Tuesday, October 26, 2010

தமிழ்ச் சிற்றேடுகளின் சினிமா அக்கறைகள்

தமிழ்ச் சிற்றேடுகளின் சினிமா அக்கறைகள் ( Tamil Magazines of Cinema - Tamil Katturaikal - General Articles
இலக்கியத்திற்காகவே தொடங்கப்பட்ட சிறுபத்திரிகைகளில் எழுபதுகளிலிருந்து பிற துறைகள் பற்றிய கவனமும் வெளிப்படத் தொடங்கியது. சிறுபத்திரிகை வாசகர்கள், எழுத்தாளர்கள் ஆகியோருக்குப் பிற துறைகள் பற்றிய அறிதல் முக்கியமானதாக இருந்தது. அவ்வறிதல் சிறுபத்திரிகைகள் வாயிலாகப் பகிர்ந்துகொள்ளப்பட்டது. சிறுகதைகள் புதுக்கவிதைகள் தவிர அவற்றில் வெளிவந்த கட்டுரைகளில் அப்பகிர்தல்கள் நடந்தன. இலக்கிய விமர்சனங்களிலும் பிற கலைகள் பற்றிய எடுத்துக்காட்டல்கள், குறிப்புகள் தரப்பட்டன. நமக்குரிய நாடகம் என்ன என்பதற்கான தேடல்கள் இவற்றில் விவாதிக்கப்பட்டன. சுயமான தமிழ் நாடகங்களும் பிரசுரிக்கப்பட்டன. ஓவியம் பற்றி நல்ல கட்டுரைகள் வெளிவந்துள்ளன. இசை, நடனம் ஆகியன பற்றி அவ்வளவாகச் சிறுபத்திரிகைகள் கவனம் கொள்ளவில்லை. ஆனால், சினிமா பற்றிய விமர்சனங்கள் விவாதங்கள் ஆகியன சிறுபத்திரிகைகளின் எல்லையைத் தாண்டியும் நிகழ்த்தப்பட்டன.
சினிமாவைப் பற்றி எழுதப்பட்ட கட்டுரைகள் வெகுஜனக் கலாச்சாரத்தைக் கடுமையாக விமர்சித்தவை என்பதால் அவற்றிற்குப் பல்வேறு தளங்கள் தயாராக இருந்தன. பெரிய பத்திரிகைகளிலும் சினிமாவின் சிரழிவு பற்றி முதலைக்கண்ணீர் விடப்பட்டது.
இவற்றிற்கிடையே சினிமாவைப் பற்றிப் பிரக்ஞைபூர்வமாகச் செயல்பட்டவர்கள் வெகுசிலர். அவர்களில் அசோகமித்திரனை முக்கியமானவராகக் கருதுகிறேன். அசோகமித்திரன் பெரிய பத்திரிகைகள், சிறுபத்திரிகைகள் ஆகியவற்றில் சினிமா பற்றி எழுதியவை அலாதியானவை. வாசன் எப்படிப் படமெடுத்தார், ராஜாஜி எப்படிப் படம் பார்த்தார் என்பதிலிருந்து அவர் சென்ற திரைப்பட விழாக்கள் மற்றும் நேற்றுவரை பார்த்த படங்கள் என்று ஆவண மதிப்பிற்கும் ரசனைக்கும் உரித்தான கட்டுரைகளை எழுதியிருப்பவர் அவர். ஒரு படம் கலைப் படமானாலும் சரி, வெகுஜனப் படமானாலும் சரி, அது தகுதியுடையதாக இருப்பின் அதை நுட்பமாகச் சிலாகிப்பதும் அது தகுதிக் குறைவானதாக இருந்தால் தனக்கேயுரிய நகைச்சுவையுடன் அதை விமர்சிப்பதும் சினிமாக் கலைஞர்கள்மீது அவர் கொண்டுள்ள பரிவும் அவரைப் பிறரிலிருந்து வேறுபட்ட அணுகல் உடையவராகக் காட்டுகின்றன.
