யோகி போன்றவர்கள் என்ன ஆனார்கள் என்ற வினாவிற்குச் சிங்கள அரசிடமிருந்து விடையே இல்லை. கொல்லப்பட்டவர்கள் போக எஞ்சிய பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களும், இளம் பெண்களும் எவ்வித நீதிமன்ற உசாவலுமின்றிச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தமிழ் இளைஞர்களை அம்மணமாக்கிக் கண்ணைக் கட்டிக் கையைக் கட்டிக் குப்புறத்தள்ளிச் சுட்டுக் கொன்ற நிகழ்ச்சிகள் உண்மையே என்பதை ஐ.நா. வல்லுநர்கள் உறுதி செய்துள்ளனர். தமிழ் இளைஞர்களைக் கொடிய முறையில் துன்புறுத்திக் கொலை செய்யும் காட்சிகள் இலண்டனைச் சேர்ந்த ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளன.
டப்ளினில் கூடிய நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பு இராசபக்சே கும்பலின் போர்க் குற்றங்களையும், மானுட விரோதக் குற்றங்களையும் தக்க சான்றுகளுடன் மெய்ப்பித்துள்ளது. 2009 மே முழுப் பேரழிவு நிகழ்ந்த போது அதைத் தடுக்கத் தவறிவிட்ட ஐ.நா. அமைப்பின் பொதுச்செயலாளர் இவ்வளவு காலம் கழித்து இலங்கைப் போர்க் குற்றங்கள் பற்றி விசாரித்து அறிக்கையளிப்பதற்காக அமர்த்திய மூவர் குழுவை எதிர்த்துச் சிங்கள அரசு அரங்கேற்றிய அநாகரிகமான நாடகங்கள் அது தன் குற்றங்களை மறைப்பதற்கு என்ன வேண்டுமானாலும் செய்யும் என்பதைக் காட்டி விட்டன. நடந்தவற்றுக்கும் நீதி கிடைக்கவில்லை, தொடரும் கொடுமைகளை நிறுத்திக் கொள்ளவும் இல்லை என்னும் போது, எல்லாம் முடிந்து விட்டது என்று தமிழர்களைப் பார்த்துச் சொல்வதன் பொருள் என்ன? "உரிமை கொண்ட மனிதர்களாக வாழும் ஆவலைத் துறந்து விடுங்கள், அடிமைகளாக வாழப் பழகிக் கொள்ளுங்கள்" என்பதாகத்தான் இருக்க முடியும்.
அரசியல் உரிமைகள், விடுதலை என்றெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் இயன்ற வரை ஈழத் தமிழ் மக்களுக்கு உதவிகள் மட்டும் செய்வோம் என்ற நிலைக்குச் சிலர் வந்துள்ளனர். இதற்காகச் சில அமைப்புகளையும் நிறுவியுள்ளனர். அல்லலுறும் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதில் மறுப்புக்கு இடமில்லை. ஆனால் இதற்காக அரசியல் முயற்சிகளைக் கைவிட வேண்டும் என்பதுதான் சரியில்லை. அரசியல் வெற்றிடத்தில் உதவிகள் வழங்குவது என்பது ஓட்டைப் பாத்திரத்தில் சோறு பொங்கும் முயற்சியே தவிர வேறில்லை.
செயற்கை ஊழிப் பெருவெள்ளம்
ஊழிப் பெருவெள்ளம் என்றால் அது எல்லாரையும், எல்லாவற்றையும் மூழ்கடித்திருக்க வேண்டும். மே 19 ஊழிப் பெருவெள்ளம் தமிழர்களுக்கு மட்டுமே பேரழிவு! பேரினவாதத்தில் மூழ்கிய சிங்களவர்களுக்கோ மகிழ்ச்சிக் கொண்டாட்டம்! பிறகு எப்படி இதனை இயற்கை ஊழிப் பெருவெள்ளத்தோடு ஒப்பிட முடியும்? வேண்டுமானால், இதனைச் செயற்கை ஊழிப் பெருவெள்ளம் எனலாம். இந்திய அரசுடன் சேர்ந்தும் சீனா, பாகிஸ்தான் போன்ற அரசுகளின் துணையோடும் சிங்கள அரசு தமிழர்களை அழிப்பதற்காகத் தோற்றுவித்த ஊழிப் பெருவெள்ளம் இது.
பல்லாயிரம் உயிர்களைப் பறிகொடுத்துத் தமிழர்கள் கற்றுக்  கொண்டிருக்கும் படிப்பினைகள் என்ன? முதலாவதாக, சிங்களப் பேரினவாத அரசின் கீழ் இலங்கைத் தீவில் தமிழர்கள் உரிமையோடு வாழ முடியாது என்பது மட்டுமல்ல, உயிரோடும் வாழ முடியாது என்று தெரிந்து விட்டது. ஒன்றுபட்ட இலங்கை என்பதே தமிழர்களைக் கொன்று போட்ட அமைப்பு என்பது கண்கூடாய்த் தெரிந்து விட்டது.
தமிழீழத் தனியரசின் தேவை கூடியுள்ளதே தவிர, கிஞ்சிற்றும் குறையவில்லை. இரண்டாவதாக, பொதுவாய்த் தமிழீழ மக்களுக்கு இருந்து வந்த இந்திய மயக்கம் அதிர்ச்சியோடு கலைந்து போய் விட்டது. இந்திய அரசு ஈழத் தமிழர்களைக் காக்கும் என்ற நம்பிக்கை பொய்யாகி விட்டது. இந்தியா காக்காது, அழிக்கும் என்ற உண்மை தமிழினத்திற்கு வலிக்க வலிக்கத் தெரிந்து விட்டது.
தீர்க்க வேண்டிய முரண்பாடு
இப்போது நம் முன்னுள்ள கேள்வி: தமிழர்களுக்குத் தமிழீழத் தனியரசு தேவை என்ற புற நிலைக்கும், அவர்களில் பலர் நம்பிக்கை குலைந்து சோர்வடைந்துள்ளனர் என்ற அகநிலைக்குமான முரண்பாட்டைத் தீர்ப்பது எப்படி? தமிழீழக் கனவு ஈடேறுமா, கலைந்து விடுமா என்பது இந்த முரண்பாட்டுக்குத் தீர்வு காண்பதைப் பொறுத்ததே.
ஒரு சிலர் இதற்கு ஓர் எளிய தீர்வை முன் வைக்கின்றனர். அவர்கள் சொல்வது: தமிழீழத் தேசியத் தலைவர் சாகவில்லை, எங்கோ உயிரோடு இருக்கிறார், ஈழப் போரைப் புத்துயிர் பெறச் செய்வதற்கு ஏதோ திட்டம் வகுத்துக் கொண்டிருக்கிறார். விரைவில் மூன்று மாதம் கழித்தோ மூன்றாண்டு கழித்தோ- ஆயுதப் போர்  மீண்டும் தொடங்கும். "தலைவர் வருவார், தமிழீழம் பெற்றுத்தருவார்", "விரைவில் ஐந்தாம் கட்ட ஈழப் போர்" என்ற முழக்கங்கள் மெய்ந்நிலைமைகளின் புறஞ்சார் மதிப்பீட்டிலிருந்து அல்லாமல் அகஞ்சார் விருப்பங்கள் - உணர்ச்சிகளிருந்தே பிறப்பதாகத் தெரிகிறது.
