Wednesday, September 29, 2010

நரன்

கடந்த 2008-ம் ஆண்டில், முன்னா-மோனிகா நடித்து, பரபரப்பாக பேசப்பட்டு வெற்றி பெற்ற திகில் படம், 'சிலந்தி'. தமிழ்த் திரையுலகில் டிஜிட்டல் முறையில் எடுத்து கமர்ஷியலாக வெற்றிப் பெற்ற படம், சின்ன பட்ஜெட் படங்களுக்கு பெரும் உற்சாகத்தைத் தந்த படம் என இப்படம் பல வகையில் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது. அந்தப் படத்தை எழுதி, இயக்கிய ஆதி அடுத்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படம் 'நரன்'. வித்தியாசமான கதையுடன், விறுவிறுப்பான திரைக்கதை அமைப்பில் உருவாகி வரும் இப்படத்தில் அக்னீஸ்வரன் என்ற நடன இயக்குநர் கதாநாயகனாக நடிக்கிறார். இவர், எகிப்து உள்ளிட்ட பல நாடுகளின் கலாச்சார நடனங்களையும், இந்திய நாட்டியக் கலைகளையும் ஒருங்கிணைத்துப் புதுமையான நடன நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இந்தப் படத்தில் நடிகை பூர்ணா இரண்டு விதமான கெட்-அப்களில் வருகிறார். இன்னொரு நாயகியாக மோனிகா தோன்றுகிறார். கஞ்சா கருப்பு, சிங்கமுத்து, 'யோகி' தேவராஜ் மற்றும் பலர் நடிக்கும் இந்தப் படத்திற்கு தினா இசையமைக்கிறார். பாடல்களை நா.முத்துக்குமார், யுகபாரதி, சினேகன், ஏக்நாத், நெல்லைபாரதி ஆகியோர் எழுதுகின்றனர். இந்தியாவின் முன்னணி ஒளிப்பதிவாளர்களான ரவி கே. சந்திரன், கே.வி.ஆனந்த, அரவிந்த் கிருஷ்ணா ஆகியோருடன் பணியாற்றியவரும், திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவில் தங்கப்பதக்கம் பெற்றவருமான ஷமன் மித்ரு, இப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார். 'சத்தம் போடாதே' படத்திற்காக சிறந்த படத்தொகுப்பாளருக்கான மாநில அரசின் விருது பெற்ற சதீஷ் குரோசோவா இப்படத்தின் எடிட்டிங் பொறுப்பை ஏற்றுள்ளார். சுரேஷ் கல்லேரி கலைப்பணியை மேற்கொள்கிறார். காஸ்ட்யூம் டிஸைனராக கே.செல்வம் பணிபுரிகிறார். ராபர்ட் நடனம் அமைக்கிறார். அகில், சனுஷா நடிக்க, தமிழ்வாணன் இயக்கத்தில் 'நந்தி' என்ற படத்தைத் தயாரித்து, முடித்து விரைவில் வெளியிட இருக்கும் டி.தினேஷ் கார்த்திக், தனது 'விஷன் எக்ஸ் மீடியா' நிறுவனம் சார்பில் 'நரன்' படத்தைத் தயாரிக்கிறார். இந்நிறுவனம் தமிழ், ஆங்கிலம் உட்பட பல மொழிகளில் எடுக்கப்பட்ட சுமார் 60 படங்களை தமிழ்நாடு முழுவதும் விநியோகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 'நரன்' குறித்து இயக்குநர் ஆதி கூறும்போது, "த்ரில்லர் மட்டுமல்லாமல் அதிரடி ஆக்ஷனும், காதல் காட்சிகளும் படத்தில் இருக்கும். இப்படத்தின் திரைக்கதை பரபரப்பாக பேசப்படும். 'நரன்' என்றால் 'மனிதன்' என்று அர்த்தம். ஆனால், சக மனிதனை யாரும் நரன் என்று அழைப்பதில்லை. சாமானியர்களிடம் ஆதிக்கம் செலுத்தும் சக்திகளின் பார்வையில் மட்டுமே மனிதன் நரன் எனப்படுகிறான். அசாதாரணமான ஒரு சூழ்நிலையில் வசமாக மாட்டிக்கொள்ளும் ஒரு சாமானியன், அவனுக்கு நேரும் சவால்களை எதிர்கொள்ளும்போது ஏற்படும் எதிர்பாராத சம்பவங்களை வித்தியாசமான பின்னணியோடு இப்படத்தில் சொல்லியிருக்கிறேன். இதற்காக இரண்டு வருடங்கள் திரைக்கதையை செதுக்கி செதுக்கி உருவாக்கியுள்ளேன்" என்றார்.

No comments:

Post a Comment