தமிழ் சினிமா சரித்திரம் பற்றி நிறையக் கட்டுரைகள், புத்தகங்கள் வந்துள்ளன. சிறுபத்திரிகைகளுக்கு அப்பால் நடந்த நிகழ்வுகள் இவற்றில் அதிகம். தமிழ் சினிமா பற்றிய நிறையத் தகவல்களைச் செய்திகளாகத் தொகுக்கும் ராண்டார்கை ஆங்கிலத்தில் எழுதுபவர். இடதுசாரி அக்கறையுடன் தமிழ் சினிமாவின் பல்வேறு முகங்களை உற்றுநோக்கிய அறந்தை நாராயணன் சிறுபத்திரிகை எழுத்தாளர் என்னும் அடையாளம் பெறாதவர். அவர் நடத்திய கல்பனா இதழ்கூடச் சிற்றிதழ் என்று சொல்லத்தக்கதல்ல. அசோகமித்திரனைப் போன்று புனைகதைகளிலும் திரையுலக வாழ்வினைச் சித்தரித்தவர். தியடோர் பாஸ்கரன் (Theodore Baskaran) தமிழ் சினிமா ஆய்வுகளை முதலில் ஆங்கிலத்தில் படைத்தார். கடந்த இருபதாண்டுகளாகத்தான் ஒரு தொடர்ச்சியுடன் அவர் தமிழ்ச் சிறுபத்திரிகைகளில் எழுதுபவராக இருக்கிறார்.
இதையெல்லாம் இங்கே சொல்வதற்கான காரணம் சிறுபத்திரிகைகளில் வெளிவந்த உலக சினிமா, தமிழ் சினிமா கட்டுரைகளை விவாதிக்கும்பொழுது, அவற்றிற்கு அப்பால் வெளிவந்த படைப்புகளையும் இணைத்துப் பார்க்க வேண்டிய ஒரு பின்னிப்பிணைந்த தன்மை இருக்கிறது என்பதை நினைவுறுத்திக் கொள்ளவே.
சினிமா பற்றிய முதல் நூல்களைத் தமிழில் பம்மல் சம்பந்த முதலியார், பி.எஸ். ராமையா ஆகியோர் எழுதினர். சினிமா உலகத்திற்குள் நுழைபவர்களுக்குப் பயன்படும் வகையில் அவை எழுதப்பட்டிருந்தன. சினிமாவை அத்தொழிலில் ஈடுபடுபவர்கள்தான் கற்க வேண்டும் என்கிற மனோபாவம் வெகுகாலமாகச் செயல்பட்டுக்கொண்டிருந்தது. பின்னர்தான் சினிமா ரசனை முக்கியத்துவம் பெற்றது.
சிறுபத்திரிகைகளில் எழுபது, எண்பதுகளில் வெளிவந்த கட்டுரைகள் சினிமாவைப் புரிந்துகொள்பவையாக இருந்தன. மேலைநாட்டுப் படங்களைப் புரிந்துகொள்வதென்பது அவற்றில் முக்கியமானதாக இருந்தது. வெ. சாமிநாதன் அஃக் பத்திரிகையில் கார்டியாக் படம் பற்றி ஒரு நீண்ட கட்டுரை எழுதியதை ஓர் உதாரணமாகக் கூறலாம். இந்தியாவில் தயாராகிய மாற்றுப் படங்கள் பற்றியும் கட்டுரைகள் வெளிவந்தன. ஆதவன் கணையாழியில் பாசு பட்டாச்சார்யாவின் அனுபவ் படம் பற்றி ஒரு நல்ல கட்டுரையை எழுதியிருந்தார். பிரக்ஞையில் மிருணாள் சென்னின் படங்கள் பற்றி வீராச்சாமி எழுதிய கட்டுரை, வர்க்க வேறுபாடுகளை வலியுறுத்தும் பார்வையைக் கொண்டிருந்தது.
தமிழ் சினிமாவைப் பற்றிய வசவுகளும் விசும்பல்களும் வெளிப்பட்டுக்கொண்டிருந்த அதே காலத்தில், சென்னையில் 1971இல் நடந்த சி.எல்.எஸ். கருத்தரங்கில் எஸ். ஆல்பர்ட் ஒரு கட்டுரையைப் படித்தார். சினிமா ஊடகம் பற்றிய ஒரு சுருக்கமான வரைவு அவர் பார்வையில் குறிப்பிடத்தக்கதாயுள்ள தமிழ்ப் படங்களைப் பற்றிய சிரான கண்ணோட்டம் ஆகியனவெல்லாம் கடந்து முத்தாய்ப்பாகச் சில கருத்துகளை உரத்து வெளியிட்டார். அதிலிருந்து சில வரிகள்: "தமிழ் சினிமாக்காரர்கள் ஒரு ரென்வார், ஒரு கோடார்டு, ஒரு பிரஸோன் படத்தைப் பார்த்துவிட்டுத்தான் தமிழில் ஒரு படம் பண்ண வேண்டும் என்று நான் விதிக்கவில்லை. மேலை நாட்டுச் செடிகளைப் பிடுங்கிக் கொண்டுவந்து இங்கே நட்டு வளர்த்து இவர்கள் நஷ்டம் அடைய வேண்டாம். ஷேக்ஸ்பியரை நமக்குத் தெரியும். காதல், காமம், நீண்ட வசனங்கள், பாட்டுகள் ஏறக்குறைய நம் தமிழ் ரசிகர்கள் கேட்டு அடம்பிடிக்கும் மிட்டாய்கள் எலந்த வடைகள்தான். அவர்கள் கேட்டதையெல்லாம் போட்டு ஆனால், அவற்றையெல்லாம் அர்த்தத்தோடு ஆழத்தில் ஒரு அரிய தரிசனத்தில் கலந்துவிட்டார். விளைவு ஒரு வண்ணமிக்க, ஆழமான, அழுத்தமான கனமான செறிவுள்ள ஒரு காவிய நாடகம். இப்படி நாமும் தமிழ் சினிமாவில் வெற்றிக்குத் தேவையான சரக்கனைத்தையும் உள்ளடக்கி அர்த்தபுஷ்டியான படைப்புகளைச் செய்யலாமே? தயவுசெய்து ஷேக்ஸ்பியர் ஒரு மேதை என்று சொல்லிவிட்டுத் தூங்கப்போய்விடாதீர்கள்".
