Thursday, November 4, 2010

சுய உதவித் தொழிலகங்கள்

சுய உதவித் தொழிலகங்கள்
Tamil Economics Article இளைஞர்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பு உரிமை மறுக்கப்படும்போது தீவிரவாதமும், தீயொழுக்கமும் தலையெடுக்கிறது என்பது உண்மை. ஆனால் கல்விக்கு விலை கொடுக்க வேண்டியுள்ளது. அப்படி விலை போட்டு (வாங்கிய) பெற்ற கல்விக்கு மதிப்பளிக்கும்படியான வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை.
மருத்துவப் பட்டதாரிகள் கூட வேலையில்லாதவர்கள் பட்டியலில் ஆயிரக்கணக்கில் காணப்படுவது வியப்பை மட்டும் ஏற்படுத்தவில்லை. அவர்களைக் கடிந்து கொள்ளவும் வைக்கிறது. நாட்டில் தக்க மருத்துவ ஆலோசனையில்லாமல் வருந்தும் பிணியாளர்கள் ஏராளம். தாங்கள் குடியிருக்கும் இல்லத்திலேயே ஒரு மேஜையையும் இரு நாற்காலிகளையும் போட்டு வைத்துக் கொண்டு, குறைந்த கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு மருத்துவ ஆலோசனை வழங்கலாமே!
இனி 10 கோடி வேலைவாய்ப்பற்றவர்களுக்கும் அரசே வேலைவாய்ப்பை அளிக்க முன்வர வேண்டும் என்று போராடுவது நடைமுறை சாத்தியமற்றது. ஆனால், அரசு ஒரு கோடி வேலைவாய்ப்பை ஆண்டுதோறும் உருவாக்கும் என்று அறிவிப்பதிலும் அர்த்தமில்லை. வாக்குப்பெற அளிக்கும் வாக்குறுதியாகத்தான் இந்த அறிவிப்புகள் உள்ளன. நடைமுறைப்படுத்துவதில் எந்த அக்கறையும் கொள்வதில்லை.
இப்போது ஆண்டில் 100 நாள் வேலைவாய்ப்பு உறுதித்திட்டம் என்று ஒன்று வகுக்கப்பட்டுள்ளது. இதுகூட குடும்பத்தில் ஒருவருக்குத்தான் அளிக்கப்படும். நாட்டில் உள்ள 150 மாவட்டங்களில்தான் இது நடைமுறைக்கு வருகிறது. இந்தியாவில் தற்போதைய மாவட்டங்களின் மொத்த எண்ணிக்கை 500ஐத் தொட்டுக் கொண்டுள்ள நிலையில் 150 மாவட்டங்களில் உள்ளவர்களுக்கு மட்டுமே 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் என்பது எத்தனை பேருக்குப் பயன் அளிக்கும்?
நம் நாட்டில் வேலையில்லாச் சிக்கல் தீர வேண்டுமானால், விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில்களில் மக்களை முழுமையாக ஈடுபடுத்த வேண்டும்.
பணப்பயிர்கள், மூலிகைப்பண்ணை, இன்னும் தரிசு நில மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் பழமரங்கள் வளர்த்தல், காடு வளர்ப்புத் திட்டங்கள் ஆகியவற்றில் இளைஞர்களை ஈடுபடுத்த வேண்டும். கூட்டுப்பண்ணை முறையில் இளைஞர்களை அவர்கள் மேற்கொள்ளும் விவசாயப் பணிக்குரிய நிலங்களை உரிமையாளர்களாக்குவதும் அவர்கள் ஆர்வமுடன் செயல்பட ஊக்கமளிக்கும்.
அடுத்ததாக நம் நாட்டின் கனிம வளங்கள் இன்னும் உரிய முறையில் பயன்படுத்தப்படாமல் உள்ளன. தமிழகத்தில் மட்டும் 30 வகையான கனிம வளங்கள் கிடைக்கின்றன. இந்த 30 வகைக் கனிமங்களில், இரும்பு, பழுப்பு நிலக்கரி, நிலவாயு/எண்ணெய் ஆகியவை தவிர்த்து ஏனைய கனிமங்கள் தோண்டி எடுக்கப்பட்டோ சேகரிக்கப்பட்டோ பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படாமல் உள்ளன. இவற்றுள்ளும் கிராபைட் மற்றும் மோனேசைட் போன்ற அரிய வகைக் கனிமங்கள் பயன்படுத்தப்படாமலே உள்ளன.
இரும்புத்தாது கூட முழுமையாகவும் முழுவீச்சிலும் தோண்டி எடுக்கப்படவில்லை. அதன் முழுமையான இருப்பு சேலம் மாவட்டத்தில் மட்டும் சுமார் 30 கோடி டன் அளவு இருக்கக் கூடும் என்று ஓர் ஆய்வு கூறுகிறது.
தற்போதுள்ள வேலைவாய்ப்பகம், வேலைவேண்டுவோரின் பெயர்களைப் பதிவு செய்து புள்ளி விவரம் சேமிக்கும் அகங்களாகத்தான் செயல்படுகின்றன. அவை தொழில் வாய்ப்பு அகங்களாக மாற்றப்பட வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தொழில் மையங்கள், தொழிலாளர் நல அலுவலகம், வேளாண்மை அலுவலகங்களை ஒருங்கிணைத்து, நம் நாட்டின் விவசாய, கனிம வளங்களைப் பயன்படுத்த பெரிய அளவில் திட்டம் தீட்ட வேண்டும்.
பிராந்தியங்களுக்குத் தகுந்த வகையிலும், வட்டாரத்தில் உள்ள வாய்ப்புகளின் அடிப்படையிலும் சிறு - குறுந்தொழில்கள், விவசாயப் பண்ணைகள் அமைக்க ஊக்குவிக்க வேண்டும். இதில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் ஒத்துழைப்பைப் பெற வேண்டும்.
மகளிர் சுய உதவிக் குழுக்களின் பாணியில் தொழில்நுட்பப் பட்டதாரிகள், தொழிற்பயிற்சி பெற்றவர்களைக் கொண்டு சுய உதவித் தொழிலகங்கள் நிறுவி தொழில் தொடங்க உதவ வேண்டும்.
கணினி, வணிகம் போன்ற துறைகளில் வேலை வேண்டுவோருக்கும் கணினியகங்கள், வணிக வளாகங்கள் அமைக்க வழிகாட்ட வேண்டும்.
இதில் தனியார் துறையினரின் ஒத்துழைப்பையும் கோரிப் பெற வேண்டும். பரஸ்பர ஒத்துழைப்புடன் சுய முயற்சியை ஒன்றிணைத்துத் தொழில், வணிகம், உற்பத்தி ஆகியவற்றில் ஈடுபட வேலை தேடுவோர் உறுதி பூண வேண்டும். வேலையில்லாத் திண்டாட்டத்தை வெற்றி கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment