Tuesday, October 26, 2010

இந்தியா - அமெரிக்கா அணு ஒப்பந்தம்

இந்தியா - அமெரிக்கா அணு ஒப்பந்தம் ( Indo-US nuke deal - Tamil Katturaikal - General Articles 1917-அக்டோபரில் ருசியப் புரட்சி ஒரு நடை முடிந்து, இன்னொரு நடை போட எத்தனிப்பு கொண்டிருந்த நேரம் புரட்சியின் பிறப்பிடமான பெத்ரோகிரேத் மீது, உள்நாட்டு துரோக சக்திகளும், வெளிநாடுகளின் முதலாளித்துவ சக்திகளும் கரம் கோர்த்துப் பாய்ந்து கொண்டிருந்தனர். 1918 -சனவரியின் பனிக்கால பெத்ரோகிரேத் பயங்கர சம்பவங்களை எதிர் நோக்கி நின்றது.
1918-சனவரி
"வல்ஹோவ் நீர் மின் நிலையத்தை உடனே கட்டி முடிக்க வேண்டுமென விளாதிமீர் இலீச் (லெனின்) விரும்புகிறார். சில தினங்களுக்குள் மதிப்பீடு வரைந்து தரும்படி கோருகிறார்."
சாதாரண காலத்திலேயே, ஜார்ருசியா வேண்டாம் என்று கைவிட்ட, பிரம்மாண்டமான நீர்மின் நிலையத்தை, உள்ளேயும் வெளியிலும் ஆபத்து சூழ்ந்த காலத்தில் தொடங்குவது எவ்வளவு கடினம் என்பதை பொறியாளர் கிராப்தியோ அறிந்திருந்தார். மின்னாற்றலின் முக்கியத்துவத்தை லெனின் உணர்ந்தது போல மற்றவர்களும் உணர வேண்டுமெனும் பேரவாவுடன், வெகுகாலத்துக்கு முன்பே மறக்கப்பட்டு விட்ட வல்ஹோவ் கிராப்தியோ, மன எழுச்சியோடு கையிலெடுத்தார்.
"பல இடங்களிலும் மின் நிலையங்களைத் தோற்றுவிப்பதன் மூலம் எங்களுடைய தொழில்துறை முழுவதையும் மின்மயப்படுத்த நாங்கள் திட்டமிட்டுள்ளோம். இதற்குப் பத்து ஆண்டுகள் தேவைப்படுமென எங்களுடைய பொறியாளர்கள் கூறுகின்றனர். மின்சார மயப்படுத்தலை முடிப்பதானது, சமுதாயத்தின் பொருளாதார வாழ்க்கையை கம்யூனிச முறைக்கு மாற்றியமைக்கும் பாதையில் முதல் முக்கிய கட்டமாக இருக்கும்."
-அமெரிக்க செய்தி நிறுவனத்தின் பெர்லின் நிருபர்,
"உங்கள் கருத்துப்படி ருசியாவில் கம்யூனிச கட்டுமானம் எப்போது முடிவடையும்?" என்று கேட்ட கேள்விக்கு லெனின் இவ்வாறு பதில் தந்தார். புதிய சமுதாய கட்டுமானத்தில் வர்க்கப் போராட்ட முனைகளுக்கு அடுத்த நிலையில் மின்னாற்றலின் அவசியத்தை அவர் முன்னுணர்த்தினார். சோவியத்துகளின் எட்டாவது காங்கிரசில் மின் மயமாக்கல் அறிக்கையைச் சேர்த்தவர் அவர்தான்.
"தான் சொல்ல வேண்டியது என்ன என்பதை விவரித்த போது, கிளாடின் ஒளிவு மறைவு எதையும் வைத்துக் கொள்ளாது சொன்னார்:
"அமெரிக்க வணிக நலன்களை முன்னிறுத்தும் விரிந்த வலைப் பின்னலின் பகுதியாக மாறுவதற்கு - உலகத் தலைவர்களைத் தூண்டுவது; முதலில் இந்தத் தலைவர்கள் மீள முடியாத கடன் வலையில் சிக்கிக் கொள்வார்கள். அது அவர்களது விசுவாசத்தை உறுதிப்படுத்தும். பின்பு நமது அரசியல், பொருளாதார இராணுவத் தேவைகளுக்காக அவர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு மாற்றாக, தங்கள் மக்களுக்குத் தொழில் பூங்காக்கள், தொழில் வளாகங்கள், மின்சக்தி நிலையங்கள், விமான நிலையங்கள் அமைத்துத் தருவதன் மூலம் தங்கள் நிலையைப் பலப்படுத்திக் கொள்வார்கள். அமெரிக்க, பொறியியல், கட்டுமான நிறுவனங்களின் உரிமையாளர்கள் கொள்ளை லாபம் ஈட்டுவார்கள்."
(ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் - ஜான் பெர்கின்ஸ் பக் -14,15.)
மேற்காட்டிய இரண்டும் தனித்தனி நிகழ்வுகள் வரலாற்றில் பதிவானவை.
ஒன்று - மனித வளத்தைப் பயன்படுத்தி இயற்கை வளத்தை சமுதாய வளர்ச்சிக்கு ஆக்குவது.
மற்றது - இயற்கை வளம் அழித்து, அதற்காக மனித உழைப்பாற்றலைச் சுரண்டி, முக்கியத் தலைவர்களைக் கைப்பிடியில் அடக்கி லாப வேட்டையின் ஆடுகளங்களாய் நாடுகளை மாற்றுவது.
தொழில் நுட்பங்களைக் கண்டு பிடிப்பதை ஒரு ஆய்வாக, தனித்துறையாக வளர்த்து, அந்த வலைப் பின்னலை உலகத்தின் மீது வீசி - கொள்ளையடித்தல், கொலை செய்தல், சுற்றுச்சூழலை நாசப்படுத்தல் என்ற பாதகச் செயல்கள் செய்ய கிளாடின், ஜான் பெர்கின்ஸ் போன்றவர்கள் பல ஆயிரம் டாலர் சம்பளம் பெற்றார்கள்.
கிளாடின், ஜான் பெர்கின்ஸ் போன்ற பொருளாதார அடியாட்கள் உலக முழுதும் ஆயிரக் கணக்கில் விதைக்கப்பட்டார்கள். இந்த விஷக்கிருமிகள் நாடு நாடாய்ப் பரவி, இதயத்திலேயே துளையிட்டன.
"எண்ணெய் நிறுவனங்கள் வேண்டுமென்றே நச்சுக் கழிவுகளை (Toxins) மழைக்காடுகளினூடே, ஓடும் ஆறுகளில் கொட்டச் செய்தார்கள் அவை திட்டமிட்டே விலங்குகளை, தாவரங்களை அழிப்பதோடு, பழம் பண்பாடுகளை, அந்த மக்களைக் கூட்டம், கூட்டமாகக் கொன்று குவித்தன; மருந்து நிறுவனங்கள் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான ஆப்பிரிக்கர்களுக்கு உயிர்காக்கும் மருந்துகளை அளிக்க மறுத்தன. மனிதர்களைக் கசக்கிப் பிழியும், ஆசியத் தொழிற்சாலைகளில் மிகவும் மரியாதைக்குரிய நிறுவனங்களின் நிர்வாகிகள் ஏறத்தாழ அடிமைகளுக்குத் தரப்பட்டது போன்ற கூலியைத் தருமாறு செய்தார்கள்."
அவர்களுடைய அமெரிக்காவிலேயே பன்னிரண்டு மில்லியன் மக்கள் (1 கோடி 20 லட்சம்பேர்) அடுத்த வேளை உணவைக் குறித்து கவலை கொள்ளும் நிலையில் இருக்கிறார்கள். பத்தாண்டுகளுக்கு முன்பு எடுத்த கணக்கெடுப்பு இது.
ஈராக்கில் போர் நடத்த அமெரிக்கா 87 பில்லியன் டாலர்கள் செலவிடுகிறது. ஆனால் உலக மக்கள் அனைவருக்கும் தூய்மையான குடிநீரும், போதுமான உணவும், மற்ற அடிப்படை வசதிகளும், கல்வியும் அளிக்க இதில் பாதித்தொகையே போதுமானது. "நாற்பதாயிரம் கோடி டாலர் செலவிட்டால் போதும். இந்த அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டு விடலாம்" என ஐ.நா மன்றம் (1998)-ல் சுட்டிக் காட்டியுள்ளது.
வெளிநாட்டு ஒப்பந்தம் மூலம், ஒரு தொழிற்சாலையோ, தொழிற்பூங்காவோ, மின் நிலையமோ, கணினிப் பூங்காவோ, நிறுவ கையெழுத்தாகையில், கிளாடினும், ஜான் பெர்கின்ஸீம் நம் முன்னே வருகிறார்கள். அவர்களது வாசகத்தின் வழி நடந்துதான், அமெரிக்க - இந்திய அணு ஒப்பந்தத்தின் மூடு கதவுகளைத் திறக்க முடியும். இந்தப் பின் புலத்தில்தான் பிரெஞ்சு அணு சக்தி ஒப்பந்தம், இனி செய்யப்படப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ள (20.10.2008) ருசிய அணுசக்தி ஒப்பந்தம் ஆகியவைகளையும் போய்த் தொட வேண்டும்.
இந்திய அமெரிக்க அணுமின் ஒப்பந்தத்தால் ஏற்படப் போகும் நலன்கள் எவையென ஆதரவுக் குரல்கள் கூறுவதை பட்டியலிட்டுக் கொள்வோம்.
1. கடந்த 10 ஆண்டுகளில் நமது மின் தேவை நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. புதிய தொழிற்சாலைகளின் உருவாக்கம், வளர்ச்சி காரணமாக மின் தட்டுப்பாடு நிலவுகிறது.
2. 2003 - 04 ஆம் ஆண்டுகளில் ஒரு நாள் மின் சக்தி நுகர்வு 99.4 கோடி யூனிட்டாக இருக்கும். இது 2012-ல், 207.1 கோடி யூனிட்டாக உயரும். ஒப்பந்தம் கையெழுத்தாகாமல் இந்தத் தேவையை பூர்த்தி செய்ய முடியாது.
3. ஒரு டன் நிலக்கரி அல்லது எண்ணெய் தரக்கூடிய மின் ஆற்றலை, ஒரு கிராம் யுரேனியம் தந்து விடுகிறது.
4. 2100-ஆம் ஆண்டுக்குள் உலகிலுள்ள அனைத்து எண்ணெய் வளங்களும் மின் உற்பத்தி ஆதாரங்களும் (நிலக்கரி போன்றவை) தீர்ந்து போய் விடுகிற வேளையில், அனுமின் உற்பத்தி மட்டுமே கை கொடுக்கும்.
5. சூரிய செல்களினாலும், இயற்கையான காற்றாலைகளினாலும் உற்பத்தி செய்யப்படும் மின்னாற்றல் நம் நாட்டின் மொத்தத் தேவையையும் நிறைவு செய்யாது.
6. உள் நாட்டில் அதிவேக அணு உலைத் தொழில்நுட்பம் நடைமுறைக்கு வரும்வரை, வெளிநாடுகளிலிருந்து யுரேனியம் போன்ற அணுசக்தி எரிபொருட்களை இறக்குமதி செய்வது தவிர்க்க முடியாதது.
7. அணுகுண்டுத் தொழில் நுட்பத்தை வேறு நாடுகளுக்குத் தரவிடாமல், இந்தியா தனது சனநாயகத்தைப் பேணிக் கொள்ளும் தன்மையை "ஹைடு" சட்டம் பாதுகாக்கிறது.
8. ஏற்கெனவே நடைமுறையில் உள்ள அணு ஆயுதப் பரவல் தடை (NPT) காரணமாக, மறுக்கப்பட்ட "நேனோ" தொழில்நுட்பம், மருத்துவம், தகவல் தொழில்நுட்பம் ஆகியவைகளுக்கு மட்டுமல்லாமல் இந்த ஒப்பந்தம் எந்த நாட்டோடும் அணுசக்தி தொழில்நுட்ப உடன்பாட்டைச் செய்து கொள்ள கதவு திறக்கிறது.
9. சிவில் மற்றும் ராணுவ அணுசக்தி நிலையங்களைத் தனித்தனியே வைத்துக் கொள்ளும் சுதந்திரத்தை நமக்களிக்கிறது.
10. ஆண்டொன்றுக்கு உலகெங்கும் 15000 பேர்களைப் பலி கொள்ளும் நிலக்கரிச் சுரங்க விபத்துக்களோடு ஒப்பிட்டால், அணுசக்தி தொழிற்சாலை விபத்துக்கள் மிகவும் குறைவு.
11. இந்த ஒப்பந்தம் நமக்குச் சாதகமான வகையில் நம் நாட்டை அமெரிக்காவுக்கு அருகில் இட்டுச் செல்கிறது.
12. இப்போது தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மின்வெட்டு எப்போதும் இல்லாமல் செய்ய அணுசக்தி ஒப்பந்தம் தேவை.
13. இது 300 மில்லியன் இந்திய மக்களையும் வறுமையின் பிடியிலிருந்து விடுவிக்கும். சாதிப் பாகுபாடு, பாலினப் பாகுபாடு ஆகியவற்றிலிருந்து விடுதலை மட்டுமல்லாமல், நகர்மயமாதல், கிராமங்களை அலட்சியப்படுத்துதல், கல்லாமை ஆகியவற்றிலிருந்து விடுபடுவதற்கான ஒரு கருவியாக இருக்கும்.
இதற்கு எதிரான வாதங்கள் உள்ளன. வாதங்கள் என்பதினும் எதார்த்த உண்மைகள் எனலாம்.
நம்முடைய வளங்கள், கனிமங்கள் உட்பட அனைத்து வளங்களும் நமக்கு அருளப்பட்டிருப்பவை. நமது வளங்களை, நம்முடைய மக்களுக்காக, அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யும் வகையில், நமது தொழில்நுட்ப அடிப்படையில் பயன்படுத்துவது முதல் முக்கியம். இந்த நோக்கில் ஆய்வுகளை, அறிவியலாளர்களை, ஆய்வுக்கூடங்களை திருப்ப முடியும். ஆனால் பா.ஜ.க. ஆட்சிக்காலத்தில், பிரதமராக வாஜ்பாய் இருந்த போது, நடத்தப்பட்ட பொக்ரான் அணுகுண்டு சோதனைக்கும் மக்களின் நலனுக்கும் என்ன தொடர்பு? அணுமின் சோதனைக்கூடத் தலைவர் பாபா முதல் அப்துல்கலாம் வரை இதற்குப் பதிலளிக்கவில்லை. மக்களுக்குத் தொடர்பில்லாத அல்லது எதிரான திட்டங்கள், செயல்கள் மூலம் கேவலங்களைச் சுமப்பது அரசியலாளர்களுக்கு சுகம் தருவது என்றால், அதே கேவலங்களை தாமும் தமது தலையில் சுமக்க, நமது அறிவியலாளர்களுக்கு அறிவு எங்கே போயிற்று? ஆனால் உலக முழுதும் பன்னாட்டு நிறுவனங்களில் நடைபெறுகிற ஆய்வுகள் அழிவுத் திறனை மேம்படுத்துதல் பற்றியே மையம் கொண்டுள்ளன. இது சமகால ஆய்வுக் கோட்பாடாகவே நிலவி வருகிறது. இந்தக் கோட்பாடுகளுக்கு உடன்பாடு கொண்டுவராதலால், அப்துல்கலாமும் இந்திய அணுமின்சக்தி ஒப்பந்தத்தை ஆதரித்துள்ளார்.
அபரிமிதமாய் குவிந்துள்ள நமது வளங்களை மனிதவளத்தைப் பயன்படுத்தி நமது பயன்பாட்டுக்கானதாய் ஆக்குவது சய சார்பு. இதில் இன்னொரு முக்கியமான கூறு - நமக்கான பயன்பாட்டில் நம் கைவசமுள்ள தொழில்நுட்பம் போதுமானதாயில்லாத வேளையில், முன்னேறிய தொழில்நுட்பத்தை வேறு எங்கிருந்தும், எந்நாட்டிலிருந்தும் பெற்றுக் கொள்வது தவறில்லை. வல்ஹோவ் நீர் மின் நிலைய கட்டுமானத்தில் ஸ்வீடனிடமிருந்து சாதனங்கள், பெற்றுக் கொள்ளலை லெனின் செய்தார். பெற்றுக் கொள்ளல் என்பது கற்றுக் கொள்ளல், புதிய கற்றுக் கொள்ளலை கோடானு கோடி மக்களுக்குப் பயன்படுத்தல் என்ற பார்வையை அவர் தவற விடவில்லை.
மக்கள் பயன்பாட்டுக்கான புதிய புதிய தொழில்நுட்பங்களை நாம் கைவசப்படுத்த வேண்டும். எல்லாத் தொழில்நுட்பமும் வெளிநாட்டவர் பால் உள என்று வாங்கிக் குவித்துக் கொண்டிருந்தால் அது முன்னேற்றம் போலத் தோன்றும் முன்னேற்றமாகாது. குடைராட்டினத்தில் சுற்றிக்கொண்டிருப்பவன் முன்னாலே இருப்பவனைப் பிடிப்பது போல்தான் தோன்றும் ஆனால் பிடிக்க முடியாது.
மக்களின் பயன்பாட்டுக்கான தொழில்நுட்ப அவசியம் என்ற புள்ளியிலிருந்து தவறுகிற போது, ஜான் பெர்கின்ஸ் சொன்ன எச்சரிக்கை உண்மையாகிறது. நமது அரசியல்வாதிகள், தொழில்நுட்பத்துக்குக் கடனாளியாவது மட்டுமின்றி அந்நிய அரசியல், பொருளாதார ஆதிக்கத்துக்கு கடனாளியாகிறார்கள். அந்நிய ஆதிக்கத்திலிருந்து அவர்கள் மீண்டு எழவே முடியாமல் போகிறது. தொழில்நுட்பத்தை கையளிப்பது என்ற பெயரில், வணிக நலன்களை முன்னிறுத்தும் விரிந்த வலைப் பின்னலை இந்திய அடிமைகள் மேல் அமெரிக்கா எனும் உலகப் பேரரசு வீசியுள்ளது.
ஆனால் உண்மைகள் வேறொரு திசையில் நின்று நம்மைத் துன்புறுத்துகின்றன.
இந்திய - அமெரிக்க அணு மின்சக்தி ஒப்பந்தத்தால் இந்தியாவின் எரிசக்தித் தேவையில் மூன்று விழுக்காடு கூட நிறைவு செய்ய முடியாது? மூன்று முதல் ஆறு விழுக்காடு தேவையைச் சரி செய்யவே தத்தளிப்பாய் இருக்கும் என்பது முதல் உண்மை.
இன்னும் 20 ஆண்டுகள் கழித்தே இந்த அணு மின் உற்பத்தி பயன்பாட்டுக்கு வரும். கட்டுமானப் பணிகள் நிறைவேறி 2032-ஆம் ஆண்டில் முதல் உற்பத்தி தொடங்குகிறபோது இந்தியாவின் தேவை பல மடங்காக உயர்ந்து நிற்கும். இந்திய, அமெரிக்க அணுமின் ஒப்பந்தம் என்ற இந்தச் சிறு "லில்லிபுட்" மனிதனால், இந்தியாவின் எதிர்கால எரிசக்தித் தேவை என்ற பிரமாண்ட அசுரனை வீழ்த்த வழி இல்லை.
நீர் மின் நிலையம் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் விலை யூனிட்டுக்கு ரூபாய்-2. அனல் மின் நிலையம் வழி உற்பத்தியாகும் மின்சாரம் ரூபாய்-2.50. அணு மின்சாரம் யூனிட்டுக்கு 6 முதல் 7.50 வரை விற்கப்படும். இவ்வளவு அதிகமாய் விலை கொடுத்து, உற்பத்தி செய்யப்படும் பிற பொருட்களின் விலையும் பல மடங்கு உயரும்.
"கதிர் வீச்சு" எனும் கொடிய ஆபத்து, இதுவரை உலகம் காணாதது. யுரேனியம் எரிபொருள் மின்னுற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகிறது. பல ஆயிரம் டன் யுரேனியம் உலையில் வைக்கப்பட்டு, மின்னுற்பத்திக்குப் பின் புளூட்டானியமாக மாறுகிறது. இதுதான் அணுமின் உலையின் கழிவு. யுரேனியம் அணுமின் உலையில் எரிகிறபோது உண்டாகிற கதிர் வீச்சும், புளூட்டோனியக் கழிவும் ஆலையின் சுற்றுப்புறத்தை மட்டுமல்ல, நகரும், கண்டமும் தாண்டிய ஆபத்தைப் படர விடும். இந்த புளூட்டோனியக் கழிவுக்கு மரணமில்லை. ஆழ்கடலில் கொண்டு போய்க் கொட்டலாம். ஆனால் 45 லட்சம் வருடங்கள் வரை வீரியம் குன்றாது. வெப்பத்தைக் கொட்டும். பாறைகளுக்கடியில் மலையைக் குடைந்து புதைத்து விடலாம். ஒரு பூமி அதிர்ச்சி அல்லது நில நடுக்கம் ஏற்பட்டால் பூமியின் உயிர்களை, கடல்வாழ் உயிரினங்களை அழித்து பின்னும் கதிர்வீச்சு இயங்கிக் கொண்டே அலையும். எங்கெங்கே புல்பூண்டும், புழு, பூச்சிகளும், உயிர்களும் எதிர்ப்படுமோ, அவைகளையும் வாரி விழுங்கும். மனிதனும் விழுங்கப்படுவான்.