அப்படியொன்றும் தமிழ் சினிமா அபாயகரமான நிலையில் இல்லை என்கிறது அவர் வாதம். அதில் மண்டிக்கிடக்கும் அம்சங்களை ஒரு மேதையால் மேலுக்கு எடுத்துவர முடியும் என்றும் அவர் நம்புகிறார். ஆங்கிலப் பேராசிரியரான ஆல்பர்ட் தமிழ் சினிமாவை ஒரு ஷேக்ஸ்பியரால்தான் காப்பாற்ற முடியும் என்று எண்ணுவதாக ஒரு ஐரனியும் இதில் இழையோடுகிறதோ! தமிழ் சினிமாவைக் கருத்தோட்டம் மிக்கதாக உருவாக்க இயலாததற்குக் கலைஞன் தான் பொறுப்பேற்க வேண்டும் என்கிற குற்றச்சாட்டிற்கு அவரது வாதம் நம்மை இட்டுச் செல்லாமல் கலைஞர்கள் இந்த நெருக்கடியை எவ்வாறு சமாளிக்கலாம் என்பதற்கான ஒரு யோசனையாக அது தரப்பட்டிருக்கிறது. சூழலை முன்வைத்து வாதிடும் மற்றொரு போக்கு வெ. சாமிநாதனுடையது. தமிழ் சினிமாவைப் பாலைப் பரப்பினதாகப் பார்க்கும் அவர் பதேர் பாஞ்சாலி (Pather Panchali) சென்னையில் இரண்டு நாள்கள் - "இரண்டே நாள்கள்" - ஓடியது குறித்து மனம் வெதும்புகிறார். "இப்படத்தை ரசிக்கச் சென்னையில் ரசிகர்கள் இல்லை. படம் வங்காள மொழியில் இருந்தது என்பதல்ல காரணம் ஹிந்தி, ஆங்கிலப் படங்களைப் பார்க்கும் ரசிகர்கள் வங்காளிப் படத்தையும் மொழியறியாமலேயே பார்த்திருப்பார்கள் அவர்கள் ரசனைக்கு உட்பட்டதாக இருந்தால். ஆனால், அவர்கள் வளர்த்த, வளர்ந்த ரசனை வேறு. மற்றவர்கள் அடையும் முன்னேற்றத்தைக் கண்டு தங்கள் பிற்போக்கை உணரும் மனப்பக்குவத்தில் தமிழர்கள் இல்லை. நம் சமுதாயம் கலையுணர்வு கொண்ட சமுதாயமாகச் சிந்திக்கும் சமுதாயமாக என்றோ அழிந்துவிட்டது, என்று எழுத்துவில் அவர் எழுதுகிறார். வழக்கம்போல வியாபார நோக்கம்கொண்ட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் என்று பழியை மற்றவர்கள்மீது திணிக்காது நமது பலவீனமாகிப்போன சூழல் மரபை - நம்மை - அவர் சாடுகிறார்.