தலைவர் இருக்கிறாரா? இருந்தால் என்ன செய்து கொண்டிருக்கிறார்? இந்த வினாக்களுக்கு விடை சொல்லும் நிலையில் நாம் இல்லை. இருக்க வேண்டும் என்று விரும்புவது, இருந்தால் நல்லதென்று நினைப்பது, இருக்கிறார் என்று நம்புவது... இதெல்லாம் வேறு, இருக்கிறார் என்று அறுதியிட்டுச் சொல்வது வேறு. அதே போல் சிங்கள அரசு வெளியிட்டுள்ள சான்றுகளையும் அவரவர் உள்மன ஆசையையும் கலந்து, பிரபாகரன் இறந்து விட்டார் என்றும் அவர் இப்படித்தான் இறந்தார் என்றும் பரப்புரை செய்து கொண்டிருப்பவர்களோடும் நாம் உடன்படவில்லை. இதில் நம் நிலைப்பாட்டை முன்பே முன் வைத்துள்ளோம்.
நம்மைப் பொறுத்த வரை, பிரபாகரன் இருக்கிறாரா? இல்லையா? என்பது கருத்துத் தொடர்பான அல்லது நம்பிக்கை தொடர்பான சிக்கலன்று. நடந்தது என்ன? என்னும் மெய்ம்மை தொடர்பான சிக்கலே அது. முள்ளிவாய்க்காலில் மூழ்கிப் போன எத்தனையோ உண்மைகளைப் போலவே இந்த உண்மையும் ஒரு நாள் முழுமையாக வெளிப்படும். அது வரை இந்த வினாவை ஒத்தி வைத்து விட்டு, நம் கடமைகளைச் செய்வோம். உறுதியில்லாத் தரவுகள் மீது ஊக விளையாட்டு ஆடுவதை விடுத்து, உறுதிப்பட்ட செய்திகள் மீது தேர்ந்து தெளிந்து செயற்படுவோம். பிரபாகரனைப் பற்றிய வினாவின் மீதே நம் கவனத்தையும் உலகின் கவனத்தையும் குவியச் செய்து, முள்ளிவாய்க்கால் இனப் பேரழிப்பை முழு அளவில் பார்க்க விடாமல் செய்யும் பகைவரின் சூழ்ச்சிக்கு நாம் பலியாகி விட வேண்டாம்.
தலைவர் இருக்கிறாரா? என்று கேட்ட போது "சில கேள்விகளுக்குக் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்" என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இடைக்கால முதன்மை நிறைவேற்றுநர் உருத்திரகுமாரன் விடையளித்திருப்பது கருத்திற்குரியது.
ஐந்தாம் கட்ட ஈழப் போர் வெடிக்குமா?
ஆனால், விரைவில் ஐந்தாம் கட்ட ஈழப் போர் வெடிப்பதும், வெடிக்காமல் போவதும் தலைவர் இருக்கிறாரா, இல்லையா? என்பதை மட்டும் பொறுத்ததன்று. தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்டம் அந்த வடிவத்தில்தான் இருக்க வேண்டும் என்ற வரலாற்றுக் கட்டாயம் இருந்தால் தலைவர் இல்லா விட்டாலும் அப்படி நடக்க வேண்டும், நடக்கச் செய்ய வேண்டும். போராட்ட வடிவம் அப்படிப்பட்டதாக இருக்க முடியாதென்றால் தலைவரே இருந்தாலும் அது நடக்காது. அப்படி நடக்கச் செய்யும் முயற்சியில் அவரே இறங்க மாட்டார்.
தமிழீழ விடுதலைப் போரின் முதல் நான்கு கட்டங்களிலும் நிலவிய முதன்மைக் காரணிகள் தமிழீழ மக்களின் வாழ்நிலை மற்றும் உணர்வு சார்ந்த அவர்களின் ஆயத்த நிலை, விடுதலை இயக்கத்தின் வலிமை மற்றும் கட்டுக்கோப்பு, நட்பு மற்றும் பகை ஆற்றல்களின் உறவு நிலை - இப்போதும் அடிப்படை மாற்றமின்றி தொடர்கின்றனவா? என்பதுதான் மையக் கேள்வி. தமிழீழ மக்கள் இப்போதுள்ள நிலையில் அவர்களைச் சார்ந்து நின்று மீண்டும் ஒரு மரபுவழிப் போர் அல்லது கரந்தடிப் போர் நடத்துவது எண்ணிப் பார்க்க முடியாத ஒன்று. அமைதிவழிப்பட்ட அறப்போராட்டங்களுக்கான வாய்ப்பே இப்போதைக்கு அரிதென்றுதான் சொல்ல வேண்டும்.
ஏறத்தாழ முப்பதாண்டுக் காலம் கட்டுக்கோப்புடன் இயங்கி, மக்கள் தந்த செயலூக்கம் மிக்க ஆதரவினாலும், ஆயிரக்கணக்கான மாவீரர்களின் ஈகத்தினாலும், தலைமையின் உறுதிமிக்க திறமான வழிகாட்டுதலாலும் அரும்பெரும் வெற்றிகளை ஈட்டி, வரலாற்றில் அழியா முத்திரை பதித்து, உலகம் வியக்க ஓங்கித் திகழ்ந்த விடுதலைப் புலிகள் இயக்கம் திடீரென மாயமாய் மறைந்து விட்டது போன்ற நிலை ஏற்பட்டிருப்பதை யாராலும் மறுக்க முடியாது.
விடுதலைப் புலிகளின் தன்மை
ஏன் இப்படி ஆயிற்று? இதற்கான அகக் காரணிகள் என்ன? என்ற வினாவிற்குத் தெளிவாகவும் திட்ட வட்டமாகவும் விடை சொல்வதற்குப் போதிய தரவுகள் நம்மிடம் இல்லை. ஆனால், புறக் காரணிகள் - உலகச் சூழல், இந்தியா முதலான வெளி அரசுகளின் பங்கு-அனைவரும் அறிந்தவையே. காரணம் எதுவானாலும் காரியம் தெளிவாகப் புலப்படுகிறது.
விடுதலைப் புலிகள் இயக்கம் என்பது அரசியல் குறிக்கோளுடன் கூடிய இராணுவ அமைப்பே ஆகும். இங்கே அரசியல் கட்சி ஒன்று இராணுவப் பிரிவை ஏற்படுத்திக் கொள்வதற்குப் பதிலாக, இராணுவ அமைப்பு தனக்கோர் அரசியல் பிரிவை ஏற்படுத்திக் கொண்டது. ஏன் இப்படி என்பதற்குச் சிங்களப் பேரினவாதத்தின் மூர்க்கமான இராணுவ அடக்குமுறையே விடையாகும்.
இராணுவப் படை அரசியல் இயக்கம் கட்டுவதா, அரசியல் இயக்கம் இராணுவப் படை கட்டுவதா என்பது அந்தந்த நாட்டின் வரலாற்றுச் சூழலைப் பொறுத்ததே தவிர, தலைமையின் விருப்பு வெறுப்புகளைப் பொறுத்ததன்று. ருஷ்யப் புரட்சியில் கட்சிதான் முதலில் வந்தது. அரசியல் புரட்சி வென்ற பிறகுதான் செம்படையே அமைக்கப் பெற்றது. சீனத்தில் கோமிங்டாங் படையிலிருந்து ஒரு பிரிவு வெளியேறி வந்துதான் பொதுமை (கம்யூனிஸ்டு)க் கட்சியைத் தோற்றுவித்தது. அயர்லாந்தில் அயர்லாந்து குடியரசுப் படைதான் சின் ஃபீன் என்னும் அரசியல் பிரிவைத் தோற்றுவித்தது.
