Saturday, November 6, 2010

''தமிழகத்தில் உளவுபார்க்கிறதா இலங்கைத் தூதரகம்?''

''தமிழகத்தில் உளவுபார்க்கிறதா இலங்கைத் தூதரகம்?''
Close down Sri Lanka Consulate in Chennai - Tamil Poltics News Article வடக்கு - கிழக்கு இலங்கையில் மட்டும் வாலாட்டி வரும் இலங்கை அரசு, இப்போது கடல் தாண்டி தமிழகத்துக்குள்ளும் இடக்குச் செய்ய ஆரம்பித்து விட்டது போலிருக்கிறது. சென்னையில் உள்ள அந்நாட்டுத் தூதரகம் வெளியிட்டுள்ள ஒரு புத்தகத்தைப் பார்க்கும் போது அப்படித்தான் தோன்றுகிறது.
அந்தப் புத்தகத்தின் பெயர் "தமிழகத்தின் பார்வையில் விடுதலைப்புலிகள்" (LTTE in the eyes of Tamilnadu). இலங்கை அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அந்தப் புத்தகத்தில், தமிழகமே புலிகளுக்கு எதிராக இருப்பதைப் போல காட்டப்பட்டிருக்கிறது. இலங்கை அரசுக்கு ஆதரவாக தமிழகச் செய்தித்தாள்களில் வந்த செய்திகளை மட்டும் பொறுப்பாகத் தேடித் திரட்டி அந்தப் புத்தகம் தொகுக்கப்பட்டிருக்கிறது. இது தமிழீழ ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருககிகிறது.
"மனிதம்" என்ற மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின் செயல் இயக்குனர் "அக்னி" சுப்ரமணியம் என்பவரின் கையில் இந்தப் புத்தகம் சிக்க, அதை அவர் பா.ம.க. நிறுவனர் ராமதாஸின் கவனத்துக்குக் கொண்டு போயிருக்கிறார். தமிழர் பாதுகாப்புப் பேரவைக் கூட்டத்தில் பேசிய ராமதாஸ், "தமிழீழத்துக்கு எதிரான இந்தப் புத்தகத்தை இலங்கை அரசு வெளியிட்டுள்ளது. இந்தப் புத்தகம் மூலம் தமிழகத்தில் விஷத்தைப் பரப்பி வரும் சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தைத் தடை செய்ய வேண்டும்" என்று ஆவேசப்பட்டிருக்கிறார்.
"அக்னி" சுப்ரமணியத்தை நாம் நேரில் சந்தித்தோம். "இலங்கைத் தமிழர்கள் மீது அந்நாட்டு அரசு நடத்தி வரும் அத்துமீறல்களை வெளிக் கொண்டு வரும் பணியில் கடந்த நான்கு ஆண்டுகளாக எங்கள் "மனிதம்" அமைப்பு ஈடுபட்டுள்ளது. நேர்முகப் போருடன் ஒரு கருத்தியல் போரையும் நடத்தவேண்டும் என்ற நோக்கத்தில் இந்தப் புத்தகத்தை இலங்கை அரசு வெளியிட்டுள்ளது.
இந்த ஆங்கிலப் புத்தகத்தில், கடந்த ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை தமிழக ஊடகங்களில் வெளிவந்த இலங்கை அரசுக்கு ஆதரவான செய்திகளை மட்டும் ஒருதலைப்பட்சமாகத் தொகுத்துத் தந்திருக்கிறார்கள். இருநூற்று இருபது பக்கங்கள் கொண்ட அந்தப் புத்தகம் உயர்தர காகிதத்தில், உயர்ந்த தரத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.
புத்தகத் தலைப்பில் விடுதலைப்புலிகள் என்று குறிப்பிட்டிருந்தாலும் அதில் முழுக்க முழுக்க, ஈழத் தமிழர்களுக்கு எதிரான கருத்துகளே அதிகமாக இருக்கின்றன. செய்தித்தாள்களில் வந்த தலையங்கப் பகுதிகள், ஆங்கிலப் பத்திரிகைகளில் வந்த செய்திகள், தமிழ்ப் பத்திரிகைகளில் வந்த பேட்டி மற்றும் செய்திகள் என மூன்று பகுதிகளாகப் புத்தகம் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பக்கத்தில் உள்ள நூல் அறிமுகப் பகுதியில் விடுதலைப்புலிகளை மையப்படுத்தி, அங்கு வாழும் தமிழர்களுக்கு எதிரான பயங்கரமான கருத்துகள் இடம்பெற்றுள்ளன.