இலக்கியச் சிற்றேடுகளில் வரும் புதுக்கவிதை மற்றும் சிறுகதைகளைப் படித்துவிட்டு "இவற்றால் பாட்டாளி வர்க்கத்திற்கு என்ன நன்மை?" என்று கேட்டுவிட்டு விமர்சனத்தை முடக்கிக்கொள்ளும் ஓர் இடதுசாரிப் போக்கும் எழுபதுகளில் பரவலாக இருந்தது. வெகுஜனப் படங்களின் நச்சுத்தன்மையை, பாரதிராஜா, பாலுமகேந்திரா படங்களை முன்வைத்துச் சிகரம் விமர்சித்தது. மகேந்திரனின் உதிரிப்பூக்கள் மட்டும் தப்புகிறது. ஆனால், சத்யஜித்ரேயின் சோனார் கெல்லாவிற்கு அந்த அதிர்ஷ்டம் இல்லை. மிருணாள் சென்னின் இண்டர்வியு படத்திற்கு இளவேனில் செய்த விமர்சனத்தில் ஆர்ட் படம் மட்டுமின்றி ஆர்ட்பட ரசிகர்களும் பகடி செய்யப்படுகின்றனர். திலீபன் அதற்கு எழுதிய மறுப்பில் இடதுசாரி விமர்சனம் ஆரோக்கியமாகத் திசை திருப்பப்படுகிறது. ராய் படங்களை ஏற்றுக் கொள்ளாவிடினும் அவரது மேதமை பற்றிய கவர்ச்சியால் நேரடியான அவரது பேட்டி அதில் காணப்பட்டது. "தமிழ்ப் படங்களைப் பற்றி எனக்குத் தெரியாது. தமிழில் நிறையப் படங்கள் தயாரிக்கப்படுவது மட்டும் தெரியும். ஒளிப்பதிவாளர் நிமாய் கோஷைத் தமிழ்த் திரையுலகம் எந்த அளவுக்குப் பயன்படுத்திக்கொண்டது என்று எனக்குத் தெரியாது" என்று ராய் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். ராஜாராம் எழுதிய மிருணாள் சென்னின் மிருகயா விமர்சனக் கட்டுரையில் சென், பெனகல் ஆகியோரின் படங்களில் வரும் நிலப்பிரபு, காமவெறியாளனாகக் காட்டப்படுவதால் சுரண்டலைக் காட்டிலும் ஒழுக்கம் பிரச்சினையில் முக்கிய இடம்பெறுவதாகச் சொல்லப்படுகிறது. ஒழுக்கம் வாய்ந்த நிலப்பிரபுவிடமும் ஆதிக்க விரிப்பு இருக்கும் யதார்த்தத்தை அவர் கவனப்படுத்துகிறார். ஊடகங்கள் வர்க்க வேறுபாட்டினைச் சரிவர முன்வைப்பதில் உள்ள பிரச்சினை பற்றிய நுண்மையான அணுகல் அது.
மேலைநாடுகளில் இரண்டாம் உலகப்போருக்குப் பின் சினிமாவை ஒரு பாடமாகப் பயிலும் நடைமுறை உருவாகியது. சினிமாவைப் பயில்வதன் மூலம் சினிமாத் தொழிலில் புகவேண்டிய நியதி இன்றி ஒரு கல்வியாளராகவோ ஆராய்ச்சியாளராகவோ இருக்க முடியும் என்பது யதார்த்தமாகிற்று. இப்பாடமுறையில் வெகுஜன சினிமாவிற்கு அதுவரை இல்லாத அழுத்தம் தரப்பட்டது. கிளாசிக் என்று சொல்லப்பட்ட படங்கள் மட்டுமின்றி சாதாரண பார்வையாளர்களிடம் செல்வாக்குப் பெற்ற படங்களை ஆழ்ந்து நோக்கும் தன்மை ஓர் இயலாக மாறியது. இதற்கு முக்கியக் காரணகர்த்தாக்கள் கல்வியாளர்களோ ஆராய்ச்சியாளர்களோ அல்ல. அவர்கள் காஹியர் து சினிமா பிரெஞ்சு இதழில் எழுதிய சினிமா விரும்பிகள். திரையியலாளர் ஆந்ரே பாஸைன் உள்ளிட்டுப் பின்னாளில் புதிய அலை இயக்குநர்களாக உருவெடுத்த ட்ரூபோ, சாப்ரோல், கோடார்டு போன்றோர்.