சிதறிப் போன கட்டளைக் கட்டமைப்பு
இராணுவத் தன்மையுள்ள எந்த அமைப்புக்கும் கட்டளைக் கட்டமைப்பு இன்றியமையாதது. ஒரு விடுதலைப் படைக்கு அதன் அரசியல் கொள்கை மூளை என்றால், கட்டளையமைப்பே இதயமாகும். முந்தைய போர்க் கட்டங்களில் புலிப்படை வென்றாலும் தோற்றாலும் அதன் கட்டளையமைப்புக்குச் சிதைவோ, பெரிய சேதமோ கூட ஏற்பட்டதில்லை. நான்காம் கட்ட ஈழப் போரின் முடிவு மக்களுக்கு முழுப்பேரழிவை ஏற்படுத்தியதோடு, விடுதலைப் படையின் கட்டளைக் கட்டமைப்பை அறவே சிதறடித்து விட்டது என்பதே வேதனைக்குரிய உண்மை. நாம் இப்படித்தான் புரிந்து கொள்கிறோம்.
படையியல் கோணத்தில் மட்டுமல்லாமல், அரசியல் கோணத்திலிருந்து பார்த்தாலும் சிங்களப் பேரினவாதம் உள்நாட்டு அளவில் மட்டுமல்லாமல், தெற்காசிய அரங்கிலும், சர்வதேச அளவிலும் கூட வலுமிக்க ஆற்றலாகவே நீடிக்கிறது. தமிழீழ விடுதலை ஆற்றலின் நிலை இதற்கு நேர்மாறாக உள்ளது. இந்த மெய்நடப்பைக் கண்டு அஞ்சி நடுங்கத் தேவையில்லை. இதுவே நிரந்தரமில்லை என்பது மெய்தான். ஆனால் இப்போதைய நிலை இதுதான் என்பதை அறிந்தேற்றுப் புரிந்து உள்வாங்கிக் கொண்டால்தான் மாற்றத்திற்காக நம்மால் போராட முடியும்.
தமிழகத்தின் பொறுப்பு
முள்ளிவாய்க்கால் இனப் பேரழிப்பைத் தடுக்க முடியாமல் போனது ஏன்? தமிழீழ மக்கள் தம்மைத் தாமே பாதுகாத்துக் கொள்ள முடியாத சூழலில் அவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பும் திறனும் தமிழக மக்களுக்கே உரியது. ஆனால் தமிழக மக்கள் இந்தப் பொறுப்பை நிறைவேற்றத் தவறி விட்டார்கள் என்றோ அல்லது எவ்வளவு முயன்றும் இதைச் செய்ய அவர்களால் இயலாமல் போய் விட்டது என்றோ புரிந்து கொள்ளலாம்.
உலகத் தமிழர்கள் பத்து கோடி என்றால் ஈழத் தமிழர்கள் அரை கோடிக்கும் குறைவே. தமிழகத் தமிழர்கள் ஆறு கோடிக்கு மேல். தமிழர்களின் முதற்பெரும் தாயகம் தமிழகமே. தமிழீழத்தைத் தமிழகம் காக்கத் தவறினால் வேறு யார் அதைக் காப்பார்? இந்த வகையில் தமிழீழத்தின் தோல்வி தமிழகத்தின் தோல்வியும் ஆகும். தமிழகம் தோற்றது ஏன்? தானே அடிமை நாடாக இருப்பதால் தோற்றது என்பது வரலாற்று நோக்கில் சரியான விடை.
இறைமையற்ற தமிழகத்தால் ஈழத் தமிழினத்தைக் காப்பாற்ற இயலாமல் போய் விட்டது. இந்திய வல்லாதிக்கத்தின் கீழ் தமிழ்த் தேசம் அடிமைப்பட்டுக் கிடப்பதைக் காட்டுவதற்கு மொழியுரிமை மறுப்பு, ஆற்றுநீர் உரிமை மறுப்பு போன்ற பல காரணிகள் இருப்பினும் ஈழத் தமிழர் மீதான இன அழிப்புப் போரைத் தடுக்க முடியாத அவலம் போல் நமக்கு நம் அடிமை நிலையை உணர்த்திய காரணி வேறெதுவுமில்லை.
ஏன் தோற்றோம்?
ஆனால், தமிழகம் விடுதலை பெற்ற பிறகுதான் தமிழீழத்திற்குத் துணை செய்ய முடியும் என்று எந்திரத்தனமாக இதற்குப் பொருள் கொண்டுவிடக் கூடாது. ஓர் இனம் அடிமைப்பட்டிருந்தாலும் அந்த அடிமைநிலையை உணர்ந்து அதற்கு எதிராகப் போராடுவதன் வாயிலாகத் தன் வலிமையையும் ஆற்றலையும் பெருக்கி உறுதியாக்கிக் கொள்ள முடியும். அரசே சாதிக்க முடியாதவற்றைக் கூட தெளிந்த குறிக்கோளுடன் ஒன்றுபட்டுப் போராடும் ஒரு மக்களினத்தால் சாதிக்க முடியும்.
ஈழத் தமிழர் மீதான போரை நிறுத்து என்று உணர்ச்சி பொங்கப் போராடிய தமிழ்த் தேசிய இனத்தின் உண்மை நிலை என்ன? சமூக நோக்கில் சாதிகளாய்ப் பிரிந்திருப்பது ஒரு மூத்த உண்மை. இதையும் மீறித்தான் தமிழ் மக்கள் 1965இல் மொழிக்காகப் போராடினார்கள், இப்போது (2008-09) ஈழத்திற்காகப் போராடினார்கள். ஆனால் அரசியல் கட்சிகளாகப் பிரிந்து கிடப்பதை அவர்களால் வென்று வெளிப்பட முடியவில்லை. கருணாநிதியின் வஞ்சகமும், ஏமாற்று மோசடியும், இரண்டகமும் இவ்வளவு அப்பட்டமாக வெளிப்பட்ட பிறகும் அவருக்கு எதிராகக் கழகத்தில் ஒரு கலகம் இல்லையே! அல்லது தி.மு.கழகம் உடைந்து சிதறவில்லையே! கருணாநிதியால் இன்று வரை ஈழத் தமிழர்களுக்காகப் பாடுபடுகிறவரைப் போல் நாடகமாட முடிகிறதே!
செயலலிதா தமிழக மக்களின் ஈழ ஆதரவு மனநிலையை வாக்குகளாக்கி அறுவடை செய்வதற்காகத் தேர்தல் பரப்புரையில் தமிழீழம்தான் ஒரே தீர்வு என்றும், ஈழம் பெற்றுத் தருவேன் என்றும் மேடைக்கு மேடை முழங்கி விட்டு இப்போது வசதியாக வேறு வேலை பார்க்க முடிகிறதே!... இனப் படுகொலைக்கு உடந்தையாக இருந்து குருதிக் கறைபடிந்த கையோடு.. கைசேர்க்க.. ஆசைப்பட முடிகிறதே!.. செயலலிதா தன் ஆசைப்படி நாளை காங்கிரசைத் தோளில் தூக்கிக் கொண்டால் அ.தி.மு.க. கலைந்து போய்விடுமா என்ன?