ருசியாவில் நிகழ்ந்த "செர்நோபில்" ஆலை வெடிப்பு இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. அமெரிக்க நாட்டில் "லாங் ஐலெண்ட்" அணு உலைக்கசிவு இன்னொரு சான்று. அமெரிக்காவில் நடந்த இந்த உலைக்கசிவுக்குப் பின் (1985) அங்கு ஒரு அணுமின் உலையைக் கூட அமெரிக்க மக்கள் புதிதாகக் கட்ட அனுமதிக்கவில்லை. "வருமுன் காப்போம்" என்ற எச்சரிக்கைக்கு அமெரிக்க மக்கள் சாட்சியாக இருக்கிறார்கள். ஆனால் இந்த ஒப்பந்தம் இந்தியாவில் எத்தனை எண்ணிக்கையிலும் அனுமின் உலைகளை நிறுவிக்கொள்ள அனுமதித்திருக்கிறது.
உண்மையில் "லாங் ஐலண்ட்" அணு உலையின் மையப் பகுதி முழுதும் உருகி, பெரும்பாலான பகுதி உலையின் அடிப்பகுதியிலேயே விழுந்து விட்டது. அப்போதும், ஆபத்தான அணுக் கதிர்கள் உலையின் சுவர்களைத் தாண்டி வெளியே வரவில்லையென்பதும், அந்தளவு பாதுகாப்பான சுவர்களைக் கொண்டிருந்தன எனக் கூறுவதும் ஆனால் ஒரு அணு உலை எப்படி நிர்மாணம் செய்யப்படக்கூடாது என்பதற்கு செர்னோபில் ஒரு சான்று என்று காட்டுவதும் என்ன வகை வாதமோ தெரியவில்லை. உலகத்துக்கு அணு உலையே கூடாது என்பதுதான் தருக்க ரீதியாக சரியாக இருக்குமே தவிர, பாதுகாப்பாய் வாழும் உயிர்க்கொல்லி என்பது சரியாகுமா?
இந்த ஒப்பந்தம் நம்மை அமெரிக்காவுக்கு அருகில் கொண்டு போய்ச் சேர்க்கும் என்பது ஒரு பெரிய வேடிக்கை. விசுவாசமுள்ள அடிமை எப்போதும் எஜமானன் பக்கத்திலேயே அமர்ந்திருப்பான் என்பது இதன் பொருள். அணு உலைகள் அமெரிக்காவின் நிரந்தரக் கண்காணிப்புக்கு உட்பட்டவை என்கிற விதி, அமெரிக்காவின் கையடக்கமான கூட்டாளியாக இந்தியாவை மாற்றுகிறது. (கி. வெங்கட்ராமன், தமிழர் கண்ணோட்டம். அக்டோபர்.) அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை, ராணுவ ஒத்துழைப்பு என்ற வகைகளில் கட்டுப்படுத்தி ஆட்டிப் படைக்கும் விதிகள் ஒப்பந்தத்தில் உள்ளன. அமெரிக்காவின் தோளுக்குச் சமமாக நிற்கும் வீரமகனாக அல்லாமல் அமெரிக்காவின் காலடியில் கட்டிப் போடப்பட்ட அடிமையாக இந்தியாவை ஆக்கியுள்ளது.
"ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கிறது; பேரழிவு ஆயுதங்களை வைத்திருக்கிறது என்று அமெரிக்க அரசு "கவலை" கொள்ளுமானால், அந்தக் கவலையில் இந்திய அரசும் பங்கு கொள்ள வேண்டும். வடகொரியா குறித்தோ, வெனிசுவேலா பற்றியோ இவ்வாறு அமெரிக்காவிற்கு கவலை ஏற்பட்டால் இந்தியாவும் "கவலைப்" பட வேண்டும். இந்நாடுகள் மீது அமெரிக்கா படையெடுத்தால் இந்தியாவும் அதற்கு அடியாள் வேலை பார்க்க வேண்டும். அவ்வாறு செய்யாது போனால் அமெரிக்காவின் நலனுக்கு எதிரானது என்று கூறி ஒப்பந்தத்தை ரத்து செய்யும் உரிமை அமெரிக்காவிற்கு உண்டு. ஒப்பந்தத்தின் உறுப்பு 13 கூறுவது இதுதான்" என்று கி. வெங்கட்ராமன் கூறுகிறார்.