அந்தப் புத்தகத்தை சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகம், இங்கே ஈழத் தமிழர்களுக்கு எதிரான கருத்துகளைப் பரப்பி வரும் செய்தியாளர்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது. தூதரகத்தில் உள்ள எங்கள் நண்பர்கள் மூலம் இந்தப் புத்தகம் எனக்குக் கிடைத்தது. அதைப் படித்துப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தேன். இந்தப் புத்தகத்தைப் பார்த்த ராமதாஸ், திருமாவளவன், சிமான் உள்ளிட்டோர் கொதித்துப் போயிருக்கிறார்கள். ஒரே ஒரு புத்தகம் மட்டுமே எங்களுக்குக் கிடைத்துள்ளதால், ஒவ்வொருவராக அதைப் படித்து வருகிறோம்.
இந்தப் புத்தகத்தின் விலை மதிப்பு என்னவாக இருக்கும் என்று ஒரு பிரபல பதிப்பகத்தில் விசாரித்தபோது அவர்கள், "விலை உயர்ந்த காகிதத்தில் அச்சிடப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தைத் தயாரிக்க தலா ஆயிரம் ரூபாய் வரை செலவாகியிருக்கும்" என்றனர். இவ்வளவு விலை உயர்ந்த புத்தகத்தை இலங்கைத் தூதரகம் இலவசமாக வழங்க வேண்டிய அவசியம் என்ன?
உண்மையிலேயே தமிழக ஊடகங்களின் பார்வையில் தமிழ் ஈழப்பிரச்னையை விவரிப்பதாக இருந்தால் இருதரப்புச் செய்திகளையும் தொகுத்திருக்க வேண்டும். அப்படியின்றி, இலங்கை அரசுக்கு ஆதரவாக வெளியான செய்திகளை மட்டும் இவர்கள் தொகுத்திருப்பது அநியாயமானது. தமிழ்ஈழ மக்களுக்கு எதிரான அந்தச் செய்திகளைப் பத்திரிகைகளுக்குக் கொடுத்ததே சென்னையில் உள்ள அந்நாட்டின் துணைத் தூதரகம் தான். இதற்காக இங்குள்ள சில செய்தியாளர்களுக்கு தங்கச்சங்கிலி, பணப்பரிசுகளையும் அது வழங்கியிருக்கிறது.
இலங்கை அரசு தரும் இந்த வெகுமதிகளில் மஞ்சள் குளிக்கும் சில ஊடகங்கள்தான், இப்படி தமிழர்களுக்கு எதிரான செய்திகளைப் பிரசுரிக்கின்றன. அதை மீண்டும் தொகுத்து இலங்கை அரசே புத்தகம் வெளியிட்டிருப்பது வேடிக்கையானது. தமிழகத்தில் தமிழர்கள் மூலமாகவே ஈழத்தமிழர்களுக்கு எதிரான செய்திகளைப் பரப்பும் தந்திரத்தை தூதரகம் செய்கிறது" என்றார் அக்னி சுப்ரமணியம்.
"சரி! அதற்காக இலங்கைத் தூதரகமே சென்னையில் இருக்கக்கூடாது என்று சொல்வது நியாயமா?" என்று அவரிடம் கேட்டோம்.