சினிமாவை வணிகத்தனம் என்கிற கோணத்திலிருந்து பார்க்கும் பார்வையின் போதாமையை இப் புதிய அலை விமர்சனம் வெளிக்கொணர்ந்தது. இனி, சிறுபத்திரிகையில் இப்போக்கினை முன்னுதாரணமாகக் கொண்டு வெங்கடேஷ் சக்ரவர்த்தி ஒரு கட்டுரை எழுதினார். காஹியர் து சினிமா விமர்சகர்கள், ஹாலிவுட் இயக்குநர்கள் தங்கள் முன்னிருந்த நிர்ப்பந்தங்களை மீறித் தங்கள் படங்களில் பதித்த முத்திரைகளை அடையாளம் கண்டதுபோல் பாரதிராஜாவின் படங்களிலும் காண முடியும் என்கிற வாதத்தை எடுத்துவைத்தார். அக்கட்டுரையில் பதினாறு வயதினிலே படத்தை அவர் தனக்கு ஆதரவாக எடுத்துக்கொள்கிறார். அப்படம் ஆரம்பித்த இடத்திலேயே வந்து முடிவதை மேற்கத்திய படங்களின் பாணியுடன் ஒப்பிட்டார். ப்ளாஷ் பார்வேர்ட் ஓர் இணைப்பு உத்தியாகப் பாரதிராஜாவின் படங்களில் உபயோகப்படுத்தப்படுகின்றது. மரபார்ந்த மூடநம்பிக்கைகளை அவர் படங்கள் எதிர்க்கின்றன. அதே சமயம் இவையெல்லாம் உத்தி நிலையில் தேக்கமுறுகின்றனவோ என்கிற ஐயப்பாடும் எழுகிறது. புதுமைப்பெண் பாரதிராஜாவின் பிற்போக்கான படம். ஏனெனில், அதில் கேமராவே கதாநாயகியைக் கற்பழிப்பதுபோல் படமாக்கப்பட்டுள்ளது. முதல் மரியாதையிலும் குல கௌரவம் காக்க வேண்டி ஒரு பெண் பலியிடப்படுகிறாள். வசனத்தைவிட இசையை அதிகம் பயன்படுத்திக் காட்சி அமைக்கிற உத்தி பாரதிராஜாவினுடையது. இவையெல்லாம் சக்ரவர்த்தியின் அவதானிப்புகள். இவற்றை ஆதரித்தும் மறுத்தும் இனியில் கட்டுரைகள் வெளிவந்தன. பாப்பாண்ணன் மகன், பிரெஞ்சு திரைக்கருத்தாக்கமான ஆசிரியர் கோட்பாட்டின் வழியாகப் பாரதிராஜாவைப் பார்க்கவியலாது என்றும் அவரை ஒரு டெக்னிகல் திறமையுள்ள ஏமாற்றுவாதியாகத்தான் பார்க்க வேண்டும் என்றும் தனது வாதங்களை வெளியிட்டார்.
கோ. ராஜாராமிடமிருந்து மற்றொரு எதிர்வினை. பாரதிராஜா கிராமியச் சமூகத்தின் முரண்பாடுகளை மேலோட்டமாக முன்வைக்கிறார். அவர் மூடநம்பிக்கைகள், ஐதீகங்கள் ஆகியவற்றையும் வகையாக எதிர்ப்பவரல்ல. பெண் தன் தாலியைக் கழற்றி எறிவதைப் பாலச்சந்தர் (பாரதிராஜாவுக்கு முன்பாகவே) அவர்கள் படத்தில் காட்டியிருக்கிறார். இவை கோ. ராஜாராம் தரப்பு வாதங்கள். ஆனால், இருவரும் சக்ரவர்த்தியின் முயற்சியைப் பாராட்டுகிறார்கள்.
ஒரு கருத்தியலுக்கான முழுமையை அடையாத வாதங்கள் என்றபோதிலும் இவை பின்னர் சிறுபத்திரிகைகள் தொடர்ந்து வெகுஜனப் படங்கள் பற்றி எழுத வழிவகுத்தன என்று சொல்லலாம்.