இருபது ஆண்டுகள் கழித்து உற்பத்தி தொடங்கினாலும் இந்த அணுமின் ஆலையின் ஆயுள் 40 முதல் 50 வருடங்கள்தாம். இந்த ஆலை மட்டுமல்ல, லட்சக்கணக்கான டன் கல், சிமிண்ட், கம்பிகளால் கட்டுமானமான எந்த அணு உலையின் காலமும் அவ்வளவுதான். செத்துப்போன அந்த உலைக்குள் கதிர்வீச்சு மட்டும் சாகாமல் இருக்கும். பயன்படுத்திய யூரேனியத்தின் வீரியம் பாதியாகக் குறைவதற்கு 45 லட்சம் வருடங்கள் எடுக்கும். ஒட்டு மொத்தமாய் அதன் மேல் ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரத்தினும் பெரிதாய் ஒரு கோபுரம் கட்டி அதற்கொரு சமாதி எழுப்ப எவ்வளவு செலவு? எழுப்பினாலும் 500 ஆண்டுகளுக்கு மேல் அந்தச் சமாதி நிற்காது.
"எதிர்காலம் பற்றிய அனுமானங்களை மட்டுமே கொண்டு நிகழ்கால ஒப்பந்தத்தை அளவிடக் கூடாது" என்று அமெரிக்காவின் விசுவாச அறிவாளர்கள் கூறலாம். இப்படித்தான் அமெரிக்கா வாழ் தமிழரான கோ. ராஜாராம் அமெரிக்கச் சிந்தனை முறையின் ஊனமில்லாத கூட்டாளியாக ஆகியுள்ளார்.
இந்த ஒப்பந்தம் மூலம் அணுகுண்டு சோதனை நடத்தும் வாய்ப்பு அடைக்கப்பட்டு விட்டது என்ற வருத்தம் இந்துத்துவா வாதிகளுக்கு. வல்லரசுக் கனவுகள் காங்கிரசுக்காரர்களுக்கு மட்டுமே உரித்தானதா? "இந்தியாவின் அணுவியல் தனிமை (Nuclear isolation) தகர்க்கப்பட்டுவிட்டது. அணுவியல் நீரோட்டத்தில் இந்தியா இணைந்து விட்டது" என்று பிரதமர் மன்மோகன் சிங்குடன் இணைந்து மகிழ்ச்சியைக் கொண்டாட முடியாமல் போய்விட்டதே என்ற ஆதங்கம் பா.ஜ.க.வின் முகமெல்லாம் அப்பிக் கிடக்கிறது.
ஒரு பகுதியில், அல்லது ஒரு வட்டாரத்தில், அல்லது ஒரு தேசத்தில் வாழும் மக்கள் அந்தந்தச் சூழலுக்குப் பொருந்த வாழ உரிமை கொண்டவர்கள். அந்தந்தப் பகுதி இயற்கை வளத்தை தேவைகளுக்கேற்ப பயன் கொள்ளும் உரிமையும் அவர்களுக்கானது. மலைவாழ் பழங்குடி மகனுக்கு இயற்கையிலிருந்து பாதுகாத்துக்கொள்ள ஒரு வீடு அவசியம். சமவெளியில் வாழ்கிறவனுக்கும் அது அவசியம். நாலு தேக்குப் பலகைகள், பத்து விட்டங்கள், சில மூங்கில் கழிகள், சில கற்கள் போதும். ஆனால் அவனுடைய காட்டுவளம் அழித்து, வேறு எங்கோ, எவருக்கோ காடழித்து மரங்களும், பாறை உடைத்து கற்களும் கொண்டு செல்லப்படுகின்றன. (இப்போது வனத்தைக் கூறு போட்டு விற்கும், கொள்ளையரின் லாரிகளை மறித்து மலைச் சாலைகளில் மரங்களை, பாறைகளை குறுக்கே போடுகிறான். அவனுக்கும் வனக் கொள்ளையருக்கும் இடையில் ஒரு போர் நடக்கிறது.) மலையுடைத்து கல்குவாரிகளாக்கி கற்களை தங்கப் பாளங்களாய் தளம்பதிக்க மலையுடைத்து மார்பிள் கற்கள் எடுக்கப்படுகின்றன. (மலையோரங்களிலும் சுற்றுப்புறங்களிலும் வாழும் மக்கள் அனுமதியோம் என்று சாலை மறியல் செய்கிறார்கள்.) லாரி லாரியாய் மணல் கொள்ளையடிக்கப்பட்ட ஆறுகள், குடல் எடுத்த கோழிகள் போல் கிடக்கின்றன. (தங்கள் விவசாய நிலங்களில் நீர் ஆதாரம் அற்றுப் போவதாக லாரிகளைச் சிறைப்பிடிக்கிறார்கள் விவசாயிகள்) உலக மயமாக்கலின் ரூபமாக உருவாக்கப்பட்ட நீண்ட, அகல, பெரியசாலைகள், இன்று போராடும் மக்களின் அக்னிக் களங்களாக மாறி வருகின்றன. பிரச்சினைகள் அடிப்படையில் வெடிக்கும் தன்னெழுச்சிகளுக்கு, இடைவிடாது தலைமையேற்று நடத்தி எடுத்துப் போகும் "வடிவான" இயக்கங்கள் இல்லை என்று நாம் உணர்வது போலவே அவர்களும் உணருகிறார்கள்.
