Wednesday, September 29, 2010

நில் கவனி செல்லாதே

'இமேஜின் கிரியேஷன்ஸ்' என்ற நிறுவனம் சார்பில் 'வெண்ணிலா கபடிக்குழு' படத்தைத் தயாரித்த கே.ஆனந்த் சக்கரவர்த்தி தற்போது கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கித் தயாரித்து, நடித்துள்ள படம் 'நில் கவனி செல்லாதே'. இவருடன் தன்ஷிகா, ஜெகன், ராம்சி, அழகம்பெருமாள், புதுமுகம் லட்சுமி மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். 'வெண்ணிலா கபடிக்குழு', 'கொல கொலயா முந்திரிக்கா', 'துரோகி' ஆகிய படங்களுக்கு இசையமைத்த வி.செல்வகணேஷ், இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். நா.முத்துக்குமார், ஜே.பிரான்சிஸ் கிருபா ஆகியோர் பாடல்கள் எழுதியிருக்கின்றனர். ஜே.லஷ்மன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். எடிட்டிங் மற்றும் இணை தயாரிப்பு: மதன் குணதேவா. கலை: கே.டி.கார்த்திகேயன். படம் குறித்து ஆனந்த் சக்கரவர்த்தி கூறியது: "இந்தப் படம் பயணம் பற்றிய த்ரில்லர் கதை. 'நில் கவனி செல்லாதே' என்று படத்திற்கு பெயர் வைத்திருக்கிறோம். 'செல்லாதே' என்பதில் ஒரு த்ரில் இருக்கு. வழிப்பறி, கொலை, கொள்ளை சம்பந்தப்பட்ட கதைதான் படம். இந்தப் படத்தோட ஹீரோ யார் என்றால் அது தன்ஷிகாவின் பாத்திரம் தான். அவங்கதான் ரசிகர்கள் பார்வையில் ஒவ்வொரு ஆபத்திலிருந்தும் எல்லோரையும் மீட்டுக் கொண்டு போவார். ஆந்திராவில் இரண்டு வாரம் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம். மீதி சென்னையில் நடந்தது. படத்தின் பெரும்பாலான வேலைகளும் முடிந்துவிட்டது" என்றவரிடம், "தயாரிப்பாளராக இருந்த உங்களுக்கு படம் இயக்கி, தயாரித்து, நடிக்கும் ஆர்வம் எப்படி வந்தது?" என்று கேட்டபோது, "அமெரிக்காவில் இருந்த நான் இந்தியாவிற்கு வந்து ஏதாவது பிஸினஸ் செய்யலாம் என்று நினைத்தேன். அப்போதுதான் படம் எடுக்கலாம் என்ற எண்ணம் வந்தது. ஆனால் முதலில் அனுபவசாலிகளை வைத்து ஒரு படத்தைத் தயாரிக்கலாம். பிறகு இயக்கலாம் என்று முடிவு செய்தேன். அதன்படி முதலாவதாக எடுத்த படம் மூலம் எனக்கு நல்ல அனுபவம் கிடைத்தது. அந்த அனுபவங்களை வைத்து இந்தப் படத்தை இயக்கி, தயாரித்து, நடித்திருக்கிறேன். ஆனால், நடித்தது தற்செயலாக நடந்ததுதான். இப்படத்தில் நான் நடித்திருக்கும் பாத்திரத்தில் நடிக்க முதலில் வேறு ஒரு நடிகரைத் தேடி வந்தோம். ஆனால் நான் நினைத்த மாதிரி யாரும் செட் ஆகவில்லை. அப்போது படத்தின் எடிட்டர், 'நீங்களே நடிக்கலாமே சார்?' என்றார். அது எனக்கும் சரின்னு பட்டது. மேலும் என் அம்மாவும் நான் நடிக்க ஆசைப்பட்டார். அதனால்தான் நடித்தேன்" என்ற ஆனந்த் சக்கரவர்த்திக்கு இப்படத்தில் இரண்டு டூயட் பாடல்களும் இருக்கிறது

No comments:

Post a Comment