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் ஒன்று சேர்ந்த தேர்தல் கட்சிகள் ஈழ ஆதரவு அரசியலுக்குப் பதவி அரசியலை உட்படுத்துவதற்கு மாறாக, ஈழ ஆதரவு அரசியலைப் பதவி அரசியலுக்கு உட்படுத்தின, இன்றளவும் உட்படுத்தி வருகின்றன என்பதே கசப்பான உண்மை. ஈழ மக்களுக்காகப் பதவி இழக்கவோ, தேர்தலைப் புறக்கணிக்கவோ எந்தப் பதவி அரசியல் கட்சியும் அணியமாயில்லை என்பதே நம் பட்டறிவு.
இந்த நிலையில் தமிழக மக்களைப் போர்க்குணத்தோடு அணிதிரட்டி பெருந்திரளாய்க் களமிறக்கி இந்திய அரசையே முடங்கச் செய்வது எப்படி? இந்தக் கட்சி வட்டத்திற்கு அப்பால் தன்னெழுச்சியாக நடைபெற்ற மாணவர், வழக்கறிஞர் போராட்டங்களும், முத்துக்குமார் முதலானவர்களின் தீக்குளிப்பும், தமிழ்த் தேசிய ஆற்றல்கள் நடத்திய அடையாளப் போராட்டங்களும் டெல்லிக்கு உறைக்காமல் போனதில் வியப்பில்லை.
தமிழீழத் தேசியர்களின் புரிதல்
தமிழக மக்கள் வெள்வேறு அமைப்புகளின் பின்னால் இருந்தாலும் ஒரே தேசிய விடுதலைக் குறிக்கோளுடன் வலுவானதொரு தேசிய இயக்கமாக - இப்போது காசுமீர் மக்கள் திரண்டிருப்பதைப் போல்- திரண்டிருப்பார்களானால், அது இந்திய அரசை ஈழப் படுகொலையிலிருந்து பின்வாங்கச் செய்திருப்பதோடு, உலக அரங்கிலும் ஈழ மக்களுக்கு ஆதரவான சூழலை ஏற்படுத்தியிருக்கும். தமிழினத்திற்கு இறைமையும் இல்லை, இறைமை நோக்கிய தேசியப் பேரியக்கமாக அது அணி திரட்டப்படவும் இல்லை என்பதே ஈழ மக்கள் இன அழிப்பைத் தமிழகம் தடுக்க இயலாமல் போனதற்கு முதன்மைக் காரணமாகும். இந்த உண்மையைத் தமிழகத் தமிழர்களும், ஈழத் தமிழர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
ஈழ மக்களின் குருதியால் வரலாற்றுச் சுவரில் எழுதப்பட்ட இந்தப்பாடத்தைப் படிக்காமலும், படிப்பிக்காமலும் ஈழக் கனவை ஒரு போதும் நனவாக்க முடியாது. இவ்வகையில் தொடக்கம் முதலே தெளிவாக இருப்பவை தமிழகத்தின் தமிழ்த் தேசிய அமைப்புகளே. தமிழீழத்தின் தமிழ்த் தேசிய அமைப்புகள் குறித்து அட்டியின்றி இப்படிச் சொல்வதற்கில்லை. 1972இல் தந்தை பெரியார் தம்மைப் பார்க்க வந்த தமிழீழத் தந்தை செல்வநாயகத்திடம் "உங்களை அடிமையாக்கி விட்டதாகவா சொல்லுகிறீர்கள்? தமிழர்களாகிய நாங்கள் ஏற்கனவே இந்தியாவில் அடிமைகளாகத்தான் இருக்கிறோம். ஓர் அடிமை இன்னொரு அடிமைக்கு என்ன உதவி செய்ய முடியும்?" என்று கேட்ட போதே தமிழகத்தின் உண்மை நிலையைத் தமிழீழத் தேசியர்கள் புரிந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி யாரும் புரிந்து கொண்டார்களா? புரிந்து கொண்டாலும் அந்த அடிப்படையில் தம் அணுகுமுறையை வகுத்துக் கொண்டார்களா? பெரும்பாலும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது.
தமிழீழத் தலைவர்களாயினும், பொது மக்களாயினும், தமிழகத்தை இந்தியாவாகவும், தமிழர்களை இந்தியர்களாகவும் பார்ப்பதுதான் வழக்கமாக இருந்துள்ளது. ஈழத் தமிழர்களுக்குச் சிங்கள ஒடுக்குமுறை என்பது போல் தமிழகத் தமிழர்களுக்கு இந்திய ஒடுக்குமுறை என்பதாக ஒன்று இருப்பதையே பொதுவாகத் தமிழீழத்தின் படிப்பாளிகள் கூட அறிந்தேற்பதில்லை.
தமிழகத்தின் தமிழ்த் தேசியம்
தமிழகத்தின் தமிழ்த் தேசியம் தமிழீழத்தின் தமிழ்த் தேசியத்தைக் காட்டிலும் அகவையில் மூத்தது. 1925இல் தந்தை பெரியார் தன்மான இயக்கம் கண்டார். 1938இல் தமிழ்நாடு தமிழருக்கே! என்ற முழக்கம் தந்தார். பாரதியார், வ.உ.சிதம்பரனார், திரு.வி.கலியாண சுந்தரனார் போன்றவர்கள் அடிப்படையில் இந்தியத் தேசியர்களே என்றாலும், அவர்களது பேச்சிலும், எழுத்திலும் முனைப்பாகத் தமிழ்த் தேசியக் கூறுகளும் இருந்தன. சி.பா.ஆதித்தனாரின் நாம் தமிழர் கட்சி, ம.பொ.சிவஞானத்தின் தமிழரசுக் கழகம், ஈ.வெ.கி.சம்பத்தின் தமிழ்த் தேசிய கட்சி ஆகிய அமைப்புகள் குறிப்பிட்ட காலம் வரை குறிப்பிட்ட அளவுக்குத் தமிழ்த் தேசிய வளர்ச்சிக்குப் பங்களித்தன. திராவிட இயக்கமே கூட பதவி அரசியலால் சீரழிவதற்கு முன், உருத்திரிந்த திராவிட வடிவத்திலேயே என்றாலும் உள்ளடக்கத்தில் ஏறத்தாழத் தமிழ்த் தேசியத்தையே முன்னெடுத்தன.
தமிழகத்தின் தமிழ்த் தேசிய இயக்கத்திற்கு இப்படியொரு நீண்ட வரலாறு இருப்பதைத் தமிழீழத்தின் தமிழ்த் தேசிய இயக்கம் அறிந்துணர்ந்து செயற்பட்டதற்கான பெரிய அறிகுறி ஏதும் இல்லை. கவிஞர் காசிஆனந்தன் போன்ற ஒரு சிலர் அங்கும், இங்கும் நேரடியாகவே தமிழ்த் தேசிய இயக்கங்களில் பங்காற்றியவர்கள் என்பதால், தமிழகத்திற்கும் தமிழீழத்திற்குமான இடையுறவைப் புரிந்து கொண்டிருக்கலாம். ஆனால் இவர்கள் விதி விலக்கானவர்கள்.
புலிகளின் புரிதல்
இந்திய வல்லாதிக்கத்தையும், தமிழீழத்தை மலரவிடாமல் தடுப்பதில் அதற்கிருந்த அக்கறையையும் விடுதலைப் புலிகள் இயக்கமும் தலைவர் பிரபாகரனும் சரியாக உள்வாங்கிக் கொண்டதால்தான் அதன் சூழ்ச்சிகளுக்கு இரையாகாமல் எச்சரிக்கையாக இருக்க முடிந்தது. இந்திய-இலங்கை ஒப்பந்தம் விரித்த சூழ்ச்சிவலையில் சிக்காமல் அதனை அறுத்தெறிந்து கொண்டு வெளியே வரவும் முடிந்தது.