சிறப்புப் பொருளாதார மண்டலமோ, பெரும் தொழிற்சாலைகளோ, "மெகா" திட்டங்களோ, எந்தப் பிரமாண்டத்தையும் மக்கள் அனுமதிக்கத் தயாரில்லை. தொழிற்பெருக்கமும், பொருளாதார வளர்ச்சியும் அவர்களுடைய வாசலில் எதையும் கொண்டு வந்து சேர்க்கவில்லை. மிகச் சிறிய கூட்டத்தினருக்கு பலனளிப்பதாக மாறுவதை கண்ணெதிரே பார்க்கிறார்கள். வாழ்வு நாசமும், வறுமையுமே தங்களுக்கு என்பதையும் உணர்கிறார்கள்.
பிற எல்லாத் திட்டங்களைப் போலவே அமெரிக்க அணு ஒப்பந்தக் கூத்தும், வெளிநாட்டு மூலதன நிறுவனங்களுக்கும் உள்நாட்டுத் தரகு முதலாளிகளுக்கும் லாப வேட்டையைக் குவிக்கும் என்பதில் ஐயத்திற்கு இடமில்லை.
இவை எல்லாவற்றையும் மறைத்து, இது இந்தியாவின் நூற்று மூன்று கோடி மக்களையும் வறுமையின் பிடியிலிருந்து விடுவிக்கும், சாதிப்பாகுபாடு, பாலினப்பாகுபாடு, கல்லாமை போன்ற தீயவைகளையெல்லாம் அகற்றிவிடும் சர்வரோக நிவாரணி என்று கூச்ச நாச்சமில்லாமல் வாதிடுவதுதான், மேதமையின் உச்சமா?
"மக்கள் எவ்வழி, அரசு அவ்வழி" என்கிற காலம் மலையேறிவிட்டது. அமெரிக்கா எவ்வழி, அரசு அவ்வழி என்ற மன்மோகன்சிங், சோனியா, சிதம்பரத்தின் காலமாக மாறிவிட்டது. இந்த மாமன்னர்கள் போய் விடுவார்கள். அத்வானி, மோடி போன்ற புது மாமன்னர்கள் காத்திருக்கிறார்கள்- மக்கள் நலன் பற்றிக் கவலையே இல்லாமல்! (பா.ஜ.க. ஆட்சியில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ஜஸ்வந்சிங் அமெரிக்க அரசிடம் அணுசக்தி உடன்பாடு குறித்து 13 முறை பேச்சுவார்த்தை நடத்தினார்.)
பூமியை லாப வேட்டைக்களமாக மாற்றுதலையே குறியாகக் கொண்டு இயங்கும் அமெரிக்கா, சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசு வெற்றி பெற்ற போது ஒரு நிபந்தனை விதித்ததாய் சொல்கிறார்கள். "ஒன்று-சோனியா பிரதமராக வேண்டும். சோனியா பிரதமர் என்றால், மன்மோகன்சிங் நிதி அமைச்சர் ஆக்கப்பட வேண்டும். மன்மோகன் பிரதமர் என்றால், ப. சிதம்பரம் நிதி அமைச்சர்."
அந்த வாசகம், உண்மையாகியிருக்கிறது.

No comments:

Post a Comment