"செய்தியாளர்களை மட்டுமல்ல. தமிழகத்தில் உள்ள சில மீனவத் தலைவர்களையும் இங்குள்ள இலங்கைத் தூதரகம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. அவர்கள் தங்களுக்கு எதிரான கோஷ்டியினர், கடலில் மீன் பிடிக்கச் செல்லும்போது அதுபற்றிய தகவல்களை இலங்கைத் தூதரக அதிகாரிகளுக்குத் தருகின்றனர். அந்தத் தகவலை வைத்து அந்த மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை, தாக்குதல் நடத்துகிறது. அதாவது தூதரகப் பணியை விடுத்து, இலங்கைத் தூதரகம் இங்கே உளவுப் பணியைச் செய்து வருகிறது
அதுமட்டுமல்ல, சென்னையிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் எங்களுக்குச் சில ஆதரவாளர்கள் உள்ளனர். அவர்கள் மூலம் ஒரு புதிய தகவலும் எங்களுக்குத் தெரிய வந்திருக்கிறது. தமிழகத்தில் உள்ள தமிழ் ஈழ ஆதரவாளர்களான திரைப்பட இயக்குநர்கள் தங்கர் பச்சான், சிமான், புகழேந்தி, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் போன்ற பலரது செல்போன் எண்கள், வீடு, அலுவலக முகவரி, தொலைபேசி எண்களை தூதரகம் சேகரித்து வைத்திருக்கிறது என்பதுதான் அந்தத் தகவல். இலங்கைத் தூதரகம் அப்படிச் செய்ய என்ன அவசியம்? ஒருவேளை இந்தத் தலைவர்களது செல்போன் பேச்சுகளை ஒட்டுக் கேட்கத்தான் இப்படிச் செய்திருக்கிறதோ? என்ற சந்தேகமும் எங்களுக்கு உண்டு. குறிப்பாக சென்னையில் துணைத் தூதரக அதிகாரி ஹம்சாதான் இதுபோன்ற அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகிறார்.
இந்தியாவில் இலங்கை தொடர்பான பிரச்னைகளைக் கவனித்துக் கொள்ள டெல்லியில் உள்ள இலங்கைத் தூதரகமே போதும். இந்த நிலையில், சென்னையில் எதற்குத் தனியாக ஒரு துணைத் தூதரகம்? இங்கே உளவு பார்ப்பதற்கா?
சென்னையில் உள்ள துணைத் தூதரகத்தை உடனடியாக மூட தமிழக அரசும் மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை அரசு வெளியிட்டுள்ள அந்த சர்ச்சைக்குரிய புத்தகத்தில் தமிழர்களுக்கு எதிரான செய்திகள் மட்டுமின்றி, தமிழக அரசுக்கு எதிரான செய்திகளும் உள்ளன. அதுபற்றி தகவலறிந்த தமிழக செய்திப் பிரிவு, அந்தப் புத்தகத்தைக் கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டுள்ளதாக எங்களுக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன" என்றவர் சற்று நேர இடைவெளிக்குப் பின்,
"இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டும் தினமும் ஆறில் இருந்து ஏழு தமிழர்கள் காணாமல் போய்க்கொண்டிருக்கிறார்கள். அதுபற்றி விசாரிக்கச் சென்ற நெதர்லாந்தில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்ற நீதிபதியும், இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதியுமான பகவதி மற்றும் அவரது குழுவை, இலங்கை அரசு அவமதிப்புச் செய்து திருப்பி அனுப்பியுள்ளது. தமிழர்கள் மர்மமான முறையில் காணாமல் போவது குறித்து சர்வதேச மனித உரிமை கண்காணிப்புக்குழு இருநூற்று நாற்பத்து மூன்று பக்கம் கொண்ட அறிக்கையை அந்நாட்டு அரசுக்கு எதிராக வெளியிட்டுள்ளது.
கொழும்பில் மட்டும் நூறு தமிழர்கள் அண்மையில் காணாமல் போனார்கள். அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா? இல்லையா? என்றே தெரியவில்லை. பன்னாட்டு அரசு சாரா நிறுவனங்கள், பன்னாட்டு ஊடகங்கள் ஆகியவை இலங்கையில் சர்ச்சைக்குரிய பகுதிகளில் நுழைய மகிந்தா ராஜபக்சே அரசு தடை விதித்துள்ளது. தமிழர்கள் வாழும் கிளிநொச்சிப் பகுதிக்கு உணவுப் பொருட்களை அனுப்ப அந்நாட்டு அரசு மறுத்து வருகிறது. அன்றாடம் நூற்றுக்கணக்கான தமிழர்கள் அங்கே செத்துமடிந்து கொண்டிருக்கிறார்கள். விலைவாசி வேறு விஷம்போல் ஏறி அந்நாட்டு மக்கள் தவியாய்த் தவிக்கிறார்கள்.
அப்படியிருக்க, ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புத்தகத்தை ஆயிரக்கணக்கில் இலங்கை அரசு தயாரித்து அதுவும் இலவசமாக தமிழர்களுக்கே தருவது அந்நாட்டு அரசின் போர்த் தந்திரம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டாமா?" என்று கேள்வி எழுப்பி முடித்துக் கொண்டார் அக்னி சுப்ரமணியம்.

No comments:

Post a Comment