யாழ்ப்பாணத்தில் ஒரு செய்தியாளர் சந்திப்பின்போது, கருணாநிதி - எம்.ஜி.ஆர். குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு விடையளிக்கையில் பிரபாகரன் இப்படிச் சொன்னார்: "தமிழக அரசுக்கு இறைமை கிடையாது என்பதை அறிவோம். முதலமைச்சர் தாமாக எங்களுக்குத் துணை செய்ய அதிகாரமில்லை என்பதையும் நன்கு உணர்ந்துள்ளோம் என்றாலும் தமிழக மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் பொறுப்பு அவர்களுக்கு இருப்பதாகவே நம்புகிறோம்" இது சரியான பார்வை.
ஆனால், இந்தப் பார்வையும் இதிலிருந்து பெறப்படும் முடிவுகளும் இயக்கத்தின் எல்லா நிலைகளுக்கும் போய்ச் சேர்ந்தனவா? குறிப்பாக இயக்கத்தின் அரசியல் கட்டுரையாளர்களுக்குப் போய்ச் சேர்ந்தனவா? என்று தெரியவில்லை. தமிழீழப் பொதுமக்களும் இந்தியா பற்றிய மயக்கங்களிலேயே வளர்க்கப்பட்டார்கள். தமிழக அரசியல் என்றாலே கருணாநிதி அல்லது எம்.ஜி.ஆர். என்ற குறுகிய புரிதல்தான் நிலவியது. தமிழகத்தின் தமிழ்த் தேசியத் தலைவர்களில் ஒரு சிலர் அறியப்பட்டிருந்தாலும் தமிழ்த் தேசியர்கள் என்பதைக் காட்டிலும், தமிழீழ நண்பர்கள் என்ற அடையாளத்துடனேயே அறியப்பட்டிருந்தார்கள்.
1987 இல் இந்திய - இலங்கை ஒப்பந்தத்தையொட்டி அமைதிப் படை என்ற பெயரில் இந்தியப் படையின் ஆக்கிரமிப்பும், அது புரிந்த கொடுமைகளும் ஈழ மக்களின் இந்திய மயக்கத்திற்கு வலுத்த அடி கொடுத்தன. திலீபனின் ஈகமும், புலேந்திரன்-குமரப்பா உள்ளிட்ட பன்னிருவரின் குப்பிச்சாவும், அன்னை பூபதியின் பட்டினிப் போராட்ட உயிரிழப்பும் ஈழ மக்களுக்கு இந்தியப் பகையைத் தெளிவாக அடையாளம் காட்டின.
இந்தியாவின் பகைமைச் செயற்பாடு இந்தியப் படையின் வெளியேற்றத்தோடு முடிந்துவிடவில்லை. அது சிங்கள அரசுக்குத் தொடர்ந்து படைக்கலன்களும், படைப் பயற்சியும் வழங்கி வந்தது. ஆனால் அப்போதும் இந்தியாவிடம் கெஞ்சிக் கொஞ்சுவதான அணுகுமுறை தொடரவே செய்தது. இந்தியாவை நாம் பகை நாடாகக் கருதுகிறோம் என்று சொல்லத் தேவையில்லைதான். ஆனால் இந்திய அரசு தமிழர்களைப் பகையினமாகக் கருதிச் செயல்படுகிறது என்ற உண்மையைச் சொல்ல தயங்கியிருக்கத் தேவையில்லை.
இசுரேலும் ஈழமும்
இந்தியா ஈழத்தைக் கண்டு அஞ்சத் தேவையில்லை என்று சொல்வது வேறு. இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு ஈழம் துணை நிற்கும் என்று உறுதியளிப்பது வேறு. இந்த இரண்டு அணுகுமுறைகளையும் பிரிக்கும் கோடு மெல்லியதென்றாலும் தெளிவானது.
ஈழத்தை இந்திய அரசின் நோக்கங்களுக்கு ஒப்புக் கொடுக்கும் அணுகுமுறையின் ஒரு விபரீத வெளிப்பாடுதான் "அமெரிக்காவிற்கு இஸ்ரேல் போல் இந்தியாவிற்கு ஈழம் பயன்படும்" என்ற உறுதிமொழி. அமெரிக்காவிற்கு இஸ்ரேல் எதற்கெல்லாம் பயன்பட்டது, பயன்பட்டும் வருகிறது என்பதை நாமறிவோம். எண்ணெய் வளமிக்க அரபு நாடுகளை அச்சுறுத்துவதற்கும், இன்னும் கூட முக்கியமாகப் பாலஸ்தீன விடுதலையை மறுப்பதற்கும் இஸ்ரேல் அமெரிக்காவிற்குப் பயன்பட்டதை நாமறிவோம். சுருங்கச் சொன்னால், இஸ்ரேல் அமெரிக்காவின் மேற்காசிய அடியாள். இதே போலத்தான் ஈழமும் இந்தியாவிற்குப் பயன்படப் போகிறதென்றால் அது இந்தியாவின் தெற்காசிய அடியாளாகச் செயல்படும் என்று பொருள். இந்தியாவிற்கு எதிரானவர்களை ஒடுக்க ஈழம் பயன்படுமென்றால், காசுமீரத்தையும், வடகிழக்குத் தேசிய இனங்களையும், தண்டகாரண்யப் பழங்குடிகளையும் ஒடுக்குவதற்குப் பயன்படும் என்று பொருள்.
இந்த ஏரணத்தை இறுதிவரை நீட்டிப் பார்த்தால் தமிழகத்தின் தேசிய விடுதலையைத் தடுப்பதற்குப் பயன்படும் என்று பொருள். இப்படித்தான் ஈழம் பயன்படுமென்றால், அதை ஏன் நாம் ஆதரிக்க வேண்டும் என்று தமிழக மக்கள் கேட்க மாட்டார்களா?
தமிழக, தமிழீழப் போராட்டங்களின் இடையுறவு
சிங்கள ஒடுக்குமுறைக்கும், இந்திய ஒடுக்குமுறைக்கும் இடையிலான வரலாற்று வேறுபாடுகளை நாம் மறுக்கவில்லை. அதே போல் தமிழீழ விடுதலைப் போராட்டமும், தமிழக விடுதலைப் போராட்டமும் வெள்வேறு வளர்ச்சி நிலைகளில் இருப்பதை நாம் கருத்தில் கொள்ளவே செய்கிறோம். ஆனால் தமிழகத்தில் தமிழ்த் தேசியத்தின் வளர்ச்சிக்கான தேவையையும், அதற்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குமான இடையுறவையும் புரிந்து கொள்ளாமல், கண்டு கொள்ளாமல் அல்லது கணக்கில் கொள்ளாமல் இருப்பதற்கு எவ்வித நியாயமும் இல்லை.
"தமிழீழத்திற்காகத் தமிழகம் என்ன செய்துள்ளது?" என்பதற்கு மறுமொழியாக "தமிழகத்திற்காகத் தமிழீழம் என்ன செய்துள்ளது?" என்ற வினாவை நான் தொடுத்தபோது தமிழீழ நண்பர்கள் பலரும் திகைத்துப் போனார்கள். தமிழகத்தின் தமிழ்த் தேசியப் போராட்டத்தில் தமிழீழத் தேசியர்களுக்கு அக்கறை இருக்க வேண்டும் என்பதைச் சுருக்கென்று உணர்த்துவதற்காகவே நான் இந்தக் கேள்வியைக் கேட்டேன்.