சினிமாவிற்கென்று வெளிவந்த சிறுபத்திரிகைகள் சலனம், நிழல் ஆகியன. மூன்று ஆண்டுகள் வெளி வந்த சலனம் சிற்றேட்டில் மொழி பெயர்ப்புக் கட்டுரைகள் அதிகம். உலக சினிமாச் சாதனையாளர்கள் பற்றிய கட்டுரைகள் வந்தன. அழகியல் பார்வைக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. பி.கே. நாயர் சலனத்திற்காகவே ஒரு கட்டுரைத் தொடரை எழுதினார். மற்றபடி தமிழ் சினிமா பற்றிய விமர்சனங்கள், விவாதங்கள் அதில் சொற்பமாகவே இருந்தன. கே.எஸ். சேதுமாதவனின் பேட்டி அவர் எடுத்த மறுபக்கம் படத்திற்குத் தங்கத்தாமரை கிடைத்ததையட்டி அதில் வெளியாயிற்று. அது பற்றிய ஒரு நினைவு. முதன்முதலாகத் தங்கத் தாமரை கிடைத்த படம் என்ற போதிலும், தமிழ்ப் பத்திரிகைகள் அச்செய்தியைப் பொருட்படுத்தி வெளியிடவில்லை. சேதுமாதவனைச் சலனத்திற்காகப் பேட்டி காணச் சென்றபொழுது மலையாளப் பத்திரிகைகள் அச்செய்தியை முன்பக்கத்தில் வெளியிட்டிருந்ததை வருத்தத்துடன் எடுத்துக்காட்டினார். நான் அவரைச் சமாதானப்படுத்தினேன். இது நடந்தது 1991இல். அப்பொழுதெல்லாம் திரைப்படம் அரசாங்க விருது வாங்குவதை ஏதோ தெய்வகுற்றம்போல் பாவித்தனர் கோடம்பாக்கத்தினர். இன்று விருதுகள், பட விழாக்கள் என்று தமிழ் சினிமா அமர்க்களப்படுகிறது. எத்தகைய படங்களை நாம் எடுக்கிறோம் என்கிற சுயப்பிரக்ஞை மட்டும் குறைவாகவே இருக்கிறது. இப்பொழுது வந்து கொண்டிருக்கும் நிழல் சிற்றேட்டில் நிறையத் திரைக்கதைகள் வெளியிடப்பட்டுள்ளன. திரைப்பட விழாக்கள், இயக்குநர்களின் நேர்காணல்கள், சினிமா தயாரிப்பு பற்றிய கட்டுரைகள் இதில் காணப்படுகின்றன. தமிழ் சினிமா சரித்திரம், கலைஞர்கள் பற்றிய காத்திரமான ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறது.
சமூகத்தின் வர்க்கப் போராட்டத்தினை முன்னெடுத்துச் செல்லும் இடதுசாரி விமர்சனத்தைவிடச் சாதி அடிப்படையில் பன்னெடுங்காலமாகப் புரையோடியுள்ள சமூகத்தின் அவல முரண்களை ஆராயும் தலித் விமர்சனம் தமிழில் உள்ளார்ந்த பலத்துடன் செயல்படுகிறது. மொழி சிற்றேட்டில் வெளிவந்த ஸ்டாலின் ராஜாங்கத்தின் ஒரு கட்டுரையை நான் இதற்கு எடுத்துக்காட்டாக முன்வைக்கிறேன். இக்கட்டுரையில் தலித் சமூகம் எவ்வாறு ஊடகங்களில் சித்தரிக்கப்படுகிறது என்பதை ஸ்டாலின் அலசுகிறார். மிகுதியாகத் திரைப்பட ஊடகம் பற்றிய அவரது கருத்துகள் இடம்பெற்றுள்ன. வெகுஜனப் படம், டாகுமெண்டரி ஆகியவற்றை அவர் தனது விமர்சனத்திற்கு எடுத்துக்கொண்டிருக்கிறார். இடதுசாரி, திராவிட மற்றும் அரசியல் சார்பில்லாத கலைஞர்கள் எடுத்த படங்களில் தலித்துகள் முக்கியமற்றவர்களாகப் படைக்கப்பட்டிருக்கிறார்கள். திராவிடக் கருத்தியல் தாக்கம் பெற்றவர்களும் பிராமணிய மதிப்பீடுகளுக்குள் அடங்கிப்போய்விடுகிறார்கள். சினிமாவை இவர்கள் மேலும் இருட்டுக்குள் தள்ளினார்கள் என்றெல்லாம் கூறும் ஸ்டாலின் காதலுக்கு எதிராய் நின்று வன்முறையை ஏவிய சாதியிலிருந்தே தியாகியை உருவாக்கிய காதல் படமும் தலித் பாத்திரங்களை அவற்றின் சமூகத் தன்னிலையோடு சொல்லாது மறைத்துவிடுகின்றன என்கிறார்.
