Saturday, October 30, 2010

சமுதாய மாற்றத்தில் பத்திரிகைகள் பங்கு

சமுதாய மாற்றத்தில் பத்திரிகைகள் பங்கு (

விடுதலைப் போரில் இந்தியாவின் பத்திரிகைகள் அரும் பங்கு பணியாற்றியதைப் போல, பாரதத்தை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான லட்சியத் திட்டம் வெற்றி பெறுமாறு செய்வதில் பெரும் பங்காற்ற வேண்டும் என்று பிரதமர் வாஜ்பேயி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
சென்னையில் பிரபல ஆங்கில நாளிதழான இந்து பத்திரிகையின் 125-வது ஆண்டு விழாவைத் தொடங்கி வைத்த பிரதமர் - வளமான பாரதத்தை வடிப்பதில் பத்திரிகை உலகுக்கு உள்ள கடமையை நினைவுபடுத்தியிருக்கிறார்.
சமுதாய மாற்றம் என்ற லட்சியம் மகத்தானது. இதற்கு பல்வேறு முனைகளில் அரும்பணிகளை ஆற்ற வேண்டியுள்ளது. இந்த லட்சிய உணர்வை மக்களுக்குப் பாய்ச்சுவதில் பத்திரிகைகளுக்குப் பெரும் பங்கு உண்டு என்று கூறியுள்ளார் பிரதமர்.
பத்திரிகை உலகின் ஒரு பகுதியில் தற்போது சில போக்குகள் காணப்படுகின்றன. அற்ப விஷயங்களைப் பெரிதுபடுத்துவது, செல்வந்தர்களின் நவநாகரிக வாழ்க்கை முறைகளைச் சித்திரித்துக் காட்டுவது, நுகர்வோர் கலாசாரத்துக்கு விளம்பரம் தருவது - போன்றவை முறையாகாது. பொதுமக்களின் பல்வேறு பிரச்சினைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு இத்தகைய அற்பமான, பொழுதுபோக்கு அம்சங்கள் பத்திரிகைகளில் அதிக இடம் பிடித்துக் கொள்ளுகின்றன. பாரதத்தை வளர்ந்த நாடாகப் பரிணமிக்கச் செய்யும் மாபெரும் பணி, அரசால் மட்டுமே முடியக்கூடியதல்ல.
இந்திய மக்களின் மனத்திட்பம், கூட்டுமுயற்சி ஆகியவற்றின் மூலமே அந்த லட்சியத்தை எய்த முடியும். அத்தகைய லட்சிய உணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதில் பத்திரிகைகளுக்குப் பொறுப்பு உண்டு என்பதைப் பிரதமர் நினைவுபடுத்தியிருக்கிறார். சமுதாய மாற்றம் என்பது பிரமாண்டமான பிரச்சினை. இந்தியா சுதந்திரமடைந்து 56 ஆண்டுகள் ஆகின்றன. பத்து ஐந்தாண்டுத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஏராளமான கனரகத் தொழிற்சாலைகள், மாபெரும் அணைக்கட்டுகள், விஞ்ஞானக் கூடங்கள் நிறுவப்பட்டுள்ளன.
அறிவியலிலும் தொழில் நுட்பத்திலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. விண்வெளி ஆய்வில் முன்னேறிய நாடுகளுடன் போட்டியிடக்கூடிய அளவுக்குப் பாரதம் வளர்ச்சி கண்டிருக்கிறது. அதே சமயத்தில் சாமான்ய மக்களின் சமூகப் பொருளாதார நிலை பரிதாபத்துக்குரியதாகவே இருந்து வருகிறது. சுமார் 30 சதவிகித மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே உழன்று வருகிறார்கள். அவர்களுடைய குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துள்ள உணவு கிடையாது. தாய்-சேய் பராமரிப்பு வசதிகள் மற்றும் சுகாதார வசதிகள் போதிய அளவுக்கு இல்லை. இது அவலம் மட்டுமல்ல, தேசிய அவமானமும் கூட.
இதைவிட வேதனைக்குரியது என்னவென்றால் பல்வேறு அரசியல் கட்சிகளிடையே இதைப்பற்றிய கவலை இல்லாமல் இருப்பதுதான். சுதந்திர இந்தியாவில் அரசியல் கட்சிகள் பெருகியுள்ளன. அரசியல்வாதிகள் முன்னேறியிருக்கிறார்கள். ஆனால் சாமான்ய மக்களை - ஏழைகளைப் பொறுத்த அளவில் அன்றாடம் பொழுது போவது என்பதே ஒரு பிரச்சினையாக இருந்து வருகிறது. இந்நிலையில் ஏழைகளின் வீடுகளில், குறிப்பாகத் தலித் குடும்பங்களிலும் பிற்படுத்தப்பட்ட குடும்பங்களிலும் முதன்முதலாகப் படித்துப் பட்டம் பெற்ற கிராமப்புற இளைஞர்கள் வேலை கிடைக்காததால் விரக்தி அடைந்து நிற்கிறார்கள்.
இத்தகைய சூழலில் மக்களின் உணர்ச்சி மயமான பிரச்சினைகளை மையமாக வைத்து, தேர்தல் அரசியலை நடத்தத் தயங்காத கட்சிகளும் இல்லாமல் இல்லை. இந்நிலையில் வளர்ந்த நாடாக இந்தியாவைச் சமைப்பதற்கு முன்னோடியாகச் செய்து தீர வேண்டிய மிகப்பெரிய பணி என்ன? கிராமியப் பொருளாதாரத்தை - வேளாண்மையை மற்றும் வேளாண்மை சார்ந்த தொழில்களைப் பரவலாக வளர்ப்பதற்கான திட்டங்களை வகுத்து செயற்படுத்துவது தான்.
இதன் மூலம் திட்டப் பணிகளின் பலன்கள் ஏழைகளுக்கு நேராகச் சென்றடைய முடியும். இந்த லட்சியத்தை எய்துவதற்கு மக்களின் ஆர்வத்தை ஒரு முகப்படுத்துவது அவசியம். அதிலும் அரசியலால் பிளவுபட்டுக் கிடக்கும் சமுதாயத்தில், இத்தகைய சாதனையைப் புரிவதற்காக மக்களின் ஒத்துழைப்பைத் திரட்டுவதில் பத்திரிகைகளுக்கு நிச்சயம் பெரிய பங்கு உண்டு.

No comments:

Post a Comment