தமிழக அரசியல் பற்றிய பார்வை
முள்ளிவாய்க்காலுக்குப் பின் தமிழீழ மக்கள் இந்தியாவைக் கடுமையாக வெறுக்கிறார்கள் என்பது மெய்தான். ஆனால் இது மட்டும் போதாது. இந்திய அரசின் வல்லாதிக்கத் தன்மையை உணர்வதோடு, அதற்கெதிரான போராட்ட ஆற்றல்களை இனங்கண்டு அவற்றோடு தோழமை கொள்ளவும் வேண்டும். குறிப்பாகத் தமிழக அரசியலை வெறும் கருணாநிதி- செயலலிதா போட்டியாகப் புரிந்து கொள்வதிலிருந்து வெளியே வரவேண்டும். அடுத்த முதலமைச்சர் ஆகப் போகிறவர் யார்? என்ற புதிருக்கு விடை தேடுவதிலேயே காலங்கழித்துக் கொண்டிருக்கக் கூடாது. வருங்காலத்தில் தங்களுக்குப் பிடித்தமான ஒருவர் முதலமைச்சர் நாற்காலியில் உட்கார்ந்து விடுதலையைப் பொட்டலம் கட்டி அனுப்பி வைக்க மாட்டாரா? என்று ஏங்கிக் கொண்டிருக்கக் கூடாது.
இப்பொழுதுள்ள இந்திய அரசமைப்பில் யார் முதலமைச்சர் ஆனாலும் அவர் தமிழ்நாட்டின் வரதராசப் பெருமாளாகத்தான் இருக்கமுடியும் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். தமிழக முதலமைச்சர் தமிழீழ மக்களைக் காக்கத் தவறிவிட்டார் என்பதன் பொருள் அவர் முதலமைச்சருக்குரிய சட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி இதைச் செய்திருக்க முடியும், ஆனால் செய்யத் தவறிவிட்டார் என்ற பொருளில் அல்ல. அவர் தமிழக மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் டெல்லி அரசை எதிர்த்துப் போராடத் தவறிவிட்டார் என்ற பொருளில்தான் இப்படிச் சொல்கிறோம். எடுத்துக்காட்டாக, ஈழத் தமிழர் இன அழிப்பில் டெல்லியின் பங்கைக் கண்டித்து அவர் முதல்வர் பதவியைத் தூக்கி எறிந்துவிட்டுத் தெருவில் இறங்கிப் போராடியிருக்கலாம். இவ்வாறு டெல்லிக்கு நெருக்குதல் கொடுத்து அதன் தமிழர் விரோதப் போக்கைத் தடுத்திருக்கலாம் அல்லது கட்டுப்படுத்தியிருக்கலாம். ஒரு முதலமைச்சரால் அதிகபட்சம் செய்யக்கூடியது பதவி விலகிப் போராட முன்வருவதுதான். இதைச் செய்யாமல் பதவியில் ஒட்டிக் கொண்டிருந்தார் என்பதுதான் கருணாநிதி செய்த இரண்டகம். பதவியின் பெரும் பயன் (அதிகபட்சப் பலன்) பதவி விலகல்தான் என்னும்போது, விலகுவதற்கு மட்டும் பயன்படக்கூடிய பதவிக்கு ஒருவரைத் தேர்ந்தெடுப்பதில் ஏன் இத்துணைக் கவலை.
பதவி அரசியல்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுவதால் என்ன பயன்? இந்திய அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் பதவி விலகுவதால் என்ன பயன்? ஈழ ஆதரவு அரசியல் கட்சிகள் தேர்தலைப் புறக்கணிப்பதால் என்ன பயன்? என்றெல்லாம் அப்போதே கேள்வி எழுப்பினார்கள். இவர்களெல்லாம் பதவி விலகுவது மக்களை எழுச்சி கொள்ளச் செய்யும். இந்திய அரசுக்கு நெருக்குதல் உண்டு பண்ணும்.
2008 அக்டோபர் 14 ஆம் நாள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுத்தபடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகியிருக்க வேண்டும். ஒருசில கட்சிகள் இந்த முடிவிலிருந்து பின் வாங்கியிருந்தாலும் மற்ற கட்சிகள் விலகல் முடிவைச் செயல்படுத்தியிருக்க வேண்டும். நடுவண் அரசின் தி.மு.க., பா.ம.க. அமைச்சர்கள் பதவி விலகியிருக்க வேண்டு.ம் போரை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டே கடைசிவரை பதவியில் ஒட்டிக் கொண்டிருந்ததை மன்னிக்க முடியாது. இன அழிப்புப் போரை எதிர்ப்பதாகச் சொன்ன அரசியல் கட்சிகள் நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணித்து, போரை நிறுத்தும் வரை இங்கே தேர்தல் நடத்தத் தேவையில்லை என்று அறிவித்திருந்தால் அது காங்கிரசைத் தனிமைப்படுத்தி இருக்கும். மற்ற கட்சிகள் தயங்கினாலும், உறுதியான ஈழ ஆதரவு கட்சிகள் மட்டுமாவது இவ்வாறு நிலை எடுத்திருக்க வேண்டும்.
இதைவிடுத்து ஈழ ஆதரவுக் கட்சிகள் தமக்குள் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்தித்திருக்க வேண்டும் என்பது போகாத ஊருக்கு வழிகாட்டும் வேலை. இப்படியொரு கூட்டணி அமையாததால்தான் தி.மு.க., காங்கிரசுக் கூட்டணியில் இணைந்தேன் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சொல்லும் சமாதானம் ஏற்புடையதன்று. எந்தக் கூட்டணியும் தேவையில்லை என்று தனித்துப் போட்டியிடாதது ஏன்? என்பதற்கு அவரிடமிருந்து பொருத்தமான விளக்கமில்லை. பேசாமல் தேர்தலையே புறக்கணித்திருக்கலாமே! ஏன் அப்படிச் செய்யவில்லை?
இப்படி எல்லாம் இந்த அரசியல் கட்சிகள் செய்யாமல் போனதற்கு என்ன காரணம்? இந்தக் கட்சிகள் நடத்துவது பதவி அரசியல். ஈழத் தமிழர்கள் அழிவதைத் தடுக்க வேண்டும் என்பதற்காகத் தங்கள் பதவி அரசியலைச் சிறிது காலம் ஒத்தி வைக்கக் கூட இக்கட்சித் தலைமைகளுக்கு மனமில்லை. மேலிருந்து கீழ்வரை இந்தக் கட்சிகளின் இயைபே இப்படிப்பட்டதுதான். காலமெல்லாம் பொதி சுமந்து பழகியபின் திடீரென்று போர்ப் புரவிகளாக மாற முடியாது. ஒரு தேசிய விடுதலை இயக்கத்தை வழிநடத்துவதற்கு மட்டுமல்ல, பிறிதொரு தேசிய விடுதலை இயக்கத்தை ஆதரிப்பதற்கும் கூட தேசியம் குறித்துத் தெளிவான புரிதல் தேவைப்படுகிறது. செயலளவில் இந்தியத் தேசியத்திற்குச் சேவகம் செய்து கொண்டே தாயகம், இறையாண்மை, தன்னாட்சி என்றெல்லாம் தமிழ்த் தேசிய வாய்ப்பந்தல் போடுவதால் தமிழகத்திற்கும் பயனில்லை, தமிழீழத்திற்கும் பயனில்லை.