இப்பொழுது சிறுபத்திரிகைகளில் சினிமா விமர்சனங்கள் மலிந்துவிட்டன. ஒரு காலத்தில் படங்கள் இல்லாத பத்திரிகைகள் என்று பரிகாசமான அடையாளம் பெற்றிருந்த சிற்றேடுகள் இன்று பல புகைப் படங்களுடன் சினிமாக் கட்டுரைகளை வெளியிடுகின்றன. சிற்றேடுகளின் லேஅவுட் மாற்றத்திற்கு இக்கட்டுரைகளும் ஒரு காரணம். பெரும்பாலான விமர்சகர்கள் உணர்ச்சிப் பிழம்பாக மாறிவிடுகிறார்கள். தங்களுக்குப் பிடித்த படங்களைக் காவியங்கள் என்றெல்லாம் புகழ்கிறார்கள். திரையில் காவியம் படைப்பது அத்தனை எளிதா என்ன? எண்பதுகளில் தமிழ் சினிமா விமர்சனம் ஒரு நிதான உணர்வுடன் செய்யப்பட்டது. அந்த உணர்வு இப்போது அடியோடு போய்விட்டது. உலகத் திரைப்பட வரலாற்றையே மாற்றி அமைத்த படங்களுடன், பிற தமிழ்ப் படங்களிலிருந்து ஆறு வித்தியாசங்களுடன் வெளிவரும் தமிழ்ப் படங்களை ஒப்பிடுகிறார்கள். வெற்றிப் படங்கள் விரைந்து கவனிக்கப்படுகின்றன. வித்தியாசமான முயற்சிகளை அவற்றிற்குள்ளேயே தேடுகிறார்கள். மாற்றுப் படங்களைப் பற்றி அவர்கள் கவலைகொள்வதில்லை. கமலஹாசனின் விருமாண்டி (2004) படம்தான் முதன்முதலாகத் தூக்குத் தண்டனைக்கெதிரான தமிழ்ப் படம் என்று எழுதப்பட்டுவருகிறது. அதற்கு முன்னரே அப்பிரச்சினை லெனின் எடுத்த ஊருக்கு நூறுபேர் (Ooruku Nooruper - 2001) படத்தில் கையாளப்பட்டிருக்கிறது. இது பல விமர்சகர்களுக்குத் தெரியாது. சினிமா விமர்சகர்களுக்கு சினிமா சரித்திரமும் தெரிவதில்லை. பாதை தெரியுது பார், உன்னைப் போல் ஒருவன் என்று சகட்டு மேனிக்கு எழுதுகிறார்கள். எத்தனை பேர்கள் அவற்றை உண்மையிலேயே பார்த்தார்கள் என்பது கேள்விக்குறி.
தொடர்ந்து தமிழ் சினிமா சரித்திரத்தைச் சிரமைத்து வரும் தியடோர் பாஸ்கரன் தமிழில் வரும் மாற்றுப் படங்களைப் பற்றியும் தவறாது எழுதிவிடுகிறார். ஆங்கிலத்திலும் தமிழ்ச் சிற்றேடுகளிலும் அவர் எழுதும் கட்டுரைகள் வாயிலாக மாற்றுப்பட முயற்சிகளை அறிந்தவர்கள் பலர். ஊருக்கு நூறு பேர் பற்றி அவர் ஹிந்துவில் எழுதியதைப் படித்துவிட்டு நியுஜெர்சியில் இயங்கும் சிந்தனை வட்டத்தினர் அப்படத்தைத் தருவித்து அங்கே திரையிட்ட சம்பவத்தை ஓர் உதாரணமாகச் சொல்லலாம்.
லண்டனிலிருந்து தொடர்ந்து எழுதிவரும் யமுனா ராஜேந்திரன் மற்றொரு குறிப்பிடத்தக்க சினிமா விமர்சகர் - ஆய்வாளர். எவ்வகைப் படமானாலும் அதை விமர்சிக்கையில் அதன் அரசியலை அவர் கண்டுகொள்கிறார். இது அரசியல் பார்வையையும் வெகுஜன மக்களை நோக்கிய சினிமாமீது கொண்டுள்ள தளர்த்தப்பட்ட மதிப்பீடுகளையும் இணைக்க விழைகிறார். ஆனால், வேறொரு சந்தர்ப்பத்தில் தன்னால் தளர்த்தப்பட்டவற்றை அவர் தானே இறுக்கிக்கொள்வதும் உண்டு. பாலுமகேந்திராவின் படங்களைப் பற்றி அவர் கொள்கிற மதிப்பீடுகள் பெறும் அடிக்கடியான மாற்றத்தை இதற்கு ஓர் உதாரணமாகக் கூறலாம். தமிழ் சினிமாவை உலக சினிமாவுடன் சரளமாக ஒப்பிட்டு வேறுபடுத்திப் பார்த்துச் செல்லும் மனப்பாங்கினை இவரிடம் காணலாம். காலனி ஆதிக்கம், வல்லரசு எதேச்சதிகாரம் ஆகியவற்றை எதிர்க்கும் உலக சினிமாவைப் பற்றிய தொடர்ந்த சொல்லாடல்களைக் கொண்ட ஒரே தமிழ் சினிமா விமர்சகர் யமுனா ராஜேந்திரன் என்பது மிகையாகாது. பல உலகத் தமிழ்ச் சிற்றேடுகளில் இவர் எழுத்துக்கள் பிரசுரமாகின்றன.