விடுதலைப் போராட்டங்கள் இரண்டு
தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கும், தமிழக விடுதலைப் போராட்டத்துக்குமான இயங்கியல் இடையுறவை உள்வாங்கிச் செயல்படும்போதுதான் உலகத் தமிழர் ஒற்றுமை என்பது பொருளும் பயனும் உடைத்தாகும். இவ்விரு விடுதலைப் போராட்டங்களும் தனித்தனியான€வ் ஆனால் நெருங்கிய தொடர்புடையவை ஒன்றுக்கொன்று புறநிலையில் துணை செய்யக் கூடியவை. ஆனால் ஒன்றுக்கொன்று நிபந்தனையாகக் கூடியவை அல்ல. இந்த இடையுறவை மாறாது நிலைத்திருக்கும் சூழலில் இடம்  பெறுவதாக அல்லாமல், தொடர்ந்து மாறிவரும் உள், வெளி நிலைமைகளில் இயங்கி வருவதாகக் காண வேண்டும். இருதரப்பிலும் முன்னின்று போராடும் ஆற்றல்களுக்காவது முதலில் இந்தப் புரிதல் தேவை. பிறகு இது உலகத் தமிழர்களின் கூட்டுணர்வில் இறங்கிப் பதிய வேண்டும். இருதரப்பு அறிவாளர்களும் இதற்காக முன்முயற்சி எடுக்க வேண்டும்.
தமிழீழ விடுதலைப் போராட்டம், தமிழக விடுதலைப் போராட்டம் இரண்டுமே வரலாற்றுத் தேவைகள் என்றாலும் வெள்வேறு வளர்ச்சி நிலைகளில் இருப்பவை. எனவே, அவை ஒன்றுக்கொன்று துணை செய்யும் வழிகள் - வடிவங்களும் வேறுபடத்தான் செய்யும்.
தமிழகத்தின் தமிழ்த் தேசிய இயக்கம் வயதில் மூத்ததென்றாலும் பின்தங்கிவிட்டது. தமிழீழத்தின் தமிழ்த் தேசிய இயக்கம் முந்திக் கொண்டுவிட்டது. தமிழகத்தில் தமிழ்த் தேசியத்தின் தேவையைத் பெருந்திரளான தமிழ் மக்கள் உணரச் செய்வதற்காகப் போராடி வருகிறோம். தமிழ்த் தேசியம் பெருந்திரளான தமிழ் மக்களை ஆட்கொள்ளாமல் விடுதலைக்கான அரசியல் ஆற்றலாக மலரமுடியாது. தமிழ்நாட்டில் வெறும் பரப்புரைக் கட்டத்தில் இருக்கிறோம் என்பதன்று இதன் பொருள். தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கான போராட்டங்கள்தாம் தமிழ்த் தேசியத்தின் தேவையைப் பெருந்திரளான மக்கள் உணரும்படி செய்வதற்கான முதன்மைவழி; இந்தப் போராட்டங்களைத் தமிழ்த் தேசிய விடுதலைக் குறிக்கோளின் திசையில் செலுத்துவதற்குத் தமிழத் தேசிய அமைப்புகளை உறுதியும் வலிமையும் மிக்கவையாகக் கட்டியெழுப்ப வேண்டும். இந்தக் கடமைகளைச் செய்வதற்குத் தமிழ்த் தேசிய ஊடகங்களை வலுவாக்க வேண்டும்.
தமிழீழ விடுதலைப் போராட்டம் அறப் போராட்டமாகத் தொடங்கி ஆயுதப் போராட்டமாக வளர்ந்து கரந்தடிப்போர் என்ற நிலையிலிருந்து மரபுவழிப் போராக வளர்ந்து, இறுதியில் பெருத்தப் படையியல் தோல்வியைச் சந்தித்துள்ளது. தமிழீழ மக்கள் இந்தத் தோல்வியிலிருந்து மீண்டெழுந்து தங்கள் சூழலுக்குப் பொருத்தமான புதிய வடிவங்களில் போராட்டத்தைத் தொடர வேண்டும். அதற்கு உலகத் தமிழர்கள் உதவ வேண்டும்.
சிங்கள அரசைத் தனிமைப்படுத்தல்
எப்படி? தமிழீழ மக்கள் எவ்வகையில் போராடுவதற்குமான வெளியை இழந்து நிற்கிறார்கள். இந்த வெளியை உருவாக்கித் தர வேண்டுமானால் சிங்கள அரசுக்குக் கடும் நெருக்குதல் கொடுக்க வேண்டும்.
இனக் கொலைக் குற்றவாளியைக் கூண்டிலேற்றுக! ஈழ மக்கள் மீதான இனப் பேரழிப்புப் போர் குறித்து ஐ.நா. அமைப்பின் வழியாக விசாரணை நடத்துக! சிறைப்படுத்திய போராளிகள் அனைவரையும் விடுதலை செய்க! இன்னமும் முள்வேலி முகாம்களில் அடைப்பட்டிருப்பவர்களை விடுதலை செய்க! அதியுயர் பாதுகாப்பு வலையங்களை அகற்றுக! தமிழ் மக்கள் அனைவரையும் மீள் குடியமர்த்தம் செய்க! அவர்களின் நிலம், உடைமைகள், தொழில் அனைத்தையும் திருப்பித் தருக! போரினால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை முழுமையாக ஈடு செய்க! தமிழர் தாயகப் பரப்பில் சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்துக! தமிழ் மக்களின் சனநாயக உரிமைகளை உறுதி செய்க! இவை போன்ற கோரிக்கைகளுக்காகத் தமிழகத் தமிழர்களும் புலம்பெயர் தமிழர்களும் போராட வேண்டும். இது அறப்போராட்டம்தான் என்றாலும் அடையாளப் போராட்டமாக இருந்துவிடக் கூடாது.
சிங்கள அரசுக்கு உறைக்கும் விதத்தில் நம் போராட்டம் அமையும் பொருட்டுச் சிறிலங்காவை உலக அளவில் தனிமைப்படுத்த வேண்டும். பொருளியல் வகையிலும் அரசியல் - அரசுறவியல் வகையிலும், பண்பாட்டு வகையிலும் சிறிலங்கா மீது தடை கொண்டுவரச் செய்ய வேண்டும்.
வட அமெரிக்காவில் அமெரிக்கத் தமிழர் அரசியல் செயலவை சிறிலங்காவிலிருந்து வரும் பண்டங்களைப் புறக்கணிப்பதற்கான இயக்கத்தை நடத்தி வருகிறது. தமிழகத் தமிழர்கள், தமிழீழத் தமிழர்களோடு யூதப் பெண்மணி மரு.எலின் சாண்டரும் இந்த இயக்கத்தில் முனைப்புடன் பங்காற்றி வருகிறார். ஐரோப்பிய ஒன்றியம் சிறிலங்காவிற்கான ஜி.எஸ்.பி.பிளஸ் சலுகையை நிறுத்த முன்வந்திருப்பது நல்ல அறிகுறி.
நம்பிக்கையும் ஊக்கமும்
கொழும்பில் நடந்த சர்வதேச இந்தியத் திரைப்பட விருது விழாவைப் பிசுபிசுக்க வைப்பதில் தமிழ்த் திரைக் கலைஞர்களும், மே 17 இயக்கம், தமிழர் காப்பு இயக்கம் போன்றவையும் வகித்தப் பங்கு நமக்கு ஊக்கமளிக்கக் கூடியது. கொழும்பு சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டைப் புறக்கணிக்கத் தமிழக எழுத்தாளர்கள் எடுத்துள்ள முயற்சிக்குக் குறிப்பிடத்தக்க வெற்றி கிட்டியுள்ளது. இவை நமக்கு ஊக்கமளித்துள்ளன என்றாலும் போதமாட்டா. நம் முயற்சியை நூறு மடங்கு விரிவாக்கவும் தீவிரமாக்கவும் வேண்டும். சிறிலங்காவைப் புறக்கணிப்போம்! என்ற முழக்கமும் இயக்கமும் தமிழகத்தில் எதிர்ப்பாரும் மறுப்பாரும் இல்லாதவையாக விரைவாய் வளரச் செய்ய வேண்டும். இந்தியாவெங்கும் இந்தப் புறக்கணிப்பு இயக்கத்துக்குச் சனநாயக ஆற்றல்களின் முனைப்பு மிக்க ஆதரவைப் பெற இயலும்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்
உலக அளவில் ஈழத்தமிழர்கள் சனநாயக முறையில் தேர்தெடுத்துள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தமிழீழ தனியரசுக் குறிக்கோளின் பின்னால் பல்வேறுபட்ட தமிழர்களையும் தமிழ் அமைப்புகளையும் ஒருங்கிணைத்துச் சிறப்பாக இயங்கி வருகிறது. தமிழீழத் தனியரசுக் கோரிக்கைக்குப் பன்னாட்டுச் சமுதாயத்தின் அறிந்தேற்பையும் ஆதரவையும் ஈட்டும் கடமையை நா.க.த.அ. சிறப்பாக நிறைவேற்றும் என நம்பலாம்.
நா.க.த. அரசாங்கத்துக்கும் அதன் முயற்சிகளுக்கும் தமிழ்நாட்டிலும், இந்திய அளவிலும் ஆதரவு திரட்டத் தமிழகத்தின் ஈழ ஆதரவு ஆற்றல்கள் திட்டமிட்டு முன்முயற்சி எடுக்க வேண்டும். இங்கே ஏதிலிகளாக வாழும் ஈழத்தமிழர்களும் நா.க.த. அரசாங்கத்தை அமைப்பதிலும் இயக்குவதிலும் தங்களுக்குரிய பங்கினை ஆற்றுவதற்கு நாம் உதவ வேண்டும்.
நா.க.த.அரசாங்கமும் விடுதலைப் புலிகளும்
நா.க.த.அரசாங்கத்தைத் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தொடர்ச்சியாகக் கருதுவதும் இரண்டையும் ஒரே அளவுகோலால் ஒப்புநோக்குவதும் தவறு. இதில் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
புலிப்படை என்பது தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றின் ஒரு கட்டத்தில் - ஆயுதப் போராட்டம் முதன்மை வடிவமாகத் திகழ்ந்த கட்டத்தில் எழுந்து வளர்ந்து தன் கடமைகளைச் செய்தது. போராட்டத்தின் புதிய கட்டத்தில் தமிழீழ மக்களின் பன்னாட்டு வாழ்வு, தமிழ்த் தேசியத்தின் பன்னாட்டு அளாவல் ஆகியவற்றின் அடிப்படையிலான அரசியல் போராட்டம் முதன்மை வடிவமாகியுள்ள கட்டத்தில் - இக்கட்டத்திற்குரிய கடமைகளைச் செய்வதற்கு நா.க.த.அ. பிறந்துள்ளது. புலிகளின் குறிக்கோளும் தனித் தமிழீழம்தான், நா.க.த.அரசாங்கத்தின் குறிக்கோளும் தனித் தமிழீழம்தான் என்ற பொருளில் மட்டுமே நா.க.த.அரசைப் புலிகளின் வரலாற்றுத் தொடர்ச்சியாகக் கருதமுடியும். அவை ஆற்ற வேண்டிய பணிகள் அடிப்படையிலேயே வேறுபட்டவை என்பதால் அமைப்புமுறை, வழிமுறை, உத்திகள் ஆகிய எல்லா வகையிலும் அவை வேறுபட்டவையாகவே இருக்கும். இந்த வேறுபாட்டைப் புரிந்து கொள்ளத் தவறினால் குழப்பம்தான் மிஞ்சும்.
சிங்களத்தின் மீது தாக்கம்
சிங்களப் பேரினவாத அரசைத் தனிமைப்படுத்தி நெருக்குதல் ஏற்படுத்தும் முயற்சிகள் சிங்களப் பேரினவாதத்தின் சமூக அடித்தளமாகிய சிங்கள மக்களைச் சிந்திக்க வைக்கும். அவர்களைத் தங்கள் அரசுக்கு எதிராகத் திருப்பும். சிங்கள மக்களிடையே உண்மையான சனநாயக ஆற்றல்கள் வளர்வதற்கு உதவும். அதுமட்டுமல்ல சிங்கள ஆளும் வர்க்கத்துக்குள் இதனால் முரண்பாடுகள் முற்றும். மோதல்கள் வெடிக்கும். ஆளும் பாசிசக் கும்பல் மேன்மேலும் தனிமைப்படும். இவையாவும் சேர்ந்து தமிழ் மக்களுக்கான சனநாயக வெளியைத் தோற்றுவிக்கும், விரிவாக்கும். அடக்குண்டு நசுக்குண்டு கிடக்கும் தமிழ் மக்கள் இந்த வெளியைப் பயன்படுத்திக் களம் காண்பார்கள்.
பாலஸ்தீன மக்களின் "இண்டிஃபாடா" போல், இப்போதைய காசுமீரத்து மக்களின் பேரெழுச்சி போல், ஈழத்து மக்களும் கிளர்ந்தெழுந்து போராடுவார்கள். இந்தப் போராட்டமே வெற்றியைத் தேடித் தந்துவிடுமா? அல்லது மீண்டும் ஆயதப் போராட்டம் தேவைப்படுமா? என்பதை இப்போதே நம்மால் கணிக்க இயலாது. மேலும் அது ஈழ மக்களை மட்டும் அல்லது அவர்களை வழிநடத்தும் விடுதலை ஆற்றல்களை மட்டும் பொறுத்ததன்று. ஒன்று மட்டும் உறுதி: வடிவம் எதுவானாலும் அந்தப் போராட்டத்தை மீண்டும் ஒருமுறை பயங்கரவாத முத்திரைக் குத்தித் தனிமைப்படுத்தி ஒழிப்பது நடவாது.
வருங்கால வாய்ப்பு
நம்மைப் பொறுத்தவரை தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வருங்காலப் பாதை இப்படியே அமையக்கூடும். வேறு விதமாக அமைந்தாலும், அதை உள்வாங்கிச் செயல்படத் திறந்த மனத்துடன் அணுகுவோம். ஆனால் இப்போது செய்ய வேண்டியது என்ன என்பதில் தெளிவாக இருப்போம் சிங்கள அரசைத் தனிமைப்படுத்தும் இயக்கத்தை விரிவாக முன்னெடுப்போம்!  
தமிழீழத்தைத் தமிழகம் புரிந்து கொள்வது போலவே, தமிழீழமும் தமிழகத்தைப் புரிந்து கொள்ளட்டும். உலகத் தமிழினம் தன் வரலாற்றுப் பொறுப்பை உணர்ந்து, திட்டமிட்டுச் செயலாற்றினால், உலகில் தமிழருக்கு ஒரு நாடு பிறக்கும். பிறகு மற்றொரு நாடும் பிறக்கும். உலக அரங்கில் தமிழருக்கென்று இரு கொடிகள் உயரும். மனிதகுல முன்னேற்றத்துக்குத் தமிழினத்தின் பங்களிப்பு இருபடி மேலே செல்லும்.

No comments:

Post a Comment