உலக சினிமா எதையும் நினைவு படுத்திக்கொள்ளாது செந்தமிழ் பரப்பிற்குள்ளாகவே, தனது சினிமா பார்வையை வடிவமைப்பவர் அ. ராமசாமி. இவரும் முழுக்க ஒரு சிறுபத்திரிகை எழுத்தாளர். பார்வையாளனை உத்தேசித்து எழுப்பப்படும் விவாதங்களாகத் தனது எழுத்துக்களை அவர் பார்க்கிறார். விருப்பு வெறுப்புகள் நிறைந்த அப்பார்வையாளனாக அ. ராமசாமியையே வாசகர்கள் அடையாளம் காண்பார்கள். ஒரு படம் எப்படி வெற்றிபெற்றது ஏன் தோல்வியுற்றது என்பதற்கான காரணங்களை ஆராய அதிக சிரத்தை எடுத்துக்கொள்ளும் ராமசாமி அவற்றையெல்லாம் ஒரே பாய்ச்சலில் தாண்டி மற்றவர்கள் புகாத ஒரு மையத்திற்குள் சென்று, அதுவே அதன் உட்பொருள் என வாதிடுகிறார். வசிகரமாகத் தோற்றமளிக்கும் அம்மையம் சில தருணங்களில் மிகைப்படுத்தலாகவும் தெரிகிறது. காதல் படத்தில் பெரியார் சிலைக்கு அருகில் பைத்தியமாகிவிட்ட காதல் தோல்வியடைந்த காதலன் நிற்பதை இயக்குநர் அவன் பெரியாரால் கைவிடப்பட்டவனாக உருவகிக்கிறார் என்று வாதிடுகிறார். இயக்குநரின் உத்தி கேமராவில் மேலிருந்து கீழ்நோக்கும் கோணமாக சினிமா மொழியாக வெளிப்படுவதாக அவர் விமர்சனத்தை நிறுவுகிறார். இது தற்செயலான கேமரா கோணமா, கருத்தினை வலியுறுத்த வைத்த கோணமா என்பதெல்லாம் விவாதத்திற்குரியவை. ஆனால், அவ்வாறெல்லாம் பார்ப்பதற்கு அப்படைப்பில் இடமிருந்தால் வெகுஜன சினிமா என்னும் காரணத்தை வைத்து அப்பார்வையை மறுக்கக் கூடாது. சினிமா ரசனையின் அடிப்படையே இதுதான். வெகுஜன சினிமாவை அடர்த்தியான மொழிகொண்டதாகப் பார்க்கும் போக்கின் மூலமாக அதன் படைப்பாக்கம் சற்றே மாறுதலடையும் என்றால்கூட அது வரவேற்கத்தக்கதுதான்.
சிற்றேடுகளில் ஒரு சிலவற்றைத் தவிர மற்ற அனைத்தும் எல்லா விதமான சினிமாப் பார்வைகளுக்கும் களன்களாக அமைவதால் அப் பத்திரிகைகளின் சினிமா அக்கறைகள் என்று சில குணநலன்களைத் தேர்வுசெய்வது இயலாது. அவற்றில் எழுதும் படைப்பாளிகளின் பார்வைகளைத்தான் அக்கறைகளாகக் காண முடியும்.
குறிப்புகள்
1. எஸ். ஆல்பர்ட்டின் கட்டுரை "தமிழ்ப் படங்கள் காட்டும் மனிதனும் சமூகமும்" இன்றைய தமிழ் இலக்கியத்தில் மனிதன் என்னும் தொகுப்பு நூலில் 1972இல் வந்தது. அது காலச்சுவடு வெளியீடான சித்திரம் பேசுதடி (2004) நூலில் மறுபிரசுரம் செய்யப்பட்டுள்ளது.
2. இக்கட்டுரை வெ. சாமிநாதனின் பாலையும் பாழையும் நூலில் சேர்க்கப்பட்டுள்ளது.
3. சிகரம் இதழ்த் தொகுப்பில் இக்கட்டுரைகளைக் காணலாம். பக். 521 - 560 வரை. சிகரம் பதிப்பகம் சென்னை - 78, தொகுப்பாளர், கமலாலயன்.
4. இனி இதழ்கள் அக்டோபர், நவம்பர், டிசம்பர் 1986.
5. மொழி - ஆகஸ்ட் 2006.

No comments:

Post a Comment